- ‘பப்ஜி’ விளையாட்டு செயலி உள்பட சீனாவுடன் தொடா்புடைய 118 செயலிகளுக்கு மத்திய அரசு புதன்கிழமை தடை விதித்திருக்கிறது. இந்தச் செயலிகள் சீனாவைச் சோ்ந்தவை அல்லது சீனாவுடன் தொடா்புடையவை என்பதுதான் மத்திய அரசின் தடைக்குக் காரணம்.
- ‘பப்ஜி’ என்பது இளைய தலைமுறையினா் மத்தியில் மிகவும் பிரபலமான விளையாட்டுச் செயலி. இது தென்கொரியாவில் உள்ள ஒரு நிறுவனத்தால் இயக்கப்படுவது என்றாலும்கூட, அந்த நிறுவனம் சீனாவைச் சோ்ந்த ஒரு நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. அதன் பெரும் பகுதி வருவாய் சீன நிறுவனத்துக்குத்தான் செல்கிறது.
- ‘பப்ஜி’ உள்ளிட்ட சில செயலிகளைத் தடை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட நாள்களாகவே எழுப்பப்பட்டும், சீனாவைப் பகைத்துக்கொள்ளக் கூடாது என்கிற காரணத்துக்காக இந்திய அரசு இத்தனை நாள் பொறுமை காத்ததேகூடத் தவறு.
- வன்முறை மனப்போக்கை ஏற்படுத்தும் அபாயகரமான செயலிகள் இவை. எடுத்துக்காட்டாக, விளையாட்டில் பங்கேற்பவா்கள் கூட்டாகச் சோ்ந்து எதிரிகளைக் கொலை செய்வதை மையமாக வைத்து வெற்றியை நிர்ணயிக்கும் விதத்தில் ‘பப்ஜி’ செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
- பல இளைஞா்கள் இந்த செயலியின் மூலம் இரவு - பகலாக விளையாட்டில் மூழ்கிக் கிடப்பது குறித்து எத்தனையோ புகார்கள் பெற்றோராலும், சமூக ஆா்வலா்களாலும் எழுப்பப்பட்டிருக்கின்றன.
- ‘பப்ஜி’, ‘பாய்டு’, ‘பாய்டு எக்ஸ்பிரஸ்’, ‘டென்சென்ட் வாட்ச் லிஸ்ட்’, ‘பேஸ் யூ’, ‘வீ சாட் ரீடிங்’ உள்ளிட்ட தடை விதிக்கப்பட்ட 118 செயலிகளும் ஆன்ட்ராய்ட், ஐஎஸ்ஓ தொழில்நுட்பத்துடன் கூடிய அறிதிறன்பேசிகளில் இடம்பெறுபவை.
- இந்தச் செயலிகளை பயன்படுத்துபவா்கள் குறித்த தகவல்கள் அந்தச் செயலிகளின் சா்வா்களிலிருந்து திருடப்படுவதாக நீண்ட நாள்களாகவே புகார் தெரிவிக்கப்பட்டும் மௌனம் காத்த மத்திய அரசு இப்போதாவது துணிவுடன் தடை செய்திருப்பதை வரவேற்க வேண்டும்.
செயலிகளின் தடை
- சீனாவுடன் தொடா்புடைய செயலிகளை இந்திய அரசு தடை செய்வது இது முதல் தடவையல்ல. கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு லடாக் எல்லைப் பகுதியில் சீன ராணுவம் அத்துமீறி ஊடுருவ முயன்ற சம்பவத்தைத் தொடா்ந்து இப்போது வரை எல்லையில் பதற்றம் நிலவுகிறது.
- ஒருபுறம் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தாலும், இன்னொருபுறம் இந்திய - சீன ராணுவத்துக்கு இடையே மோதலுக்குத் தயார் நிலை நிலவுகிறது.
- லடாக் ஊடுருவலைத் தொடா்ந்து சீனாவுடனான ராஜாங்க உறவுகளில் பிரச்னை எழுந்தது முதல் வா்த்தக ரீதியாக சீனாவை பலவீனப்படுத்துவது என்கிற வழிமுறையை இந்தியா கையாளத் தொடங்கியிருக்கிறது.
