TNPSC Thervupettagam

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இனி என்னவாகும்?

September 8 , 2021 1059 days 520 0
  • பல்கலைக்கழகம் போன்ற நிறுவனங்களின் வாழ்வும் தாழ்வும் அவற்றின் பலம், பலமின்மையை மட்டுமே காட்டுவதல்ல. சமுதாயத்தின் பண்பாட்டுத் திறத்தை மாற்றுரைத்துச் சொல்லும் நிகழ்வுகள் அவை.
  • சித்திரங்களின் ரசனைக் குறை வண்ணங்களின் பஞ்சத்தால் வருவதாகுமா? ரசிகச் சீமான்களாகிய நாமும்தானே அதற்குக் காரணம்!
  • கல்லூரிகளை இணைத்துக்கொள்ளும் நிறுவனமாக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசு மாற்றியுள்ளது. அதிகார வரம்பை விரிவாக்கும் நிர்வாக மாற்றம் என்று இதைச் சுருக்கிப் புரிந்துகொள்ளக்கூடாது.
  • எட்டு ஆண்டுகளில் நூற்றாண்டு விழா காணப்போகும் அந்தப் பல்கலைக்கழகம், கற்பவர்களும் கற்பிப்பவர்களும் தன் வளாகத்திலேயே தங்கும் நிறுவனமாகத்தான் உருவானது.
  • தான் கற்பித்தவர்களை மட்டுமே தேர்வுக்கு அது அனுமதிக்கும். வளாகத் தங்கல் என்பது மாணவர்களின் வசதியை மட்டும் கருதி செய்யப்பட்டதல்ல.
  • கல்வியின் பெரும்பகுதியே உடன் படிப்பவர்களோடும் பேராசிரியர்களோடும் மாணவர்கள் தங்கி, அவர்கள் வளாகச் சமுதாயத்தின் அங்கமாகும் அனுபவம்தான். கல்வி பற்றிய, கற்பிக்கும் முறை பற்றிய தத்துவ நிலைப்பாட்டினால் வந்த ஏற்பாடு அது.
  • அந்தப் பல்கலைக்கழகத்தில் ஆறு ஆண்டுகள் படித்து, பின்பு 1971-ல் ஓராண்டு ஆசிரியராகவும் இருந்திருக்கிறேன்.
  • வகுப்புகள் தொடங்கும் ஒன்பது மணிக்கு முன்பும், அவை முடியும் நான்கு மணிக்குப் பின்பும் தங்குவளாகத்தில் சக மாணவர்களிடமிருந்து மாணவர்கள் கற்பது வகுப்புகளில் கற்பதைவிட அதிகம் என்பது என் அனுபவம்.
  • விடுதியில் அறை நண்பர்களாக இருந்தவர்கள் உளவியல், பொருளியல், வரலாறு, இயற்பியல், வணிகவியல் மாணவர்கள். அடுத்த அறைக்குச் சென்றால் வேறு துறை மாணவர்களோடும் உரையாடலாம். விடுதியும் வளாகமும் ஒரு இணைப் பல்கலைக் கழகமாக இருந்தன.

நாம் மறுதலித்த கோட்பாடு

  • 84 ஆண்டுகளைக் கடந்த பின் 2013-ல் வந்த ஒரு சட்டத்தின் சிசுவாக அந்தப் பல்கலைக்கழகம் மறுபிறப்பு எடுத்துக்கொண்டது. வளாகத்தில் தங்கல், தான் பயிற்றுவிப்பவர்களுக்கு மட்டுமே தேர்வு எழுத அனுமதி - இந்த இரண்டு அம்சங்களும் 2013-ம் ஆண்டுச் சட்டத்தில் மறைந்துவிட்டன. 2021 ஆகஸ்ட் சட்டம் நான்கு மாவட்டக் கல்லூரிகளை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தோடு இணைக்கிறது.
  • தான் பயிற்றுவிக்காத கல்லூரி மாணவர்களுக்கும் பல்கலைக்கழகம் இப்போது தேர்வு நடத்தும்.
  • நாம் விசுவாசித்த கல்விக் கோட்பாடுகளை நாமே ஏன் கூசாமல் மறுதலிக்கிறோம்? இப்போது வந்த மத்திய பல்கலைக்கழகங்களில் அந்தந்த ஆசிரியர் நடத்தும் பாடத்துக்கு அவரேதான் தேர்வு நடத்தி மதிப்பெண் வழங்குவார். இப்படி கல்விச் சிந்தனை அடுத்த மேல்நிலைக்கு நகர்வதை நாம் கவனிக்க வேண்டும்.
  • வளாகத்தில் தங்குவது என்ற கல்விக் கோட்பாட்டை 2013-ம் ஆண்டுச் சட்டம், 1929-ம் ஆண்டு சட்டத்தின் சொற்களை விட்டுவிட்ட அளவில் மறுதலித்தது. அந்த மறுதலிப்புக்குத் தற்போதைய சட்டம் செயல் வடிவம் கொடுத்திருக்கிறது.
  • இந்தியாவில் விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய தங்குவளாகப் பல்கலைக்கழகங்களில் ஒன்றாக இருந்த அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இப்போது ஒரு சராசரி பல்கலைக்கழகம்.
  • வளாகச் சமுதாயத்தையே ஆதர்ச பல்கலைக்கழகமாகக் கொண்டாடும் கல்விச் சிந்தனை கூனிக்குறுகிறது.
  • இப்போதும் பல்கலைக்கழக வளாகம் இருக்கிறது; மாணவர்களும் ஆசிரியர்களும் அங்கே இருக்கிறார்கள் என்று சொல்லக்கூடும்.
  • கல்லூரிகளை இணைத்துக்கொள்ளும் பல்கலைக்கழகம் தங்குவளாகப் பல்கலைக்கழகம் என்ற கருத்துக்கு எதிர்மறை. பெரும்பாலான மாணவர்களும் ஆசிரியர்களும் இணைக்கப் பெறும் கல்லூரிகளில் இருக்கும்போது வளாகச் சமுதாயம் உருவாகாது.
  • அது சாத்தியமானால் சென்னை, பாரதிதாசன் போன்ற பல்கலைக்கழகங்களுக்கும் வளாகச் சமுதாயங்கள் உருவாகியிருக்கும்.

