TNPSC Thervupettagam

அதிவேகம் ஆபத்தில் முடியும்

August 29 , 2022 711 days 495 0
  • நம் நாட்டில் சாலை விபத்துகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. உலக அளவில், சாலை விபத்தில் உயிரிழப்போர் எண்ணிக்கையில் முதல் இடத்திலும், காயமடைவோர் எண்ணிக்கையில் மூன்றாம் இடத்திலும் இந்தியா உள்ளது. நம் நாட்டில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஐம்பத்தி மூன்று சாலை விபத்துகள் நடப்பதோடு, நான்கு நிமிடத்திற்கு ஒருவர் விபத்தில் உயிரிழக்கின்றார்.
  • பழுதான சாலைகள், கைப்பேசியில் பேசிக்கொண்டே வாகனத்தை ஓட்டுவது, கண்கள் கூசும் முகப்பு விளக்குகள், வேகத்தடைகள் இருப்பது பற்றி அறிவிப்பின்மை, வாகனங்களில் அளவிற்கு அதிகமாக பாரம் ஏற்றிச் செல்வது, மது அருந்தி விட்டு வாகனங்களை ஓட்டுவது, இரவு நேரங்களில் சாலையோரம் பழுதாகி நிற்கும் வாகனங்கள்  என சாலை விபத்திற்குப் பல்வேறு  காரணங்கள் உள்ளன. 
  • ஆனாலும், அதிக வேகமாக வாகனங்களை இயக்குவதே சாலை விபத்துகளுக்கும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கும் முதன்மையான காரணமாக உள்ளது. பெருநகரங்களில் போக்குவரத்து நெரிசலின்போது நடைபாதைகளில்  இரு சக்கர வாகனங்களை ஓட்டிச்செல்வது, விரைந்து செல்லும்ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களைப் பின்தொடர்ந்து செல்வது போன்ற காட்சிகளை அடிக்கடி காணலாம்.  
  • ஆண்டுதோறும் சாலை விபத்துகளால் ஏறக்குறைய  பதினான்கு லட்சம் பேர் மரணமடைகின்றனர். ஐந்து கோடி பேர் காயமடைகின்றனர். காயமடைந்தவர்களில் பலர் வாழ்நாள் முழுவதும் உடல் ஊனமுற்று வாழும் அவல நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். 
  • சர்வதேச அளவில் 185 நாடுகளில்  "லான்செட்' மருத்துவ இதழ் மேற்கொண்ட ஆய்வு முடிவின்படி, அதிக வேகத்தை தவிர்த்தல், மது அருந்தாமல் வாகனங்களை ஓட்டுதல், தலைக்கவசம் அணிதல், சீட் பெல்ட் அணிதல் ஆகிய நான்கு செயல்பாடுகளைக் கடைப்பிடித்தால் ஆண்டுதோறும் உலகில் ஏற்படும் 13.5 லட்சம் சாலை விபத்துகளில் 40 % விபத்துகளைத் தவிர்க்கலாம்.
  • சாலைப்போக்குவரத்து - நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்தின் 2020-ஆம் ஆண்டு அறிக்கையின்படி அதிக வேகத்தின் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 91,239 ஆகும். தலைக்கவசம் அணியாததால் 39,798 உயிரிழப்புகளும், காரில் பயணிப்போர் சீட் பெல்ட் அணியாததால் 26,896 உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. 
  • உலகில் உள்ள வாகனங்களில் ஒரு சதவீதமே நம் நாட்டில் உள்ள நிலையில், உலகில் நடைபெறும் சாலை விபத்துகளில் பத்து சதவீதம் நம் நாட்டில் நடைபெறுகிறது என்பதுதான் துயரம். தேசிய நெடுஞ்சாலைகளில், மாநில நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் செல்ல வேண்டிய வேகம் பற்றிய அறிவிப்புகள் பரவலாக காணப்படுவதில்லை. ஆங்காங்கே சில அறிவிப்புகள் இருந்தாலும் பெரும்பாலான வாகன ஓட்டிகள் அவற்றைப் பொருட்படுத்துவதில்லை. 
