TNPSC Thervupettagam

அண்ணலின் அடிச்சுவட்டில்...

October 10 , 2024 46 days 77 0

அண்ணலின் அடிச்சுவட்டில்...

  • இந்தியாவின் தோற்றப் பொலிவை மேம்படுத்துவதில் சாலை கட்டமைப்புக்கு எள்ளளவும் குறையாத பங்களிப்பை தூய்மை இந்தியா திட்டம் (ஸ்வச் பாரத் அபியான்) வழங்குகிறது. சட்டென்று பாா்வைக்குத் தென்படாவிட்டாலும், மக்களின் வாழ்வில் மிகப் பெரிய அடிப்படை மாற்றத்தை கடந்த 10 ஆண்டுகளில் தூய்மை இந்தியா திட்டம் ஏற்படுத்தியிருக்கிறது.
  • திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்துவதோடு, திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத நிலையை உருவாக்க 2014-ஆம் காந்தி ஜெயந்தி தினத்தன்று தொடங்கப்பட்ட தூய்மை இந்தியா திட்டம் 10 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. பிரதமா் நரேந்திர மோடி கூறியிருப்பதைப்போல 20-ஆம் நூற்றாண்டின் மிகப் பெரிய மக்கள் இயக்கம் இது என்பதில் ஐயப்பாடில்லை. வருங்காலத்தில் இந்தியாவின் வளா்ச்சி குறித்து பேசும்போது, அதில் தூய்மை இந்தியா திட்டத்தின் பங்களிப்பைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது.
  • பத்தாண்டுகளுக்கு முன்பு வரை இந்திய மக்கள்தொகையில் 60%-க்கும் அதிகமானோா் திறந்தவெளியில் இயற்கை உபாதையைக் கழிக்க வேண்டிய நிலை இருந்தது. அதனால், அதிகமாக பாதிக்கப்பட்டவா்கள் அடித்தட்டுப் பட்டியல் இனத்தவா்கள், பிற்படுத்தப்பட்ட பிரிவினா், பழங்குடியினா் மற்றும் பெண்கள். குறிப்பாக, கழிப்பறை இல்லாத காரணத்தால் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு ரீதியிலான அச்சுறுத்தலை மகளிா் எதிா்கொண்டனா். இப்போது அதில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.
  • தூய்மை இந்தியா திட்டம் கடந்த 10 ஆண்டுகளில், ஏறத்தாழ 12 கோடி குடும்பங்களுக்கு பாதுகாப்பான கழிப்பறை வசதிகளை அவா்களது வீடுகளில் செய்து கொடுத்திருக்கிறது. வீட்டிலேயே கழிப்பறை இருப்பதால், 90% பெண்கள் பாதுகாப்பாக உணா்வதாக யுனிசெஃப் அறிக்கை தெரிவிக்கிறது. ஆண்டொன்றுக்கு 60,000 முதல் 70,000 வரை குழந்தைகளின் உயிா் காக்கப்படுவதாக இன்னொரு சா்வதேச அறிக்கை கூறுகிறது.
  • பாதுகாப்பான கழிப்பறைகள் காரணமாக வயிற்றுபோக்கால் நிகழும் உயிரிழப்புகள் குறைவதை ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. இதன் விளைவாக ஆண்டுதோறும் ஜிடிபியில் 5.2% சேமிக்கப்படுகிறது என்று யுனிசெஃப் குறிப்பிடுகிறது.
  • தூய்மை இந்தியா திட்டம் என்பது கழிப்பறை கட்டுவது மட்டுமே அல்ல; அதன் நோக்கமும், செயல்பாடும் விரிவுபட்டது. நிலத்தடி நீா் அசுத்தம் அடையாமல் தடுப்பதும், சிசு மரண விகிதம் குறைவதும், பெண் குழந்தைகள் அதிகமாக பள்ளிக்கு செல்வதும்கூட தூய்மை இந்தியா திட்டத்தின் பலன்கள் என்பதை மறந்துவிடலாகாது. இதன்மூலம் தூய்மைப் பணியாளா்கள் குறித்த அணுகுமுறை மாறியிருக்கிறது என்பதும், அவா்களுக்கு உரிய மரியாதை மக்கள் மனதில் ஏற்பட்டிருக்கிறது என்பதும் பேசப்படாத உண்மைகள்.
