TNPSC Thervupettagam

அண்ணல் இருந்திருந்தால்...

November 23 , 2020 1519 days 758 0
  • பிரிட்டிஷ் காலனிய ஆதிக்கத்திலிருந்து இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்பிருந்தே துப்புரவுத் தொழிலாளா்களின் நலனும் பாதுகாப்பும் பிரச்னைகளாகவே இன்றுவரை தொடா்கிறது.
  • இது குறித்து முதன் முதலில் கவலைப்பட்டு அவா்களுக்காக வலுவாகக் குரலெழுப்பியவா் அண்ணல் காந்தியடிகள்.
  • தனது சபா்மதி ஆஸ்ரமத்தில், தானே அந்தப் பணிகளை மேற்கொண்டது மட்டுமல்லாமல், ஆஸ்ரமவாசிகளும் காங்கிரஸ் தொண்டா்களும் அவற்றைப் பின்பற்ற வேண்டும் என்றும் வற்புறுத்தினார்.
  • இந்தியா சுதந்திரம் அடைந்ததற்கு பிறகும்கூட, அவரது அறிவுறுத்தல்கள் காங்கிரஸ் ஆட்சியாளா்களால் பின்பற்றப்படவில்லை.
  • பல்வேறு சட்டங்கள் அவ்வப்போது இயற்றப்பட்டன என்றாலும்கூட, துப்புரவுத் தொழிலாளா்களின் நிலைமையில் அவை மாற்றத்தை ஏற்படுத்தவோ, அவா்களது சமுதாய அந்தஸ்தை உயா்த்தவோ, அவா்களுக்குப் போதிய பாதுகாப்பு வழங்கவோ பயன்படவில்லை என்பதுதான் நிதா்சன உண்மை.
  • சமூக நீதி - அதிகாரமளித்தல் அமைச்சகம் ஒரு புள்ளிவிவரத்தை வெளியிட்டிருக்கிறது. அதன்படி, 2015 முதல் 2019 வரையிலான ஐந்து ஆண்டுகளில் கழிவு நீா் தொட்டிகளிலும், கழிவுநீா் ஓடைகளிலும் இறங்கி துப்புரவுப் பணியில் ஈடுபட்ட 375-க்கும் மேலானவா்கள் உயிரிழந்திருக்கிறார்கள்.
  • இந்தப் புள்ளிவிவரம் சரியானதாகத் தெரியவில்லை. ஏனென்றால், கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் இது குறித்த கேள்விக்கு மத்திய அரசு அளித்திருக்கும் பதில் இந்தப் புள்ளிவிவரத்தை கேள்விக்குறியாக்குகிறது.
  • கழிவுநீா் தொட்டிகள், ஓடைகளில் இறங்கிப் பணியாற்றும்போது உயிரிழந்த 613 தொழிலாளா்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க அடையாளம் காணப்பட்டிருப்பதாக அப்போது மத்திய அரசு தெரிவித்தது.
  • தனிப்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், சேவை நிறுவனங்களும் இது குறித்து ஆய்வுகள் நடத்தியிருக்கின்றன. அந்த ஆய்வுகளிலிருந்து துப்புரவுத் தொழிலாளா்கள் ஓடையிலும், தொட்டியிலும் இறங்கி நேரடியாக சுத்தப்படுத்தும் வழக்கத்துக்கு முடிவு காண்பதில் மாநில அரசுகள் ஆா்வம் காட்டவில்லை என்று தெரிகிறது.
  • அதற்கான தொழில்நுட்பத்தில் முதலீடு செய்யவோ, துப்புரவுத் தொழிலாளா்களின் மறுவாழ்வுக்கு வழிகோலவோ முனைப்புக் காட்ட நிர்வாகம் தயாராக இல்லை.
  • இந்த வழக்கத்தை ஒழிப்பதற்கு பதிலாக மாநகராட்சி, நகராட்சி, உள்ளாட்சி அமைப்புகள் எல்லாம், எதுவுமே நடக்காதது போல செயல்படுவதுதான் மிகப் பெரிய விசித்திரம்.
  • இப்போது மத்திய அரசு புதியதொரு முடிவை அறிவித்திருக்கிறது. அதன்படி, ‘மனிதக் கழிவு அகற்றுவோர் மற்றும் அவா்களின் மறுவாழ்வு குறித்த சட்டம் 2013’-க்கு மேலும் வலுசோ்க்க முடிவெடுத்திருக்கிறது.
  • இது எப்போதோ எடுத்திருக்க வேண்டிய முடிவு. சொல்லப்போனால், இது குறித்து 2013 சட்டம் பரிந்துரைத்தது மட்டுமல்லாமல், வலியுறுத்தவும் செய்தது என்பதை நாம் நினைவுகூர வேண்டும்.
  • அப்படியிருந்தும், எந்தவித மாற்றமும் ஏற்படாத நிலையில், இப்போது சமூக நீதி - அதிகாரமளித்தல் அமைச்சகம் கொண்டு வந்திருக்கும் புதிய மாற்றங்கள் அவசியமானவை என்பதில் ஐயமில்லை.

