TNPSC Thervupettagam

அச்சுறுத்தும் போர் பதற்றம்!

August 5 , 2024 163 days 144 0
  • ஈரான் மண்ணில் ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவர் இஸ்மாயில் ஹனீயே கொல்லப்பட்டிருப்பது மேற்கு ஆசியாவில் போர் பதற்றத்தை மேலும் அதிகரித்திருக்கிறது.
  • ஈரானில் கடந்த ஜூலை 5-ஆம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற மசூத் பெஷஸ்கியான் பதவியேற்பு விழா தலைநகர் டெஹ்ரானில் கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 30) நடைபெற்றது. இந்தியாவின் பிரதிநிதியாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டார். இஸ்மாயில் ஹனீயே (62) உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்கள் இந்தப் பதவியேற்பு விழாவில் பங்கேற்றனர்.
  • இந்த நிகழ்வில் அதிபராக பதவியேற்கும் மசூத் பெஷஸ்கியானை ஹமாஸ் தலைவர் ஹனீயே ஆரத்தழுவியபோது, கூடியிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் 'இஸ்ரேலுக்கு மரணம்' என்று உற்சாக கோஷம் எழுப்பிய சில மணி நேரங்களில் ஹனீயே கொல்லப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
  • டெஹ்ரானில் உயர்பாதுகாப்பு கொண்ட விருந்தினர் இல்லத்தில் அவர் தங்கியிருந்தபோது, குறுகிய தொலைவு சென்று தாக்கும் ஏவுகணை மூலம் அவர் கொல்லப்பட்டதாக ஈரான் அறிவித்துள்ளது. அவர் தங்கியிருந்த அதே வளாகத்தில் மேலும் பல தலைவர்கள் தங்கியிருந்தபோதும் ஹனீயே மட்டுமே குறிவைத்துக் கொல்லப்பட்டுள்ளார்.
  • இது இஸ்ரேலின் கைவரிசைதான் என்று ஈரான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் இதுவரை அதிகாரபூர்வமாக ஒப்புக்கொள்ளவில்லை என்றபோதும், அரசின் தகவல் தொடர்பு அலுவலக ஊடகப் பக்கத்தில் 'ஒழித்துக்கட்டப்பட்டார்' என்று வாசகத்துடன் ஹனீயே படமும் பதிவிடப்பட்டிருந்தது. பின்னர் அந்தப் பதிவு நீக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலுக்குள் ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி தரை, கடல், வான் வழியாகப் புகுந்து தாக்குதல் நடத்தியதில் 1,200-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். 200-க்கும் மேற்பட்டவர்கள் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர். இதற்கு காரணமான ஹமாஸ் தலைவர்கள் கொல்லப்படுவார்கள் என்று இஸ்ரேல் கூறியிருந்தது. அந்தப் பட்டியலில் ஹனீயே பெயரும் இடம்பெற்றிருந்தது.
  • சற்றும் எதிர்பாராத இந்தத் தாக்குதலால் ஆத்திரமடைந்த இஸ்ரேல், காஸா மீது கடந்த 10 மாதங்களாக கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்திவருவதில் இதுவரை 39,550-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். அந்த நகரில் மருத்துவமனைகள், பள்ளிகள் என கட்டுமானங்கள் பெரும்பாலானவை தவிடுபொடி ஆகியுள்ளன.
  • பிரமுகர்களைக் குறிவைத்துக் கொல்வதில் இஸ்ரேலின் 'மொசாத்' உளவு அமைப்பு கைதேர்ந்ததாகும். ஈரான் அணு விஞ்ஞானி ஃபக்ரிஸாதே 2020 நவம்பரில் டெஹ்ரானின் புறநகர்ப் பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டார். இரண்டு விஞ்ஞானிகள் 2010-ஆம் ஆண்டிலும், ராணுவ அதிகாரி சயத் கொடாயீ 2022-ஆம் ஆண்டிலும் குறிவைத்துக் கொல்லப்பட்டனர்.
