TNPSC Thervupettagam

அடல் நிலத்தடி நீர் திட்டம்

December 28 , 2019 1668 days 798 0
  • பிரதமராகத் தனது பதவிக் காலத்தை நிறைவு செய்த, காங்கிரஸ் கட்சியைச் சாராத முதல் பிரதமர் என்கிற பெருமைக்குரியவர் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய். இந்தியாவின் நெடுஞ்சாலை கட்டமைப்பு மேம்பாட்டுக்கு அவரின் ஆட்சிக் காலத்தின் பங்களிப்பு மிக முக்கியமானது.

அடல் திட்டம்

  • கிறிஸ்துமஸ் தினத்தன்று அவரின் பிறந்த நாளையொட்டி மத்திய அமைச்சரவை அறிவித்திருக்கும் அவரின் பெயரிலான திட்டம் வரவேற்புக்குரியது. 
  • "அடல் நிலத்தடி நீர் திட்டம்' (அடல் பூஜல் யோஜனா) என்கிற பெயரிலான திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ரூ.6,000 கோடி ஒதுக்கீட்டை அங்கீகரித்திருக்கிறது.
  • அடுத்த ஐந்து ஆண்டுகளில் நிறைவேற்றப்பட இருக்கும் இந்தத் திட்டம், மாநிலங்களின் ஒத்துழைப்புடனும், சமுதாயத்தின் பங்களிப்புடனும் நிலத்தடி நீர் மேலாண்மையை மேம்படுத்தும் முயற்சி. இந்தத் திட்டத்தில் மிக அதிகமான தண்ணீர்த் தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் ராஜஸ்தான் இணைக்கப்பட்டிருப்பதுபோல, தமிழகம் இணைக்கப்படாததில் சற்று வருத்தம் ஏற்படத்தான் செய்கிறது. 
  • முதல் கட்டமாக, இந்தியாவின் ஏழு மாநிலங்களிலுள்ள 78 மாவட்டங்களைச் சேர்ந்த 8,350 கிராமப் பஞ்சாயத்துகள் அடல் நிலத்தடி நீர் திட்டத்தின் மூலம் பயன்பெற இருக்கின்றன.
  • இந்தத் திட்டத்துக்கான ரூ.6,000 கோடி ஒதுக்கீட்டில், உலக வங்கியிலிருந்து ரூ.3,000 கோடி கடனாகப் பெறப்படுகிறது. அந்தக் கடனை மத்திய அரசு திருப்பிச் செலுத்தும். அடல் நிலத்தடி நீர் திட்டத்தின் மூலம் உலக வங்கியின் நிதியுதவியுடன் மத்திய அரசின் பங்களிப்பையும் சேர்த்து மாநிலங்களுக்கு மானியமாக வழங்கப்படும்.
  • 2013-இல் அறிமுகப்படுத்தப்பட்ட நிலத்தடி நீர் மேலாண்மை மற்றும் வரைமுறைப்படுத்தல் திட்டத்தின் நீட்சியாக இந்தத் திட்டம் அமைய இருக்கிறது. 

