TNPSC Thervupettagam

அணைகள் பாதுகாப்புச் சட்டத்தை ஏன் தமிழ்நாடு எதிர்க்கிறது?

August 9 , 2019 1790 days 779 0
  • நீண்ட காலமாக இழுத்தடித்துவந்த ‘அணைகள் பாதுகாப்புச் சட்டம்’ எனும் கனவை மீண்டும் முன்னோக்கி நகர்த்த ஆரம்பித்திருக்கிறது மத்திய அரசு. மக்களவையில் இதற்கான சட்ட முன்வடிவு பல முறை முன்வைக்கப்பட்டதை இங்கே நினைவுபடுத்திக்கொள்ளலாம். 2010-ல் அறிமுகப்படுத்தப்பட்டபோது, நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அது பரிந்துரைக்கப்பட்டது. அந்தக் குழு தனது அறிக்கையை 2011-ல் சமர்ப்பித்தது. 2018-ல் மறுபடியும் சட்ட முன்வடிவு அறிமுகப்படுத்தப்பட்டது. மாநிலங்களின் தொடர் எதிர்ப்பால் தள்ளிப்போடப்பட்டுவந்த அதை, மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் மக்களவைக்குக் கொண்டுவந்து நிறைவேற்றிக்கொண்டிருக்கிறது பாஜக அரசு. எனினும், மாநிலங்களவைக்கு அனுப்பும் முன், அதன் மீதான கடும் விமர்சனங்களின் தொடர்ச்சியாக நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பியிருக்கிறது.
  • தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி வேறுபாடின்றி இந்தச் சட்டத்துக்கு எதிர்ப்பைத் தெரிவித்தனர். முக்கியமான காரணம், மாநிலங்களின் உரிமை பறிக்கப்படுவதுதான். நாடெங்கிலும் 5,344 பெரிய அணைகள் உள்ளன. இவற்றில் 293 அணைகள் நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழமையானவை. “மாநிலங்களிடையே அடிக்கடி நதிநீர் குறித்து தாவா ஏற்படுகிறது. பார்க்கப்போனால், கிட்டத்தட்ட 92% அணைகள் ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்துக்குப் பாயும் நதிகளில்தான் கட்டப்பட்டிருக்கின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில், மாநிலங்களுக்கிடையில் ஏற்படும் தாவாக்களைத் தீர்த்துவைக்கப் புதிய சட்டம் உதவும்” என்றும் இந்தச் சட்டமுன்வடிவுக்கான காரணத்தைச் சொன்னார் மத்திய நீர்வளத் துறை அமைச்சர். இந்தியாவில் மத்திய அரசு என்பது தனித்த ஒன்றாகவும் மாநில அரசியலிலிருந்து வேறுபட்ட பொதுப் பண்பைப் பெற்றதாகவும் இருப்பதில்லை என்பதுதானே எழுபதாண்டு சுதந்திர இந்தியாவின் கூட்டாட்சியில் நிலவும் பெரிய பிரச்சினையும் சிக்கலும்? நடைமுறையில் இரு மாநிலங்களுக்கு இடையிலான ஒரு பிரச்சினையில் மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சி தன்னுடைய கட்சியே அதில் ஒரு மாநிலத்தில் ஆட்சியிலோ செல்வாக்கிலோ இருக்கும்பட்சத்தில், அதற்கேற்ப முடிவு எடுப்பதைத்தானே காவிரி விவகாரம் வழி கடும் பாதிப்பாகத் தமிழகம் உணர்ந்துவந்திருக்கிறது?

சிக்கல்கள்

  • மேலதிகம் இன்னொரு புதிய சிக்கலையும் இந்தச் சட்ட முன்வடிவு கொண்டிருக்கிறது. வேறொரு மாநிலத்தில் உள்ள நதிகளின் அணைகள் மீது இன்னொரு மாநிலம் கொண்டிருக்கும் உரிமையையும் இது தொலைத்துக்கட்டிவிடும். உதாரணமாக, கேரளத்தில் நான்கு அணைகளைத் தமிழகம் உரிமை கொண்டுள்ளது. ஆரம்பத்தில் செய்துகொண்ட ஒப்பந்தங்களின்படி, இந்த உரிமையைத் தமிழகம் இன்று அனுபவித்துவருகிறது. ஆனால், புதிய சட்டமானது இந்த நான்கு அணைகள் மேல் தமிழகம் கொண்டுள்ள உரிமையை நீக்கிவிடும்.

தண்ணீர் பிரச்சினை

  • தண்ணீர் பிரச்சினை பெரும் பிரச்சினையாக உருவெடுத்துவரும் காலகட்டத்தில், மாநிலங்களுக்கு இடையேயான நதி நீர்ப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண நிச்சயமாக ஒரு பொது அமைப்பும் முறைமையும் இந்தியாவுக்கு வேண்டும். ஆனால், மாநிலங்கள் ஏற்கெனவே நதிகளிலும் அணைகளிலும் கொண்டிருக்கும் உரிமையைப் புறக்கணிக்க முடியாதபடி அவை வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை(09-08-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்