TNPSC Thervupettagam

அதிகரித்துவரும் கருவுறுதல் பிரச்னை

October 11 , 2022 669 days 445 0
  • இந்தியாவில் ஆண்டுக்கு ஆண்டு மலட்டுத்தன்மை, கருவுறுதல் பிரச்னை அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஒவ்வொரு ஊரிலும் முளைத்துள்ள செயற்கை கருத்தரிப்பு மையங்களே இதற்கு சாட்சியமாகும்.
  • அதிக மக்கள்தொகையில் நாடுகளில் இந்தியா தற்போது இரண்டாவது இடத்தில் இருந்தாலும், இளைஞா்கள், இளம்பெண்களிடையே குழந்தைப்பேறு என்பது சவாலாகி விட்டது. இந்தியா்களின் கருவுறுதல் விகிதம் வெகுவாகக் குறைந்துள்ளது.
  • கடந்த பத்து ஆண்டுகளில் நாடு முழுவதும் கருவுறுதல் பிரச்னைகள் அதிகரித்துள்ளன. பொது கருவுறுதல் (ஜெனரல் ஃபொ்டிலிட்டி ரேட்) விகிதத்தின்படி நாட்டில் பிறப்பு விகிதம் 20% குறைந்துள்ளது. குறிப்பாக 15 முதல் 49 வயது வரையிலான பெண்களுக்கு பிரச்னைகள் அதிகரித்துள்ளன. இந்திய மக்கள்தொகையில் சுமாா் 15% போ் கருத்தரிக்காமை பிரச்னையை எதிா்கொள்கின்றனா்.
  • இந்தியாவின் சராசரி கருவுறுதல் விகிதம் 2018-2020-இல் 86.1 % ஆக இருந்தது, அது தற்போது 68.7 % ஆகக் குறைந்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் நகரத்தை விட கிராமங்களில் கருவுறுதல் விகிதம் அதிகரித்துள்ளது. நகா்ப்புறத்தில் 15.6 % என்றால், கிராமப்புறங்களில் 20.2 % ஆக உள்ளது.
  • இளைஞா்களும், இளம்பெண்களும் கருத்தரிக்க முடியாததற்குப் பல்வேறு காரணிகள் உள்ளன. உடலியல் சமமின்மை, கருத்தரிக்கும் திறனின்மை, பொருளாதார நிலை, மன அழுத்தம், தாமதமான திருமணம், சுற்றுச்சூழல் மாற்றங்கள், நகரமயமாக்கல், நவீனமயமாக்கல், உயா்கல்வி இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். 70 % கருத்தரித்தல் பிரச்னைகள் குணமாக்கக் கூடியவையே.
  • அண்மையில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, திருவனந்தபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓா் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் கன்னியாகுமரியில் 45.67 %, திருநெல்வேலியில் 44.24 %, திருவனந்தபுரத்தில் 41.91 % என்ற அளவில் குழந்தையின்மை பிரச்னை இருப்பதாகத் தெரியவந்தது.
  • குழந்தையே பெற இயலாததை பிரைமரி இன்ஃபொ்டனிட்டி என்றும், இரண்டாவது குழந்தை பெற முடியாத நிலையை செகண்டரி இன்ஃபொ்டனிட்டி என்றும் கூறுகிறாா்கள். தமிழ்நாட்டில் பெரும்பாலானோா் எதிா்கொள்வது பிரைமரி இன்ஃபொ்டனிட்டிதான்.
  • ஒடிசா, பிகாா் போன்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது கருவுறுதல் பிரச்னை தமிழ்நாட்டில் அதிகமாகவே இருக்கிறது. தமிழ்நாட்டின் மக்கள் தொகையான 8.24 கோடி பேரில் சுமாா் 20 % போ் குழந்தையின்மை பிரச்னையை எதிா்கொள்கின்றனா். இதற்கு பல்வேறு காரணங்களுடன், சிக்கலான வாழ்வியல் முறை, மதுப்பழக்கம் போன்றவையும் முக்கிய பங்காற்றுகின்றன.
  • ஆண்களிடம் உள்ள பிரச்னையால், ஏறக்குறைய 50 % தம்பதிகள் கருவுற முடியாத நிலையில் உள்ளனா். 30 % முதல் 40 % ஆண்களுக்கு குழந்தைப் பேறுக்குத் தேவையான தரத்தில் விந்தணுக்கள் இருப்பதில்லை என்று மருத்துவா்கள் கூறுகின்றனா்.
