TNPSC Thervupettagam

அச்சமூட்டும் மக்கள்தொகைப் பெருக்கம்

July 11 , 2022 759 days 532 0
  • ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, உலக அளவில் மக்கள்தொகையில் முதலிடத்தில் இருக்கும் சீனாவின் மக்கள்தொகை 141 கோடி. அதற்கு அடுத்ததாக இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவின் மக்கள்தொகை 134 கோடி. ஆனால்  2030-ஆம் ஆண்டு 150 கோடி மக்கள் இந்தியாவில் இருப்பார்கள் என்றும், 2050-ஆம் ஆண்டு வாக்கில் அது 166 கோடியாக உயரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2030-ஆம் ஆண்டிற்கு பின், சீனாவில் மக்கள்தொகை மெல்ல மெல்லக் குறைந்துஇந்தியா முதலிடத்தில் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
  • மக்கள்தொகை அதிகரிப்பை எதிர்கொள்ளும் நாடுகளாக இந்தியா, சீனா, நைஜீரியா, பாகிஸ்தான், காங்கோ, எத்தியோப்பியா, வங்கதேசம் ஆகிய நாடுகள் ஐ.நா. சபையினால் இனங்காணப்பட்டுள்ளன. 18-ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற பொருளாதார நிபுணரான டி.ஆர். மால்தஸ், "அதிகரித்து வரும் மக்கள்தொகைப் பெருக்கத்தினால் வருங்காலத்தில் மக்கள் உணவின்றி அவதிப்படுவர்' என்று கூறினார். அன்று அவரால் வெளியிடப்பட்ட கருத்து, உணவுப் பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ள இலங்கை உட்பட, உலக  நாடுகள் பலவற்றால்  உண்மை என இன்று உணரப்பட்டுள்ளது.
  • 2018-ஆம் ஆண்டில் உலக மக்கள்தொகை தினம் முதல் முறையாக, "குடும்பக் கட்டுப்பாடு மனித உரிமை' என்கிற முழக்கத்தை வழங்கியதால், இன்று பெண்கள் குறுகிய இடைவெளியில் கர்ப்பமாவதை மறுக்கும் உரிமையை பெற்றுள்ளனர்.
  • 2021-ன் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவின் உத்தேச மக்கள்தொகை சுமார் 121 கோடி. இதில் ஆண்கள் சுமார் 62 கோடி. பெண்கள் சுமார் 59 கோடி. தமிழக மக்கள்தொகைவிரைவில் எட்டு கோடியைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • தமிழ்நாட்டின் உத்தேச மக்கள்தொகை 7 கோடியே 21 லட்சத்து 38 ஆயிரத்து 958 பேர். இதில் 3 கோடியே 61 லட்சத்து 58 ஆயிரத்து 871 ஆண்களும், 3 கோடியே 59 லட்சத்து 80 ஆயிரத்து 87 பெண்களும் அடக்கம். ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை குறைவு. சென்னையில் அதிகபட்சமாக சுமார் 43 லட்சம் பேர் இருப்பதாக மக்கள் தொகை கணக்கெடுப்பில் கூறப்பட்டிருக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 5.96 % தமிழக மக்கள்தொகை. இந்தியாவில் மக்கள்தொகை அதிகம் உள்ள மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் ஏழாவது இடத்தில் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் மக்கள்தொகை 15.6 % அதிகரித்துள்ளது.
  • தமிழகத்தின்  எழுத்தறிவு விகிதம் 73.45 விழுக்காட்டிலிருந்து 80.33 விழுக்காடாக உயர்ந்துள்ளது. இதில் 86.81 விழுக்காடு ஆண்களும், 73.86 விழுக்காடு  பெண்களும் அடங்குவர். மக்கள்தொகை மிகவும் குறைவாக உள்ள மாவட்டம் நீலகிரி.அதே வேளையில், 2011இல் 8.6 விழுக்காடாக இருந்த இந்தியாவின் முதியோர்களின் (60 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையோர்) எண்ணிக்கை, 2041-இல் இரட்டிப்படையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் ஒரு பெண் தனது ஆயுட்காலத்தில் சராசரியாக பெற்றெடுக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்து வருகிறது.
