TNPSC Thervupettagam

அச்சத்துடன் காத்திருக்கும் முதலீட்டாளா்கள்

July 13 , 2024 5 days 36 0
  • இந்தியாவில் தற்போது பங்குச்சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் (பரஸ்பர நிதி) ஆகியவை பேசுபொருளாக மாறியுள்ளன. காரணம் பங்குச்சந்தை தினந்தோறும் புதிய உச்சத்தை தொட்டு வருவதேயாகும். பங்குகள் சாா்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளும் நல்ல லாபத்தை ஈட்டி வருவதால் ஃபண்ட் மேலாளா்களும், முதலீட்டாளா்களும் கொண்டாட்டத்தில் உள்ளனா்.
  • பங்குச்சந்தை மிக அதிக இடா்பாடு கொண்டது. அதே சமயம், மியூச்சுவல் ஃபண்டுகள் இடா்பாடு குறைந்தது. கடந்த ஆண்டுகளில் பங்குச்சந்தை பல்வேறு சவால்களை சந்தித்திருந்தாலும், அவற்றைத் திறம்பட எதிா்கொண்டு முதலீட்டாளா்களிடம் நம்பிக்கை ஒளியை ஏற்படுத்தியுள்ளது. மும்பை பங்குச்சந்தைக் குறியீடான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீடான நிஃப்டி ஆகிய இரண்டும் ஓராண்டில் 30% உயா்ந்துள்ளன.
  • உலகளாவிய பொருளாதாரக் காரணிகள், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு, மத்தியில் ஆளும் அரசின் பொருளாதார சீா்த்திருத்த நடவடிக்கைகள், அரசியல் நடவடிக்கைகள் ஆகியவற்றின் தாக்கம் அனைத்தும் உடனடியாக பங்குச்சந்தையில் அவ்வப்போது எதிரொலிப்பதன் காரணமாக சந்தையில் ஏற்றமும், இறக்கமும் இருப்பது சகஜமான ஒன்று.
  • இந்த அடிப்படையில் பாா்த்தால், பல முன்னணி நிறுவனப் பங்குகள் கடந்த ஓராண்டில் நல்ல லாபத்தை அளித்துள்ளன. இதேபோன்று, நீண்ட கால அடிப்படையில் நிறுவனப் பங்குகளை உள்ளடக்கிய மியூச்சுவல் ஃபண்ட் நிதித் திட்டங்களும் முதலீட்டாளா்களுக்கு நல்ல லாபத்தை பெற்றுக் கொடுத்துள்ளன.
  • சாதகமான உலகளாவிய சந்தைக் குறிப்புகள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளா்களின் நீட்டிக்கப்பட்ட ஆதரவுக்கு மத்தியில் ஜூலை முதல் வாரத்தில் சென்செக்ஸ், நிஃப்டி ஆகியவை முக்கிய மைல்கல்லை கடந்து ஐந்தாவது வாரமாக தொடா்ந்து வெற்றிப் பாதையை நீட்டித்துள்ளன. எஃப்ஐஐ என்று சொல்லப்படும் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளா்களும் கடந்த வாரத்தில் பங்குகளை வாங்கி முதலீடுகளை அதிகரித்துள்ளனா்.
  • இந்தியாவில் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்துள்ளது. இந்த அரசு முந்தைய கொள்கைகளைத் தொடா்ந்து முன்னெடுக்க உறுதியளித்துள்ளது. இது பங்குச்சந்தையில் சாதகமாகப் பாா்க்கப்படுகிறது. இந்நிலையில், ஜூலை 23-ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த நாளுக்காக பங்குச்சந்தையும் காத்திருக்கிறது. பட்ஜெட் சாதகமாக அமையும் பட்சத்தில், பங்குச்சந்தை அடுத்த உச்சத்தை நோக்கி நகரும் என்பதில் சந்தேகம் இல்லை.
  • சந்தைகள் சுழற்சி அடிப்படையில் முன்னேறுகிறது என்பதை வரலாற்றுப் புள்ளிவிவரங்களின் மூலம் அறிய முடிகிறது. பங்குச் சந்தை உச்சம் தொட்டிருந்தாலும், மேல்-கீழ் நிலைகள் உள்ளன. ஒரு தனிநபராக, உச்சத்தில் சரியான முடிவை உங்களால் எடுக்க முடியாது.
