அடையாளம் தெரியாத வாகனங்களும் அநியாய இழப்புகளும்
- சென்னையைச் சேர்ந்த பிரதீப் குமார், தொலைக்காட்சி ஒளிப்பதிவாளராகவும் வாடகை இரு சக்கர வாகன ஓட்டியாகவும் பணிபுரிந்துவந்தார். நவம்பர் 20இல் தாம்பரம் - மதுரவாயல் புறவழிச் சாலையில் ஒரு கார் அவரது வாகனத்தின் மீது மோதியதில், அவர் பாலத்துக்குக் கீழே வீசப்பட்டு உயிரிழந்தார். கார் உரிமையாளர் தலைமறைவானார்.
- ஜூனில் ஒரு நாள், வழக்கம்போல வேலைக்குக் கிளம்பிய ரேவதி, தன் தாயும் மகளும் விபத்தில் இறப்பார்கள் என்று எதிர்பார்த்திருக்கவே மாட்டார். ரேவதியின் குழந்தையை மருத்துவரிடம் காட்டுவதற்காக அவருடைய அம்மா, உறவினருடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, திருமழிசை அருகே பின்னாலிருந்து வந்த ஒரு பைக் மோதியது. பேத்தியும் பாட்டியும் சாலையிலேயே உயிரிழந்தனர்.
- விபத்தை ஏற்படுத்திய பைக் உரிமையாளர் மின்னல் வேகத்தில் மறைந்துவிட்டார். இப்படி நிறைய சம்பவங்கள். விபத்தை ஏற்படுத்தியவர் உடனடியாகத் தப்பிச் செல்லும் விபத்துகளில் (hit and run) பாதிக்கப்படுபவர்களின் துயரக் கதைகள் முடிவே இன்றித் தொடரக்கூடியவையாக இருக்கின்றன.
- இந்தியாவில் ஒரு மணி நேரத்துக்குச் சராசரியாக 53 சாலை விபத்துகள் நடைபெறுகின்றன. 19 பேர் பலியாகின்றனர். சாலை விபத்தின் தீவிரம் (crash severity) என்பதில் 38.15 புள்ளிகளுடன் உலகின் மிக மோசமான 20 நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது. இந்திய அளவில் அதிக எண்ணிக்கையில் சாலை விபத்து நிகழ்வதில் அக்டோபர், 2023 நிலவரப்படி, தமிழ்நாடு மூன்றாம் இடத்தில் இருக்கிறது. விபத்தால் ஒரு குடும்பத்தின் வாழ்க்கையே தலைகீழாக மாறிவிடும் துயரம் எந்தச் சொல்லிலும் அடங்காதது. அதிலும் மொத்த சாலை விபத்துகளில் 10.36 சதவீதம், ‘ஹிட் அண்டு ரன்’னாகவே இருக்கிறது.
வஞ்சிக்கப்பட்டவர்கள்:
- விபத்தை ஏற்படுத்தியவர், அடிபட்டவரை அப்படியே விட்டுவிட்டு, காவல் துறைக்கும் தெரிவிக்காமல் உடனடியாகத் தலைமறைவு ஆவது ‘ஹிட் அண்டு ரன்’. இதன் காரணமாகப் பலியானவர்களும் காயமுற்றோரும் வஞ்சிக்கப்பட்டவர்கள் எனலாம். போக்குவரத்து குறைவான பகுதிகளில் இத்தகைய விபத்து நிகழும்போது, அடிபட்டவர் தன்னந்தனியாக உயிருக்குப் போராடும் நிலைக்கு உள்ளாகிறார்; இக்கட்டான நேரத்தில் அவருக்குக் கிடைக்க வேண்டிய முதலுதவி இல்லாமல் போகிறது.
- 2022இல் நிகழ்ந்த இவ்வகை விபத்துகளில் பாதிக்கும் குறைவானவற்றில்தான் குற்றம் நிரூபிக்கப்பட்டது. இந்தப் போக்கு, வாகன ஓட்டுதலில் இருக்க வேண்டிய பொறுப்பு உணர்வை மக்களிடையே மழுங்கடிக்கிறது என்றே கூறலாம். சென்னையைச் சேர்ந்த ஒருவர், 2019இல் டிரக் மோதி இறந்தார். அவரது 70 வயது தந்தை 3 ஆண்டுகளாக விசாரணைக்காக அலைந்தார். அந்த டிரக் காப்பீடு செய்யப்பட்டிருக்கவில்லை.
