TNPSC Thervupettagam

அடி உதவுவது போல்...

December 18 , 2024 7 days 48 0

அடி உதவுவது போல்...

  • காலதாமதப்படுத்தப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதி என புலம்பித் தள்ளுகிறார்கள். ஆனால், நீதிமன்றம் விரைந்து செயல்பட யாரும் ஆக்கபூர்வமாக யோசித்ததாக தெரியவில்லை.
  • நீதிமன்றத்தில் வழக்குகள் அதிகரிக்கப் பல காரணிகள் உண்டு. இந்திய மக்கள்தொகை 140 கோடியைத் தாண்டிவிட்ட நிலையில், அவர்களின் படிப்புத்திறன், உரிமை கேட்கும் வேட்கை, போராட்ட குணம் என பலவற்றை வழக்குப் பெருக்கத்துக்குக் காரணமாக அடுக்கிக் கொண்டே போகலாம். தெரிந்தே தவறான உத்தரவை போடும் அதிகாரிகளும், வம்பு வழக்கு போடும் வழக்கர்களும், அதற்கு துணை நிற்கும் வழக்குரைஞர்களும் என வழக்குக்கான காரணங்கள் நீண்டு கொண்டே போகும்.
  • ஆசிரியர் ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனக்கு மூன்றரை ஆண்டுகளாக சம்பளம் வரவில்லை என வருத்தப்பட்டார். அவர் சொன்ன தகவல் மூன்று ஆண்டுகளுக்கு மேலாகப் பணிக்கு செல்லாத அவர் வேலை வேண்டுமென வழக்கு போட்டிருக்கிறார். இரக்கப்பட்ட நீதிமன்றமும் அவரது பணி கோரிக்கையை பரிசீலனை செய்யச் சொன்னது. அதிகாரிகளும் இரக்கப்பட்டு பணி வழங்கி விட்டார்கள். தற்போது, தான் பணிக்குப் போகாத மூன்றரை ஆண்டுகளுக்கு சம்பளம் வேண்டுமென்பதுதான் அவரது கோரிக்கை.
  • சில அரசு பணியாளர்கள் வேலை பார்க்காமல் சம்பளம் வாங்குகிறார்கள் என்பது உண்மைதான். ஆனால், வேலைக்கே போகாதவருக்கு சம்பளம் கேட்டு எப்படி வழக்கு தொடுக்க முடியும்?
  • வழக்குகளில் மிகவும் எளிதான வழக்கு ஒன்று உண்டு; அது அரசியலமைப்புச் சட்டத்தின் சட்டப்பிரிவு 226-ஐ பயன்படுத்தி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் நீதிப்பேராணை (ரிட்) மனுக்கள்தான். இந்த ரிட் மனுக்கள், பெரும்பாலும் அரசு அதிகாரிகளின் தவறை அல்லது தவறான உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்படும்.
  • ஒரு ரிட் மனுவில் பெரும்பாலும் அரசு அதிகாரியின் உத்தரவில் இயற்கை சட்ட விதிகள் மீறப்பட்டுள்ளதா அல்லது மனுதாரருக்கு உரிய அறிவிப்பு வழங்கி, முறையாக விசாரிக்கப்பட்டிருக்கிறதா என்பதை மட்டும் பார்த்தால் போதும். ஆனால், 2004-இல் ஆரம்பிக்கப்பட்ட சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கலாகும் ரிட் மனுக்களின் எண்ணிக்கை 20,000-க்கும் அதிகம்.
  • சாதாரணமாக சிவில் இரண்டாம் மேல்முறையீடும், மாற்றான் தாய் பிள்ளையான சிவில் முதல் மேல்முறையீடும் இரண்டு தசமங்களாக நிலுவையில் இருப்பது ஆச்சரியமல்ல. ரிட் மனு எனும் நீதிப்பேராணைகள் கூட 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருப்பது, கொடுமையிலும் கொடுமை. இதையும் தாண்டி ரிட் மனுக்களில் பிறப்பிக்கப்படும் உத்தரவை அதிகாரிகள் மதிப்பதே இல்லை என்று நீதிபதிகளே அங்கலாய்க்கிறார்கள்.
  • குறைந்தபட்சம், நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை அனைத்து நீதிமன்றங்களும் திங்கட்கிழமை மாலை 3 மணி முதல் 5 மணி வரை விசாரிக்கலாம். தேவையானால், 15 நாளில் உத்தரவை அமுல்படுத்த வேண்டுமென்று தேதி குறிப்பிட்டு மூன்றாவது திங்கட்கிழமை வழக்கு பட்டியலிடப்படவேண்டும்; அன்று உத்தரவு நிறைவேற்றப்படாவிட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரியை நீதிமன்றம் தண்டிக்க வேண்டும். "கொட்டினால்தான் தேள், இல்லாவிட்டால் பிள்ளை பூச்சி'.
