TNPSC Thervupettagam

அசோகர் தர்மமும் சாதி இந்து தர்மமும்

November 19 , 2023 418 days 326 0
  • வரலாற்றிஞர் ராமச்சந்திர குஹா நல்லதொரு பணியை முன்னெடுத்திருக்கிறார். ‘இந்தியன் லைவ்ஸ்’ என்ற தலைப்பில் 11 முக்கியமான ஆளுமைகளைப் பற்றிய நூல்களைக் கொண்டுவருகிறார். ஆட்சியாளர்கள், சிந்தனையாளர்கள், சமூகச் சீர்திருத்தர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் என்று பல தரப்புகளிலிருந்தும் இந்த ஆளுமைகள் வருகிறார்கள்; நூல்களை எழுதுவது முக்கியமான அறிஞர்கள்.
  • இந்த வரிசையில் முதல் நூலாக வெளிவந்துள்ளது பேட்ரிக் ஆலிவெல் எழுதியுள்ள அசோகா. வெளிவந்த வேகத்தில் பெரும் வரவேற்பை இந்நூல் பெற்றுள்ளது. இந்த நூலிலிருந்து வெளிப்படும் அசோகரின் கருத்தாக்கத்தை இன்னொரு முக்கியமான நூலான திவ்யா செரியனுடைய ‘மெர்ச்சன்ட்ஸ் ஆஃப் விர்ச்யூ’ தரும் பின்னணியில் அணுகும் கட்டுரை இது. இன்றைய இந்து மதம் எப்படி தனக்கான தர்மமாகத் தீண்டாமையை இன்றைய வடிவில் தத்துவமாக்கிக்கொண்டது என்று பேசும் நூல் இது.
  • சமூகவியலாளர் சீனிவாச ராமாநுஜம் இந்த இரு நூல்களின் பின்னணியில், அசோகரை நமக்குத் தருகிறார். இந்திய வரலாற்றின் மாபெரும் அரசாளுமையின் முக்கியத்துவத்தையும், இரு முக்கியமான நூல்களின் அறிமுகத்தையும் இந்தக் கட்டுரையின் வழி ‘அருஞ்சொல்’ தமிழ் வாசகர்களுக்குத் தருகிறது.
  • பேரரசர் அசோகர் குறித்துப் பலவிதமான கதையாடல்கள் இருக்கின்றன. பௌத்தம், பார்ப்பனியம், நவீனக் கல்விப்புலம் என்று பலவிதமான கதையாடல்கள் இருக்கின்றன. இவற்றில் பல சித்தாந்த அடிப்படையில் விவரிக்கப்படுகின்றன. ஆனால், ‘அசோகா: போர்ட்ரைட் ஆஃப் ஏ ஃபிலாஸபர் கிங்’ (Ashoka: Portrait of a Philosopher King) என்ற பேட்ரிக் ஒலிவெல்லின் சமீபத்திய புத்தகம் சகலவிதத்திலும் மிக வித்தியாசமான அணுகுமுறையைக் கொண்டுள்ளது.
  • அசோகரது காலம் குறித்தும் அசோகர் என்ற தனிநபர் குறித்தும் அவரது கல்வெட்டுகளில் உள்ள எழுத்துகளை மட்டுமே கொண்டு, அசோகர் குறித்து மிக அற்புதமான சித்திரத்தை ஒலிவெல் தீட்டுகிறார். அசோகரது கல்வெட்டுகளில் தோராயமாக 4,614 வார்த்தைகள் மட்டுமே இருக்கின்றன என்கிறார் ஒலிவெல் (ப.63). இந்த வார்த்தைகளைக் கொண்டு மட்டும் அவர் இதைச் சாதிக்கிறார்.
  • இந்தப் புத்தகம் மொத்தம் நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது: அசோகர் என்ற அரசர், அசோகர் என்ற பௌத்தர், அசோகர் என்ற தத்துவவியலாளர், அசோகர் என்ற உலகளாவியவர் (Ecumenist). ஒரு கல்வெட்டில் இருக்கும் வரிகளைப் பல்வேறு கோணங்களிலிருந்து விரிவாக அணுகுகிறார். அதாவது, ஒரு கல்வெட்டில் உள்ள வரிகளைப் பௌத்த நிலைப்பாட்டிலிருந்தும், தத்துவார்த்தமாகவும், மிகப் பெரிய சாம்ராஜ்ஜியத்தின் அரசர் என்ற நிலைப்பாட்டிலிருந்தும், பௌத்தம், சமணம், பார்ப்பனியம், ஆசிவகம் போன்ற பலவிதமான சிந்தனை மரபுகளுக்கு இடையே இணக்கத்தை உருவாக்க முயல்கிற உலகுணர்வுவாதியாகவும் வாசிக்கிறார்.

