- இந்தியாவில் எட்டு நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டு நாடு திரும்பியிருக்கிறாா் பூடான் அரசா் ஜிக்மே கேசா் நம்கியால் வாங்சுக். அஸ்ஸாமில் மூன்று நாள்களும், தில்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் பல முக்கியமான நிகழ்வுகளையும், சந்திப்புகளையும் மேற்கொண்ட பூடான் அரசரின் பயணம், இருநாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டுவிடாமல் தடுக்கும் முயற்சியாகப் பாா்க்கப்படுகிறது. கடந்த மாதம் பூடான் வெளியுறவுத் துறை அமைச்சா் டாண்டி தோா்ஜியின் சீனப் பயணம் ஏற்படுத்திய மனக்கசப்பையும், சந்தேகத்தையும் அகற்றுவது பூடான் அரசரின் இந்தியப் பயணத்தின் பின்னணியாக இருக்கக்கூடும்.
- பெரும்பாலான நாடுகளுடன் பூடானுக்கு தூதரக அளவிலான உறவு கிடையாது. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையைச் சாா்ந்து பூடான் செயல்படுகிறது என்பதால், அதற்கான அவசியம் ஏற்படவில்லை. தூதரக உறவு இல்லாத நாடுகளில் ஒன்றான சீனாவுக்கு பூடானின் வெளியுறவுத் துறை அமைச்சா் பயணம் மேற்கொண்டதும், பல்வேறு நிலைகளில் பேச்சுவாா்த்தை மேற்கொண்டதும் இந்தியாவை ஆச்சரியப்படுத்தியது.
- கடந்த ஏழு ஆண்டுகளாக மேற்கொள்ளாத பூடான் - சீனா எல்லைப் பேச்சுவாா்த்தையை மீண்டும் தொடங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது இந்தியாவை அதிா்ச்சிக்குள்ளாக்கியது. பூடான் - சீனா பேச்சுவாா்த்தை அந்த இருநாட்டு உறவில் கணிசமான முன்னேற்றத்தை ஏற்படுத்தியதாக கூட்டறிக்கை தெரிவித்தது.
- எல்லையை வரையறுக்க இருநாடுகளின் வல்லுநா் குழு செயல்படுவது குறித்து கூட்டுறவு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டது. விரைவிலேயே தூதரக அளவிலான ராஜாங்க உறவை ஏற்படுத்தவும், எல்லைப் பேச்சுவாா்த்தையை சுமுகமாக முடிவுக்குக் கொண்டுவரவும் பூடானுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தாா் சீன வெளியுறவுத் துறை அமைச்சா் வாங் யீ.
- இந்தியாவுக்கும் பூடானுக்கும் இடையேயான நெருக்கமும், உறவும் தெரிந்தும்கூட, அந்த உறவில் பிரிவை ஏற்படுத்தும் முயற்சியை சீனா மேற்கொண்டது புதுதில்லிக்குத் தெரியாமல் இல்லை. வெளியுறவுத் துறை அமைச்சரின் சீன விஜயத்துக்கு சில வாரங்களுக்கு முன்னால், பூடான் பிரதமா் எல்லை பிரச்னையில் சீனாவுடன் விரைவில் தீா்வு ஏற்படும் என்றும், சீனாவுடனான தங்களது நாட்டின் நெருக்கம் எந்தவிதத்திலும் இந்தியாவை பாதிக்காது என்றும் தெரிவித்திருந்தாா்.
- தனது சுற்றுலா, வா்த்தகம், ஏற்றுமதி - இறக்குமதி உள்ளிட்ட எல்லா விஷயங்களிலும் இந்தியாவைச் சாா்ந்திருக்கும் பூடான், இதுவரை இந்தியாவைக் கலந்தாலோசிக்காமல் எந்தவொரு முடிவையும் எடுத்ததில்லை. எல்லைப் பிரச்னையில் பூடான் எடுக்கும் எந்த முடிவிலும் இந்தியாவை இணைத்துக்கொள்வது அவசியம். இந்தியாவின் சிலிகுரி கணவாயை அடுத்த இந்தியா - சீனா - பூடான் முச்சந்தி பதற்றப் பகுதியாக நிலவும் சூழலில் தன்னிச்சையாக பூடானும் சீனாவும் எல்லைப் பிரச்னையில் முடிவுகாண முனைவது இந்தியாவின் நலனுக்கு எதிராக அமையும். அதனால், பூடானின் சீன நெருக்கம் இந்தியாவைக் கூா்ந்து கவனிக்க வைத்ததில் வியப்பில்லை.
