- பைக் ரேஸில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்ட இளைஞருக்கு நிபந்தனையுடன் பிணை வழங்கியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், வழக்கத்துக்கு மாறாக விதித்துள்ள கூடுதல் நிபந்தனையானது, அதிவேகமாக வாகனங்களை ஓட்டுவதன் ஆபத்துகளை இளைய தலைமுறைக்கு அழுத்தமாக உணர்த்தும்வகையில் அமைந்துள்ளது.
- பிணையில் விடுவிக்கப்பட்ட இளைஞர், விபத்து மற்றும் அவசரச் சிகிச்சைப் பிரிவில் பணியாற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு உதவியாக ஒரு மாத காலம் சேவைப் பணி செய்ய வேண்டும் என்ற அந்த நிபந்தனை, சட்டரீதியாக வகுத்துரைக்கப்பட்ட விதிகளின் கீழ் அளிக்கப்பட்டதல்ல.
- நீதிபதிகளின் இத்தகைய தன்விருப்புரிமை அதிகாரங்கள் குறித்துத் தொடர்விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. என்றாலும், பொதுப் போக்குவரத்துக்கான சாலைகளில் வாகனப் பந்தயங்களில் ஈடுபடுவோருக்கு அதன் அபாயங்களை உணர்த்த விரும்பும் இத்தகு நிபந்தனைகள், இக்குற்றங்களில் ஈடுபடுவோரின் தண்டனையின் ஒரு பகுதியாகவே மாற வேண்டும். சிறை, அபராதம் என்று தண்டனைகளை விதித்து, குறைக்க முடியாத குற்றச் செயல்களை இத்தகைய நல்வழிப்படுத்தும் முயற்சிகளின் துணைகொண்டு குறைக்கலாம். அச்சுறுத்தலைக் காட்டிலும் குற்றமிழைத்தோரைச் சீர்திருத்துவதே சரியான தண்டனைக் கோட்பாடு.
- இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்திருப்பவர் கையில் இரும்புக் கம்பியை வைத்துக்கொண்டு, சாலையில் தீப்பொறிகளை உருவாக்குவது, இருசக்கர வாகனத்தின் முன்சக்கரத்தைத் தரையிலிருந்து மேலெழச் செய்யும் ‘வீலிங்’ சாகசங்களைச் செய்வது போன்ற இளைஞர்களின் செய்கைகள் சாலைகளில் பயணிக்கும் மற்றவர்களுக்கு அச்சுறுத்தலாக அமைவதை உயர் நீதிமன்ற நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
- இத்தகு செய்கைகளில் ஈடுபடுபவர்கள் மட்டுமின்றி, சாலையில் பயணிப்பவர்கள், சாலையைக் கடக்கும் பாதசாரிகள் ஆகியோரும் இதனால் விபத்துக்கு உள்ளாகிறார்கள். இது தவிர, வாகனப் புகை வெளியேறும் கூண்டுகளில் திருத்தங்களைச் செய்து, பயமுறுத்தும்படியான வினோத ஒலிகளை எழுப்பியபடி இளைஞர்கள் தங்களது வாகனங்களில் பறந்து திரிகிறார்கள். போக்குவரத்து நெருக்கடி நிறைந்த சாலைகளில் இத்தகைய வினோதமான ஒலிகள் பதற்றத்தை உருவாக்குபவையாக இருக்கின்றன. தொடர்ச்சியான வாகனச் சோதனைகள், இரவு ரோந்து ஆகியவற்றாலேயே இத்தகு விதிமுறை மீறல்களைக் கண்டறியவும் தடுக்கவும் முடியும்.
- சென்னையைப் பொறுத்தவரை, புறநகர்ச் சாலைகளிலும் வெளிவட்ட இணைப்புச் சாலைகளிலும் இரவு நேரங்களில் இத்தகு வாகனப் பந்தயங்கள் தொடர்ந்து நடந்துவருகின்றன. போக்குவரத்துத் துறை அதிகாரிகளும் காவல் துறையினரும் அவ்வப்போது சோதனைகளை நடத்தி, அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் அதிவேகமாக வாகனங்களை ஓட்டுவோருக்கு அபராதங்களை விதித்துவருகின்றனர்.
- பைக் ரேஸில் ஈடுபட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிப்பதற்கு அதிகபட்ச வேகத்தை நிர்ணயிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கவலை தெரிவித்துவந்தாலும், அவற்றை நடைமுறைப்படுத்துவதும் விதிமுறை மீறல்களைக் கட்டுப்படுத்துவதும் சவாலாகவே இருந்துவருகிறது. கடுமையான தண்டனைகளைக் காட்டியும்கூட அச்சுறுத்த முடியாத இளைஞர்களுக்கு உயிரின் மதிப்பை உணர்த்துவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் அளித்துள்ள இதுபோன்ற நிபந்தனைகள் பயன்படக் கூடும்.
நன்றி: தி இந்து (10 – 04 – 2022)