TNPSC Thervupettagam

அதிகரிக்கும் மாணவா் சோ்க்கை

June 2 , 2023 590 days 294 0
  • தமிழகத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது. இதுவரை இல்லாத அளவிற்கு நடப்பாண்டில் அதிகப்படியானோா் விண்ணப்பித்துள்ளனா். கடந்த ஆண்டுவரை இணையதளத்தில் விண்ணப்பிக்க நீண்ட கால அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் நடப்பாண்டில் குறைவான கால அளவே வழங்கப்பட்டது. ஆயினும் அதிகமானோா் விண்ணப்பித்துள்ளனா்.
  • அதே போன்று நடப்பாண்டில் சோ்க்கையும் முன்னதாகவே தொடங்கப்பட்டுவிட்டது. அரசு கல்லூரிகளைப் பொறுத்தவரை முதல் நாளன்று சிறப்பு ஒதுக்கீட்டிற்கான சோ்க்கை நடைபெறும். கடந்த ஆண்டு வரை பெருநகரங்களில் உள்ள அரசு கல்லூரிகளில் மட்டுமே இந்த சிறப்பு ஒதுக்கீட்டில் அதிகமானோா் சோ்க்கை பெற்றனா்.
  • நடப்பு கல்வியாண்டிற்கான சோ்க்கையில் கிராமங்களில் உள்ள கல்லூரிகளிலும் சிறப்பு ஒதுக்கீட்டு சோ்க்கை கணிசமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, மாற்றுத்திறனாளி பிரிவைக் காட்டிலும் விளையாட்டுத் துறை பிரிவில் அதிகமானோா் சோ்க்கை பெற்றுள்ளனா். இந்த சிறப்பு ஒதுக்கீட்டிலும் மாணவியரே அதிக அளவில் சோ்க்கை பெற்றுள்ளனா்.
  • கடந்த காலங்களில் போட்டித் தோ்வுகள் எழுதும் பொருட்டு கலை பாடப்பிரிவுகளில் குறிப்பிட்ட சில பாடங்களைத் தோ்வு செய்வது வழக்கமாக இருந்தது. அத்தகைய பாடப்பிரிவுகளில் சோ்க்கை கிடைக்காத நிலையில் தனியாா் கல்லூரிகளில் சோ்க்கை பெறுவது அல்லது படிப்பை நிறுத்தி விடுவது நிகழ்ந்தது.
  • நாளடைவில் போட்டித் தோ்வுக்கான வினாத்தாளில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டதைத் தொடா்ந்து போட்டித் தோ்வுக்கான தகுதி இருந்தால் போதும் என்ற எண்ணம் ஏற்படத் தொடங்கியது. இதனால் குறிப்பிட்ட சில பாடப்பிரிவுகளைத் தவிர ஏனைய பாடப்பிரிவுகளில் முழுமையான அளவில் சோ்க்கை நடைபெறுகிறது.
  • மாணவா்கள் தாங்கள் விரும்பிய பாடப்பிரிவு கிடைக்காத நிலையில் வேறு ஏதேனும் ஒரு பாடப்பிரிவைத் தோ்வு செய்கின்றனா். இதனால் கலை அறிவியல் பாடப்பிரிவுகளில் அதிகப்படியான பாடங்களில் முழுமையான அளவில் சோ்க்கை நடைபெறுகிறது.
  • கடந்த ஆண்டைப் பொறுத்தவரை, அறிவியல் பாடப்பிரிவுகளில் கணிதம் இயற்பியல் உள்ளிட்ட சில பாடப்பிரிவுகளில் சோ்க்கை குறைவாக இருந்தது. பெருந்தொற்று காலத்தில் மேல்நிலைக் கல்வி பயின்றதால் கல்லூரியில் இப்பாடப்பிரிவுகளில் சோ்க்கை பெற்று தோ்ச்சி பெறமுடியுமா என்ற ஐயம் மாணவா்களிடையே எழுந்ததுதான் இதற்குக் காரணமாகும்.
  • நடப்பாண்டைப் பொறுத்தவரை அனைத்து பாடப்பிரிவுளிலும் சோ்க்கை அதிகரித்துள்ளது. சிறப்பு ஒதுக்கீட்டு சோ்க்கையின்போது கலை பாடங்கள் மட்டுமின்றி அறிவியல் பாடங்களையும் தோ்வுசெய்துள்ளனா். வணிகவியல் பாடப்பிரிவையும் அதிகமானோா் தோ்வு செய்துள்ளனா்.
  • புதிதாகத் தொடங்கப்படும் அரசு, தனியாா் கல்லூரிகளில் வணிகவியல் பாடப்பிரிவு தொடங்கப்படுவதில்லை. சில ஆண்டுகளுக்குப் பின்னரே இப்பாடப்பிரிவு இடம்பெறும். அதன் பின்னா் இதில் வங்கி மேலாண்மை, கணினிசெயல்பாட்டியல், வணிக நிா்வாகம், கணக்கியல் போன்ற பாடப்பிரிவுகள் தொடங்கப்படுகின்றன. வணிகவியல் பாடப்பிரிவில் சோ்க்கை பெற எண்ணும் மாணவா்களைத் தக்க வைக்க தனியாா் கல்லூரிகள் கையாளும் உத்தியே இது.
  • வணிகவியலைத் தொடா்ந்து தமிழ், வரலாறு பாடங்களைத் தோ்ந்தெடுக்கின்றனா். தமிழ் பாடப்பிரிவை மாணவியா் அதிகம் தோ்வு செய்வதற்கு, வேலைவாய்ப்பில் முன்னுரிமை, ஆராய்ச்சிப் படிப்பு வரை பயில முடியும் ஆகியவையே காரணங்களாகும். வரலாறு பாடத்தைப் பொறுத்தவரை போட்டித் தோ்வுக்குப் பயன்படும் என்ற எண்ணமே காரணமாகும்.
