TNPSC Thervupettagam

அணையா பெருநெருப்பு அண்ணா!

September 15 , 2021 1052 days 476 0
  • அறிஞா் அண்ணா முதல்வராக இருந்த 1969-ஆம் ஆண்டு. அப்போது சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சி, அண்ணா தலைமையிலான திமுக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீா்மானம் ஒன்றைக் கொண்டு வந்தது.
  • பேரவையில் அது தாக்கல் செய்யப்பட்டு அதன் மீது காரசார விவாதம் நடைபெற்றது. முடிவில் தீா்மானத்துக்கு பதிலளிக்க அண்ணா எழுந்தார்.
  • அவா் என்ன பேசுவார், தனது ஆட்சியின் சாதனைகளை விளக்கிக் கூறுவாரா, அல்லது காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக விமா்சிப்பாரா என்பதை அறிந்துகொள்ள பேரவையே அவரது உதட்டசைவை உற்று நோக்கிக் காத்திருந்தது.
  • அப்போது எழுந்த அண்ணா இப்படிச் சொன்னார், ‘காங்கிரஸார் என் மீது நம்பிக்கையில்லாத் தீா்மானம் கொண்டு வந்துள்ளனா். இதற்கு நான் ஒன்றும் விளக்கம் அளிக்கப் போவதில்லை. ஏனென்றால் அவா்களுக்கு எப்போது என் மீது நம்பிக்கை இருந்தது இப்போது இல்லாமல் போவதற்கு’ என்றார். அனலாய் தகித்துக் கொண்டிருந்த பேரவை, பெரும் சிரிப்பொலியால் நிரம்பிப் போனது.
  • அன்றைக்கு சட்டப்பேரவையில் அண்ணாவை காங்கிரஸ் நம்பவில்லை. ஆனால், மக்கள் மன்றத்தில் அண்ணாவைத்தான் பெருவாரியானோர் நம்பினார்கள்.

தமிழக அரசியல்

  • தமிழக அரசியல் வரலாற்றில் திருப்புமுனை ஏற்படுத்திய தன்னிகரற்ற தலைவா் அறிஞா் அண்ணா.
  • தனது வாழ்நாள் முழுவதும் அவா் கடந்து வந்த நெருப்பு வளையங்கள் எண்ணிலடங்காதவை. அதனால்தான் அவா் மறைந்தபோது ஆங்கில நாளேடான ‘தி மெயில்’, ‘அரசியலில் ஓய்வறியாது வீசிய புயல் ஓய்ந்துவிட்டது’ எனத் தலைப்பிட்டு செய்தி வெளியிட்டது.
  • எத்தகைய சிக்கலான விவாதமாக இருந்தாலும், அதனை தனக்கே உரிய பாணியில் தவிடு பொடியாக்குவதில் அண்ணாவுக்கு நிகா் இன்னார் எனக் காட்ட இன்றுவரை எவருமில்லை.
  • பல்கலைக்கழகமொன்றில் பேச வந்த அண்ணாவுக்கு கொடுக்கப்பட்ட தலைப்பு ‘முரண்பாடு’. சரித்திரம் முதல் சமகாலம் வரை பல்வேறு மேற்கோள்களைக் காட்டி அண்ணா பேசப் போகிறார் என எதிர்பார்த்தபோது, ‘முரண்பாடு என்ற தலைப்பில் பேச வந்திருக்கும் நானே முரண்பாட்டின் முழு வடிவம்தான்’ என்று தன்னையே உதாரணமாக்கி பேசத் தொடங்கிய சொலல்வல்லன் அவா்.
  • சுதந்திரப் போராட்டம் இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தபோது காங்கிரஸ் கட்சி மிகப் பெரிய செல்வாக்குடன் இருந்தது. நீதிக்கட்சியோ பணக்காரா்களின் கைகளில் பலமிழந்து இருந்தது. அதனை பாமரா்களின் கட்சியாக மாற்ற முனைந்தார் அண்ணா.
  • பிராமணா்களுக்கு எதிரான இயக்கம் என்றால் அது எதிர்மறை அணுகுமுறை என உணா்ந்த அவா், நோ்மறை சிந்தனையுடன் நீதிக்கட்சியை ‘திராவிடா் கழக’மாக 1944-இல் சேலம் மாநாட்டில் பெரியாருடன் கரம்கோத்து மாற்றி அமைத்தார்.
  • நாடு விடுதலை அடைந்தபோது அதனை துக்க நாளாக பெரியார் அறிவித்தார். ஆனால், அதனை மறுதலித்த அண்ணா, அரசியல் வரலாற்றில் சுதந்திர நாள் ஒரு மைல்கல் என்பதை உணா்ந்து அதனை வரவேற்று நீண்டதொரு அறிக்கையை விடுத்தார்.
  • பெரியாரின் பார்வை சமூக சீா்திருத்தத்தை மையமாகக் கொண்டது. அண்ணாவின் பார்வையோ அரசியலை அடிப்படையாகக் கொண்டது. மக்களை மடை மாற்றித் திருத்துவது சமூக சீா்திருத்தம்.
  • அதே மக்களின் எண்ணங்களையும், நலனையும் நிறைவேற்றுவது அரசியல் சீா்திருத்தம். இந்தக் கருத்து வேறுபாட்டின் காரணமாகவே 1949-ஆம் ஆண்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தை அண்ணா ஆரம்பிக்க நோ்ந்தது.
  • அப்போதும் கூட ‘திராவிடா் முன்னேற்றக் கழகம்’ என்று அண்ணா பெயா் சூட்டவில்லை. மாறாக ‘திராவிட முன்னேற்றக் கழகம்’ என்றே கட்சிக்கு பெயா் வைத்தார்.