  • "வாகனம் ஓட்டும் போது கைப்பேசி அழைப்பை  ஏற்காதீர், அழைப்பது எமனாகவும் இருக்கலாம்' என்பது போன்ற வேடிக்கையான, எச்சரிக்கை வாசகங்களை தொண்டு நிறுவனங்கள் பரப்பினாலும், வாகனம் ஓட்டுவோர் அந்த வாசகங்களை ரசிப்பதோடு நிறுத்திக் கொள்கிறார்கள். தனியார் நிறுவன வாகனங்கள் சிலவற்றில் "இவ்வாகனம் அதிவேகமாக இயக்கப்பட்டால் கீழ்காணும் கைப்பேசி எண்ணிற்கு புகார் செய்வும்' என்ற அறிவிப்புடன் ஒரு கைப்பேசி எண்ணும் குறிப்பிடப்பட்டிருந்தது. 
  • ஆனால், குறிப்பிட்ட கைப்பேசி எண்ணை குறித்து வைத்துக்கொண்டு புகார் செய்வதில் யாருக்கும் சிரமம் ஏற்படும். அந்த அறிவிப்பிற்கு பதிலாக வாகனத்தை அதிவேகமாக இயக்கா வண்ணம் அவ்வாகனத்தில் வேகக் கட்டுப்பாட்டு கருவியை பொருத்துவதே சரியானது. மேலும், அனைத்து வாகனங்களிலும் வேகக் கட்டுப்பாடு கருவிகள் பொருத்தப்படுவது சாலை விபத்துகளை கணிசமாகக் குறைத்திட உதவும். 
  • வாகனங்களை இயக்குவோருக்கு நேர மேலாண்மை மிக மிக அவசியமான ஒன்றாகும். கடக்க வேண்டிய தொலைவு, எதிர்பாராமல் சாலையில் எற்படக்கூடிய நேர விரயம், சாலையின் தரம், வாகனத்தின் நிலைமை, மிதமான வேகத்தில் சென்றால் ஆகக்கூடிய பயண நேரம் ஆகியற்றை வாகனத்தை இயக்கும் முன் ஒவ்வொரு வாகன ஒட்டியும் கவனத்தில் கொள்ள வேண்டும். 
  • சாலை விதிகளை மதித்து வாகனங்களை ஓட்டுவது, தலைக்கவசம் அணிவது, சீட் பெல்ட் அணிவது போன்ற தற்காப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றினால் சாலை விபத்துகளைத் தவிர்க்கலாம். 
  • நம் நாட்டில் பெரும்பாலான மாநிலங்களில் மதுவிலக்கு அமலில் இல்லை. இப்படிப்பட்ட சூழலில் மது அருந்தாமல் வாகனம் ஓட்டுவதற்கு வாகன ஓட்டிகளுக்கு சுய கட்டுப்பாடு மிக அவசியமான ஒன்றாகும். மேற்கத்திய நாடுகளில் சாலைவிதிகளை மீறுவோர் கடுமையாக தண்டிக்கப்படுகின்றனர். 
  • இங்கிலாந்தில் கார் ஓட்டும் போது சீட் பெல்ட் அணியாதவர்க்கு சுமார் ரூ. 47,500 அபராதம் விதிக்கப்படுகிறது. வாகனசோதனையின் போது வாகன ஓட்டியின் ரத்தத்தில் ஆல்கஹாலின் அளவு அதிகமாக இருப்பின் அபராதமோ, ஆறு மாத சிறை தண்டனையோ விதிக்கப்படுவதோடு, ஓராண்டிற்கு ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும். நம் நாட்டிலும் இது போன்று சாலை விதிகளை மீறுவோர்க்கு கடுமையான தண்டனைகள் அளிக்கும் வகையில் சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.
  • 2030-ஆம் ஆண்டிற்குள் உலக அளவில் சாலை விபத்துகளை ஐம்பது சதவீதம் குறைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. நம் நாட்டில் இந்த இலக்கை 2024-ஆம் ஆண்டிற்குள் அடைய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென மத்திய தரைவழி போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது. 
  • சுமார்1,455 கி.மீ நீளமுள்ள தேசிய விரைவுச்சாலை, 1,42,126 கி.மீ நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலை, 1,86,528 கி.மீ நீளமுள்ள மாநில நெடுஞ்சாலை என உலகின் மிகப் பெரிய வாகன போக்குவரத்து அமைப்பைக் கொண்ட நம் நாட்டில், போக்குவரத்து காவல்துறையினரின் தீவிர கண்காணிப்பு, சாலை விதிகளைப் பின்பற்றுவதில் ஓட்டுநரின்  உறுதி - இவை இரண்டும் இருந்தால் விபத்தில்லா சாலைப் பயணங்கள் சாத்தியமே.

நன்றி: தினமணி (29 – 08 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்