  • இதற்கு முன்னர் ஹமாஸ் அமைப்பின் தலைவர்களாக இருந்த ஷேக் அகமது யாசின், அப்தெல் அஸிஸ் அல் ராண்டிஸி போன்றவர்களும் 2004-இல் படுகொலை செய்யப்பட்டனர். ஹமாஸ் அமைப்பின் ராணுவப் பிரிவுத் தலைவர் முகமது டெஃய்ப் கடந்த ஜூலையில் தங்களால் கொல்லப்பட்டதாக இஸ்ரேலில் கடந்த சில நாள்களுக்கு முன்னர் அறிவித்தனர். இதுபோன்று நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். யேமனில் இருந்து செயல்படும் ஹூதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் நகர் மீது நடத்திய ட்ரோன் தாக்குதலுக்கு எதிர்வினையாக யேமன் நாட்டின் துறைமுக நகரான ஹொடேடா மீது இஸ்ரேல் கடந்த ஜூலை 20-ஆம் தேதி கடும் தாக்குதலைத் தொடுத்தது.
  • இஸ்ரேல் வசமுள்ள சிரியாவின் கோலன் குன்றுகள் மீது லெபனானில் இருந்து செயல்படும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தியதில் 12 சிறுவர்கள் கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடியாக லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதி ஃபுவாத் ஷுக்கர் உயிரிழந்தார். ஷுக்கர் உயிரிழந்த சில மணி நேரங்களில் ஹனீயே கொல்லப்பட்டுள்ளார்.
  • யேமனில் இருந்து செயல்படும் ஹூதி கிளர்ச்சியாளர்கள், லெபனானில் இருந்து செயல்படும் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பினர், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் என மூன்று அமைப்புகளையுமே ஈரான் தீவிரமாக ஆதரிப்பதுடன் ஆயுத உதவியும் அளித்து வருகிறது.
  • ஹனீயே படுகொலையில், ஈரான் உள்ளூர்வாசிகள் உதவியிருந்தாலோ அல்லது இஸ்ரேல் உளவு அமைப்பான மொசாத் நேரடியாக செயல்பட்டிருந்தாலோ எப்படி இருந்தாலும் ஈரானுக்கு அது மிகப்பெரும் அவமானம்.
  • தனது நாட்டின் விருந்தினரைப் படுகொலை செய்துள்ளதால் இஸ்ரேலுக்கு எதிரான பழிவாங்கும் நடவடிக்கை சரியான நேரத்தில், சரியான இடத்தில், சரியான விதத்தில் மிகக் கடுமையாக மேற்கொள்ளப்படும் என ஈரான் மதத் தலைவர் அயதுல்லா கமேனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
  • இந்தப் பின்னணியில், எல்லா பக்கங்களில் இருந்தும் இஸ்ரேல் தாக்கப்படக்கூடும் என்பதால், அந்த நாட்டுக்கு உதவுவதற்காக ஏவுகணை எதிர்ப்புத் திறன் கொண்ட கப்பல்களையும், ஏவுகணைகளை வீசும் போர்க் கப்பல்களையும் அமெரிக்கா கூடுதலாக பெரிய அளவில் அனுப்பி உள்ளது.
  • இருதரப்பிலும் ஏற்கெனவே 42 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துவிட்ட நிலையில், இஸ்ரேல், ஈரான், அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகள், பயங்கரவாத அமைப்புகள் ஆகியோரின் பொறுப்பற்ற நடவடிக்கைகளால் மேற்கு ஆசியப் பகுதிகள் பேரழிவை எதிர்கொள்ளும் அபாயம் எழுந்துள்ளது.
  • ரஷியா - உக்ரைன் போரும் தொடரும் நிலையில், மேற்கு ஆசியாவிலும் தாக்குதல்கள் தீவிரமடைந்தால் பொருளாதார ரீதியாக அதன் விளைவுகளை ஒட்டுமொத்த உலகமும் எதிர்கொள்ள நேரிடும்!

நன்றி: தினமணி (05 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்