ஒலிவெல்லின் தனித்தன்மை

  • ஒலிவெல் எழுத்துகளின் தனித்தன்மை இதுதான்: அன்றாடத் தன்மையிலான கேள்விகளை எழுப்புதல். இக்கேள்விகளை நம்மிடமும் பகிர்ந்துகொள்கிறார். இந்த அணுகுமுறையின் ஊடாக அவர் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளும் விஷயங்களை நம்முடைய வாழ்வனுபவத்தின் பகுதியாக்குகிறார்.
  • ஒலிவெல் கடந்த காலம் குறித்து, அதுவும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலம் குறித்து வாசிக்கிறோம் என்ற எண்ணத்தை  உருவாக்குவதில்லை. அசோகரையும் அவரது காலத்தையும் நமக்கு மிக நெருக்கமாக்குகிறார். இந்தத் தன்மையை அவரது எல்லா நூல்களிலும் பார்க்க முடியும். கடந்த காலத்தைச் சமகாலப்படுத்தும் போக்கை அவரது எழுத்துகளில் பார்க்க முடியும்.
  • பண்டைக் காலத்தில் பயன்படுத்தப்பட்ட சொற்கள் சமகாலத்தில் கொண்டிருக்கும் அர்த்தத்தையே அப்போதும் கொண்டிருந்ததாகப் பார்க்காமல், பல்வேறு காலகட்டங்களின் வெவ்வேறு அர்த்தப்புலங்களை மிக நுட்பமாகக் கையாள்கிறார். கடந்த காலத்தை கடந்த காலமாக முன்வைக்க முயலும் பாவனை அவரிடம் இல்லை. கடந்த காலத்தைச் சமகாலத் தேவைகளிலிருந்தும், நம்மிடம் இருக்கும் கருத்தாக்கங்களையும் அறிவுச் சட்டங்களையும் கொண்டும்தான் கடந்த காலத்தை வாசிக்க முடியும் என்று ஏற்றுக்கொள்கிறார்.
  • இப்படிச் செய்வதன் ஊடாக நம்முடைய கடந்த காலத்தைச் சமகாலப்படுத்துகிறார். ஒலிவெல் இதனால்தான், பலவிதமான கடந்த காலங்கள் சாத்தியப்படுகின்றன.

அசோகரின் பன்முகம்

  •  அசோகர் என்ற தத்துவவியலாளரை, அரசரை, பௌத்தரை இந்த நூலில் அற்புதமாகச் சமகாலப்படுத்துகிறார் ஒலிவெல். அசோகரையும், அவரது லட்சியங்களையும், அவர் எதிர்கொண்ட சிக்கல்களையும், அவரது தோல்விகளையும் நமக்கானதாக ஆக்குகிறார். இன்றைய நம் சமூகரீதியான, அரசியல்ரீதியான செயல்பாடுகளை விமர்சனபூர்வமாக அணுகுவதற்கு அசோகர் மேற்கொண்ட பரிசோதனைகள் அர்த்தமுள்ளதாக இருக்க முடியும் என்று நம்மைச் சிந்திக்கவைக்கிறார். அதாவது, நாம் எப்படி இந்த இடத்திற்கு - அதாவது, இந்தத் தருணத்திற்கு எப்படி வந்தடைந்தோம் என்பது குறித்து நம்மைச் சிந்திக்கவைக்கிறார்.
  • அசோகர் தர்மம் குறித்த ஒலிவெலின் வாசிப்பை மட்டுமே இந்தக் கட்டுரையில் நான் எடுத்துக்கொள்கிறேன். பிறகு, அதைச் சாதி இந்துக்களின் சனாதன தர்மத்தோடு இணைத்துப்பார்க்க முயல்கிறேன். தர்மம் என்ற கருத்தாக்கம் ஏதோ ஒருவிதத்தில் இந்தியத் துணைக்கண்டத்தில் மையக் கருத்தாக்கமாக இருந்துவருகிறது. வேதங்களில் தர்மம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருந்தாலும்கூட, வேத மரபில் இச்சொல் மையக் கருத்தாக்கமாக இல்லை. புத்தரே தர்மம் என்ற கருத்தைப் பிரதானமாக்குகிறார். பின்னர், பார்ப்பனர்களிடமும் அது பிரதானக் கருத்தாக மாறுகிறது.
  • வர்ண தர்மம், ஆசிரம தர்மம், வர்ணாசிரம தர்மம் என்றெல்லாம் தர்மம் சாராம்சப்படுத்தப்பட்டு விரித்தெடுக்கப்படுகிறது. தர்மா இலக்கியம் என்ற வகையைப் (தர்மசாஸ்திரங்கள்) பார்ப்பனர்கள் உருவாக்குகிறார்கள். ஒருகாலத்தில் வர்ண தர்மமே சனாதன தர்மமாக முன்வைக்கப்பட்டது (பகவத் கீதை). பின்னர், ‘உண்மையான பார்ப்பனர்’ என்பது வர்ண தர்மத்திற்கும், ஆசிரம தர்மத்திற்கும், வர்ணாசிரம தர்மத்திற்கும், ஏன் எல்லா தர்மங்களுக்கும் அப்பாற்பட்டவராக முன்வைக்கப்படுகிறது. தர்மத்திற்குக் கட்டுப்பட்டவர்கள் வர்ணாஸ்ரம தர்மத்திற்குக் கட்டப்பட்டவர்கள் என்றும் முன்வைக்கப்படுகிறது. வர்ணாசிரம தர்மத்திற்குக் கட்டுப்பட்ட பார்ப்பனர்கள் கீழான பார்ப்பனர்கள் என்றும் முன்வைக்கப்படுகிறது (விரிவான வாதங்களுக்கு எனது ‘சந்நியாசமும் தீண்டாமை’ நூலைப் பார்க்கவும்).
  • இந்து என்ற வரையறையை உருவாக்கும் விதமாக, 18ஆம் நூற்றாண்டில் சாதி இந்து தர்மமே சனாதன தர்மமாக முன்வைக்கப்பட்டது. ஆக, இந்தியத் துணைக்கண்ட சிந்தனை மரபுகள் இரண்டு கருத்தாக்கங்களைச் சுற்றியே தொடர்ந்து இயங்கிவருகிறது என்று சொல்வது மிகையாகாது: ஒன்று, பார்ப்பனர் என்ற கருத்தாக்கம் (யார் உண்மையான பார்ப்பனர்?); மற்றொன்று, தர்மம் என்ற கருத்தாக்கம் (எது மேலான தர்மம்?). தர்மம் குறித்த இப்படியான பார்வைகளிலிருந்து அசோகர் தர்மம் எப்படி வேறானதாக இருக்கிறது?