- ஓட்டுநர் ராஜஸ்தானைச் சேர்ந்தவர். கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், நேரில் பார்த்த சாட்சி இல்லை என்பதால் அவர் தண்டனை ஏதும் இன்றித் தப்பித்துவிட்டார். இத்தகைய விபத்துகளுக்கு நேரடிச் சாட்சிகள் இருப்பினும், அவர்கள் நீதிமன்றத்துக்கு வரத் துணிவதில்லை.
- பல வேளைகளில் விபத்து ஏற்படுத்திய வாகனம் கண்டறியப்படாமல், ‘அடையாளம் தெரியாத வாகன’மாகவே பதிவு செய்யப்பட்டு, அவை முடிவே காணாத வழக்குகள் ஆகின்றன. பாதிக்கப்பட்ட குடும்பங்கள், உரிய நிவாரணம் பெறுவதும் தடைபடுகிறது. 2009இல் மாதவரத்தில் நிகழ்ந்த ஒரு விபத்து தொடர்பாக இழப்பீடு கோரும் வழக்கு 2023இல் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
- தந்தையைப் பறிகொடுத்த தனக்கு இழப்பீடு வேண்டும் என ஒரு பெண் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், வழக்கில் போலியான வாகனம் அப்பெண்ணின் தரப்பில் பதிவுசெய்யப்பட்டிருந்ததை இழப்பீட்டுக்கான தீர்ப்பாயம் கண்டறிந்தது. அதை உறுதிப்படுத்திய நீதிமன்றமும் அப்பெண்ணின் கோரிக்கையை நிராகரித்தது.
- விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு நியாயம் கிடைக்காதபோது, குறுக்குவழியில் இறங்கக்கூடும் என்பதற்கு இது ஓர் உதாரணம். “சாலை விபத்துகள் குறித்து காவல் துறை சரியாக விசாரணை செய்வதில்லை; ‘ஹிட் அண்டு ரன்’ விபத்துகளில் குறைவான இழப்பீடே கிடைப்பதால் போலியான வாகனம் பதிவு செய்யப்படுவது அதிகம் நிகழ்கிறது” என அந்த வழக்கில் நீதிபதிகள் கவலை தெரிவித்தனர். ‘ஹிட் அண்டு ரன்’ விபத்துகளில் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்கும் தற்போதைய முறை மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் எனவும் அவர்கள் அறிவுறுத்தினர்.
அற மதிப்பீடா, சட்ட நடவடிக்கையா?
- அதீத வேகம்தான் ‘ஹிட் அண்டு ரன்’ விபத்துகளுக்கு முதன்மைக் காரணம். மற்றவர்களுக்கு இடைஞ்சலோ ஆபத்தோ இல்லாதவாறு வாகனம் ஓட்டுவது ஒரு கலாச்சாரமாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும். இது ஓர் அற மதிப்பீடாகப் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே நிலைபெறுவது, பெரியவர்கள் மீதான சட்ட நடவடிக்கைகள் எடுப்பதைவிடப் பயன் கொடுக்கும்.
- சிறை செல்ல வேண்டியிருக்கும் என்கிற அச்சத்தோடு, சுற்றியிருப்பவர்கள் தாக்குவார்கள் என்கிற யதார்த்தமும் ஓட்டுநரை அந்த இடத்திலிருந்து தலைமறைவாகச் செய்கிறது. விபத்தை ஏற்படுத்தியவரைத் தாக்குவது பிரச்சினைக்குத் தீர்வல்ல என்கிற புரிதல் சமூகத்தில் ஏற்படுத்தப்பட வேண்டும். கண்காணிப்பு, அபராதம் உள்ளிட்ட அணுகுமுறை, அதீத வேகத்தில் வாகனம் ஓட்டுவதையும் குறைக்கும்.
