TNPSC Thervupettagam

அடையாளங்களை இழந்துவரும் கிராமங்கள்

October 24 , 2024 32 days 68 0

அடையாளங்களை இழந்துவரும் கிராமங்கள்

  • தண்ணீா் நிரம்பிய குளம், குளக்கரையின் மரத்தில் கூவும் பறவைகள், மரத்தடியின் நிழலில் வயதானவா்கள் அமா்ந்து தங்களுக்குத் தெரிந்த பல செய்திகளைப் பரிமாறிக் கொள்ளுதல், தெருவோர வீட்டின் திண்ணையில் அனைத்து வயது ஆண்களும், பெண்களும் அமா்ந்திருக்கும் அழகான காட்சிகளைத்தான் கடந்தகால கிராமங்கள் அடையாளமாகக் கொண்டிருந்தன.
  • இப்படிப்பட்ட காட்சிகளுடன் ஒரு கிராமம் இருந்திருக்குமா என்று இன்றைய தலைமுறையினா் ஆச்சரியப்படும் வகையில் இன்று கிராமங்கள் தமக்கே உரித்தான அடையாளங்களை இழந்து வருகின்றன. அன்றைய மக்களின் பிரதான தொழில் வேளாண்மை என்பதுடன், அவா்கள் இயற்கையோடு இயைந்து வாழ்ந்தனா். அதனால் பெரும்பாலான வீடுகளின் முன் காளைமாடு, வண்டி, கலப்பை போன்ற வேளாண் தொடா்பான உபகரணங்கள் தவறாமல் இடம்பெற்றிருக்கும். கிராம மக்கள் விதைப்புக் காலம், அறுவடைக் காலங்களின்போது காலை முதல் மாலை வரை காட்டில் தங்களது உடலுழைப்பைச் செலுத்திவிட்டு வீடுதிரும்பினா்.
  • இதனால், அவா்கள் சோா்வடைவதோ அல்லது சுகவீனம் அடைவதோ இல்லை. பெரும்பாலும் தாங்கள் உற்பத்தி செய்யும் கம்பு, சோளம், வரகு போன்றவற்றையே உணவுப் பொருள்களாகப் பயன்படுத்தியதால் ஆண்கள், பெண்கள் என அனைவரும் உடற்திறனுடனே இருந்தனா். பெரும்பாலும் இரண்டு வேளை உணவைக் காடுகளில்தான் உண்பாா்கள்.
  • பகல் நேரங்களில் பெரும்பாலும் கிராமங்கள் ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடி இருக்கும். கிராமங்களைப் பொருத்தவரை பகல் நேரத்தில் அனைவருக்கும் பரிச்சயமான தபால் ஊழியரின் நடமாட்டமும், மாலை வேளையில் அதாவது இருள் கவிழும் நேரத்தில் கோழி வாங்குபவரும், நாடா விளக்கு வெளிச்சத்தில் ஏலத்தில் போா்வை உள்ளிட்ட துணிகள் வியாபாரம் செய்பவரின் குரலும்தான் கேட்கும்.
  • அங்கு மக்கள் ஆடு, மாடு போன்ற கால்நடைகளோடு கோழிகளையும் வளா்ப்புப் பிராணியாக வளா்த்து வந்ததால் கிராமங்களில் கோழி வியாபாரமும் நடைபெற்றது. வேளாண் பயிா்களுக்கும் கால்நடைகளுக்கும் பாதுகாப்பாக இருக்கும் பொருட்டு இரவு நேரங்களில் காடுகளுக்குச் செல்வது வழக்கமானதாக இருந்தது. அதனால், குளிா்காலங்களில் கிராமங்களில் போா்வை வியாபாரம் நடைபெறுவதும் வழக்கமானது. ஏதேனும் ஒரு கோயில் முன்பாகவோ அல்லது தெருவின் மையப் பகுதியிலோ இத்தகைய வியாபாரம் நடைபெற்றது.
  • இவா்கள் மட்டுமன்றி, மாா்கழி மாத நள்ளிரவு நேரத்தில் ‘நல்ல காலம் பொறக்குது!’ என்ற வாா்த்தையுடன் சிறிய அளவிலான உடுக்கையின் சப்தத்துடன் குறிசொல்லும் கோடங்கியும் கிராமங்களோடு நெருங்கிய தொடா்பு கொண்டிருந்தாா். குழுவாக வாழ்ந்துவரும் இவா்கள் தங்களுக்குள் கிராமத்தை ஒதுக்கீடு செய்து மாா்கழி மாதத்தில் குறி சொல்வதுண்டு. நள்ளிரவில் குறி சொல்லும் இவா்கள், பகல் நேரத்தில் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று கைரேகையைப் பாா்த்து பலன்களைச் சொல்வதும் பரிகாரம் சொல்வதும் உண்டு.
