அதிக வேலைவாய்ப்பு: தமிழகம் தலைநிமிரட்டும்!
- இந்திய ரிசர்வ் வங்கியின் 2023-2024 ஆண்டுக்கான வளர்ச்சி அறிக்கையின்படி, தமிழ்நாடு சிறு - நடுத்தரத் தொழில்கள் மூலமாக இந்தியாவிலேயே அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இது குறித்த தரவுகளைத் தமிழக அரசு ஜனவரி 7ஆம் தேதி வெளியிட்டுள்ளது. மேற்கண்ட காலக்கட்டத்தில் தமிழ்நாட்டில் 39,699 தொழில் நிறுவனங்கள் மூலம் 4,81,807 தொழிலாளர்கள் 8,42,720 உழைப்பு நாள்களைப் பெற்றுள்ளனர்.
- இது வரவேற்கத்தக்கது! ஒரு நாளில் ஒருவர் எவ்வளவு வேலை செய்கிறார் என்கிற துல்லியமான அளவு ‘உழைப்பு நாள்’ (man day) எனப்படுகிறது. இந்தியாவில் தொழில் வளர்ச்சியில் பல ஆண்டுகளாக முன்னிலை வகித்துவரும் குஜராத், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களைவிட, தமிழ்நாடு இதில் அதிக வளர்ச்சியை எட்டியுள்ளது.
- சராசரியாக குஜராத்தில் ஒரு நபருக்கான உழைப்பு நாள் 1.37, மகாராஷ்டிரத்தில் 1.13 ஆகவும் இருக்கையில், தமிழ்நாட்டில் 1.75 ஆக உள்ளது. இங்குள்ள சிறு - நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அதிக வேலைவாய்ப்பு விகிதத்தைச் சாத்தியப்படுத்தியுள்ளன. இதற்காக இத்துறையின் முதலீட்டாளர்கள், தொழிலாளர்கள், அவர்களுக்குச் சாதகமான தொழில் சூழலை ஏற்படுத்திய தமிழக சிறு, குறு - நடுத்தரத் தொழில்களுக்கான அமைச்சகம், தொழில் துறை அமைச்சகம் ஆகியவற்றைப் பாராட்ட வேண்டும்.
- தானியங்கி உதிரிபாகங்கள், கயிறு, தோல் பொருள்கள் போன்ற துறைகள் சிறு, குறு - நடுத்தரத் தொழில்களின்கீழ் வருகின்றன. பெரும் முதலீடுகள் புழங்கும் தொழில்களை வளர்த்தெடுப்பதுடன், இத்தகைய தொழில்களையும் ஊக்குவிக்கும் அணுகுமுறையைத் தமிழக அரசு உறுதியாகப் பின்பற்றி வருகிறது. இது வரவேற்கத்தக்க அம்சம். இம்முயற்சிகள் திருப்திகரமான பலன்களையும் அளிக்கின்றன.
- 2024 மே நிலவரப்படி அதிக எண்ணிக்கையில் பெண் தொழில்முனைவோரைக் கொண்டிருப்பதில் தமிழகம் முதலிடம் வகித்தது. ஏறக்குறைய இதே காலக்கட்டத்தில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழகத்தின் பங்களிப்பு 9.19 சதவீதம். இது தேசிய அளவில் இரண்டாவது இடம் என்பது குறிப்பிடத்தக்கது.
- முன்னுதாரணமான திட்டங்கள் மூலம் நாட்டின் தொழில் வளர்ச்சியிலும் உற்பத்தியிலும் முக்கியப் பங்கு வகிக்கும் தமிழகம், நிதிப்பகிர்வில் புறக்கணிக்கப்படுவதாக அவ்வப்போது குரல்கள் எழுகின்றன. இந்தக் குறைபாடு களையப்பட வேண்டும்.
- மாநில அரசும் மத்திய அரசும் ஒருங்கிணைந்து செயல்பட்டால், இந்த வளர்ச்சி விகிதம் பல மடங்கு அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை. அதேபோல, அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ள சிறு, குறு - நடுத்தரத் தொழில் துறையினர் தொடர்ச்சியாக வலியுறுத்திவரும் சில கோரிக்கைகளுக்கு தமிழக அரசு செவிமடுக்க வேண்டும்.
- தங்கள் நிதிச்சுமையைக் குறைக்கும் வகையில் வரிவிதிப்பு முறையில் சீர்திருத்தங்கள் வேண்டும் என்பது அத்துறையினரின் முக்கியக் கோரிக்கை. தொழிலாளர்களின் உரிமைகள் மதிக்கப்படுதல், பெண் தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல், தொழில் நடைபெறும் பகுதியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நெறிமுறைகள் பின்பற்றப்படுதல் ஆகியவற்றில் அரசு கவனம் செலுத்தினால், இந்த வளர்ச்சி நீடித்த தன்மை கொண்டதாக இருக்கும்.
- சம்பந்தப்பட்ட தொழில் முதலீட்டாளர்களுக்கும் இதில் பொறுப்பு உள்ளது. அரசு கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழகத்துக்கு 10 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டைக் கொண்டு வந்துள்ளதாகவும், அதன் மூலம் 31 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாகியிருப்பதாகவும் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அண்மையில் சட்டமன்றத்தில் தெரிவித்தார்.
- அடுத்த 5 ஆண்டுகளுக்குள் 50 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் இலக்குடன் செயல்பட்டுவருவதாகவும் கூறப்பட்டது. அந்தத் திட்டமும் நிறைவேறி, தொழில் வளர்ச்சியிலும் தொழிலாளர் வாழ்க்கை மேம்பாட்டிலும் தமிழகம் இன்னும் முன்னேற்றம் காண இத்தருணம் வழிவகுக்கட்டும்!
நன்றி: இந்து தமிழ் திசை (14 – 01 – 2025)