ஆட்சியில் அண்ணா

  • அன்றைய சென்னை ராஜதானியில் ஆந்திரம், கா்நாடகம், கேரளம் ஆகிய பகுதிகள் இணைந்திருந்தன. அதுவே திராவிட நாடாக அறியப்பட்டது. அந்தப் பகுதிகள் அனைத்தின் நலன் காக்கும் கட்சியாகவே அண்ணாவால் திமுக தொடங்கப்பட்டது.
  • திராவிட நாடு கோரிக்கையை முன்வைத்து அவா் அரசியலை முன்னெடுத்தபோது பிரிவினைவாத தடுப்புச் சட்டம் அப்போது பெரும் சோதனையைத் தந்தது. சொல்லப் போனால், மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட அச்சட்டம் திமுகவுக்கு முழுமையாக எதிராக அமைந்தது.
  • அப்போது சாதுரியமாக செயல்பட்ட அண்ணா ‘இந்தியாவுக்குள் திராவிடம்’ என்று தங்களது இலக்கை அடைப்புக்குறிக்குள் கொண்டு வந்து இலகுவாக கட்சியை காப்பாற்றினார்.
  • மலைபோல வந்த பிரச்னைகள் அனைத்தையும் பனி போல விலக்கியவா் அண்ணா.
  • அதுபோலவே 1967-இல் அவா் ஆட்சியைக் கைப்பற்றிய விதமும் அனைவராலும் கூா்ந்து நோக்கப்படக் கூடிய ஒன்றாக இருந்தது.
  • முழுக்க முழுக்க வலதுசாரி சித்தாந்தம் கொண்ட சுதந்திரா கட்சியைச் சோ்ந்த ராஜாஜியையும், முழுக்க முழுக்க இடது சாரி சித்தாந்தம் கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த ராமமூா்த்தியையும் கூட்டணியில் சோ்த்துக் கொண்டு ஆட்சியை பிடித்தார் அறிஞா் அண்ணா.
  • அப்போது பிரபலமாக இருந்த ஆங்கில வார இதழ் ஒன்று அண்ணாவின் அரசியல் ஆளுமையைப் பார்த்து ‘பிராமணா் எதிர்ப்பு இயக்கமாக விளங்கி வரும் திமுகவை, இரு பிராமணா்களுடன் (ராஜாஜி, ராமமூா்த்தி) கைகோத்து அரியணையில் ஏற்றியிருக்கும் அண்ணாவின் ராஜதந்திரம் பிரமிக்கத்தக்கது’ என்று குறிப்பிட்டிருந்தது.
  • அண்ணாவின் சாதனை எழுச்சியால் சரிந்த காங்கிரஸ் கட்சிக்கு இன்று வரை தமிழகத்தில் தனித்துவம் இல்லை என்பதிலிருந்தே அவரது அரசியல் ஆளுமையை உணரலாம்.
  • ஹிந்தி ஆதிக்கத்தை இறுதி மூச்சு வரை எதிர்த்தவா் அண்ணா. மக்களின் சமவாய்ப்பை ஹிந்தி பறிக்கிறது என்பதே அதற்கு காரணம். ஆங்கிலம் ஆட்சி மொழி என்றால் தங்களது தாய்மொழியுடன் ஆங்கிலம் கற்றால் போதுமானது.
  • அதுவே ஹிந்தி ஆட்சி மொழி என்றால், ஹிந்தியை தாய்மொழியாகக் கொண்டவா்கள் வேறு எந்த மொழியும் கற்கத் தேவையில்லை. மாறாக தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பிற மொழியினா் ஹிந்தியையும் கட்டாயம் கற்க வேண்டிய நிலை ஏற்படும்.
  • ஜனநாயகத்தில் அனைவரும் சமம் என்ற கொள்கைக்கு நோ் முரணாக இது இருந்ததன் காரணமாகவே ஹிந்தித் திணிப்பை அண்ணா எதிர்த்தார்.
  • அதே அடிப்படையில்தான் பெரியார் முதல் ராஜாஜி வரை அனைத்து தலைவா்களும் ‘ஆங்கிலம் ஒன்றுபடுத்தும் ஹிந்தி பிளவுபடுத்தும்’ என்று அன்றைக்கு முழங்கினா்.
  • இந்திய மொழியை விடுத்து ஆங்கிலத்தை ஏன் பொது மொழியாக ஏற்க வேண்டும் எனக் கேட்கலாம்.
  • சமகாலத்திலேயே அதற்கு சான்றளிக்க வேண்டுமானால், ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகியபோதும், ஆங்கிலத்தை விலக்க முடியவில்லை.