- தேசிய நெடுஞ்சாலைகளிலும் மாநிலச் சாலைகளிலுமே விபத்துகள் அதிகம் நிகழ்கின்றன. தங்க நாற்கரச் சாலைகளின் வருகைக்குப் பிறகு, கிராமங்கள் நெடுஞ்சாலைகளால் இரண்டு பகுதிகளாகத் துண்டிக்கப்பட்டுவிட்டன. அன்றாடத் தேவைக்காக கிராம மக்கள் அடிக்கடி சாலையைக் கடக்கின்றனர். நடைமேம்பாலங்கள் அமைப்பது, சாலைக்கு நடுவே தடுப்புச்சுவர் அமைப்பது போன்றவை விபத்துகளைத் தடுக்கும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.
- டிசம்பர், 2023இல் புதிதாகக் கொண்டுவரப்பட்ட பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின்படி, ‘ஹிட் அண்டு ரன்’ விபத்தை ஏற்படுத்தியவருக்கான சிறைத் தண்டனைக் காலம் 10 ஆண்டுகள் வரைக்கும் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இதைக் கண்டித்து மகாராஷ்டிரம், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களைச் சேர்ந்த லாரி, டிரக் ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம் செய்தனர்.
- பனிமூட்டம், மழை போன்ற இயற்கைக் காரணிகள், மோசமான சாலைகள், பாதசாரிகள் அல்லது சக வாகன ஓட்டுநர்களின் தவறுகள்கூட விபத்துக்கு வழிவகுக்கும்போது, அதற்கான பழியை ‘ஹிட் அண்டு ரன்’ ஓட்டுநர்கள் மீது மட்டுமே சுமத்தக் கூடாது என்பது அவர்களது வாதம். இதில் உள்ள நியாயங்களை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.
கேள்விக்குரியதாகும் இழப்பீடு:
- இந்தியாவில் 2022இல் 67,387 ஹிட் அண்டு ரன் விபத்துகள் நிகழ்ந்தன. இவற்றில் மோட்டார் வாகனச் சட்டம், பிரிவு 161இன்படி, 205 விபத்துகளில்தான் இழப்பீடு கேட்கப்பட்டது. அவற்றில் 95 கோரிக்கைகள்தான் நிறைவேற்றப்பட்டன. ஜனவரி, 2024இல் உச்ச நீதிமன்றம் இந்தப் பற்றாக்குறை குறித்துக் கேள்வி எழுப்பியதோடு, இழப்பீட்டுத் தொகையை அதிகரிக்குமாறும் அறிவுறுத்தியது.
- பாதிக்கப்பட்டவர்கள் இழப்பீடு பெற முடியும் என்றுகூடத் தெரியாத நிலையில் இருப்பது குறித்து வருந்திய உச்ச நீதிமன்றம், வழக்கை விசாரிக்கும் காவல் அதிகாரி இழப்பீடு பெற்றுத்தரும் பொறுப்பும் உடையவர் எனவும் மாவட்டம்தோறும் இயங்கும் சட்ட உதவி மையங்களுக்கு இதைக் கண்காணிக்கும் பொறுப்பு உள்ளதாகவும் கூறியது.
- சென்னை போன்ற நகரங்களில் போக்குவரத்துக்கு என்றே தனிப் பிரிவுகள் இருப்பதால், விபத்து வழக்குகளை விரைவாக விசாரிக்க முடிகிறது. மற்ற மாவட்டங்களில் ஒரே காவல் நிலையமே சட்டம் - ஒழுங்குப் பிரச்சினைகளையும் விபத்து தொடர்பான புகார்களையும் கையாள வேண்டியிருக்கிறது.
- இது விபத்து வழக்குகளில் தீர்வு கிடைப்பதைத் தாமதப்படுத்துகிறது. சட்டத்தை இறுக்கமாக்கிக்கொண்டே செல்வதைவிட, சமூகம் தன்பொறுப்புடன் நடந்துகொள்வதே இதற்கு நிலையான தீர்வாக இருக்க முடியும். சாலையைச் சரியான முறையில் கடக்க வேண்டிய பாதசாரியிலிருந்து வாகன ஓட்டுநர்கள், காவல் துறையினர் வரைக்கும் இதை நினைவில் கொள்ள வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (05 – 12 – 2024)