- ஒருபுறம் கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றின் இரண்டாவது அலை அச்சுறுத்துகிறது என்றால் இன்னொருபுறம் ஆங்காங்கே மருத்துவமனைகளில் ஏற்படும் தீ விபத்துகள் பொதுமக்கள் மத்தியில் பீதியைக் கிளப்புகின்றன.
- கடந்த வெள்ளிக்கிழமையன்று மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் உள்ள "வெல் ட்ரீட்' மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.
- பலர் தீக்காயங்களுடன் அருகிலிருந்த மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்கள். இந்தத் தீ விபத்து பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.
- 30 படுக்கை வசதிகளைக் கொண்ட பல மாடி கொவைட் 19 மருத்துவமனை நாகபுரியின் வாடி என்கிற மையப் பகுதியில் அமைந்திருக்கிறது.
- குளிர்சாதன இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக 28 கொவைட் 19 நோயாளிகள் சிகிச்சையிலிருந்த இரண்டாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது. நோயாளிகளில் 12 பேர் அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்திருக்கிறார்கள்.
- அந்த மருத்துவமனைக்கான தீயணைப்புப் படையின் தகுதிச்சான்று புதுப்பிக்கப்பட்டிருக்கவில்லை என்று தெரிகிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த மூன்று மாதங்களில் நிகழ்ந்திருக்கும் மூன்றாவது மருத்துவமனை தீ விபத்து இது.
- மகாராஷ்டிர மாநிலம் பண்டாரா பொது மருத்துவமனையில் ஜனவரி மாதம் நிகழ்ந்த தீ விபத்தில் 13 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தது நினைவிருக்கும். அந்த தீ விபத்தில் எங்கிருந்து, எப்படி தீ பரவியது என்பது குறித்த விசாரணை இன்னும் முடிந்தபாடில்லை.
- அதைத் தொடர்ந்து கடந்த மாதம் 26-ஆம் தேதி மும்பை மாநகரம் பாண்டூப் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் தீ விபத்து நிகழ்ந்தது. கொவைட் 19 நோய்த்தொற்றுப் பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து அதை எதிர்கொள்ள அந்த மருத்துவமனை இடைக்காலமாக உருவாக்கப்பட்டிருந்தது. பாண்டூப்பில் உள்ள தனியார் வணிக வளாகம் ஒன்றின் ஒரு பகுதி மருத்துவமனையாக மாற்றப்பட்டிருந்தது. அதில்தான் தீ விபத்து நடந்து 9 பேர் பலியானார்கள்.
மன்னிக்க முடியாத குற்றங்கள்
- அந்த மருத்துவமனை செயல்பட்ட வணிக வளாகத்துக்குத் தேவையான மாநகராட்சிச் சான்றிதழ் தரப்படவில்லை என்பதும், தீயணைப்புத் துறையின் தடையில்லாச் சான்று கொடுக்கப்படவில்லை என்பதும் இப்போது தெரிய வந்திருக்கிறது.
- அப்படியிருக்கும் நிலையில், உரிமம் பெறாத கட்டடத்தில் கொவைட் 19-க்கான இடைக்கால மருத்துவமனை அமைக்கப்பட்டது ஏன் என்கிற கேள்விக்கு அரசோ மாநகராட்சி நிர்வாகமோ இதுவரை பதிலளிக்கவில்லை.
- கடந்த ஆகஸ்ட் 2020-இல் ஆமதாபாத் மருத்துவமனை தீ விபத்தில் 8 பேர் கருகி இறந்தனர்.
- அதைத் தொடர்ந்து விஜயவாடாவில் நிறுவப்பட்ட இடைக்கால மருத்துவமனை ஒன்றில் 19 பேர் தீ விபத்தால் உயிரிழக்க நேரிட்டது.
- தங்கும் விடுதியாக இருந்த 5 மாடி கட்டடத்தை இடைக்காலமாக வாடகைக்கு எடுத்து அமைக்கப்பட்டிருந்தது விஜயவாடா ரமேஷ் மருத்துவமனை.
