TNPSC Thervupettagam

அதிகரிக்கும் சிறார் குற்றங்கள் : சமூக மாற்றமே தீர்வு

July 6 , 2023 562 days 345 0
  • தமிழ்நாட்டின் அரசுப் பள்ளி மாணவர்கள் இருவர் சக மாணவரின் குடிநீரில் பூச்சிக்கொல்லியைக் கலந்ததாக வெளியான செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. நம் பதின்பருவச் சிறார்கள் வளரும் சமூகச் சூழலில் மிகப் பெரிய மாற்றங்கள் உடனடியாகத் தேவைப் படுவதை இதுபோன்ற நிகழ்வுகள் உணர்த்துகின்றன.
  • சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்துவரும் மாணவர்கள் இருவர் வீட்டுப் பாடத்தை முடிக்கவில்லை என்பதைத் தெரிந்துகொண்டு, அதை ஆசிரியரிடம் தெரிவித்திருக்கிறார் அந்த வகுப்பின் தலைவராக இருந்த மாணவர். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் இருவரும் வகுப்புத் தலைவரின் குடிநீர் புட்டியில் பூச்சிக்கொல்லியைக் கலந்துள்ளனர்.
  • இது தெரியாமல் நீரைக் குடித்த மாணவர், அது வித்தியாசமான சுவையுடனும் மணத்துடனும் இருந்ததை உணர்ந்து, உடனடியாக அதைத் துப்பிவிட்டார். அவரது நண்பரும் அதை அருந்திப் பார்த்து, அதேபோல உடனடியாகத் துப்பிவிட்டார். இருவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள்.
  • தவறிழைத்த மாணவர்கள் இருவரும் தம்மைப் பற்றி ஆசிரியரிடம் புகார் அளித்த வகுப்புத் தலைவருக்கு வயிற்றுப்போக்கு ஏற்படுத்த வேண்டும் என்று முடிவெடுத்துள்ளனர். அதற்கான மருந்துகள் எதையும் வாங்க முடியாததால், அவர்களில் ஒருவரின் வீட்டில் விவசாய நிலத்துக்குத் தெளிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த பூச்சிக்கொல்லியின் சில துளிகளைக் கலந்ததாகத் தெரிவித்துள்ளனர். இருவர் மீதும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 328இன் கீழ் காவல் துறை வழக்குப் பதிவுசெய்துள்ளது.
  • மாணவர்கள் சொல்வது உண்மை என்றே வைத்துக்கொண்டாலும், குடிநீரில் பூச்சிக் கொல்லியைக் கலப்பது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் என்பதுகூட அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை என்பது ஆச்சரியம் அளிக்கிறது. எனில், இது போன்ற அடிப்படை அறிவைப் பெறுவதைக்கூட நம் கல்வி முறை உறுதிப்படுத்தவில்லையா?
  • மேலும், ஒரு சின்ன விஷயத்துக்காக இப்படித் திட்டமிட்ட பழிவாங்கல் நடவடிக்கையில் ஈடுபடுவது என்பது மாணவர்களின் பார்வையும் உளவியலும் மோசமாக இருப்பதற்கான அறிகுறி. ஒருசில மாணவர்கள் மட்டுமே இது போன்ற தவறான, ஆபத்தான மனநிலையில் இருக்கிறார்கள் என்றாலும்கூட இப்படியே வளரவிட்டால் சமூகத்துக்கு ஆபத்து. அதே நேரம், சம்பந்தப்பட்ட மாணவர்களைத் தண்டிப்பது மட்டும் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வல்ல.
  • கல்வி சார்ந்த கடமைகளைச் சரியான நேரத்தில் நிறைவேற்றுவதற்கும் ஒழுக்கத்தைப் பேணுவதற்கும் மாணவர்களைப் பழக்கப்படுத்துவதும், இவற்றில் ஏதேனும் தவறு நிகழ்ந்து விட்டால் அதற்கான விளைவுகளைச் சந்திப்பதற்கும் தவறுகளைச் சரிசெய்வதற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்வதற்குமான பக்குவத்தை வளர்ப்பதும் கல்வித் திட்டத்தின் பகுதியாக்கப்பட வேண்டும்.
  • வன்முறையையும் பழிவாங்கலையும் இயல்பானவையாகவும் பிறருக்கு வலியையோ துன்பத்தையோ ஏற்படுத்துவதைக் கேளிக்கையாகவும் சித்தரிக்கும் திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், சமூக ஊடகப் பதிவுகள் ஆகியவற்றிலிருந்து மாணவர்களை விலக்கி வைக்க வேண்டும்.
  • பெரியவர்களும் இவற்றைத் தவிர்த்து மாணவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ வேண்டும். பெற்றோர்கள் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவழித்து, நன்மை தீமைகளைப் பிரித்தறியக் கற்றுத்தர வேண்டும். தாமும் அவற்றைப் பின்பற்றி குழந்தைகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ வேண்டும்.
  • வன்முறை தவறு என்பது அனைத்து நிலைகளிலும் குழந்தைகளுக்கு உணர்த்தப்படும் வகையில் சமூகத்தின் பல்வேறு அடுக்குகளில் மாற்றங்கள் தேவைப்படுகின்றன. இந்த மாற்றங்களுக்கு அரசும் சமூகமும் முழுமையாகப் பொறுப்பேற்றுச் செயல்பட்டால் மட்டுமே வளமான இளைய தலைமுறையை உருவாக்க முடியும்.

நன்றி: தி இந்து (06 – 07 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்