அசோகர் பௌத்தரா

  • அசோகரது தனித்துவம் நம்மைப் பிரமிக்கவைக்கிறது. அவரது தந்தை, தந்தையின் தந்தை என்று வம்சாவளியை முன்வைத்து அவர் தன்னை முன்னிறுத்திக்கொள்ளவில்லை. அவர் அரியணை ஏறிய காலத்திலிருந்தே அவரது வாழ்க்கையைக் கணக்கிடுகிறார்.
  • முன்பு அப்படி இருந்தேன், இப்போது அப்படியில்லாமல் இருக்க முயல்கிறேன் என்கிறார். பொதுமக்களிடம் அவர் கொண்டுசெல்லும் நெறிமுறைகளை அவரது குடும்பத்தாரும் பின்பற்ற வேண்டும் என்கிறார். கலிங்க யுத்தத்தில் ஏற்படுத்திய அழிவை ஏற்றுக்கொண்டு, ‘தான் செய்தது தவறு’ என்று பிரகடனப்படுத்துகிறார்.
  • ஓர் அரசன் தன்னுடைய தவறை ஒப்புக்கொண்டது இதுவே முதலாவதாகவும் கடைசியாகவும் இருக்கிறது என்கிறார் ஒலிவெல். அசோகரின்  சாம்ராஜ்ஜியத்தின் எல்லையில் இருக்கும் பிற நாட்டு மக்கள் தன்னைக் கண்டு அஞ்ச வேண்டியதில்லை என்கிறார். எல்லாவற்றையும்விட அரசதிகாரத்தைக் கடனாகப் பார்க்கிறார். மக்களுக்குத் தான் கடன்பட்டிருப்பதாகவும், அந்தக் கடனை நிவர்த்தி செய்யாமல் தனக்கு விடுதலை கிடையாது என்றும் சொல்கிறார்.
  • அரசதிகாரிகள் தனக்குக் கடன்பட்டிருக்கிறார்கள் என்றும், தான் பட்டிருக்கும் கடனை நிவர்த்தி செய்யும் விதமாக அவர்கள் செயல்படவில்லை என்றால் அவர்களுக்கு விடுதலை கிடையாது என்றும் கல்வெட்டுகளில் பொறிக்கிறார். அதிகாரத்தைக் கடனாக அசோகர் பார்த்தது உண்மையிலேயே பிரமிக்க வைக்கிறது. ஜனநாயகச் சமூகத்தில் அதிகாரத்தில் இருப்பவர்கள் அசோகர் முன்வைப்பது குறித்துச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அசாதாரண மனிதரான அசோகரைப் புரிந்துகொள்ள, தர்மம் என்ற கருத்தாக்கத்தோடு அவர் கொண்டிருந்த உறவை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
  • கலிங்கத்துப் போருக்குப் பிறகு அசோகர் பௌத்தச் சிந்தனைகளின் மேல் ஈடுபாடு காட்டுகிறார். பௌத்தராகவும் மாறுகிறார். தன்னை ‘உபாசகராக’, அதாவது சாதாரண பௌத்தச் சீடராக வரையறுத்துக்கொள்கிறார். இது நாம் எல்லோரும் அறிந்திருக்கும் விஷயம்தான். ஆனால், ஓர் அரசராக அசோகர் பௌத்தராக இருந்தாரா என்ற முக்கியமான கேள்வியை ஒலிவெல் எழுப்புகிறார். ‘அசோகர் பௌத்தராக இருந்தார். ஆனால், பௌத்த அரசராக இல்லை’ என்கிறார். இது மிக முக்கியமான முன்வைப்பு.
  • அசோகரது தனித்தன்மையை நாம் இங்கிருந்துதான் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது.
  • இந்து அடிப்படைவாதிகள் இந்தியாவை இந்து ராஷ்டிரமாக மாற்ற தீவிரமாக முயன்றுகொண்டிருக்கும் (ஏறக்குறைய அப்படி ஆகிவிட்டது என்றே நினைக்கிறேன்) இக்காலத்தில் ஒலிவெலின் இந்த அவதானிப்பை நாம் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். மேற்கத்திய ‘செக்குலரிஸம்’ என்ற கருத்தாக்கம் உள்ளார்ந்து கொண்டிருக்கும் பிரச்சினைகளை நாம் கணக்கில் கொள்வோம் என்றால் ஒலிவெலின் இக்கூற்றை நாம் ஆழமாகப் புரிந்துகொள்ள முடியும். இதற்கு, அசோகர் உரக்கச் சொல்வதையும் மெளனமாகச் சொல்வதையும் நாம் கேட்ட வேண்டியுள்ளது.

