அடிப்படை கல்வியில் கூடுதல் கவனம் தேவை
- நாடு முழுவதும் எடுக்கப்பட்ட மாணவர்களின் அடிப்படைக் கல்வியின் தரம் குறித்த ஆண்டறிக்கை ஆய்வு (ASER) முடிவுகள் அண்மையில் வெளியாகியுள்ளன. ஒரு மாவட்டத்துக்கு 30 கிராமங்கள் என்ற அளவில் நாடு முழுவதும் 605 கிராமங்களில் 6.5 லட்சம் மாணவர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இதில், மூன்றாம் வகுப்பில் கல்வி பயிலும் 76 சதவீதம் மாணவர்கள் மற்றும் 5-ம் வகுப்பு பயிலும் 55 சதவீதம் மாணவர்களால் 2-ம் வகுப்பு பாடப் புத்தகத்தை தாய்மொழியில் இருந்தும் படிக்க முடியவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த வகுப்புகளில் உள்ள 66 சதவீதம் மாணவர்களால் சாதாரண 2 இலக்க கூட்டல், கழித்தல், வகுத்தல் கணக்குகளை புரிந்து கொண்டு விடைகாண முடியவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
- கரோனா பெருந்தொற்று காலகட்டத்துக்கு முன்பிருந்த நிலையைவிட, மாணவர்களின் கல்வித்தரம் சற்று உயர்ந்திருந்தாலும், அது சொற்ப அளவிலேயே உள்ளது. ஐந்தாம் வகுப்பு மாணவர்களைப் பொறுத்தமட்டில், 30 சதவீதம் மாணவர்களால் மட்டுமே எளிமையான கணிதங்களுக்கு விடை காண முடிகிறது. மீதம் 70 சதவீதம் மாணவர்கள் கணிதவிடைகளை கண்டறிய திணறுகின்றனர் என்பது தெரியவந்துள்ளது.
- கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பிருந்தநிலையுடன் ஒப்பிடும்போது, இமாச்சல பிரதேசம், பிஹார் போன்ற மாநில பள்ளி மாணவர்கள் 4-5.9 புள்ளிகள் அளவிலும், ஒடிசா, ஹரியானா, மேற்குவங்கம், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்கள் 6-9 புள்ளிகள் அளவிலும், குஜராத், உத்தரபிரதேசம், உத்தராகண்ட், தமிழ்நாடு, சிக்கிம், மிசோரம் போன்ற மாநிலங்கள் 10 புள்ளிகள் அளவிலும் முன்னேற்றம் கண்டிருப்பது சற்று ஆறுதலான விஷயமாக உள்ளது.
- இருந்தாலும், அடிப்படைக் கல்வியின் தரம் நாடு முழுவதும் சரிசெய்யப்பட்ட வேண்டிய ஒன்றாகவே இருக்கிறதுஎன்பதை ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன. எட்டாம் வகுப்பு வரையிலான கட்டாய தேர்ச்சி முறை மீண்டும் விவாதிக்கப்படவேண்டியதன் அவசியத்தை இந்த ஆய்வு முடிவுகள் உணர்த்துகின்றன.
- தமிழகத்தைப் பொறுத்தமட்டில், பெருந்தொற்று காலகட்டத்துக்குப் பின் கற்றல் இடைவெளியை குறைக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பலனளித்துள்ளன. நாட்டின் இதர மாநிலங்களின் புள்ளிவிவரங்களோடு ஒப்பிடும்போது, தமிழகம் சற்று முன்னேற்றம் கண்டிருந்தாலும், தமிழகத்தில் எட்டாம் வகுப்பைக் கடந்து, உயர்நிலைக் கல்விக்கு செல்லும் மாணவர்களை சமாளிக்க முடியவில்லை என்று ஆசிரியர்கள் புலம்பும் நிலையே உள்ளது.
- எட்டாம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி வழங்குவதால் அடிப்படைக் கல்வி பயிலும் மாணவர்களின் தரம் குறைகிறது என்று ஆசிரியர்கள் குரல் எழுப்புகின்றனர். கல்வியில் மற்ற மாநிலங்களைவிட தமிழகம் சற்று முன்னேறிய நிலையில் இருந்தாலும், 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அடிப்படைக் கல்வியை முறையாக கற்றுக் கொண்டு உயர் வகுப்புகளுக்கு செல்கிறார்களா என்பதை உறுதி செய்ய வேண்டிய கடமை அரசுக்கு உண்டு. கொள்கைரீதியாக கட்டாய தேர்ச்சி முறைக்கு தமிழகம் ஆதரவளிக்கும் நிலையில், அடிப்படைக் கல்வியின் தரத்தை உறுதி செய்தால் மட்டுமே அரசின் கொள்கை நிலைப்பாடு எதிர்காலத்தில் பாராட்டப்படும்.
நன்றி: இந்து தமிழ் திசை (31 – 01 – 2025)