அடிப்படை நோக்கங்கள்

  • விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவதும், நிலத்தடி நீர் மேலாண்மையை மக்களின் பங்களிப்புடன் உருவாக்குவதும் இந்தத் திட்டத்தின் அடிப்படை நோக்கங்கள். இந்தத் திட்டத்தின் மூலம் தண்ணீர்ப்  பயன்பாடு முறைப்படுத்தப்படுகிறது.
  • பயிரிடும் முறையை மேம்படுத்துவதுகூட இந்தத் திட்டத்தின் குறிக்கோள்களில் ஒன்று. நிலத்தடி நீர்ப் பயன்பாட்டையும், நீர் மேலாண்மையையும் கிராமப்புற அளவில் மக்களின் ஒத்துழைப்புடன் மேம்படுத்துவதற்கான திட்டம் இது.
  • நீதி ஆயோக்கின் ஆய்வின்படி, ஹைதராபாத், சென்னை, பெங்களூரு உள்ளிட்ட 21 பெருநகரங்களில் நிலத்தடி நீரின் அளவு கோடைக் காலங்களில் கவலைக்குரியதாகக் காணப்படுகிறது. 
  • இதனால், 10 கோடிக்கும் அதிகமான மக்கள் மிகப் பெரிய குடிநீர்த் தட்டுப்பாட்டை எதிர்கொள்கிறார்கள். முறையான நீர் மேலாண்மை முறைகள் கையாளப்படாததால், இந்தியாவின் மக்கள்தொகையில் 12% பேர் கடுமையான குடி தண்ணீர்த் தட்டுப்பாட்டை எதிர்கொள்கிறார்கள்.
  • அதிகரித்து வரும் வறட்சிக் காலத்தின் கால அளவும், எந்தவிதக் கண்காணிப்பும் இல்லாத நிலத்தடி நீர்ப் பயன்பாடும் கவலையளிப்பதாக நீதி ஆயோக் அறிக்கை கூறுகிறது.
  • இந்த நிலைமை இப்படியே தொடருமேயானால், நம்மிடம் இருக்கும் தண்ணீரைவிட, 2030-இல் இரண்டு பங்கு அதிகமாகத் தண்ணீர் தேவை அதிகரிக்கும் என்றும் அந்த அறிக்கை எச்சரிக்கிறது.
  • மத்திய நதிநீர் ஆணையத்தின் 2019 அறிக்கையின்படி, இந்தியாவின் பல்வேறு நதிநீர்ப் படுகைகளில் நிலத்தடி நீரின் அளவு மிகவும் குறைந்து வருகிறது. காவிரி, பெண்ணாறு, சபர்மதி போன்ற நதிநீர்ப் படுகைகளில் மிக அதிகமான குடிநீர்த் தட்டுப்பாடு இருப்பதை அந்த அறிக்கை சுட்டிக்காட்டியிருக்கிறது.
  • பயன்பாட்டுக்கு உபயோகப்படும் இந்தியாவின் நிலத்தடி நீர் அளவு 39,300 கோடி கியூபிக் மீட்டர் (பிசிஎம்).

தற்போதைய நிலையில்...

  • தற்போதைய நிலையில் ஆண்டுதோறும் நாம் பயன்பாட்டுக்கு உறிஞ்சி எடுக்கும் நிலத்தடி நீரின் அளவு 24,900 கோடி கியூபிக் மீட்டர். அதில் பெரும் பகுதி பாசனத்துக்குப் பயன்படுத்தப்படுகிறது.
  • அதிகரிக்கும் மக்கள்தொகை, நகர்ப்புறமாதல், விரிவடைந்து வரும் தொழில்துறை வளர்ச்சி ஆகியவை மிக அதிகமான தண்ணீர்த் தேவையை ஏற்படுத்துகின்றன. அதனால், நம்மிடம் இருக்கும் குறைந்த அளவு நிலத்தடி நீர் வளம் அச்சுறுத்தப்படுகிறது.
  • இந்தியாவின் 90% நிலத்தடி நீர் 15 மாநிலங்களில் காணப்படுகிறது. நிலத்தடி நீர் அளவு குறைவதற்கு மிக முக்கியமான காரணமாக, முறைப்படுத்தப்படாத நிலத்தடி நீர்ப் பயன்பாடு சுட்டிக்காட்டப்படுகிறது. 

நிலத்தடி நீர்

  • ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டு நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதும், சந்தைப்படுத்தப்படுவது முறைப்படுத்தப்படாமல் இருப்பதாலும் முறையான புள்ளிவிவரங்கள் எதுவும் இல்லை. 
  • இந்தியாவின் மொத்த பாசனத் தேவையில் 65%  நிலத்தடி நீரின் மூலம்தான் பெறப்படுகிறது. கிராமப்புற குடிநீர்த் திட்டங்களின் 85% தேவை, நிலத்தடி நீரின் மூலம்தான் பூர்த்தி செய்யப்படுகிறது. இந்தப் பின்னணியில்தான் "அடல் நிலத்தடி நீர் திட்டம்' அறிவிக்கப்பட்டிருக்கிறது. 
  • இந்தத் திட்டத்தின் மூலம் நிலத்தடி நீரை மேம்படுத்துவது, தண்ணீர் பயன்படுத்துவோரின் அமைப்புகளை வலுப்படுத்துவது, நிலத்தடி நீர்ப் பயன்பாடு குறித்த புள்ளிவிவரங்களை மாநில அரசுகள் சேகரிக்க உதவுவது, தண்ணீர் பாதுகாப்புத் திட்டங்களுக்கான வழிமுறைகளை உருவாக்குவது, குறைந்து வரும் நிலத்தடி நீரை அதிகரிப்பதற்கான வழிமுறைகளை நடைமுறைப்படுத்துவது போன்றவை உறுதிப்படுத்தப்பட இருக்கின்றன.

நன்றி: தினமணி (28-12-2019) 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்