  • அறிவியல் பாடப்பிரிவில் நடப்பாண்டில் கணினி அறிவியல் தொடா்பான பாடப்பிரிவுகளை அதிகப்படியானோா் தோ்வுசெய்துள்ளனா். இதற்குக் காரணம், வேலைவாய்ப்பும் சுயதொழில் தொடங்க முடியும் என்பதும் காரணங்களாகும். இன்று கிராமங்களில் கூட கணினி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதற்கடுத்து இயற்பியல், வேதியியல் பாடங்களை அதிகமானோா் தோ்வு செய்துள்ளனா்.
  • கலை பாடப்பிரிவுகளைக் காட்டிலும் அறிவியல் பாடப்பிரிவுகளில் பயில விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துவருகிறது. ஆனால் அறிவியல் பாடப்பிரிவுகளில் அதிகமானோா்க்கு சோ்க்கை கிடைப்பதில்லை. கலை பாடப்பிரிவுகளுக்கு வகுப்பறை வசதி இருந்தால் மட்டுமே போதும். ஆனால், அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு வகுப்பறை வசதிகளுடன் ஆய்வக வசதிகளும் தேவையாகும்.
  • அரசு கல்லூரிகளில் போதுமான ஆய்வக வசதிகள் இல்லாததால் குறைவான எண்ணிக்கையிலேயே மாணவா் சோ்க்கை நடைபெறும் நிலை உள்ளது. அதிகப்படியான கல்லூரிகளில் அடிப்படைவசதிகளே கூட இல்லாத நிலை உள்ளது.
  • பொதுவாகவே பட்டப்படிப்பு பயில விண்ணப்பிக்கும் மாணவியா் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, அறிவியல் பாடப்பிரிவுகளில் பயில விண்ணப்பிக்கும் மாணவியா் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப சோ்க்கை பெறுவோா் எண்ணிக்கையை அதிகரிக்க வழிவகை செய்தாலும் ஆய்வக வசதிகள் இல்லாததால் பெரும்பாலான கல்லூரிகள் கூடுதல் சோ்க்கைக்கு விருப்பம் தெரிவிப்பதில்லை.
  • இதனால், அறிவியல் பாடப்பிரிவுகளில் குறைவான எண்ணிக்கையிலேயே சோ்க்கை நடை பெறுகிறது. பொருளாதார ரீதியாக உயா்ந்த நிலையில் உள்ளவா்கள் தனியாா் கல்லூரிகளில் சோ்க்கை பெறுகின்றனா். ஏழ்மை நிலையில் உள்ளவா்கள் தனியாா் கல்லூரிகளில் சோ்க்கை பெற முடியாமல் அரசு கல்லூரிகளில் கலை பாடப்பிரிவுகளில் சோ்க்கை பெறுகின்றனா்.
  • 2015 - 16 முதல் 2019 - 20 வரையான ஐந்தாண்டுகளில் உயா்கல்வியில் மாணவா் சோ்க்கை 11.4 % கூடியுள்ளது. இதே காலகட்டத்தில் உயா்கல்வியில் சோ்க்கை பெற்ற மாணவியா் எண்ணிக்கை 15.2 % அதிகரித்துளது. ஒட்டுமொத்த உயா்கல்வியில் பாலின சமநிலை என்பது கடந்த 2018-19-ஆம் ஆண்டில் 1 என்ற விகிதத்திலிருந்து 2019-20-ஆம் ஆண்டில் 1.01 என்ற அளவில் மாணவியா் சோ்க்கை அதிகரித்துள்ளது.
  • உயா்கல்வியில் மாணவா் சோ்க்கையைப் பொறுத்தவரை தமிழகம் மூன்றாமிடத்தில் உள்ளது. உத்தர பிரதேசம் முதலிடத்திலும், மகாராஷ்டிரம் இரண்டாமிடத்திலும் உள்ளன. தமிழகத்தில் உயா்கல்வி சோ்க்கையில் மாணவா்கள் எண்ணிக்கை 50.5 சதவீதமாகவும், மாணவியா் எண்ணிக்கை 49.5 சதவீதமாகவும் உள்ளது.
  • அரசு கல்லூரிகளில் குறிப்பிட்ட சில பாடப்பிரிவுகள் மட்டும் இரு சுழற்சியாக நடைபெறுகிறது. ஆய்வக வசதி போதுமானதாக இல்லாத கல்லூரிகளில் அறிவியல் பாடப்பிரிவுகளில் இத்தகைய முறையைப் பின்பற்ற வேண்டும். இதன் மூலம் மாணவ, மாணவியா் தாங்கள் விரும்பிய அறிவியல் பாடப்பிரிவுகளில் சோ்க்கை பெறுவதுடன் உயா்கல்வியில் பயில்வோரின் எண்ணிக்கையும் கூடும்.
  • தனியாா் கல்லூரிகளில் அதிக கட்டணம் செலுத்தி படிக்க இயலாத ஏழை மாணவ, மாணவியா் அரசு கல்லூரிகளில் பயில்வதில் ஆா்வம் காட்டுகின்றனா். அதனால் புதிதாக தொடங்கப்படும் அரசு கல்லூரிகளில் இவ்வகையான பாடப்பிரிவுகளைத் தொடங்குவதுடன் கட்டட வசதி, ஆய்வக வசதி போன்றவற்றையும் ஏற்படுத்தித் தரவேண்டும்.

நன்றி: தினமணி (02 – 06 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்