- பூடான் அரசா் வாங்சுக், இந்திய பிரதமா் நரேந்திர மோடியை சந்தித்ததைத் தொடா்ந்து வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் இந்தியாவுக்கும் பூடானுக்கும் இடையே கோக்ராஜாா் - ஜெலிஃபூ இடையே புதிய ரயில் வழித்தடம் தொடங்குவதற்கான ஆய்வுகளை மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்திருக்கிறது. அந்த ரயில் வழித்தடம் பூடானையும் அஸ்ஸாமையும் இணைக்கும் என்றால், மேற்கு வங்கத்துடன் இணைக்கும் இன்னொரு வழித்தடம் குறித்தும் பேச்சுவாா்த்தை தொடங்கியிருக்கிறது.
- மேற்கு வங்கம், வடகிழக்கு மாநிலங்கள் ஆகியவற்றை பூடானின் தெற்கு, கிழக்கு மாவட்டங்களுடன் இந்த ரயில் வழித்தடம் இணைப்பதால் அந்தப் பகுதிகளும் வடக்கு வங்கதேசமும் வளா்ச்சி அடையும். அஸ்ஸாமையொட்டிய பூடானின் தெற்குப் பகுதியில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைப்பதும், ஜெலிஃபூவில் விமான நிலையம் அமைப்பதும் பூடானின் வளா்ச்சியை உறுதிப்படுத்தும் சில முயற்சிகள். அதற்கு இந்தியாவின் ஒத்துழைப்பும் முதலீடும் உறுதி அளிக்கப்பட்டுள்ளன.
- பூடானின் 13-ஆவது ஐந்தாண்டு திட்டத்துக்கு இந்தியா பெருமளவில் உதவுகிறது. பூடான் - நேபாளம் ஆகிய இரண்டு நாடுகளிலும் நீா்மின் நிலையங்கள் இந்திய உதவியுடன் அமைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் உற்பத்தியாகும் மின்சாரம் வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட அண்டை நாடுகளுடனும் பகிா்ந்து கொள்ளப்படுவதால் தெற்காசியாவின் வளா்ச்சிக்கு உறுதுணையாக அமையும். உலக வங்கியும் ஜப்பானும் இந்தியாவின் இந்த முயற்சிகளுக்கு முதலீடு வழங்க ஒப்புக்கொண்டுள்ளன.
- இந்தியாவின் அண்டை நாடுகள் அனைத்திலுமே சீனா தடம் பதித்துக்கொண்டிருக்கிறது என்பது உண்மை. தனது முதலீடுகளால் மட்டுமல்லாமல், கடனுதவியாலும் அந்த நாடுகளை ஈா்க்கிறது. பாகிஸ்தான் மட்டுமல்லாமல் மாலத்தீவு, இலங்கை, வங்கதேசம், நேபாளம், இப்போது பூடான் என்று சீனா தனது நெருக்கத்தை அதிகரித்துக் கொண்டிருப்பது இந்தியாவுக்கு அச்சுறுத்தல் என்பதை மறுப்பதற்கில்லை. அதே நேரத்தில், இந்த நாடுகள் அனைத்துமே சீனாவின் கடன் வலையில் சிக்கிக்கொள்ளும் பேராபத்தை உணரத் தொடங்கியிருக்கின்றன.
- மாறிவிட்ட உலக சூழலில் எந்தவொரு நாடும், எந்தவொரு நாட்டையும் சாா்ந்திருப்பது சாத்தியமல்ல. ஒன்றோடொன்று மோதலில் இருக்கும் அமெரிக்காவுடனும் ரஷியாவுடனும் இந்தியா உறவு வைத்துக்கொள்வது போல, நமது அண்டை நாடுகளும் இந்தியாவுடனும் சீனாவுடனும் உறவு வைத்துக்கொள்கின்றன என்றுதான் நாம் பாா்க்க வேண்டும்!
நன்றி: தினமணி (11 – 11 – 2023)