TNPSC Thervupettagam

அதிகரிக்கும் தட்டம்மை: தடுப்பூசி அவசியம்!

December 16 , 2019 1854 days 833 0
  • உலகம் முழுவதும் 2000 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் தட்டம்மையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 59% ஆகக் குறைந்திருந்திருக்கிறது. என்றாலும், 2016-க்குப் பிறகு, தட்டம்மையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்திருக்கிறது. 2016-ல் 1,32,000 பாதிக்கப்பட்டிருந்தார்கள்.

தட்டம்மை பாதிப்பு

  • 2018-ல் இந்த எண்ணிக்கை 3,53,000 ஆக அதிகரித்திருக்கிறது. 2017-ல் தட்டம்மையால் பாதிக்கப்பட்டவர்களைக் காட்டிலும் இரண்டு மடங்குக்கும் அதிகமான பேர் 2018-ல் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 2018-ன் எண்ணிக்கை 2019-ல் மேலும் அதிகரித்துள்ளது. நவம்பர் பாதியிலேயே உலகம் முழுவதும் தட்டம்மையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தைத் தாண்டிவிட்டது.
  • தட்டம்மை பாதிப்புகளையும், அதனால் ஏற்பட்ட மரணங்களையும் மதிப்பிட்டிருக்கும் உலக சுகாதார நிறுவனமும் நோய்க் கட்டுப்பாடு மற்றும் முன்தடுப்பு மையமும் தட்டம்மையைக் கண்காணிக்கும் முறைகள் தொடக்கத்திலிருந்தே பலவீனமாக இருப்பதாகச் சுட்டிக்காட்டியிருக்கின்றன. தட்டம்மை பாதிப்பை மதிப்பிடுவதற்கான புதிய மாதிரிகளின்படி, 2018-ல் 1 கோடிக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 1,42,000-க்கும் மேற்பட்டவர்கள் இறந்திருக்கிறார்கள்.

மற்ற நாடுகளில்

  • கடந்த ஆண்டில் உலகம் முழுவதும் தட்டம்மையால் பாதிக்கப்பட்டவர்களில் 45% பேர் காங்கோ, லைபீரியா, மடகாஸ்கர், சோமாலியா, உக்ரைன் நாடுகளைச் சேர்ந்தவர்கள். காங்கோவில் நிலைமை படுமோசம். நவம்பரில், கடந்த ஆண்டைக் காட்டிலும் நான்கு மடங்கு பேர் தட்டம்மையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 2018-ல் 65,000 ஆக இருந்த எண்ணிக்கை 2019-ல் 2,50,000 ஆக அதிகரித்துள்ளது. இறந்தவர்களின் எண்ணிக்கை 5,100-க்கும் மேல். உக்ரைனில் நிலைமை அபாயகட்டத்தில் உள்ளது. 2017-ஐக் காட்டிலும் 50% குறைந்து 2018-ல் 4,000 ஆக இருந்த எண்ணிக்கை நவம்பர் பாதியில் 58,000 ஆக அதிகரித்துள்ளது. லைபீரியா, மடகாஸ்கர், சோமாலியா நாடுகளில் கடந்த ஆண்டைக் காட்டிலும் பாதிப்பு குறைவாக உள்ளது.
  • உலகம் முழுவதும் தட்டம்மை பரவுவதற்குத் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் நிலவும் தயக்கமே காரணமாகக் கூறப்படுகிறது.

சுகாதார மையங்கள்

  • சுகாதார மையங்களின் மீது நம்பிக்கைக் குறைவு, தவறான தகவல்கள், தடுப்பூசிப் பற்றாக்குறை ஆகியவற்றோடு சுகாதார மையங்களையும் அதன் ஊழியர்களையும் தாக்குவதும் அங்கு தட்டம்மை மற்றும் எபோலா நோய்க் கிருமிகள் பரவுவதற்கு முக்கியக் காரணம். பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் தடுப்பூசி போட்டுக்கொள்ளத் தயங்குவதற்கு மத நம்பிக்கைகளும் ஒரு காரணம். தடுப்பூசிகளின் பாதுகாப்பு குறித்த தவறான தகவல்கள் பரப்பப்பட்டு, தடுப்பூசிக்கு எதிரான பிரச்சாரங்களும் அங்கு நடக்கின்றன.
  • தடுப்பூசிகள் மீதான தயக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காகப் பத்துக்கும் மேற்பட்ட ஐரோப்பிய நாடுகளில் தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயம் என்று சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.
  • தட்டம்மை நோய்ப்பரவல் இல்லாத நாடு என்ற நிலையை அமெரிக்கா இழந்திருக்கும் சமயத்தில், தற்போது நியூயார்க்கிலும் அத்தகைய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டங்கள் தடுப்பூசிக்கு எதிரான பிரச்சாரங்களை முறியடிக்கலாம். ஆனால், தடுப்பூசியின் அவசியத்தைப் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதே சரியான வழிமுறை. இந்தியாவில் 23 லட்சம் குழந்தைகளுக்குத் தட்டம்மை தடுப்பூசி போடப்படவில்லை. அவர்களைப் பாதுகாக்கும் பொறுப்பு, பெற்றோர்களுக்கு மட்டுமின்றி அரசுக்கும் இருக்கிறது.

நன்றி: இந்து தமிழ் திசை (16-12-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்