  • நீதிமன்றத்தில் தேவையில்லாமல் தவறான வழக்கை தாக்கல் செய்தும், தவறான எதிர்வழக்காடும் அதிகாரிகளை அடக்கும் அங்குசம் நீதிபதிகளின் கையில் தான் இருக்கிறது. அவமதிப்பு வழக்கிற்குப் பிறகு தாக்கல் செய்யப்படும் மேல்முறையீடுகளை ஏற்பதில்லை என நீதிமன்றம் முடிவு செய்ய வேண்டும்.
  • என்னுடைய கோரிக்கையை பரிசீலனை செய்யச் சொல்லுங்கள் என்கிற வழக்குகள் நீதிமன்றத்தில் பெருகி வருகின்றன. இதிலுள்ள தனியாருக்கு நோட்டீஸ் அனுப்பாமல், "நீதி செய்க' என சில நீதிபதிகள் தீர்ப்பு செய்கிறார்கள். அந்த உத்தரவை வைத்துக்கொண்டு மனுதாரரும், அதிகாரிகளும் செய்யும் அத்துமீறல்கள் குறித்துத் தனியாகவே ஒரு கட்டுரை எழுதலாம்.
  • நீதிமன்றத்திலுள்ள சட்டங்களில் ஒன்று விசித்திரமானது. அதாவது நீங்கள் தாக்கல் செய்ய வேண்டிய வழக்குக்கு, அதன் தன்மைக்கேற்ப எத்தனை நாளில் வழக்கு தாக்கல் செய்ய வேண்டுமென "கால வரையறை சட்டம்,1963' என்று ஒன்று உண்டு. இது பழைய 1908 சட்டத்திற்கு மாற்றாக வந்துள்ளது. ஆனால், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எவ்வளவு நாட்களில் முடித்து தீர்ப்பு சொல்ல வேண்டும் என்பதற்கு சட்டம் இருப்பதாகத் தெரியவில்லை.
  • நீதிமன்றத்தில் பரிகாரம் கேட்கும் காலவரையறை தாண்டி வழக்கு தாக்கல் செய்தால், அதை நீதிமன்றம் ஏற்காது; தள்ளுபடி செய்துவிடும். அந்தச் சட்டத்தில் இன்னொரு விசித்திரமான பிரிவு ஒன்று உள்ளது. "காலாவதி' பற்றி எதிர்க்கட்சி வழக்குரைஞர் சொல்லாவிட்டாலும் கூட, நீதிமன்றமே காலாவதியைக் கண்டறிந்து வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்கிறது பிரிவு 3.
  • அதே சட்டத்தில் பிரிவு 5 ஒரு ஆறுதல் பரிசு. அதாவது உரிய காலத்தில் மேல்முறையீடு செய்யாவிட்டால், அதற்கான காரணங்களைச் சொன்னால் நீதிமன்றம் காலதாமதத்தை மன்னிக்கலாம். இதைப் பயன்படுத்தி கால தாமதமாக மேல்முறையீடு தாக்கல் செய்வதை சில வழக்கர்களும், வழக்குரைஞர்களும் வழக்கமாகக் கொண்டிருந்தனர். அதிலும் அரசைப் பற்றி சொல்லவே வேண்டாம். இதற்கு முற்றுப்புள்ளி வைத்தார் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி சதாசிவம்.
  • அரசாங்கத்திற்கு என்று நன்கு படித்த திறமை வாய்ந்த அதிகாரிகளும், அவர்களுக்கென்றே வழக்காடுவதற்கு ஒரு வக்கீல் படையே இருக்கும்போது, அரசு காலதாமதமாக தாக்கல் செய்யும் மேல்முறையீட்டை அனுமதிக்க முடியாதென "இந்தியா டுடே' வழக்கில் தீர்ப்பு வழங்கினார்.
  • 1963-இலிருந்து 61 ஆண்டுகள் உருண்டோடி விட்டன; விஞ்ஞான வளர்ச்சியும், தொலைத்தொடர்பு வசதியும் பெருகிவிட்டன. மேல்முறையீட்டை தாக்கல் செய்ய தகுதியான காரணமில்லாமல், காலதாமதத்தை மன்னிக்கும் வழக்கத்தை நீதிமன்றங்கள் கைவிட்டு சரியான, நியாயமான காரணம் உள்ளதா என்பதை சரியாக ஆராய்ந்து இந்த மனுக்களைப் பரிசீலித்து தீர்ப்பு வழங்க வேண்டும்.
  • நீதிமன்றங்களில் அதிகமான வழக்காடி, அரசு என்பது உங்களுக்குத் தெரியுமா? அதிலும் ரிட் மனுவில் அரசே பிரதான வழக்காடி. அப்படியானால் நீதிமன்ற வழக்குகளைக் குறைக்க என்ன செய்ய வேண்டும்? இயற்றப்படும் சட்டங்கள் நியாயமாக இருக்க வேண்டும்.