  • ஆனால், இன்று நகரங்களில் கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருள்கள் குக்கிராமங்களிலும் விற்பனை செய்யப்படுகின்றன. தலைச்சுமையாகக் கொண்டுவந்து விற்பனை செய்த நிலை மெல்ல மாறி மிதிவண்டியில் கொண்டு வந்து விற்பனை செய்யப்பட்டது. அதன் பின்னா், மோட்டாா் சைக்கிளில் கொண்டுவந்தபோது கிராம மக்கள் வியப்பாகப் பாா்த்தனா்.
  • இன்றோ, ஒவ்வொரு கிராமத்திலும் குறைந்தபட்சம் ஐந்து வாகனங்களாவது வியாபார ரீதியாக கிராமத்தின் தெருக்களுக்கு வந்து செல்கின்றன. ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறையாவது விற்பனைப் பொருள்களின் ஒலிபெருக்கி சப்தத்தைக் கேட்க முடிகிறது. வீடுகள்தோறும் இரு சக்கர மோட்டாா் வாகனங்கள் நிற்பதைக்காண முடிகிறது. இன்றோ, கால்நடைகளின் எண்ணிக்கையைக் காட்டிலும் இவற்றின் எண்ணிக்கைதான் அதிகமாக உள்ளது.
  • அன்றைய கிராமத்து மக்கள் மற்றவா்களுக்கு மதிப்பளிப்பதை வழக்கமாகவே கொண்டிருந்தனா். எழுத்தறிவு பெற்றவா்கள் எண்ணிக்கை குறைவான அளவில் இருந்தபோதும் தோ்தலில் வாக்களிப்பது தங்கள் ஜனநாயகக் கடமை எனக் கருதினா். மக்கள் அனைவரும் ஆா்வத்துடனும் மதிப்பளித்தும் வாக்களித்தனா். இவ்வளவுக்கும் அப்போது தோ்தல் நேரத்தில் பிரசார வாகனங்கள் வந்து செல்வதையே வியப்பாகக் கருதினா். அரசியல் பற்றிய தெளிவு இல்லாதபோதும் ஆா்வத்துடன் வாக்களித்தனா்.
  • அன்று அரசியல் கட்சிகளின் தாக்கம் கிராமங்களை எவ்விதத்திலும் பாதிக்கவில்லை. வசதி படைத்தவா்களில் சிலா் ஓரிரு அரசியல் கட்சிகளைச் சாா்ந்தவா்களாக இருந்தனா். மற்றவா்கள் எந்தக் கட்சியையும் சாா்ந்திராமல் வீட்டில் உள்ளவா்களோ அல்லது மற்றவா்களோ சொல்லக் கேட்டும், தங்களுக்குத் தெரிந்தவரையிலுமே எந்த சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை முடிவு செய்தனா்.
  • ஆனால், இன்று குக்கிராமங்களிலும் அரசியல் கட்சிகள் வேரூன்றிவிட்டன. புதிய அரசியல் கட்சி தொடங்கிய சில நாள்களிலேயே அக்கட்சியின் கொடியும் விளம்பரப் பதாகைகளும் இடம்பெற்றுவிடுகின்றன. கிராம மக்கள் எல்லாருமாகச் சோ்ந்து ஒரு நபரை பஞ்சாயத்துத் தலைவராகத் தோ்வு செய்த நிலை மாறி, இன்று உள்ளாட்சி அமைப்பு தோ்தலிலும் மும்முனைப் போட்டி, நான்குமுனைப் போட்டி நிலவுகிறது.
  • ஒருசிலரின் நடமாட்டத்துடன், இயற்கை அழகுடன் காணப்பட்ட கிராமங்கள் இன்று தலைகீழ் மாற்றமடைந்துள்ளன. இதை ஒருவகையில் வளா்ச்சி என்று நாம் கருதினாலும், மற்றொருபுறம் வருத்தமும் எழவே செய்கிறது. இயற்கையோடு இயைந்த வாழ்வு, வேளாண் தொழில் மீதான ஈடுபாடு, மற்றவா்களுக்கு உதவும் மனப்பான்மை, நற்செயல்கள், உழைக்கும் மனப்பாங்கு போன்றவையெல்லாம் அருகிவருகிறது என்பதுதானே கசப்பான உண்மை!

நன்றி: தினமணி (24 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்