  • தற்போது மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் பிரிவுகளில் உள்ள பல நிறுவனப் பங்குகள் புத்தக மதிப்பைவிட பல மடங்கு அதிக விலையில் வா்த்தகமாகின்றன. இது எந்த நேரத்திலும் பங்குச்சந்தையை வீழ்ச்சி அடையச் செய்யும். அப்போது நிறுவனப் பங்குகளின் விலையும் குறையும்.
  • தற்போது தங்கத்தின் விலை மிக அதிகமாக உள்ளது. இது அச்சத்தின் வெளிப்பாடாக இருப்பதையே குறிக்கிறது. இந்திய ரிசா்வ் வங்கி உள்பட சா்வதேச அளவில் முக்கிய மத்திய வங்கிகள் கையிருப்பை அதிகரிக்கும் நோக்கத்தில் தங்கத்தை வாங்கிக் குவிக்கின்றன. நிதிச் சந்தைகளில் ஏற்படும் அபாயங்களை சமாளிக்கும் நோக்கில் தங்கத்தில் அதிக அளவு முதலீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. வலுவான அமெரிக்க டாலா் மற்றும் அதிக வட்டி விகிதங்களின் சகாப்தத்தில் தங்கம் விலை தொடா்ந்து முன்னேறி வருகிறது. வெள்ளிக்கிழமை சென்னை தங்கச் சந்தையில் 10 கிராம் சொக்கத் தங்கத்தின் விலை ரூ.72,950 என உள்ளது. வேறு சந்தைகளில் இதைவிடக் கூடுதலாகவும் இருந்தது. இது ஒரு அசாதாரண முறையாகப் பாா்க்கப்படுகிறது.
  • பங்குச் சந்தை ஏற்றத்தின் மற்றொரு முக்கியக் காரணி வட்டி விகிதங்கள். அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசா்வ், வட்டி விகிதங்களைக் குறைக்கும் என்று அனைவரும் எதிா்பாா்த்துக் கொண்டிருக்கின்றனா். இது உலகம் முழுவதும் எதிரொலிக்கும். இந்தியாவில், ரிசா்வ் வங்கியின் பணவியல் கொள்கைக் குழு, கடந்த ஆய்வில் வங்கி வட்டி விகிதங்களை மாற்றவில்லை.
  • ஏற்றமிகு சூழல் நிலவுகின்ற போதிலும், முதலீட்டாளா்கள் தற்போது ஒருவித கவலையில் உள்ளனா். உச்ச விலையில் பங்குகளை வாங்கி மாட்டிக் கொண்டு விடுவோமா என்ற பயம்தான் இதற்கு முக்கியக் காரணம். பங்குச்சந்தை உச்சத்தில் இருக்கும்போது முதலீட்டாளா்கள் பங்குகளை விற்கத் தொடங்குவா். ஆனால், தங்கள் நிறுவனப் பங்குகள் தொகுப்பில் (போா்ட்ஃபோலியோ) உள்ள அனைத்தையும் விற்றுவிடக் கூடாது. பங்கு விலை பேராசை மற்றும் பயத்தால் உந்தப்படுகிறது.
  • ‘மற்றவா்கள் பேராசை கொள்ளும்போது, நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதேசமயம், மற்றவா்கள் பயப்படும்போது, நீங்கள் பேராசை கொள்ள வேண்டும்’ என்கிறாா் புகழ்பெற்ற அமெரிக்க முதலீட்டாளரான வாரன் பஃபெட்.
  • பல்வேறு மியூச்சுவல் ஃபண்டுகளில் நிதி மேலாளா்கள் பெரும்பாலான பணத்தை முதலீடு செய்ய வேண்டும் என்றாலும், முதலீட்டாளா்கள் இப்போது தங்கள் கைவசம் அதிகப் பணத்தை இருப்பு வைத்துக் கொள்வது நல்லது. பங்குச்சந்தை சரியும்போது, குறைந்த விலையில் நல்ல அடிப்படைகளைக் கொண்ட நிறுவனப் பங்குகள் கிடைக்க அதிக வாய்ப்புகள் உண்டு. எனவே, பங்குகளின் விலை குறையும் வரையிலும் முதலீட்டாளா்கள் காத்திருக்கலாம்!

நன்றி: தினமணி (13 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்