PREVIOUS
கரோனா தீநுண்மியால் இந்திய நாடே ஸ்தம்பித்துப் போயிருக்கும் நிலையில், மருத்துவத் துறையையும் காவல் துறையையும் போலவே, மக்களுக்காக மகத்தான சேவையை ஓசையில்லாமல் செய்து கொண்டிருக்கிறது இந்திய அஞ்சல் துறை.
நோய்த் தொற்றை எதிர்த்துப் போராட மருத்துவ உலகிற்குத் தேவைப்படும் ஏராளமான மருந்துகள், பரிசோதனை உபகரணங்கள், வென்டிலேட்டர்கள் உள்ளிட்டவற்றை மருத்துவமனைகளுக்கும் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும் கொண்டு சேர்ப்பதில் அஞ்சல் துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகத்துடனும் தொண்டு நிறுவனங்களுடனும் இணைந்து மக்களுக்குத் தேவையான உணவு மற்றும் நிவாரணப் பொருள்களையும் அஞ்சல் துûறை விநியோகித்து வருவது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமல்ல, கரோனாவால் உலக மக்களெல்லாம் வீட்டில் முடங்கிப் போயிருக்கும் சூழ்நிலையில், புற்று நோய் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட எண்ணற்ற மக்கள் தங்களுக்கான மருந்து மாத்திரை கிடைக்காமல் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.
இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதற்காக சிறப்பான முயற்சிகளை மேற்கொண்டது அஞ்சல் துறை.
அஞ்சல் துறை
போக்குவரத்து சேவை முற்றிலுமாக முடக்கப் பட்டிருந்த வேளையில் கூட, தபால் மூலம் வரும் மருந்து மாத்திரைகள் முடங்கிவிடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தது.
இதற்காக, அஞ்சல் துறையினர் பல மணி நேரம் இரு சக்கர வாகனத்திலோ, மிதிவண்டியிலோ பயணித்து, நேரம் காலம் பார்க்காமல் அவர்களுக்குத் தேவையான மருந்து மாத்திரைகளை அவர்களின் வீட்டுக்கே சென்று வழங்கினர். இப்படிப்பட்ட மகத்தான சேவைக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த பயனாளிகளும் உண்டு.
நோய்த் தொற்று அதி தீவிரமாகப் பரவிக்கொண்டிருக்கும் இந்த சமயத்தில், தங்களது கணக்கில் உள்ள பணத்தை எடுப்பதற்காக வங்கிக்கோ, தானியங்கி பணப் பட்டுவாடா மையத்திற்கோ செல்ல மக்கள் அஞ்சுகிறார்கள் என்பதுதான் எதார்த்தம்.
இதற்காக, இந்தியாவில் உள்ள ஒவ்வொரு தபால்காரரையும் நடமாடும் தானியங்கி இயந்திரமாக மாற்றியுள்ளது அஞ்சல் துறை. இந்த மாபெரும் சேவை "இந்தியா போஸ்ட் பேமெண்ட் பாங்க்' மூலம் அளிக்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம், பிற வங்கியில் கணக்கு வைத்திருப்போரும் தங்களின் அவசரத் தேவைக்காக அவர்கள் பகுதியில் நாள்தோறும் தபால் பட்டுவாடா செய்து கொண்டிருக்கும் தபால்காரரை அணுகலாம். இதற்காக ஒவ்வொரு தபால்காரருக்கும் பிரத்யேகமாக ஒரு செல்லிடப்பேசி வழங்கப்பட்டுள்ளது.
வங்கிக் கணக்கில் பணம் எடுக்க விரும்புவோரின் பெயரையும் செல்லிடப்பேசி எண்ணையும் தன்னுடைய செல்லிடப்பேசியில் உள்ளீடு செய்வார் தபால்காரர்.
உடனே பயனாளியின் செல்லிடப்பேசிக்கு ஒரு கடவுச் சொல் வரும். அந்தக் கடவுச் சொல்லை உள்ளீடு செய்ததும் பயனாளியின் ஆதார் எண்ணைப் பதிய வேண்டும்.
