TNPSC Thervupettagam

அடித்தளக் கட்டமைப்புக்கு பட்ஜெட் உதவுமா?

August 4 , 2024 161 days 119 0
  • இந்தியாவின் அடித்தளக் கட்டமைப்பு வளர்ச்சிக்கு 2024 - 2025 நிதியாண்டில் ரூ.11 லட்சம் கோடியை ஒதுக்கியிருக்கிறார் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இது ஜிடிபியில் 3.4%. அடித்தளக் கட்டமைப்பு வளர மாநில அரசுகளும் முன்வர வேண்டும் என்பதற்காக, வட்டியில்லாமல் நீண்ட கால கடனாக ரூ.1.5 லட்சம் கோடி தனியாக ஒதுக்கப்படுவதாகவும் அறிவித்துள்ளார்.

எந்தெந்தத் துறைகளில் முதலீடு?

  • அடித்தளக் கட்டமைப்பு வளர்ச்சிக்குத் தன்னுடைய மொத்த செலவில் 13.9%ஐ ஒன்றிய அரசு ஒதுக்கியிருக்கிறது. 2024 நிதியாண்டின் திருத்திய மதிப்பீட்டில் இது 14.3% ஆக இருந்தது. 2025 நிதியாண்டில் போக்குவரத்துத் துறையில் 11.29% (பட்ஜெட் மதிப்பீடு) செலவிட திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் கூறியதைவிட 0.4% குறைவு.
  • மின்னுற்பத்தித் துறைக்கான ஒதுக்கீடு கடந்த ஆண்டைவிடச் சிறிதளவு அதிகம். சாலைகள், போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறைக்கு 2024 – 2025இல் மொத்தம் ரூ.2.78 லட்சம் கோடி கிடைத்தது. 2025 நிதியாண்டில் பட்ஜெட் மதிப்பீட்டின்படி, ரயில்வே துறைக்கு கடந்த ஆண்டைவிட 5% அதிகமாக - ரூ.2.55 லட்சம் கோடி ஒதுக்கப்படுகிறது.
  • ரயில் மோதல்களைத் தவிர்க்கும் ‘கவச்’ (கவசம்) திட்டம் உள்பட சிக்னல்களுக்காகவும் தகவல் தொடர்புக்காகவும் இதர முக்கியச் செலவுகளுக்காகவும் 2024 திருத்தப்பட்ட மதிப்பீட்டைவிட அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சிவில் விமான போக்குவரத்துத் துறைக்கு ரூ.2,357 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது, கடந்த ஆண்டைவிட 20% குறைவு. கப்பல் போக்குவரத்துத் துறைக்கான ஒதுக்கீடு ரூ.2,377 கோடியாக அப்படியே நீடிக்கிறது.
  • நாட்டின் வெவ்வேறு பிராந்தியங்களுக்கிடையே போக்குவரத்து தொடர்பு வசதிகளுக்காக தனியாக ரூ.502 கோடி செலவிடப்படவுள்ளது.

சாலை திட்டங்களில் முன்னேற்றம் உண்டா?

  • கடந்த ஆண்டுக்கு வெளியிடப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையின்படி 2014 முதல் 2024 வரையில் தேசிய நெடுஞ்சாலைகளின் வளர்ச்சி 160% அதிகரித்திருக்கிறது. தேசிய நெடுஞ்சாலை வலையமைப்பை ‘பாரத்மாலா பரியோஜனா’ திட்டமானது வெகுவாக விரிவுபடுத்தியிருக்கிறது. அதிவிரைவு நெடுஞ்சாலைகளின் நீளம் 12 மடங்காகவும், 4 வழிப் பாதைகளின் நீளம் 2.6 மடங்காகவும் 2014 முதல் 2024க்குள் அதிகரித்துள்ளன. தொழில் பேட்டைகளை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் வகையில் 11 மிகப் பெரிய நெடுஞ்சாலை வசதி திட்டத்தை ஒன்றிய அரசு படிப்படியாக நிறைவேற்றிவருகிறது.
  • இந்தத் திட்டங்களில் தனியார் பங்கேற்பை ஈர்க்கவும், குறிப்பிட்ட காலத்துக்குள் திட்டங்களைச் செய்து முடிக்கவும் ஊக்குவிப்புகளுடன் கூடிய சிறப்புத் திட்டங்களை அரசு தயாரித்திருக்கிறது. சாலைகளை அமைப்பது, இயக்குவது, உரிமையைக் கைமாற்றித் தருவது என்ற அடிப்படையில் தனியார் துறை ஈடுபட, சில சலுகைகளையும் அரசு அறிவித்துள்ளது.
  • இந்தத் திட்டங்களைச் செய்து முடிக்கும்போது லாபம் கிடைக்குமா என்று செய்து பார்த்தால்தான் தெரியும் என்று இத்துறையில் உள்ள தனியார் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. அரசு தொடங்கிய பல நெடுஞ்சாலைத் திட்டங்கள் நிறைவடையும் கட்டத்தில் இருப்பதால் இனி, நெடுஞ்சாலைத்துறையில் ஏற்படுத்திய சொத்துகளை (சாலைகள், பாலங்கள் உள்ளிட்டவை) பராமரிப்பதும் விபத்துகளைக் குறைப்பதும்தான் அரசின் கவனத்தில் அதிகம் இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் விரும்புகின்றனர்.
  • பாலங்களையும் சுரங்கப் பாதைகளையும் கட்டும்போது என்னென்ன வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அரசு முன்கூட்டியே வகுப்பது நல்லது என்று நெடுஞ்சாலைகளை அமைக்கும் தனியார் நிறுவனங்கள் கருதுகின்றன. 2023இல் உத்தராகண்டில் சில்கியாரா என்ற இடத்தில் மலையைக் குடைந்து சுரங்கப் பாதை அமைக்கும்போது, பாறையில் ஏற்பட்ட திடீர் சரிவில் சிக்கி பல தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக்கொண்டனர். இதைச் சுட்டிக்காட்டியே தனியார் நிறுவனங்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளன.