கல்வெட்டுகளின் மௌனங்கள்

  • அசோகர் கல்வெட்டுகள் கொண்டிருக்கும் மெளனங்களைக் கேட்க வேண்டும் என்கிறார் ஒலிவெல். ‘குறிப்பாகப் பண்டைய இந்தியச் சமூகக் கட்டமைப்புகள் குறித்து நிறைய மெளனங்களை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது’ என்கிறார். எடுத்துக்காட்டாக, அசோகர் கல்வெட்டுகளில் வர்ணங்கள் குறித்து எதுவும் இல்லை. பிராமணா என்ற சொல் காணப்படுகிறது என்றாலும்கூட, அது பௌத்தம், சமணம் என்பதுபோல் ஒரு மதமாகப் (பஸந்தா, Pasanda) பார்க்கப்படுகிறது.
  • அசோகர் கல்வெட்டுகளில் வர்ணத்தின் பகுதியாகப் பார்ப்பனர்கள் முன்வைக்கப்படவில்லை. வர்ணம் என்ற சொல்லோ, சத்திரியர், வைசியர், சூத்திரர் போன்ற சொற்களோ அசோகர் கல்வெட்டில் இல்லை. அசோகர் கல்வெட்டுகளில் வர்ணம் குறித்த மெளனம் நம்மிடம் முக்கியமான சில கேள்விகளைக் கேட்கிறது.
  • நம்முடைய பொதுவான புரிதலில் பார்ப்பனர் என்ற கருத்து ஒரு வர்ணமாகப் பார்க்கப்பட்டு, அது பிற வர்ணங்களோடு, குறிப்பாகச் சூத்திர வர்ணத்தோடு முரண்பட்டே புரிந்துகொள்ளப்படுகிறது. ஆனால், பார்ப்பனர்கள் பெருமளவு முரண்பட்டது பௌத்த, சமண துறவிகளோடுதான்.

இதை நாம் எவ்வாறு புரிந்துகொள்வது

  • வர்ணம் குறித்து அசோகர் கல்வெட்டுகள் மெளனமாக இருப்பதால், வர்ணக் கோட்பாடு ஒரு சமூக நடைமுறையாக இருக்கவில்லை என்ற முடிவிற்கு வர முடியுமா? பார்ப்பனர்கள் தங்களுடைய ‘சித்தாந்தரீதியான புரிதலை, சமூகவியல்ரீதியான ஒன்றாக அலங்கரித்து முன்வைத்திருக்கிறார்களா? அல்லது வர்ண முறைமை என்பது இருப்பதை விவரிப்பதாக இல்லாமல், பார்ப்பனர்கள் வேண்டுவதை முன்வைக்கும் விதிப்புரையாக இருக்கிறதா?’ என்று கேட்டுக்கொள்கிறார் ஒலிவெல்.
  • வர்ணம் குறித்த அசோகரது மெளனம் நம்மிடம் உரக்க எதையோ சொல்ல முயல்கிறது. அதைக் கேட்பதற்கு நம்மை நாம் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டியுள்ளது. (தமிழ் உட்பட சம்ஸ்கிருதமல்லாத மொழிகளில் இருக்கும் கல்வெட்டுகள் எவற்றிலும் வர்ணம் குறித்த குறிப்புகள் இல்லை என்று ஜோஹன்னஸ் பிரங்கோர்ஸ்டின் (Johannes Bronkhorst) வாசிப்பை ஒலிவெல் முன்வைக்கிறார்).
  • இப்படி முன்வைக்கப்படும் ஒவ்வொன்றும் மெளனமாக எதையோ வெளிப்படுத்துகிறது. சில மெளனங்கள் உரக்க அவற்றை வெளிப்படுத்திக்கொள்கின்றன. அசோகர் கல்வெட்டுகளும் சம்ஸ்கிருதமல்லாத மொழிகளில் இருக்கும் பிற கல்வெட்டுகளும் வர்ணம் குறித்து கொண்டிருக்கும் மெளனம் நம்மிடம் எதையோ உரக்கச் சொல்ல முயல்கின்றன. நாம்தான் அதைச் சற்று கவனமாகக் கேட்ட வேண்டியுள்ளது.

அசோகரின் தர்மம்

  • தன்னுடைய காலத்தைக் கடந்து அசோகர் சிந்தித்தார் என்று சொல்ல முடியுமானால், அது தர்மத்தின் மீது அவர் கொண்டிருந்த ஈடுபாடாகத்தான் இருக்கு முடியும் என்கிறார் ஒலிவெல். அவர் முன்வைத்த தர்மத்தை அவரது ஆட்சிக்கு உட்பட்ட மக்களுக்கான ஒன்றாக மட்டும் பார்க்காமல், உலகில் உள்ள அனைத்து மக்களுக்குமான ஒன்றாகப் பார்த்தார்.
  • சமூகரீதியாகவும் பொருளாதாரரீதியாகவும் எந்த நிலையில் இருந்தாலும், எப்படியான மதத்தைப் பின்பற்றினாலும், அறரீதியாக, பண்பாட்டுரீதியாக எப்படியான அடிப்படைகளைக் கொண்டிருந்தாலும், எந்த மொழி பேசினாலும், எப்படியான ஆட்சிக்கு உட்பட்டு வாழ்ந்துவந்தாலும் அவர்களுக்கெல்லாம் பொருந்தக்கூடிய ஒரு தர்மத்தை முன்வைப்பதே அசோகரது லட்சியமாக இருந்திருக்கிறது.