பதிந்த உடனே, அவரின் வங்கிக் கணக்கு விவரங்கள் அத்தனையும் வந்துவிடும். அதில், பயனாளி குறிப்பிடும் வங்கி சேவைக்குள் சென்று, கைரேகையைப் பதிவு செய்ததும் அவர்களுக்குத் தேவையான பணத்தை தபால்காரர் வழங்குவார். அதிகபட்சமாக, நாள் ஒன்றுக்கு பத்தாயிரம் ரூபாய் வரை எடுத்துக் கொள்ள முடியும்.
இந்தச் சேவையைப் பெற, பயனாளியின் ஆதார் எண் அவரின் வங்கிக் கணக்கில் இணைக்கப்பட்டிருக்க வேண்டியது அவசியம். இந்த சேவைக்காக அஞ்சல் துறை எவ்வித கட்டணமும் வசூலிப்பதில்லை. நோய்த் தொற்றின் தீவிரம் அதிகரித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில், தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது ஒவ்வொரு தபால்காரரும் இந்த மாபெரும் சேவையில் ஈடுபட்டுக் கொண்டிருப்பது பலரும் அறியாதது.
மக்கள் மறந்துவிடக் கூடாது
இந்த இக்கட்டான சூழ்நிலையிலும், முதியோர்களுக்கான உதவித் தொகையை எவ்வித தாமதமும் இல்லாமல் அவர்களின் வீட்டுக்கே சென்று வழங்கி வருகிறது அஞ்சல்துறை.
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், பெரும்பாலான முதியவர்கள் கைரேகை வைப்பதற்கு கூட சிரமப் படுவதுண்டு.அச்சமயத்தில் அவர்களுக்கு உதவி செய்யும்போது, தபால்காரர்களுக்கு நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்புண்டு.
அதையும் தாண்டி தங்கள் கடமையை செவ்வனே செய்து கொண்டிருக்கிறார்கள் தபால்காரர்கள். மக்கள் சேவைக்காக, கிட்டத்தட்ட 170 ஆண்டுகளாக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு ஓயாமல் உழைத்து வருகிறது அஞ்சல் துறை.
அதுமட்டுமல்ல, "இந்தியா போஸ்ட் பேமெண்ட் பாங்க்', ஒருங்கிணைந்த அஞ்சல் சேவை, கிராமப் புற அஞ்சல் ஊழியர்களுக்கு தனி இயந்திரம், அஞ்சல் தானியங்கி சேவை என்று காலமாற்றத்திற்கு ஏற்ப தன்னை தகவமைத்துக் கொள்ளவும் தவறவில்லை.
அதனால்தான், இன்று கிராமங்களில் கூட அஞ்சலகத்தில் சேமிப்புக் கணக்கு இல்லாத ஆளே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. மேலும், ஏழை மக்கள் எளிதில் அணுகக்கூடிய வங்கியாகவும் மாறிப் போனது அஞ்சல்துறை.
ஆனால், அஞ்சலக சேமிப்புக் கணக்கின் குறைந்தபட்ச இருப்புத் தொகையை ஐம்பது ரூபாயில் இருந்து ஐநூறு ரூபாயாக உயர்த்தியது பெரும்பாலான ஏழை மக்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.
சுட்டெரிக்கும் வெயிலிலும் கொட்டும் மழையிலும் இன்றும் சராசரியாக நாளொன்றுக்கு இருபது கிலோ மீட்டர் வரை மிதிவண்டியிலேயே பயணித்து கடிதங்களையும், கட்டுக்களையும், பணவிடைகளையும் பட்டுவாடா செய்து கொண்டிருக்கின்றனர் தபால்காரர்கள். இதனால் பல தபால்காரர்கள் பல்வேறு நோய்களால் அவதிப்படுவது பலரும் அறிந்திடாத உண்மை.
அதுமட்டுமல்ல, மக்கள் சேவையில் ஈடுபட்ட நேரத்தில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு அவதியுறும் தபால்காரர்கள் பலர். அன்றும் இன்றும் என்றும் நமக்கான சேவையில் அஞ்சல் துறை தொடர்ந்து நம்மோடு பயணித்துக் கொண்டிருக்கிறது என்பதை மக்கள் மறந்துவிடக் கூடாது.
நன்றி: தினமணி (18-07-2020)