  • சட்டங்கள் போடும்போது, அது நீதிமன்றங்களில் ஏற்படுத்தும் தாக்கத்தை பற்றி அதிகாரிகளோ, அரசியல்வாதிகளோ கவலைப்படுவதாகத் தெரியவில்லை. இதற்கு சிறந்த உதாரணம் செலவணி முறிச் சட்டம் (நெகோஷபல் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் ஆக்ட், 1881) மற்றும் தமிழ்நாடு ஒப்பந்தப்புள்ளி வெளிப்படைத்தன்மை சட்டம் (தமிழ்நாடு ட்ரான்ஸ்பரன்சி இன் டெண்டர்ஸ் ஆக்ட், 1998).
  • சிவில் வழக்கான காசோலை முறிவுகள் குற்றவியல் சட்டமாக மாற்றப்பட்டபோது அதன் விளைவுகளைப் பற்றி யாரும் சிந்திக்கவில்லை. அது லேவாதேவிகாரர்களுக்கும், அநியாய வட்டி வாங்குபவர்களுக்கும் கிடைத்த வரப்பிரசாதம் என்றால் மிகையல்ல.
  • இதற்கு நேர் எதிரிடை சட்டம் தமிழ்நாட்டின் ஒப்பந்தப்புள்ளி வெளிப்படைத் தன்மை சட்டம். அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் கற்பக விருட்சமான ஒப்பந்தப்புள்ளியில் நேர்மையாக நடப்பதாக சொல்லிக்கொண்டு, இயற்றப்பட்ட சட்டம் இது. ஆனால் அனைத்து தகிடுதத்தத்துக்கும் ஆதாரமாகயிருப்பதும் அந்த சட்டம் தான். ஒரு பெரிய ஒப்பந்தப்புள்ளி வரும் போது, அதற்கு எதிராக தாக்கல் செய்யப்படும் ரிட் மனுக்களே அதற்கு சான்று.
  • ரிட் (அல்லது) மேல்முறையீடு தாக்கல் செய்து தடையாணை பெற்றபின், எதிரிக்கு அழைப்பாணை (பேட்டா) கட்டாமல் இருப்பது. தடையாணை கொடுத்த வழக்கில் பேட்டா கட்டவில்லையென்றால் அல்லது சம்மன் சார்பாகவில்லையென்றால், வழக்கு இரண்டு வாரத்தில் நீதிமன்றத்திற்கு வரவேண்டும். தவறான விலாசத்திற்கு பேட்டா கட்டியிருந்தாலோ, சரியான காரணம் சொல்லாவிட்டாலோ, தயவு தாட்சண்யம் பார்க்காமல், தடையாணை நீக்கப்பட வேண்டும்.
  • அதேபோல், பத்து (அல்லது) இருபது ஆண்டுகள் வரை ஒரு வழக்கை பட்டியலிடாமல் இருக்கும் முறை மாறவேண்டும். நீதித்துறை உதவி பதிவாளர் (அல்லது) சார்பு நீதிபதி நிலையிலுள்ள ஒரு நீதிபதியின் முன்னால் எல்லா வழக்குகளுமே ஆறு மாதத்திற்கு ஒரு முறை பட்டியலிடப்பட வேண்டும். ஒரு கட்சி இறந்து விட்டால் உடனே வாரிசு சேர்க்க சொல்ல வேண்டும். இதற்குத் துணைபோகிறது காலவரையறை சட்டம் பிரிவு 5.
  • நீதிமன்றங்களுக்கு என்னுடைய வேண்டுகோள் இதுதான். 2004-இல் 4,000 ரிட் மனுவுடன் ஆரம்பித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை 2023-இல் கிட்டத்தட்ட 8 மடங்கு கூடி சுமார் 32,000 ரிட் மனுவாக வளர்ந்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கலாகும் ரிட் மனுக்களின் எண்ணிக்கை இதில் சேரவில்லை; இந்த அதிகரிப்புக்குக் காரணம் நீதிமன்றத்தின் தேவையற்ற, அசாதாரணமான சகிப்புத்தன்மை தான்.
  • இதைத் தடுக்க நீதிபதிகள் தங்களுடைய பழமைவாத கருத்துகளிலிருந்து வெளிவந்து, தவறாக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவானாலும் சரி, தவறாக எதிர் வழக்காடப்படும் ரிட் மனுவானாலும் சரி, வேண்டுமென்று தவறாகத் தாக்கல் செய்யப்படும் மேல்முறையீட்டானாலும் சரி, தவறு செய்தவர்கள் சொந்த நிலையில் நஷ்டஈடு வழங்க வேண்டுமென தீர்ப்பளிக்க வேண்டும்.
  • "அடி உதவுவதுபோல் அண்ணன் தம்பி உதவ மாட்டான்' என்கிற பழமொழி அனைவருக்கும் பொருந்தும்.

நன்றி: தினமணி (18 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்