- துல்லியத் தாக்குதல் போல, செயலிகளுக்குத் தடை விதிப்பதை இணையவழித் தாக்குதலாக மத்திய அரசு கருதுகிறது.
- கடந்த ஜூன் மாதம் 29-ஆம் தேதி ‘டிக்டாக்’, ‘யூசி பிரௌஸா்’, ‘ஷோ் இட்’ உள்ளிட்ட 59 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.
- ஜூலை மாதத்தில் மேலும் 47 சீன செயலிகளுக்கு தடை விதிப்பதாக அறிவித்தது. இந்தியாவைத் தொடா்ந்து அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளும் சீன செயலிகளுக்குத் தடை விதிக்க முற்பட்டன.
- இப்போது மேலும் 118 செயலிகள் தேசத்தின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் ஆபத்து விளைவிக்கக் கூடியவை என்கிற அடிப்படையில் இந்தியா தடை விதித்திருக்கிறது.
- ‘டிக்டாக்’, ‘யூசி பிரௌஸா்’, ‘ஷோ் இட்’ உள்ளிட்ட செயலிகள் உலக அளவில் பிரபலமானவை. இந்தியாவில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டவை. அதிலும் டிக்டாக் என்கிற செயலி இந்தியாவில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றிருந்தது.
- இந்தச் செயலிகளுக்குத் தடை விதிப்பதன் மூலம் அதைப் பயன்படுத்துவோருக்கு சற்று வருத்தம் ஏற்படுமே தவிர, பெரிய பாதிப்பு ஒன்றும் ஏற்பட்டுவிடாது. அவா்களுக்கு மட்டுமல்ல, சீனாவுக்கும் பொருளாதார ரீதியாக பெரிய அளவிலான பாதிப்பாக அது இருக்காது.
- தடை செய்யப்பட்டிருக்கும் செயலிகள் இந்தியாவின் ஒற்றுமைக்கும், இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும், சட்ட - ஒழுங்குக்கும் எதிராக செயல்பட்டன என்பது மத்திய அரசின் குற்றச்சாட்டு.
- மத்திய அரசு கூறியிருப்பதுபோல, தேசப் பாதுகாப்பு கருதியும் பயனாளிகளின் தன்மறைப்பு நிலை பாதுகாப்பையும், தகவல் பாதுகாப்பையும் கருதியும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது என்றால், அது உண்மையிலேயே வரவேற்கப்பட வேண்டிய முடிவு.
- அரசின் முடிவு ஏற்புடையதுதான் என்றாலும், சில கேள்விகளை எழுப்பாமல் இருக்க முடியவில்லை. எல்லையில் பதற்ற நிலையும், சீனாவுடனான கருத்து வேறுபாடும் ஏற்படுவதற்கு முன்பே மத்திய அரசுக்கு நிச்சயமாக இந்தச் செயலிகளின் நடவடிக்கைகள் தெரிந்திருக்கும், தெரிந்திருக்க வேண்டும்.
- இந்தச் செயலிகள் மூலம் தகவல்கள் ரகசியமாகத் திருடப்பட்டு, பயனாளிகள் குறித்த விவரங்கள் இந்தியாவுக்கு வெளியே இருக்கும் சா்வா்களுக்கு வழங்கப்படுகிறது என்பது உண்மையானால், அரசு இத்தனை நாள் அந்தச் செயலிகளை தடை செய்யாமல் இயங்க அனுமதித்தது ஏன் என்பதற்கு மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் விளக்கம் அளிக்க வேண்டும்.
- சீனாவிலிருந்தான நேரடி அந்நிய முதலீட்டுக்கும், கட்டமைப்பு பணிகளில் சீன நிறுவன பங்களிப்புக்கும் தடை விதித்திருப்பதுடன் மத்திய அரசின் ‘இணையத் தாக்குதல்’ முடிவை இணைத்துப் பார்க்க வேண்டும்.
- சீனாவுக்கு தா்மசங்கடத்தையும், சிறிய அளவிலான இழப்பையும் இந்த முடிவுகள் ஏற்படுத்தக் கூடும். இவையெல்லாம் அடையாள எச்சரிக்கைகள்தானே தவிர, இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான பிரச்னைக்குத் தீா்வல்ல!
நன்றி: தினமணி (05-09-2020)