வளாகச் சமுதாயத்தின் வளம்

  • வளாகச் சமுதாயத்தை நான் சிலாகிப்பதால் வகுப்பறையில் கற்பதை மதிக்கவில்லை என்று அர்த்தமாகாது.
  • 1960-களிலும் அதற்கு முன்பும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள் அங்கு இருந்த சுதந்திரத்தை அறிவார்கள். பத்து நிமிட நடையில் மாணவர்கள் பேராசிரியர்களின் வீடுகளுக்குச் சென்று உரையாடலாம். துணைவேந்தர் மாணவர் விடுதிக்கு வந்து உணவருந்துவார்.
  • இன்ன கட்சி என்றில்லாமல், ஒரே நேரத்தில் பல அரசியல் தலைவர்கள் பல்கலைக்கழக நிகழ்ச்சிகளில் உரையாற்றுவார்கள். விடுதிகளுக்கும் வந்து மாணவர்களோடு உரையாடுவார்கள்.
  • அரசியல் அங்கு ஒதுக்கப்பட்ட விஷயமல்ல. உணவு விடுதிகளை மாணவர்களே நிர்வகித்தார்கள். திறந்தவெளி அரங்கின் சனிக்கிழமை திரைப்படங்கள் கல்வியின் அங்கம். பஞ்சாப், மேற்கு வங்கம், கேரளம் சார்ந்தவர்களுக்குச் சங்கங்களும் விழாக்களும் இருந்தன.
  • ஓவியப் பிரிவு இருந்தது. இசைக் கல்லூரியின் தலைவர் எம்.எம்.தண்டபாணி தேசிகர் பெரும் நாகசுரக் கச்சேரிகளுக்கு ஏற்பாடு செய்வார். இசை பயிலும் இலங்கை மாணவர்கள் ஏராளம். காலை எட்டு மணிக்குத் திறக்கும் நூல்நிலையத்தை இரவு எட்டு மணிக்குத்தான் மூடுவார்கள்.
  • நான் புகுமுக வகுப்பில் இருந்தபோது மாணவர்கள் தங்கள் முதன்மைப் பாடத்தோடு தர்க்கம், தத்துவம், ஓவியம், சமூகவியல், இசை அல்லது மொழிகளில் ஒன்றைப் படிக்க வேண்டும். இளங்கலையில் ஜெர்மன், பிரஞ்சு, தெலுங்கு, போன்றவற்றைப் படிக்கலாம்.
  • இப்போதுதான் பல்துறை பாடங்களையும் மாணவர்கள் கற்க வேண்டும் என்று சொல்கிறோம். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கலைப் பிரிவு மாணவர்கள் அப்போதே அறிவியலையும், அறிவியலில் இருப்பவர்கள் கலைப் பாடங்களையும் குறும் பாடங்களாகப் பயில வேண்டும்.
  • படிக்க வேண்டிய ஆங்கிலக் கவிதைகளை எண்ணிக்கையில் அல்லாமல் வரிக் கணக்கில் சொல்வார்கள்.
  • ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தைவிட இரண்டு வரிகளாவது கூடுதல் என்று சொல்வது வழக்கம். மற்ற பல்கலைக்கழகங்கள் பயிற்றுவிக்காத பழைய ஆங்கிலம், இடைக்கால ஆங்கில மொழிகளை அங்கு பயின்றோம்.
  • இந்தப் பல்கலைக்கழகத்தை அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அப்போதைய தமிழ்நாட்டு முதல்வர் பக்தவத்சலம் ஒரு மசோதா தயாரித்திருந்தார். அன்றைய முயற்சி 2013-ல் ஒருவாறாக நிறைவேறியதுபற்றி நாம் மனநிறைவு கொள்ளலாம்.
  • அதன் இன்றைய அடுத்த கட்ட நகர்வுகள் கல்விச் சிந்தனை காட்டும் பாதையில் இருக்க வேண்டும் என்று நாம் விரும்புவது இயற்கை. கல்வி நிறுவனங்களின் வளாகச் சமுதாயத்தைக் கல்விச் சாதனமாக வளப்படுத்துகிறோமா? அந்தக் கேள்வி கல்விச் சிந்தனையை மையக் கூறாகக் கொள்ளும் பண்பாட்டுக்கு வந்த பரீட்சை!

நன்றி: இந்து தமிழ் திசை (08 - 09 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்