அப்படியொரு தர்மம் இருக்க முடியுமா எல்லோருக்குமான தர்மம் சாத்தியமா

  • இதற்குப் பதில் சொல்ல, தர்மத்தை அசோகர் எவ்வாறு வரையறுக்கிறார் என்று பார்க்க வேண்டியுள்ளது. அசோகர் ஒரு தனிநபராக, பௌத்த தர்மத்தைப் பின்பற்றுகிறவராக இருந்தாலும்கூட, ஒரு அரசராக அவர் முன்வைக்கும் தர்மம் எல்லா மக்களுக்கும் பொதுவானதாக இருக்கிறது. அதாவது, அன்றைய சூழலில் முன்வைக்கப்பட்ட பலவிதமான தர்மங்களையெல்லாம் கடந்து செல்லக்கூடியதாக இருக்கிறது.
  • ஒரு அரசராக, பௌத்தர்களின், பார்ப்பனர்களின், சமணர்களின், ஆசிவகர்களின் (வேறுபலவும் இருக்கின்றன) தர்மத்திற்கெல்லாம் மேலானதொரு தர்மமாகத் தன்னுடைய தர்மத்தை முன்வைக்கிறார். ‘தர்மம் அற்புதமானது! ஆனால், தர்மத்தின் பரப்பு என்ன?’ என்று கேட்டுக்கொள்ளும் அசோகர் இவ்வாறு பதிலளிக்கிறார்: ‘குறைவான தீய செயல்கள், பல நற்செயல்கள், கருணை, தானம், உண்மை, தூய்மை, பிற உயிரினங்கள் என்று வரும்போது சுயக்கட்டுப்பாடு.’
  • இவை எல்லாமே மானுட உறவுகளை மையப்படுத்துபவையாக இருக்கின்றன. ‘அசோகரைப் பொறுத்தமட்டில் தர்மம் என்பது சமூகரீதியான அக்கறைகளுக்கு ஈடுகொடுக்கும் விதமாகத் தார்மீகக் கொள்கைகள், மத நல்லிணக்கம், சூழலியல் குறித்த பிரக்ஞை, போர்களைத் தவிர்த்தல் ஆகியவையே அடிப்படையாக இருக்கின்றன’.
  • அசோகரைப் பொறுத்தமட்டில், தர்மம் என்பது தனிப்பட்ட சுயத்தை மேம்படுத்துவதாகவும், சமூகவயப்பட்ட செயல்களை முதன்மைப்படுத்துவதாகவும் இருக்கிறது என்கிறார் ஒலிவெல். மனிதர்களுக்கு இடையேயான, மனிதர்களுக்கும் பெளதிக உலகத்திற்கும் இடையேயான உறவுமுறைகளையே அசோகர் பிரதானப்படுத்துகிறார் (தேவைக்கு அதிகமாகக் காடுகளை அழிக்கக் கூடாது என்கிறார்). அதில் மானுட சுயக்கட்டுப்பாட்டை (இதுவும் ஒருவர் தன்னோடு தானே கொள்ளும் உறவாகத்தான் இருக்கிறது) முதன்மைப்படுத்துகிறார்.
  • இப்படியான உறவுமுறைகளின் அடிப்படைகளையே ‘தர்மத்தின் கூறு’களாக அசோகர் முன்வைக்கிறார். இதற்கு மாறாக ‘தர்மமும் அதர்மமும் ‘நாங்கள் இங்குதான் இருக்கிறோம்!’ என்று மார்தட்டிக்கொண்டு சுற்றிவருவதில்லை. ‘ஆரியர்களைப் புகழும் நடத்தைகள் தர்மமாகும். அவர்களை இகழ்வது அதர்மமாகும்’ என்கிறது அபஸ்தம்பா (Apastamba) தர்மசாஸ்திரம். (இது அசோகர் காலத்தில் எழுதப்பட்டது என்கிறார் ஒலிவெல்).
  • பார்ப்பனச் சிந்தனையானது நடைமுறைகளைச் சாராம்சப்படுத்துகிறது என்றால் அசோகர் அவற்றை உறவுமுறைகளாக முன்வைக்கிறார். இதன் அடிப்படையிலேயே அசோகர் தனது தர்மத்தை உலகளாவிய தார்மீகமாக முன்வைக்கிறார்.
  • உலகில் உள்ள எல்லா மக்களும் இப்படியான தர்மத்தைக் கைக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார் அசோகர். மேலும், இதை அவர் தலைமுறை தலைமுறையாகப் பின்பற்ற வேண்டும் என்றும் முன்வைக்கிறார். ‘மகன்கள், பேரன்கள், கொள்ளுப் பேரன்கள்… ஊழிக்காலம்வரை தர்மத்தின் நடைமுறைகளை மேம்படுத்திக்கொண்டே இருப்பார்கள்.
  • நல்நடத்தை ஊடாகவும் தர்மத்திற்குக் கட்டுப்பட்டும் தர்மம் குறித்து அவர்கள் அறிவுரைகள் கொடுப்பார்கள்... இந்தக் காரணங்களுக்காகவே தர்மம் குறித்து இங்கு எழுதப்படுகிறது: அது மிக நீண்ட காலத்திற்கும் நிலைத்திருக்க வேண்டும், இப்படி என்னுடைய மகன்களும் பேரன்களும் மொத்த உலகத்தின் நலனுக்காக முயல்வார்கள். இதைச் செய்வது மிகவும் கடினம் என்றாலும்கூட அவர்களால் முடிந்தமட்டில் அவர்கள் முயன்றுகொண்டிருப்பார்கள்’ என்று குறிப்பிடுகிறார்.
  • ஆக, உறவுமுறைகளிலான அவரது தர்மத்தைச் சனாதன தர்மமாகப் பார்த்தார் என்று வாசிக்க முடியும். அவர் சனாதனம் என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லை என்றாலும்கூட, ஊழிக்காலம்வரை என்று சொல்லும்போது அவர் அவரது தர்மத்தை எக்காலத்திற்குமானதாக முன்வைக்கிறார் என்று சொல்ல முடியும்.

