TNPSC Thervupettagam

அதிகரிக்கும் விலைவாசி

November 6 , 2024 66 days 133 0

அதிகரிக்கும் விலைவாசி

  • ஒரு குடும்பத்​துக்குத் தேவையான ஊட்டச்​சத்துள்ள உணவின் விலையானது, வருமானத்தைவிட அதிகமாக உயர்ந்​து ​வரு​கிறது. 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடு​கையில் 2024இல் ஒரு தனிநபரின் வருமானத்தில் பெரும் பங்கு உணவுக்​காகவே செலவிடப்​படு​கிறது. 2023 அக்டோபர் மாதத்​துடன் ஒப்பிடு​கை​யில், 2024 அக்டோபரில் உணவுப் பொருள்​களின் விலை 52% அதிகரித்​துள்ளது. ஆனால், ஒருவரின் சராசரி சம்பளம் 9 முதல் 10% வரை மட்டுமே அதிகரித்​துள்ள​தாகத் தரவுகள் தெரிவிக்​கின்​றன.
  • அதிகரித்து​வரும் விலைவாசி உயர்வானது தினக் கூலித் தொழிலா​ளர்​களைக் கடுமை​யாகப் பாதித்​துள்ளது. குறிப்பாக, குடும்பத்தைத் தனியாக நிர்வகிக்கும் பெண்கள் பொருளா​தா​ரரீ​தி​யாகக் கூடுதல் சிரமத்​துக்கு ஆளாகி​யுள்​ளனர்.

அதிகரிக்கும் விலை:

  • காய்கறிகளின் விலை உயர்ந்​து​கொண்டே செல்வது, உணவுக்கான செலவு அதிகரிப்​ப​தற்கு நேரடிக் காரணமாகிறது. சராசரியாக அரிசி, பருப்பு, காய்கறிகள் அடங்கிய ஒரு சரிவிகித உணவின் விலையானது ஒரே ஆண்டில் 89% அளவு அதிகரித்​துள்ளது. அதே நேரத்​தில், இறைச்சி உணவின் விலை 1.5% மட்டுமே அதிகரித்​துள்ளது.
  • சைவ உணவில் பருப்பு, அரிசி ஆகியவற்றின் விலை 2.6% குறைந்​திருந்​தாலும் உப்பு, சூரிய​காந்தி எண்ணெய், கோதுமை, பூண்டு, இஞ்சி, தக்காளி, வெங்காயம், முட்டைக்​கோஸ், பச்சைமிள​காய், உருளைக்​கிழங்கு போன்ற​வற்றின் விலை கடுமையாக அதிகரித்​துள்ளது. அதுவும் அக்டோபர் 2023 - அக்டோபர் 2024க்கு இடையில், தக்காளியின் விலை 247%, உருளைக்​கிழங்கின் விலை 180%, பூண்டின் விலை 128% என அதிகரித்​திருப்பது சாமானிய மக்களுக்குச் சிரமத்தை அளித்​துள்ளது.
  • உதாரணத்​துக்கு, மகாராஷ்டிரத்தில் இரண்டு வேளை உணவு தயாரிப்​ப​தற்கான செலவானது ஒரு வருடத்தில் 53% அளவு அதிகரித்​துள்ளது. அம்மாநிலத்தில் ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவு சமைக்க 2023இல் ரூ.101 செலவிடப்பட்ட நிலையில், 2024இல் அதே அளவு உணவு தயாரிக்க ரூ.154 செலவிடப்​படு​கிறது. அதே இரண்டு வேளை உணவுக்கு ஒரு மாதத்​துக்கு 2023இல் ரூ.3,053 தேவைப்​பட்டது. 2024இல் இது ரூ.4,631ஆக அதிகரித்​துள்ளது.

வருமானம் அதிகரித்ததா?

  • இந்தியாவில் விலைவாசி உயர்ந்​திருக்கும் ஐந்தாண்டு காலத்​தில், மக்களின் வருமானம் அதற்கு ஈடுசெய்யும் வகையில் உயரவில்லை. கடந்த ஐந்து ஆண்டு​களில், வீட்டில் தயாரிக்கும் உணவுக்கான செலவு 65% அதிகரித்​திருக்​கிறது. ஆனால், ஊதியம் வெறும் 28% - 37% அளவில்தான் உயர்ந்​திருக்​கிறது.
  • 2023இல் மகாராஷ்டிரத்தில் ஆண்களின் சராசரி தினசரி ஊதியம் நாள் ஒன்றுக்கு ரூ.451 ஆக இருந்தது. இது 2024இல் ரூ.492 ஆக உயர்ந்தது. இதே காலக்​கட்​டத்​தில், பெண்களுக்கான தினசரி ஊதியம் ஒரு நாளைக்கு ரூ.293இலிருந்து ரூ.324ஆக உயர்ந்​துள்ளது.
  • இவ்வாறு, விலைவாசி அதிவேகமாக அதிகரித்​திருக்கும் நிலையில், சாமானிய மக்களின் தினசரி வருமானம் சிறிய அளவிலேயே உயர்ந்​திருக்​கிறது. இதனால், குறைந்த வருமானம் கொண்ட குடும்​பங்கள் பொருளாதார நெருக்​கடிக்கு உள்ளாகி​யுள்ளன.