- அதில் மருத்துவமனைக்கான எந்தவித கட்டமைப்பும் இல்லாத காரணத்தால் தீ விபத்து ஏற்பட்டபோது நோயாளிகளைக் காப்பாற்றவோ வெளியேற்றவோ முடியாமல் பலர் புகையில் சிக்கி, மூச்சுத் திணறி உயிரிழக்க நேரிட்டது.
- கடந்த ஆண்டு நவம்பர் மாதம் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் ஏற்பட்ட மருத்துவமனை தீ விபத்தும் வழக்கம்போல கவனக்குறைவாலும் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததாலும் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
- கடந்த சில ஆண்டுகளாக நடந்த இதுபோன்ற பல சம்பவங்களை நினைவுகூர முடியும்.
- 2017-இல் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில் உலகில் ஏற்படும் தீ விபத்துகளில் 5-இல் ஒன்று இந்தியாவில் நிகழ்வதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
- ராஜ்கோட்டில் நிகழ்ந்த மருத்துவமனை தீ விபத்தைத் தொடர்ந்து உச்சநீதிமன்றம் தாமாகவே முன்வந்து சில வழிகாட்டுதல்களை அறிவித்தது. ஒவ்வொரு கொவைட் 19-க்கான மருத்துவமனையிலும், தீ தடுப்பு பாதுகாப்பு அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்பது அந்த வழிகாட்டுதலில் முக்கியமானது.
- எந்தவொரு மாநிலமும், எந்தவொரு மருத்துவமனையும் இந்த வழிகாட்டுதலை ஆணையாக எடுத்துக்கொண்டு நிறைவேற்றவில்லை என்பதுதான் சோகம்.
- மருத்துவமனை தீ விபத்து என்பது ஏனைய தீ விபத்துகளிலிருந்து வித்தியாசப்படுகிறது. தங்களால் எழுந்து நடமாட முடியாமல் நோய்வாய்ப்பட்டிருக்கும் நோயாளிகளை பாதிக்கக்கூடியது.
- சட்டென தீப்பற்றிக் கொள்ளும் பிராண வாயுவும் (ஆக்ஸிஜன்), மின் கசிவு ஏற்படக்கூடிய குளிர்சாதன இயந்திரமும் அருகருகே காணப்படும் அவசர சிகிச்சைப் பிரிவு அறைகளைக் கொண்டவை மருத்துவமனைகள்.
- சிறு தீப்பொறியும் பெரிய தீ விபத்தை ஏற்படுத்தக்கூடும். அது தெரிந்திருந்தும் மெத்தனமாக இருப்பதும் கவனக்குறைவாக செயல்படுவதும் மன்னிக்க முடியாத குற்றங்கள்.
மோசமான விபத்து
- தீயணைப்புத் துறை என்பது அரசியல் சட்டத்தின் 12-ஆவது பிரிவின் கீழ் உள்ளாட்சி, நகராட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் வருகிறது. அதனால்தானோ என்னவோ பாதுகாப்பு வழிமுறைகளை நடைமுறைப்படுத்துவதில் தீயணைப்புத் துறைக்குப் போதிய அதிகாரம் இல்லாமல் இருக்கிறது.
- தீயணைப்புத் துறையில் காணப்படும் ஊழலும், அக்கறையின்மையும்கூட தீ விபத்துகளுக்குக் காரணமாக கருதப்பட வேண்டும்.
- தொடர்ந்து மருத்துவமனைகளில் தீ விபத்து ஏற்படுவது, முறையான கண்காணிப்பும் அக்கறையும் இல்லாமலிருப்பதன் வெளிப்பாடு. குறுகிய காலத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற தனியார் மருத்துவமனைகளின் பேராசைதான் சமீபத்திய கொவைட் 19 சிறப்பு மருத்துவமனைகளில் தீ விபத்துகள் ஏற்படுவதற்கான காரணம்.
- கண்காணிப்பும் கட்டுப்பாடும் இல்லாத தனியார் துறை என்பது தீ விபத்தைவிட மோசமான விபத்து!
நன்றி: தினமணி (13 - 04 - 2021)