மதத்தை எப்படிப் பார்த்தார் அசோகர்

  • தர்மத்தை உறவுமுறையிலான ஒன்றாகப் பார்த்த அசோகர் பலவிதமான மதச் சிந்தனைகளுக்கு இடையேயான முரண்பாடுகளை எவ்வாறு எதிர்கொண்டார்? எடுத்துக்காட்டாக, பௌத்தர்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் இடையேயான மோதலை எவ்வாறு கையாண்டார்? முதலில், அசோகர் அவரது தர்மத்தைப் புது விதமான மதச் சிந்தனையாக முன்வைக்கிறார் என்கிறார் ஒலிவெல்.
  • அசோகர் தர்மத்தைக் ‘குடிமை மதம்’ (இச்சொல்லைப் பயன்படுத்துவதற்கான காரணங்களை ஒலிவெல் விரிவாக முன்வைக்கிறார்) என்பதாக ஒலிவெல் வரையறுக்கிறார்.
  • அதாவது, மானுடர்களுக்கு இடையேயான உறவை, மானுடர்களுக்கும் பெளதிக உலகத்திற்கும் இடையேயானதை எப்படி உறவின் அடிப்படையில் முன்வைத்து அவரது தர்மத்தை அசோகர் விவரிக்கிறாரோ அதுபோலவே பலவிதமான மதங்களையும் (பசந்தா, Pasanda) தர்மத்தோடு கொண்டிருக்கும் உறவின் அடிப்படையிலேயே அசோகர் அணுகுகிறார்.
  • ஒருவர் அவரது மத நம்பிக்கைகளைத் துறக்காமல் அசோகரது ‘குடிமை மதம்’ அடிப்படையிலான தர்மத்திற்கு உட்பட்டு வாழ முடியும் என்று முன்வைக்கிறார் ஒலிவெல். அதாவது, பலவிதமான மத நம்பிக்கைகளுக்கு இடையே இணக்கமான உறவு சாத்தியப்பட வேண்டும் என்றால், அவையெல்லாம் ஒன்றோடொன்று உரையாட வேண்டும் என்கிறார் அசோகர். எந்த ஒரு மதச் சிந்தனையும் தர்மத்தை முழுமையாக முன்வைப்பதில்லை என்பதால் உரையாடல் மிக அவசியமாகிறது என்கிறார் அசோகர்.
  • இந்த உரையாடலைச் சாத்தியப்படுத்த, அவர் தர்மா-மஹாமத்ரா (Dharma-Mahamatra) என்ற அதிகாரிகளை நியமிக்கிறார். பல்வேறு மதச் சிந்தனைகளுக்கு இடையே மோதல்கள் வளராமல் பார்த்துக்கொள்வது, உரையாடல்களை ஊக்குவிப்பது போன்றவையெல்லாம் இந்த அதிகாரிகளின் பொறுப்பாகும். மொத்தத்தில், மானுடர்களுக்கு இடையேயான இணக்கம், மானுடர்களுக்கும் பெளதிக உலகத்திற்கும் இடையேயான இணக்கம், பலவிதமான மத நம்பிக்கைகளுக்கு இடையேயான இணக்கம் - இவையே அசோகர் தர்மத்தின் அடிப்படைகளாகின்றன.
  • உறவுமுறைகள் அடிப்படையிலான இந்தத் தர்மம் தனித்த மதங்கள் முன்வைக்கும் தர்மங்களுக்கெல்லாம் மேலான தர்மமாகிறது. மேலும், அவரது சாம்ராஜ்ஜியத்தில் மிக பரந்தப்பட்ட தன்மையிலான மக்களை (பலவிதமான மொழிகள், பண்பாடுகள், நெறிமுறைகள் கொண்டவை) ஒன்றிணைப்பதற்கானதாகவும் அவரது தர்மத்தை அசோகர் முன்வைக்கிறார். இதனால்தான், “ஒரு செக்குலர் அரசுக்கான தொல்லுருவை (prototype) அசோகர் முன்வைக்க முயன்றார்” என்கிறார் ராஜீவ் பார்கவா.
  • ஊழிக்காலம் வரை பலவித தர்மங்களுக்கெல்லாம் மேலான அவரது தர்மம் நடைமுறைப்படுத்தப்படும் என்று அசோகர் நம்பினார். மகன்கள், பேரன்கள், கொள்ளுப் பேரன்கள் எல்லாம் தொடர்ச்சியாக அவரது தர்மத்தை நடைமுறைப்படுத்துவார்கள் என்றும் நம்பினார். ஆனால், அசோகரது இந்தப் பெரும் பரிசோதனை அவருக்குப் பின் அர்த்தமில்லாமல்போனது. மேலிருந்து கீழ் என்ற அசோகரது அணுகுமுறை அதற்கான போதாமைகளைக் கொண்டிருக்க வேண்டியிருந்தது.
  • எடுத்துக்காட்டாக, சாதாரண மக்கள் தங்களது நம்பிக்கைகளின் அடிப்படையில் மிருகபலி கொடுப்பதை அவர் தடைசெய்தார் (பார்ப்பனர்கள் வேள்விகளில் மிருகபலி கொடுத்தது சித்தாந்த அடிப்படையிலானது; நடைமுறையிலானதல்ல). சடங்குகளில் ஈடுபடுவதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. வெறுத்தார் என்றும் சொல்ல முடியும். இருப்பினும், அவரது ‘குடிமை மதம்’ தொடர்பாகச் சில சடங்குகளை அவர் ஊக்குவித்தார். ஒலிவெல் இந்தப் புத்தகத்தை முடிக்கும் விதம் கிரேக்க துயர நாடகத்தைப் படிக்கும் அனுபவத்தைக் கொடுக்கிறது.
  • மாபெரும் பரிசோதனை அவரது காலத்திற்குப் பின் தொடர முடியாமல் போன வலியை உணர்கிறோம். ஆனாலும், உறவுமுறையிலானதாக அசோகர் முன்வைத்த தர்மம், எல்லா மதங்களும் முன்வைக்கும் தர்மங்களுக்கு மேலானதாக அவர் முன்வைத்த தர்மம் சமகால ஜனநாயக உறவுமுறைகளை வளர்த்தெடுக்க பங்காற்ற முடியும். நாம் மீண்டும் அசோகரை உயிர்ப்பிக்க முடியும்.