குழந்தைகள் - பெண்கள்:

  • விலைவாசி உயர்வினால், பெண்களும் குழந்தை​களுமே அதிகப் பாதிப்பை எதிர்​கொள்​கின்​றனர். பணவீக்கம் அதிகரிப்​ப​தால், ஒடிஷா போன்ற மாநிலங்​களில் அரசுப் பள்ளி​களின் மதிய உணவுத் திட்ட​மானது பாதிப்பைச் சந்தித்​துள்ளது. ஒடிஷாவில் கூலித் தொழிலாளி ஒருவர் நாள் ஒன்றுக்கு 250 ரூபாயை ஊதியமாகப் பெறுகிறார்.
  • இத்தகைய குறைந்த வருமானச் சூழலில் வளரும் குழந்தைகள் உணவுக்காக அரசுப் பள்ளி​களில் வழங்கப்​படும் மதிய உணவையே பெரும்​பாலும் சார்ந்​திருக்கும் நிலை உள்ளது. ஆனால், சமீப காலத்தில் காய்கறி விலை உயர்வினால் ஒடிஷாவில் மதிய உணவுத் திட்டத்தில் சத்தான சரிவிகித உணவைக் குழந்தை​களுக்கு வழங்க முடியாத சூழல் உருவாகி​யுள்ளது. சத்தான உணவுகளை உட்கொள்​ளாததால் மாணவர்கள் ஊட்டச்​சத்துக் குறைபாட்​டினால் பாதிக்​கப்​படும் நிலை ஏற்பட்​டுள்ள​தாகக் கல்வி​யாளர்கள் தெரிவிக்​கின்றனர்.
  • அடுத்தது, ஒரு குடும்பத்தில் முதன்மை வருமானம் ஈட்டு​பவர்​களாகப் பெண்கள் இருக்​கும்​பட்​சத்தில் அதிகரிக்கும் விலைவாசி உயர்வுக்கு ஏற்றாற்போல் கூடுதலாக உழைக்கும் சூழலுக்குப் பெண்கள் தள்ளப்​படு​கிறார்கள். இப்பெண்கள் தங்கள் குடும்​பங்​களில் ஆரோக்​கியமான உணவைத் தயாரிப்​ப​தற்​காகச் செலவிடும் ஊதியத்தின் பங்கானது ஆண்களைவிட அதிகமாக இருக்​கக்​கூடும் எனப் பொருளாதார நிபுணர்கள் கணிக்​கின்​றனர்.
  • அதுவும் தினக் கூலி வேலையில் ஈடுபடும் பெண்கள் உழைப்புச் சுரண்​டலுக்கு உள்ளாகி, மனதளவிலும் உடலளவிலும் பாதிக்​கப்​படும் சூழல் உள்ளது. 2019 - 2021 காலக்​கட்​டத்தில் 15-49 வயதுக்கு உட்பட்ட பெண்களில் 57% பேருக்கு ரத்த சோகை உள்ளதாகத் தேசியக் குடும்பநல ஆய்வு-5இன் தரவுகள் சுட்டிக்​காட்டுவது குறிப்​பிடத்​தக்கது.

உணவு உற்பத்​தியில் சுணக்க நிலை:

  • காலநிலை மாற்றத்​தினால் மழை, வெள்ளம், வெப்ப அலை போன்ற கணிக்க முடியாத வானிலை நிகழ்வுகள் தொடர்ந்​து​வரு​வ​தால், பெரும்​பாலான உலக நாடுகளில் உணவு உற்பத்தி பாதிக்​கப்​பட்​டுள்ளது; இதன் காரணமாக ஆப்ரிக்க, தெற்காசிய, மேற்காசிய நாடுகளில் விலைவாசி கடுமையாக அதிகரித்​திருப்பதாக ஐ.நா. அவை கூறுகிறது.
  • உலக நாடுகளில் நிலவும் நேரடி / மறைமுகப் போர்ச் சூழல் காரணமாகவும் உணவுப் பொருள் இறக்கும​தியில் சுணக்க நிலை நிலவுவதாக அரசியல் நிபுணர்கள் கூறுகின்​றனர்.
  • வருமானம் - உணவு செலவினங்​களுக்கு இடையே நிலவும் ஏற்றத்​தாழ்​வானது ஒரு தனிநபர் வாழ்வில் பொருளா​தா​ரரீ​தி​யாகப் பாதிப்பை ஏற்படுத்து​வதுடன் சமூகப் படிநிலைகளிலும் இடைவெளியை உருவாக்கு​கிறது. இந்த இடைவெளி அதிகரிக்​கும்போது வன்முறைகள், குற்றச்​செயல்கள் அதிகரிக்​கக்​கூடும்.

திட்ட​மிடல் அவசியம்:

  • எதிர்கால உணவுப் பொருள்​களின் இருப்பு எல் நினோ போன்ற காலநிலை நிகழ்வு​களைச் சார்ந்தே இருக்கும் எனச் சுற்றுச்​சூழல் செயல்​பாட்​டாளர்கள் கணிக்​கின்​றனர். இதைக் கவனத்தில் கொண்டு உணவுப் பொருள்​களின் பாதுகாப்​புக்கான நடவடிக்கைகளை​யும், விலையேற்​றத்தைக் குறைப்​ப​தற்கான ஆக்கபூர்வமான திட்ட​மிடல்​களையும் மத்திய அரசு வகுக்க வேண்டும்.
  • முதற்​கட்டமாக அரிசி, கோதுமை, சர்க்கரை, வெங்காயம் போன்ற​வற்றின் ஏற்றும​தி​களைக் கட்டுப்​படுத்தி, இறக்குமதி உணவுப் பொருள்​களில் சில தளர்வுகளை நடைமுறைப்​படுத்​தலாம். இதன் மூலம் பணவீக்கம், விலைவாசி உயர்வை ஓரளவாவது கட்டுக்குள் வைக்க முடியும். காலநிலை மாற்றத்தைக் கட்டுப்​படுத்தும் நடவடிக்கை​களில் உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்​படுவதே உலகளவில் நிலவிவரும் உணவுப் பொருள் பற்றாக்​குறைக்குத் தீர்வாக அமையும்.

நன்றி: இந்து தமிழ் திசை (06 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்