TNPSC Thervupettagam

அதிகரிக்கும் வேலையிழப்புகள்: நாடாளுமன்ற நிலைக்குழுவின் அறிக்கை தீர்வளிக்குமா?

August 12 , 2021 1086 days 476 0
  • தொழிலாளர் நல விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் சமீபத்திய அறிக்கை, மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டியிருக்கும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் அவசியத்தை உணர்த்துவதாக அமைந்துள்ளது.
  • ‘பெருந்தொற்றானது தொழிலாளர் சந்தையை நிலைகுலைய வைத்திருக்கிறது, வேலைவாய்ப்புகளை இல்லாமலாக்கியிருக்கிறது, பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பங்களின் இருப்பை அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியிருக்கிறது’ என்று பர்த்ருஹரி மாதப் தலைமையிலான தொழிலாளர் நிலைக் குழுவின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
  • கரோனா போன்ற நெருக்கடிக் காலங்களில் அமைப்புசாரா தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில், அவர்களது வங்கிக் கணக்கில் நிவாரணத் தொகைகள் அளிக்கப்படுமாறு தொழிலாளர்கள் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை மேம்படுத்த வேண்டும் என்றும் அரசை அது கேட்டுக்கொண்டுள்ளது.
  • ஏற்கெனவே நடைமுறையில் உள்ள ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்த வேண்டும் என்றும் நகர்ப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தைத் தொடங்க வேண்டும் என்றும் முக்கியமான பரிந்துரைகளை வழங்கியுள்ளது.
  • வேலையிழப்புகளின் அளவு குறித்த வெவ்வேறு அமைப்புகளின் கணக்கீடுகளைக் கருத்தில் கொண்டு, அதன் உண்மையான அளவைக் கண்டறியுமாறும் தொழிலாளர் நலத் துறையை இந்த அறிக்கை கேட்டுக்கொண்டுள்ளது.
  • காலமுறையிலான உழைப்புச் சக்தி கணக்கெடுப்பை (பிஎல்எஃப்எஸ்) மேற்கோள் காட்டியுள்ள தொழிலாளர் நலன்களுக்கான நிலைக்குழு, இந்தியாவிலுள்ள சுமார் 46.5 கோடித் தொழிலாளர்களில் 41.9 கோடிப் பேர் அமைப்புசாரா தொழிலாளர்கள் என்று கூறியிருக்கிறது.
  • நாட்டின் மொத்த உழைப்புச் சக்தியில் 90% அமைப்புசாரா துறைகளாகத்தான் இருக்கின்றன. ஜனவரி - மார்ச் 2020 மாதங்களில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, கடந்த 15 ஆண்டுகளாக 20.8% ஆக இருந்துவந்த நகர்ப்புற வேலைவாய்ப்பின்மையின் அளவு மேலும் 9.1% அதிகரித்துள்ளது.
  • அடுத்தடுத்த பொதுமுடக்கங்களால் இந்த அளவு இன்னும் மோசமாக அதிகரித்திருக்கும். ஆனால், அது குறித்த கணக்கெடுப்புகள் அவ்வமைப்பால் இதுவரை மேற்கொள்ளப் பட வில்லை.
  • இந்நிலையில், ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் அமைப்புசாரா தொழிலாளர்கள் பற்றிய கணக்கெடுப்பை முடிக்குமாறு இந்த அறிக்கை வலியுறுத்தியுள்ளது.
  • தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனத்தின் (இபிஎஃப்ஓ) தரவுகளை ஒப்பிட்டு அமைப்புசார்ந்த வேலையிழப்பின் அளவையும் உறுதிப்படுத்துமாறும் புதிய தொழிலாளர் சேர்க்கை பற்றிய விவரங்களைச் சேகரிக்கும்போது நிதியாண்டை மட்டும் கணக்கில் கொள்ளாமல், மாதவாரியாகத் தகவல்களைத் திரட்டுமாறும் ஆலோசனை கூறியுள்ளது.
  • தவிர, வருங்கால வைப்புநிதி நிறுவனம் இத்தகைய ஒரு நெருக்கடிச் சூழலில் மிகவும் தீவிரமாகச் செயல்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டியுள்ளது.
  • இரண்டாவது பொதுமுடக்கத்தால் ஏற்பட்ட வேலையிழப்புகள் குறித்து முழுமையான கணக்கெடுப்பு விவரங்கள் எதுவும் இதுவரையில் நம்மிடம் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.
  • தொழிலாளர் நல விவகாரங்களுக்கான நிலைக்குழுவின் இந்த அறிக்கையை, நடைபெற்று வரும் மழைக்காலக் கூட்டத்தொடரில் விவாதத்துக்காக முன்வைக்கப்பட்ட போதிலும் கூட பெகாஸஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பான எதிர்க்கட்சிகளின் அமளியில் அது உரிய கவனம் பெறாமல்போனது துரதிர்ஷ்டவசமானது.

நன்றி: இந்து தமிழ் திசை (12 - 08 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்