சனாதனம்

  • ஜனநாயகரீதியான பண்புகளை வளர்த்தெடுப்பதற்கு அசோகர் தர்மம் பங்காற்ற முடியும் என்றால், அதே ஜனநாயகரீதியான உறவுகளை அழித்தெழிப்பதற்கு சாதி இந்துகளின் தர்மம் பங்காற்ற முடியும். எனக்கு இந்த இடத்தில் ‘மெர்ச்சன்ட்ஸ் ஆஃப் விர்ச்யூ’ (Merchants of Virtue) நூலைக் கொண்டுவரத் தோன்றுகிறது. திவ்யா செரியன் எழுதியுள்ள முக்கியமான நூல் இது. எப்படி தீண்டப்படாதவர்கள் என்று சிலரையும் இஸ்லாமியர்களையும் விலக்கிவைத்து, சாதி இந்துக்கள் தங்களைச் சுயவரையறை செய்துகொண்டார்கள் என்று இந்தப் புத்தகத்தில் செரியன் விரிவாக ஆராய்கிறார்.
  • தீண்டாமை எவ்வாறு ‘நிறுவனப்படுத்தப்பட்டது’ என்று புரிந்துகொண்டால் மட்டுமே சாதியச் சமூகத்தை நம்மால் புரிந்துகொள்ள முடியும் என்கிறார் திவ்யா. சொல்லப்போனால் இந்து என்ற கருத்து சாதிய ஒழுங்கோடு கொண்டிருக்கும் உறவைப் புரிந்துகொள்ளாமல் நம்மால் இந்துத்துவ அரசியலைப் புரிந்துகொள்ள முடியாது. 18ஆம் நுற்றாண்டில், இந்து என்ற வரையறை தீண்டப்படாதவர்களையும் இஸ்லாமியர்களையும் விலக்கிவைக்கும் அடிப்படையிலிருந்தே முன்வைக்கப்படுகிறது; இங்கே இஸ்லாமியர்களும் தீண்டப்படாதவர்களாகவே பார்க்கப்பட்டார்கள்.
  • தீண்டாமை இதற்கு முன்னரே நடைமுறையில் இருந்துவந்தாலும்கூட, (பார்ப்பனர் என்ற வரையறையின் அடிப்படையாக) இந்த நூற்றாண்டில்தான் அது இந்து என்ற வரையறையின் பகுதியானது என்று சொல்ல முடியும். குறிப்பாக, தீண்டப்படாதவர்களின் உடல்களும் சாதி இந்துக்களின் உடல்களும் வேறாக வரையறுக்கப்படுகின்றன.
  • தீண்டப்படாத ஆண் மற்றும் பெண் உடல்களும், சாதி இந்து பெண் உடல்களும் இந்த வரையறையின் சுமைகளைச் சுமக்க வேண்டியதானது. இந்தப் பெரும் திட்டத்தை ராஜஸ்தானில் உள்ள மார்வாரிகளும் (மார்வார் பகுதியில் உள்ள வியாபாரிகள்) பார்ப்பனர்களும், ராஜபுத்திரர்களும் கூட்டுச் சேர்ந்து நடைமுறைப்படுத்துகிறார்கள் என்றும், இந்து என்ற திட்டம் வரலாற்றுரீதியாக மார்வாரிகளின் தேவை என்றும் செரியன் முன்வைக்கிறார்.
  • பார்ப்பனர்களுக்கும் ராஜபுத்திரர்களும் சமூகத்தில் இருந்த அதிகாரமும் மதிப்பும் வியாபாரிகளுக்கு இல்லை என்றும், சமூக மதிப்பை உருவாக்கிக்கொள்ள மார்வாரிகளுக்கு இது தேவையாக இருந்தது என்றும் செரியன் முன்வைக்கிறார். இந்த வரையறையின் அடிப்படையில் இந்தியா முழுவமும் இந்து என்ற கருத்து வியாபாரிகளால் கொண்டுசெல்லப்பட்டது. இந்த வரையறையை நிலைநிறுத்துவதற்கான நெறிமுறைகள், விதிமுறைகள் எல்லாம் தர்மம் என்றழைக்கப்பட்டது. இவை எக்காலத்திற்குமான தர்மம் என்றும் முன்வைக்கப்பட்டது.