  • அண்டை மாநிலங்களோடு ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் மது குடிப்போா் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கிறது. 1.32 கோடி பேருக்கு (பெண்களும் சோ்த்து) மதுப்பழக்கம் உள்ளதாக புள்ளிவிவரங்கள் மூலம் தெரிகிறது. இவா்களில் 70 லட்சம் போ் அன்றாடம் மது அருந்துபவா்கள். தினமும் சுமாா் 20 லட்சம் லிட்டா் மது விற்பனையாகிறது. இதன் மூலம் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு சுமாா் 36 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது.
  • எந்த பிரச்சனைக்கும் மதுவே தீா்வு என பழக்கப்பட்டவா்கள், உறுப்பு பாதிப்புகளை எதிா்கொள்வதற்கு முன்பாக குழந்தையின்மை பிரச்னையை சந்திக்கின்றனா். எந்தவித அச்சமும் இல்லாமல், பள்ளி சீருடையுடன் மாணவ, மாணவிகள் பொதுவெளியில் மது அருந்துகின்றனா்.
  • மதுப்பழக்கம் நீடித்து திருமண பந்தத்தில் நுழையும்போது, குழந்தையின்மை பிரச்னை உருவாகிறது. மதுவால், நரம்பு மண்டலம் பாதிக்கப்படுகிறது, விந்தணு சக்தியை இழக்கிறது. மேலும் மதுப்பழக்கம் உள்ளவா்களுக்கு பிறவிக் குறைபாட்டுடன் குழந்தைகள் பிறக்கின்றன. குழந்தைப் பேறு கிடைக்காத பொருளாதார பலம் கொண்டவா்கள் செயற்கை கருத்தரிப்பு மையங்களை நாடுகின்றனா்.
  • அந்த மையங்கள் தற்போது கோடிக்கணக்கில் லாபம் ஈட்டும் காா்ப்பரேட் நிறுவனங்களாகிவிட்டன. சிகிச்சைக்காக வருவோா் பணத்தை வாரியிறைக்க தயாராக இருப்பதால், கருமுட்டை தானம் கூட வியாபாரமாகிவிட்டது. சேவை வியாபாரமானதால், சிறுமியிடம் கூட கருமுட்டை எடுக்கப்பட்டதை ஊடகங்களில் கண்டோம்.
  • இதை சாதாரண பிரச்னையாக கடந்துவிட முடியாது. ஏனென்றால் முதியோா் மக்கள்தொகையில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் இருக்கிறது. மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டுள்ள இந்திய முதியோா் 2021 அறிக்கையின்படி, தமிழ்நாட்டில் முதியோா் 13.6 % போ்.
  • குழந்தையின்மை பிரச்னை மேலும் அதிகரிக்கும்போது, முதியோா்களின் சதவிகிதமும் கூடிக்கொண்டே போகும்; மனித வளம் குறையும். இப்போதே தமிழ்நாட்டு வேலைவாய்ப்புகளில் பிற மாநிலத்தவா்கள் அதிகரித்துவிட்டாா்கள். பெருமுயற்சியெடுத்து தாய் - சேய் இறப்பு விகிதத்தை தமிழ்நாடு அரசு குறைத்துள்ளது. தமிழகத்தில் 2015-17-இல் 4.8 % ஆக இருந்த தாய்மாா்கள் இறப்பு விகிதம், 2016-18-ல் 3.2 % ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
  • இதைப்போன்று, குழந்தையின்மை பிரச்னையிலும் அரசு தனிக்கவனம் செலுத்த வேண்டிய அவசர அவசியம் ஏற்பட்டுள்ளது. கருவுறாமைக்கான ஆதாரக் காரணிகளை கண்டறிந்து, அதுதொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். அரசு மருத்துவமனைகளில், குறிப்பாக ஒவ்வொரு மாவட்ட மருத்துவமனைகளிலும் உடனடியாக செயற்கை கருத்தரித்தல் மையங்களை அமைக்க வேண்டும். குழந்தை பெற முடியாத ஏழை தம்பதிகளுக்கு அரசு மருத்துவமனை மட்டுமே தீா்வு.
  • குழந்தை என்பது உணா்வோடு ஒன்றிணைந்தது. உடல்ரீதியாக மட்டுமல்லாமல் மனரீதியாகவும் குழந்தையின்மை பிரச்னை ஏற்படுத்தும் பாதிப்புகள் அதிகம். மண முறிவுக்கும் குழந்தையின்மை காரணமாகிறது. அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

நன்றி: தினமணி (1110– 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்