  • கருவுறுதல் விகிதத்தில் தில்லி, ஜம்மு- காஷ்மீரில் கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு மற்றும் கேரளத்தில் பெரிய அளவில் மாற்றமில்லை. மேலும், சமீபத்தில் உலகை உலுக்கி வந்த கொவைட்19 காரணமாக திட்டமிடப்படாத கர்ப்பங்களால் மக்கள்தொகை உயரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.  
  • நாள்தோறும் குழந்தையை பிரசவிக்கும் பெண்களில் 800 பேர் இறக்கிறார்கள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மக்கள்தொகை பிரச்னை என்பது குடும்பக் கட்டுப்பாடு, மனித உரிமைகள், சுகாதார உரிமை, குழந்தைகளின் உடல்நலம், பாலின சமத்துவம், குழந்தை திருமணம், கருத்தடைப் பயன்பாடு, பாலியல் கல்வி, பாலியல் நோயைப் பற்றிய அறிவு ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
  • பாலுறவு தொடர்பான பிரச்னைகள் 15 வயது முதல் 19 வயது வரையிலான பெண்களிடையே கூர்ந்து கவனிக்கப்பட வேண்டும். ஏனெனில் உலகில் 150 லட்சம் பிரசவங்கள் இந்த வயதுள்ள பெண்களிடத்தில்தான் நடைபெறுகின்றன. இதில் 40 லட்சம் பிரசவங்கள், கர்ப்ப சிக்கல் அல்லது பிற இனப்பெருக்க சுகாதாரம் தொடர்பான பிரச்னைகளின் காரணமாக கருக்கலைப்பில் முடிகின்றன.
  • பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான தொடக்கக் கல்வி கிடைப்பதை உறுதிப்படுத்துதல், பெண் குழந்தையின் உரிமைகளைப் பாதுகாக்க தேவையான  சட்டங்களை இயற்றுதல், சமூகத்தில் இருக்கும் பாலின முரண்பாடுகளை அகற்ற மக்களுக்கு கற்றுக்கொடுத்தல், பாலியல் மூலம் பரவும் நோய்த்தொற்றுகளைப் பற்றி மக்களுக்கு அறிவுறுத்தல், அவற்றை  தடுக்கும் முறைகள்பற்றி கற்பித்தல் ஆகிய நிகழ்வுகள் இந்நாளில் மக்களிடையே மக்கள்பெருக்கத்தின் எதிர்விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும்.    
  • மக்கள்தொகைப் பெருக்கத்தினால் உணவு, நீர், சுற்றுச்சூழல் மாசடைதல், சமூக சீர்கேடுகள், குற்றச்செயல்கள் பெருகுதல், சுகாதார பிரச்னைகள், வேலையின்மை, போக்குவரத்து நெரிசல், இடப் பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி போன்ற பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன.
  • சாமானிய மக்கள் மத்தியில் மக்கள்தொகை அதிகரிப்பினால் ஏற்படும் பிரச்னைகள், குடும்ப நலத் திட்டமிடல், பாதுகாப்பான கருத்தடை முறைகள் ஆகியவை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஊடகங்களும் அதற்கு துணைபுரிந்தால் சிறப்பான பலன் கிட்டும்.
  • மேலும் பள்ளிகளில் மக்கள்தொகை குறித்த கல்விக்கு முக்கியமளிப்பதுடன், மக்கள்தொகைப் பெருக்கத்தினால் ஏற்படும் சமூக, பொருளாதார தாக்கங்கள் பற்றிய கருத்தரங்குகளுக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும்.
  • இன்று  (ஜூலை 11)  உலக மக்கள்தொகை நாள்.

நன்றி: தினமணி (11 – 07 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்