- உலகின் முதல் அணுகுண்டான ‘லிட்டில் பாய்’ ஜப்பானின் ஹிரோஷிமா நகரத்தின் மீது வீசப்பட்டு 75 ஆண்டுகளாகின்றன.
- 64 கிலோ செறிவூட்டப்பட்ட யுரேனியத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட அந்த அணுகுண்டு 20 ஆயிரம் டன் டிஎன்டி வெடிபொருள் சக்தியைக் கொண்டிருந்தது. 13 சதுர கிலோ மீட்டர் பரப்பை நாசப்படுத்தியது. 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உடனடியாகக் கொல்லப்பட்டனர். குண்டுவீச்சால் ஏற்பட்ட கதிர்வீச்சின் காரணமாகப் பல்லாயிரக்கணக்கானவர்கள் நோய்வாய்ப்பட்டு இறந்தனர்.
- உடல் ஊனமுற்றவர்களின் எண்ணிக்கையும் பெரும் எண்ணிக்கையிலானது. மூன்று நாட்களுக்குப் பிறகு, நாகசாகி நகரத்தின் மீது மீண்டும் ஒரு அணுகுண்டு வீசப்பட்டது.
- இரண்டாவது குண்டுவீச்சில் 40,000 பேர் கொல்லப்பட்டனர். ஜப்பானின் மீது அமெரிக்கா மேலும் ஒரு அணுகுண்டை வீசுவதற்குத் தயாராக இருந்த நிலையில், ஜப்பான் சரணடைந்ததையடுத்து, இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது.
- அதுவரையிலான மனித வரலாற்றில் போர்கள் ஏற்படுத்தும் உயிரிழப்புகளும் அலைக்கழிவுகளுமே பேசப்பட்டன. ஆனால், அணுகுண்டு வீச்சுக்குப் பிறகு, ஒட்டுமொத்த உலகையும் நாசமாக்கிவிடக் கூடிய அணு அபாயத்தைப் பேசலானது.
- சொல்லப்போனால், இன்னொரு உலகப் போர் ஒன்று மூளாமல் இருப்பதற்கான காரணங்களில் ஒன்றாகவும் அது மாறியது. அணு ஆயுதங்களின் அபாயம் உலகால் போதிய அளவுக்கு உணரப்பட்டிருக்கிறது என்றாலும், படிப்பினையைப் போதிய அளவுக்குப் பெற்றிருக்கிறோமா என்ற கேள்விக்குப் பதில் இல்லை.
- அணு ஆயுதங்களை முற்றிலுமாக முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கோடு உருவாக்கப்பட்ட அணு ஆயுதப் பரவல் தடை உடன்படிக்கை அரை நூற்றாண்டாக நடைமுறையில் உள்ளபோதும் அதன் போதாமையைப் பூர்த்திசெய்யும் பணியை உலக நாடுகள் இன்னும் முடிக்கவில்லை.
- அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகள் ஏற்கெனவே தாங்கள் அணு ஆயுதங்களைப் பெற்றிருப்பதைக் காரணம் காட்டி, ஏனையோரிடத்திலிருந்து மேம்பட்ட ஓர் நிலையை உருவாக்கிக்கொண்டதானது, பாதுகாப்பின் பெயரால் மேலும் பல நாடுகள் அணு ஆயுதப் பரிசோதனைகளை மேற்கொள்ளும் நிலைக்குத் தள்ளியது.
- உடன்படிக்கையில் கையெழுத்திட்ட வடகொரியா அதிலிருந்து விலகியதும், இன்னும் சில நாடுகள் உடன்படிக்கையில் கையெழுத்திடாமல் இருப்பதற்கும் அதுவே காரணம்.
- விளைவாக ஹிரோஷிமா, நாகசாகி குண்டுவீச்சுகளுக்குப் பிறகும்கூட இதுவரை இரண்டாயிரம் தடவைகளுக்கு மேல் பரிசோதனைகளுக்காகவும் செயல் விளக்கங்களுக்காகவும் அணுகுண்டுகள் வெடிக்கப்பட்டிருக்கின்றன.
- ஆக, வெளிப்படையாகவும் ரகசியமாகவும் நூற்றுக்கும் மேற்பட்ட அணுகுண்டுகள் உயிரோடு இந்த உலகை உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கின்றன.
- இது வல்லரசு நாடுகளின் இரட்டை முகத்தை மட்டும் அல்ல; இன்னமும்கூட மனித குலம் அணு ஆயுதங்களிடமிருந்து முழுப் படிப்பினையைப் பெறாததையும் சேர்த்தே காட்டுகிறது.
- உலகம் முற்றிலுமாக அணு ஆயுதங்களுக்கு விடை கொடுக்க வேண்டும். அப்படியென்றால், இதுவரை அணு ஆயுதங்களை வைத்திருக்கும் நாடுகளே இதற்கான செயல்திட்டத்தில் முன் பொறுப்பை ஏற்க வேண்டும்.
நன்றி: தி இந்து (06-08-2020)