  • முதலில் ‘உயர்' சாதி இந்துகள் இதன் பகுதியானார்கள். பின் தலித்தல்லாத எல்லா சாதிகளும் இதன் பகுதியாயின. இப்படியே தீண்டப்படக்கூடிய சாதிகள் என்ற வரையறை உருவானது. ஆக, சனாதன தர்மம் என்று இன்று நாம் புரிந்துகொண்டிருக்கும் சாதி இந்து தர்மம் என்பது அடிப்படையில் தீண்டாமையை அடிப்படையாகக் கொண்டிருப்பதாகும்.
  • தீண்டாமையைச் சுயத்தின் ஊனமாகப் பார்த்தால் மட்டுமே சாதி இந்துகள் தங்களுடைய ஊனத்தின் சுமையை எப்படி தீண்டப்படாதவர்கள் மேல் சுமத்திக்கொண்டிருக்கிறார்கள் என்று புரிந்துகொள்ள முடியும். இன்று நாடு முழுவதிலும், தமிழ்நாடு உட்பட தலித்துகளுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளெல்லாம் சாதி இந்து தர்மத்தையே அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன.
  • ஆக, சாதி இந்துக்கள் முன்வைக்கும் சனாதன தர்மத்தை அழித்தொழிக்க வேண்டும் என்றால் தீண்டாமை என்ற ஊனத்தைத் தங்களது சுய-ஊனமாக சாதி இந்துக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். இஸ்லாமியர்களைச் சமூக நீரோட்டத்தின் பகுதியாக்குவதற்கான வழிமுறைகளைக் கண்டெடுக்க வேண்டும் (தீண்டாமை விஷயத்தையும் மத நல்லிணக்கத்தையும் காந்தி ஏன் முதன்மைப்படுத்தினார் என்றும், தலித்துகள் இந்து மதத்தின் பகுதியானவர்கள் இல்லை என்று அம்பேத்கர் ஏன் முன்வைத்தார் என்றும் நம்மால் புரிந்துகொள்ள முடியும்).
  • தீண்டாமையை நடைமுறைப்படுத்திக்கொண்டே, தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகளில் ஈடுபட்டுக்கொண்டே சனாதன தர்மத்தை அழிப்போம் என்று சொல்வது வெறும் சொல்லணியாக மட்டுமே இருக்க முடியும்.
  • தொகுத்துச் சொல்வதென்றால், இந்து என்ற வரையறையும் சாதி இந்துக்களின் சனாதன தர்மம் என்ற கருத்தாக்கமும் பார்ப்பனர் என்ற கருத்தோடும், தீண்டாமை நடைமுறையோடும் பின்னிப்பிணைந்துள்ளன. இந்து மதவாத அரசியலும் தீண்டாமையும் சாதி இந்துகளின் ‘சனாதன தர்மம்’ என்ற புள்ளியில்தான் ஒன்றிணைகின்றன.
  • அசோகர் தர்மம் மனிதர்களுக்கு இடையே இணக்கமான உறவுமுறையை அடிப்படையாகக் கொண்டிருந்தது என்றால், சாதி இந்துக்களின் தர்மம் தீண்டாமையை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.
  • மொத்தத்தில், தர்மம் என்ற கருத்தமைவைச் சாராம்சப்படுத்தாமல், அதன் உள்ளார்ந்த உறவுமுறைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் மட்டுமே நம்மால் சாதி இந்துக்களின் சனாதன தர்மத்தை முறியடிக்க முடியும். அதற்கு அசோகர் தர்மம் நமக்கு வழிகாட்டுகிறது. அசோகரது சனாதன தர்மத்தைக் கொண்டு சாதி இந்துக்களின் சனாதன தர்மத்தை நம்மால் முறியடிக்க முடியும்.
  • அசோகரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது!

நன்றி: அருஞ்சொல் (19 - 11 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்