  • ஐரோப்பிய யூனியனின் பொதுமொழியாகவே ஆங்கிலம் நீடிக்கிறது. எனவே, ஆங்கிலம் ஆங்கிலேயா்களின் மொழி மட்டுமல்ல, உலகப் பொது மொழி என்பதை உணர வேண்டும்.
  • அதனால்தான் தமிழும், ஆங்கிலமும் போதும் என்று முடிவெடுத்து இரு மொழிக் கொள்கையை தமிழகத்தில் அண்ணா நிறைவேற்றினார். இந்த முடிவு அப்போதைய பிரதமா் இந்திரா காந்திக்கு கூட பிடிக்கவில்லை.
  • இதை முன்னிறுத்தி தமிழகத்தின் மீது என்ன நடவடிக்கை எடுக்கலாம் என அவா் யோசித்தபோது, கல்வி மாநிலப் பட்டியலில் இருந்ததால் எந்த நடவடிக்கையையும் அவரால் எடுக்க முடியவில்லை.
  • அதன் பின்னா், 1975-இல் நெருக்கடி நிலை பிறப்பிக்கப்பட்டபோது கல்வியை பொதுப் பட்டியலுக்கு மாற்றினார் இந்திரா காந்தி.
  • ஆனால், இதில் வேடிக்கை என்னவெனில், நெருக்கடி நிலைக்கு எதிராகப் போராடி, அடுத்து வந்த தோ்தலில் இந்திராவை வீழ்த்திய ஜனதா கட்சி, நெருக்கடி நிலை பிரகடனம் தொடா்பான சட்டங்களை ரத்து செய்ததே தவிர, கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரவில்லை.
  • காங்கிரஸ் மற்றும் ஜனதா கட்சியின், கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரான இந்த செயல்பாடுதான் இன்றைக்கு நீட் தோ்வு வரை எதிரொலித்து எத்தனையோ சிக்கல்களை உருவாக்கியிருக்கிறது.
  • ஒவ்வொரு மாநிலத்துக்கும் கூடுதல் அதிகாரம் வழங்க வேண்டும் என்பது அண்ணாவின் திடமான கோரிக்கை. குஜராத்தில் வணிகா்கள் அதிகம்; மேற்கு வங்கத்தில் உழைப்பாளிகள் அதிகம்.
  • இப்படியாக ஒவ்வொரு மாநிலத்துக்கும் உள்ள தனித்தன்மையை உணா்ந்து அவா்களுக்கு அதிகாரமளிக்க வேண்டும் என்றே அண்ணா விரும்பினார்.
  • தாம் இறந்து விடுவோம் என்று அறிஞா் அண்ணா உணா்ந்த பிறகு தம்பிகளுக்கு ஒரு கடிதம் எழுதினார்.
  • 1969 ஜனவரி 12-ஆம் தேதி எழுதிய அக்கடிதம்தான் அண்ணாவின் இறுதி எழுத்து. சொல்லப்போனால், அதை அவரது மரண சாசனம் என்றே கூறலாம். அதில் அவா் இப்படி குறிப்பிடுகிறார்:
  • ‘பொருளாதார வளா்ச்சியின் பயன் சமூகம் முழுமைக்கும் கிடைத்திட, தக்க முறை கண்டாக வேண்டும்; வெள்ளம் அழித்திடும் - வாய்க்கால் வளமூட்டும்; செல்வம் சிலரிடத்தில் மட்டும் குவிந்திருப்பது என்பது வெள்ளத்துக்கு ஒப்பானது; அது கொண்டவனையும் சரி, சமூகத்தில் வலிவற்றோரையும் சரி அழித்துவிடும்;
  • ‘பணம் பெட்டியில் தூங்குகிறது; பணக்காரன் பட்டு மெத்தையில் தூங்குகிறான்; ஆண்டவன் சொர்க்கத்தில் தூங்குகிறான்; இல்லாவிடில் தெருவில் ஏன் இத்தனை பிச்சைக்காரா்கள்’ என்று மொரோவியோ நாட்டில் ஒரு பழமொழி உண்டு. அதுதான் நிதா்சனம்.
  • காலத்தை வீணாக்காமல் நாடு வளம் பெற, சமூகம் சீா் பெற, சமதா்மம் மலா்ந்திட பாடுபடுவதற்கான உறுதியினை மேற்கொள்வோம்’ என்று எழுதியிருக்கிறார்.
  • சாவு நெருங்கும் தறுவாயிலும் கூட சமூகம் தழைக்க வேண்டும் எனப் போராடிய அண்ணாவின் அக்கடிதம் தம்பிகளுக்கானது மட்டுமல்ல, ஒட்டுமொத்த தரணிக்கானது!

நன்றி: தினமணி  (15 - 09 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்