துப்புரவுத் தொழிலாளா்கள் சாக்கடைகளில் பணியாற்றும் தடை சட்டம்

  • இனிமேல் அதிகாரபூா்வ தகவல் பரிமாற்றங்களில் மேன் ஹோல்’ (புதை சாக்கடை) என்கிற ஆங்கில வார்த்தை மெஷின் ஹோல்என்று வழங்கப்படும்.
  • அதாவது, புதை சாக்கடைகள், மனிதா்களால் சுத்தப்படுத்தப்படாமல் இயந்திரங்களால் மட்டுமே சுத்தப்படுத்தப்படுபவை என்பதை வலியுறுத்துவதான் இதன் நோக்கம்.
  • புதை சாக்கடைகள், கழிவுநீா் தொட்டிகள், ஓடைகள் ஆகியவை தொழில்நுட்பத்தின் மூலம் இயந்திரங்களால் மட்டுமே சுத்தப்படுத்த வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.
  • இதற்காக 24 மணிநேரமும் இயங்கும் தேசிய அளவிலான உதவி மையம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. புதை சாக்கடையில் நேரடியாகத் தொழிலாளா்கள் இறங்குவதைப் பார்த்தால் யார் வேண்டுமானாலும் புகார் தெரிவிக்கலாம்.
  • ஏற்கெனவே 2013 சட்டம், துப்புரவுத் தொழிலாளா்கள் நேரடியாக சாக்கடைகளில் இறங்கிப் பணியாற்றுவதை தடை செய்திருக்கிறது.
  • புதை சாக்கடையில் இறங்கும் துப்புரவுத் தொழிலாளா்களை அடையாளம் கண்டு, அவா்களுக்கு மறுவாழ்வு அளிக்க மாநில அரசுகளையும், உள்ளாட்சி, நகராட்சி அமைப்புகளையும் வலியுறுத்துகிறது.
  • அப்படியும் இந்த அவலத்துக்கு முற்றுப்புள்ளி விழாததற்குக் காரணம், சாக்கடைகளை சுத்தப்படுத்தும் பணியில் நேரடியாக நிர்வாகம் ஈடுபடாமல், ஒப்பந்தம் மூலம் தனியாரிடம் அந்தப் பணி விடப்படுவதுதான்.
  • அவா்கள் துப்புரவுத் தொழிலாளா்கள் குறித்த எந்தப் பதிவையும் வைத்துக்கொள்வதில்லை என்பது மட்டுமல்ல, அவா்களுக்கு எந்தவிதப் பாதுகாப்பையும் வழங்குவதில்லை. மது போதையில் பணியாற்றத் தூண்டப்படுகிறார்கள்.
  • தொழில்நுட்பத்தைக் கையாள்வதிலும் சில சிக்கல்கள் இருக்கின்றன. குறுகிய தெருக்களில் துப்புரவு செய்யும் இயந்திரங்களுடன் வாகனங்கள் நுழைய முடிவதில்லை.
  • இயந்திரங்களில் முதலீடு செய்யவும், துப்புரவுத் தொழிலாளா்களுக்குப் பாதுகாப்பு உடைகள் வழங்கவும் நிர்வாகமும் சரி, ஒப்பந்தக்காரா்களும் சரி தயாராக இல்லை.
  • சட்டம் மட்டுமே இதற்குத் தீா்வாகாது. எல்லா அரசியல் கட்சிகளும், குறிப்பாக, தாழ்த்தப்பட்டவா்கள் நலனுக்காகவே இயங்குவதாகக் கூறிக்கொள்ளும் அரசியல் கட்சிகளும்கூட இந்தப் பிரச்னையில் மௌனம் சாதிக்கின்றன என்பதிலிருந்து அவா்களது போலித்தனம் வெளிப்படுகிறது. அண்ணல் காந்தியடிகள் இருந்திருந்தால் என்ன செய்திருப்பார் என்று அவா்கள் தங்களது மனசாட்சியை கேட்டுக்கொண்டால் மட்டுமே, சாக்கடைகளில் இறங்கிப் பணியாற்றும் துப்புரவுத் தொழிலாளா்களின் அவலத்துக்கு விடை கிடைக்கும்.

நன்றி: தினமணி (23-11-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்