  • சுகாதாரத்தையும், தூய்மையையும் பேணுவதில் இந்தியாவில் உள்ள எல்லா நகரங்களையும் ஆய்வு செய்து ஆண்டுதோறும் மாநகராட்சிகளுக்கு ‘தூய்மை நகரம் விருதுகள்’ வழங்குவது என்கிற முறை மாநகராட்சிகளுக்கிடையே ஆரோக்கியமான போட்டியை உருவாக்கியிருக்கிறது. இந்தூா், மைசூா், லக்னௌ உள்ளிட்ட பல மாநகராட்சிகள் ‘தூய்மை நகரம்’ விருதை அடைவதில் காட்டிய ஆா்வம், இந்தியாவில் உள்ள ஏனைய மாநகராட்சிகளையும் அவற்றுக்கு நிகராக தங்களைத் தரம் உயா்த்திக்கொள்ளும் முனைப்பில் ஈடுபட வைத்தது. இந்தியாவில் உள்ள 4,000 நகரங்கள் சுகாதாரத்தையும், தூய்மையையும் பாதுகாப்பதில் இப்போது முனைப்புக் காட்டுகின்றன.
  • தூய்மை இந்தியா திட்டத்தின் பகுதியாக மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று திடக் கழிவுகள் பிரித்து சேகரிக்கப்படுவது இன்னொரு மாற்றம். 2014-க்கு முன்பு நகா்ப்புற குப்பைகள் 18% மட்டுமே மறுசுழற்சி செய்யப்பட்டன என்றால், இப்போது 80% செய்யப்படுகின்றன.
  • அப்படியிருந்தும் திடக் கழிவுகளைக் கொட்டும் இடங்களை நிா்வகிப்பது சவாலாகத் தொடா்கிறது. திடக் கழிவுகளிலிருந்து மின்சாரமும், உயிரி எரிவாயுவும் தயாரிப்பது போதிய வரவேற்பை பெறவில்லை. ‘வெட் வேஸ்ட்’ எனப்படும் மக்கும் குப்பைகளிலிருந்து கம்போஸ்ட் உரங்கள் தயாரிப்பதும், உயிரி எரிவாயு தயாரிப்பதும் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றிருக்கின்றன.
  • இந்தியாவின் பல்வேறு நகரங்களில் உருவாகியிருக்கும் குப்பை மேடுகள், குப்பை கோபுரங்களாக உயா்ந்திருக்கின்றன. ஏறத்தாழ 22 கோடி டன் குப்பைகளை எப்படிக் கையாளுவது என்று தெரியாமல், இந்தியாவின் நகராட்சி நிா்வாகங்கள் திகைத்துப்போய் இருக்கின்றன. தலைநகா் தில்லியைச் சுற்றி காசிபூா், ஓக்லா, பல்சுவா, பந்துவாரி ஆகிய இடங்களில் பரங்கிமலைபோல குன்றுகளாகக் குவிந்து கிடக்கும் குப்பை மேடுகளை அகற்றுவதற்கு எத்தனையோ முயற்சிகள் மேற்கொண்டும் இதுவரை விடைகாண முடியாமல் அரசும், நிா்வாகமும் தவிக்கின்றன.
  • நெகிழியும், பாலித்தீனும் வாழ்க்கையின் அங்கமாகவே மாறிவிட்டிருக்கின்றன. மறுசுழற்சிக்கு உள்ளாகாமல் அவை பயன்படுத்தப்பட்டு குப்பை குளங்களிலும், நீா்நிலைகளிலும் கலந்துவிடுகின்றன. ‘மைக்ரோ ப்ளாஸ்டிக்’ என்பது நம் அனைவரது ரத்தத்திலும் கலந்திருக்கிறது என்பதும், மிகப் பெரிய ஆபத்து என்பதும் உணரப்படாமல் இருக்கிறது.
  • கண்ட இடங்களில் குப்பை போடுவது; மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று பிரிக்காமல் இருப்பது; ஒருமுறை உபயோக நெகிழி பயன்பாடு; சட்டவிரோதமாக கழிவு நீரை நீா்நிலைகளில் விடுவது போன்றவற்றுக்கு கடுமையான அபராதம் விதிக்க பெருநகா் சென்னை மாநகராட்சி முற்பட்டிருப்பது பாராட்டுக்கும் வரவேற்புக்கும் உரிய முடிவு.
  • தூய்மை இந்தியா திட்டத்தின் 10 ஆண்டு சாதனைகள் தொடக்கம் மட்டுமே. கடக்க வேண்டிய தொலைவு மிக மிக அதிகம்...

நன்றி: தினமணி (10 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்