ரயில்வே துறையில் அரசு செய்ய வேண்டியவை என்ன?

  • இந்திய ரயில்வே துறையில் ஒன்றிய அரசின் மூலதனச் செலவு கடந்த ஐந்தாண்டுகளைவிட (2024 நிதியாண்டில் ரூ.2.62 லட்சம் கோடி) 77% அதிகரித்துள்ளது. ரயில்வே துறை மொத்தமாக 68,584 கிலோ மீட்டர் ரயில்பாதை கட்டமைப்பை பராமரிக்க வேண்டியிருக்கிறது. புதிய ரயில் பாதைகளை அமைப்பது, ஏற்கெனவே மீட்டர் கேஜுகளாக இருந்த தடங்களை பிராட்கேஜுகளாக மாற்றுவது, இரட்டைப் பாதைகளை அமைப்பது ஆகியவை முக்கியமான பணிகள்.
  • சாலைப் போக்குவரத்தையே அதிகம் நாடும் போக்கை சரிசெய்ய, ரயில்வேக்கு ஊக்குவிப்புகள் தரப்பட வேண்டும். 500 கிலோமீட்டர் தொலைவுக்கும் அதிகமாக உள்ள இடங்களுக்கு சரக்குகளைக் கொண்டுசெல்வதானால் சாலையைவிட ரயில்வேயில்தான் செலவு 25% முதல் 30% வரையில் குறைவு. சரக்கு போக்குவரத்தை அதிகம் ஈர்க்க முடியாமல் ரயில் துறையில் சரக்கு ரயில் பெட்டிகளுக்கு பற்றாக்குறை நிலவுகிறது.
  • அத்துடன் ரயில் பாதைகளைப் பயணிகள் ரயிலுக்கும் சரக்கு ரயில்களுக்கும் பகிர்வதில் நேரப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. துறைமுகங்கள், தொழில் துறை உற்பத்தி கேந்திரங்களுக்கு சரக்கு ரயில்கள் காலிப் பெட்டிகளுடன் வருவதற்கும் சரக்குகளை ஏற்றிய பிறகு புறப்படுவதற்கும் தங்கு தடையில்லாமல் பாதை வசதிகளும் பிற கட்டமைப்புகளும் அவசியம்.
  • அதை ரயில் துறை செய்து தர வேண்டும் என்று தொழில் துறை – பொருளாதாரத் துறை அடிப்படை அம்சங்களுக்கான ஆய்வுக்கூட இயக்குநர் அஃபக் ஹுசைன் சுட்டிக்காட்டுகிறார்.

கப்பல் போக்குவரத்து – விமான போக்குவரத்து எப்படி?

  • ‘சாகர் மாலா’ (சமுத்திர மாலை) தேசிய திட்டத்தின் கீழ் 2015இல் ரூ.5.8 லட்சம் கோடி செலவில், மொத்தம் 839 திட்டங்கள் தொடங்கப்பட்டன. இதுநாள் வரையில் ரூ.1.4 லட்சம் கோடி மதிப்புள்ள 262 திட்டங்கள் முடிக்கப்பட்டுவிட்டன. இன்னமும் 230 துறைமுகப் பணிகள் முடிக்கப்பட வேண்டியுள்ளன. ஜவஹர்லால் நேரு துறைமுக பொறுப்புக் கழகத்தின் 2 துறைமுகங்களும் முந்த்ரா துறைமுகமுமே நாட்டின் இறக்குமதியில் 40%ஐ கையாள்கின்றன. எனவே, எஞ்சிய துறைமுகங்களைத் தயார்செய்யும் பணிகள் விரைந்து முடிக்கப்பட வேண்டும் என்கிறார் அஃபக் ஹுசைன்.
  • விமான நிலையங்களைப் பொருத்தவரை, தனியார்மயமாக்கும் 2019 திட்டத்தின் இரண்டாவது கட்டத்தில் 6 நிறுவனங்கள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மேலும் 25 விமான நிலையங்களைத் தனியாரிடம் விட திட்டமிடப்படுகிறது.

தனியார் முதலீடுகளை ஈர்ப்பது எந்த அளவில் இருக்கிறது?

  • அடித்தளக் கட்டமைப்புகளுக்கு நிதியாண்டு 2019 தொடங்கி 2023 வரையில் ஒன்றிய அரசு 49%ஆம் மாநில அரசுகள் 29%ஆம் செலவிட்டன, எஞ்சியவை தனியார் துறையால் மேற்கொள்ளப்பட்டது என்கிறது ‘கிரைசில்’ அடித்தளக் கட்டமைப்பு 2023ஆம் ஆண்டு மலர். அடித்தளக் கட்டமைப்பு துறைகளில் திட்ட அமல்களில் தாமதமானால் லாபம் குறையும் என்பதுடன் சமயங்களில் நஷ்டமும் ஏற்பட்டுவிடும் என்பதால் தனியார் துறை இதில் அதிகம் ஈடுபட தயக்கம் காட்டுகிறது என்கிறார் ‘கிரைசில்’ மூத்த இயக்குநர் ஜகன் நாராயண் பத்மநாபன்.

நன்றி: அருஞ்சொல் (04 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்