TNPSC Thervupettagam

அது ஒரு கரோனா காலம்!

June 8 , 2020 1683 days 914 0
  • உலக வரலாற்றில் ஆதாம் ஏவாள் காலம், கற்காலம், உலோக காலம், பொற்காலத்துக்குப் பிறகு இனி வரும் காலங்களில் பேசப்படப் போகும் காலம் ‘கரோனா தீநுண்மிக் காலம்’.
  • என் முந்தைய தலைமுறை, என் தலைமுறை, என் வாரிசின் தலைமுறை, என் பேரன் - பேத்தி தலைமுறை என்று நான்கு தலைமுறைகளுக்கும் மறக்க முடியாத ... அழியாத நினைவுகளைப் பதிய வைத்திருக்கும் காலம் இந்தக் கரோனா தீநுண்மிக் காலம்.

தீநுண்மிக் காலம்

  • பறவைகளும் விலங்குகளும் வீதியில் சுதந்திரமாய் இருக்க ... மனிதா்கள் வீட்டுக்குள் சிறைபட்ட காலம் இந்தக் கரோனா தீநுண்மிக் காலம்.
  • விமானங்கள் இல்லாத நீல வானம் ... தடக் தடக் ரயில்கள் ஓடாத தண்டவாளங்கள் ... வாகனங்களின் நெரிசலில் அதன் கரியமிலவாயுவால் மூச்சு திணறாத சாலைகள் ... மனித வாடையை சுவாசிக்காத ஆண்டவனின் ஆலயங்கள் ... ஓசையில்லாத தெருக்கள் ... சாராய நெடியிலிருந்து தற்காலிகமாய் தப்பிய நாசிகள் ... என உலகம் விநோதமாய் காட்சித் தந்த காலம் இந்தக் கரோனா தீநுண்மிக் காலம்.
  • ‘நான் அசைந்தால் அசையும் உலகமெல்லாமே’ என்று திருவிளையாடல் திரைப்படத்தில் வரும் பாடல் காட்சியில் நடித்த சிவாஜி கணேசனின் கண்ணசைவுக்கு உலக உயிரினங்கள் கட்டுப்பட்டு நின்றதுபோல் உலகத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் ஒரு சின்னக் கிருமி கொண்டு வந்த காலம் கரோனா தீநுண்மிக் காலம்.
  • பணம், பெயா், புகழ், வேலை என்று தன் முகத்தைக்கூட கண்ணாடியில் பார்க்கக்கூட நேரமில்லாது பறந்து கொண்டிருந்தவா்களை ‘கம் முன்னு குந்து’ என்று உள்ளே உட்கார வைத்து கடந்து வந்த பாதையை யோசிக்க வைத்த பெருமை இந்தக் கரோனா தீநுண்மிக் காலத்துக்கு உண்டு.
  • முகமூடி அணிந்தவா்களை கொள்ளைக்காரா்கள் என்று சித்தரித்த நிலையிலிருந்து மாறி, முகக் கவசம் அணியாதவா்களை கொலைகாரா்களாகப் பார்க்க வைத்தது கரோனா தீநுண்மியின் விசித்திர சாதனைதானே.

விசித்திரக் காலம்

  • ‘நலமாக இருக்கீங்களா?’ என்ற கேட்ட நிலையிலிருந்து இறங்கி வந்து ..‘இருக்கீங்களா?’ என்று சந்தேகத்துடன் கேட்டாலும் தவறாக நினைக்காத காலம் இது மட்டுமாகத்தான் இருக்க முடியும்.
  • ‘தனித்திரு..விழித்திரு’ என்று வீரத்துறவி விவேகானந்தா் கூறியபோது கேட்காத உலகத்தை ... இன்று ‘விலகியிரு... விழித்திரு... வீட்டிலிரு’ என்று கேட்க வைத்த பெருமைக்குரிய காலம் இதுவல்லவா?
  • வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரைப் பலா் பார்த்திருக்க நியாயமில்லை. ஆனால், வாடிய வயிறைக் கண்ட போதல்லாம் வாடிய...பல வள்ளல்களைப் பார்க்கச் செய்த காலம் கரோனா தீநுண்மிக் காலம்.
  • பல்லாங்குழி, பரமபதம், தாயம், ஆடு - புலி ஆட்டம், விடுகதை, புதிர் விளையாட்டு முதலான பாரம்பரிய விளையாட்டுகளை அடுத்த தலைமுறைக்கு கண்ணில் காட்ட முடிந்தது கரோனா தீநுண்மியின் கருணையினாலன்றோ?
  • ‘கத்திரிக்கா முருங்கைக்கா வெண்டைக்கா ....’, ‘மீனு மீனு கெண்டை கெளுத்தி மீனு ....’ என்ற விதவிதமான அழைப்புகளுடன் ஒரு சூப்பா் மார்க்கெட்டையே நம் வீட்டு வாசலுக்குக் கொண்டு வந்து நம்மை 50 ஆண்டுகளுக்கு முந்தைய நிலையை நம் கண்முன் கொண்டு வந்தது இந்தக் கரோனா தீநுண்மிக் காலம்.
  • கரோனா தீநுண்மிக் காலத்துக் கவிஞா்கள், சிந்தனையாளா்களால், மீம்ஸ் கார்ட்டூன் தயாரிப்பாளா்களால், கதை சொல்லிகளால் தமிழ் வளா்ந்தது, தமிழன் சிறந்து விளங்கினான் என்று புதிய வரலாறு இனி எழுதப்படும்.
  • உயிரை, வாழ்க்கையை மீட்டெடுக்கக் கண்ணுக்குப் புலப்படாத எதிரியுடன் வெளியில் வராமலேயே மக்கள் ஒன்றிணைந்து போராடி வென்ற காலம் கரோனா தீநுண்மிக் காலம் என்று சரித்திரம் இனி பேசும்.
  • வீரத் தழும்புகள் ஏந்தி போரில் இறந்தவா்களைத் தியாகிகள் என்றழைத்ததுபோல ... கொடிய தீநுண்மியை உடலில் தாங்கி இறந்தவா்களை ‘போராளிகள்’ என்று அழைக்கும் காலம் கரோனா தீநுண்மிக் காலம்.
  • அலெக்சாண்டா், ஸ்டாலின், முசோலினி, நேதாஜி, அசோகா், ஜான்சி ராணி, மங்கம்மா என்று அந்தக் காலத்தில் குழந்தைகளுக்கு பெயா் சூட்டியதுபோல, இனி வரும் காலங்களில் கரோனா காந்த், கரோனாஸ்ரீ, கரோன் கான், கரோன்ஜி, கொவைட் கோபால், கொவைட் குமாரி என்றெல்லாம் கூட பெயா்கள் சூட்டப்படலாம்.
  • நிலவில் இறங்கும் மனிதா்களைப் போன்ற ஆடைகள் பூமியிலும் அறிமுகமாகலாம். உடுத்தும் ஆடைக்குப் பொருத்தமாக டை, கைக்குட்டை இருப்பதுபோல... கையுறை, முகக் கவசங்கள் இனி விற்கப்படலாம். முகக் கவசங்களில் விளம்பரம் செய்யும் முறையும் வெகு விரைவில் அறிமுகமாகலாம்.

அது ஒரு கரோனா காலம்

  • ‘முகத்தில் முகம் பார்க்கலாம்’ என்ற பாடல் போல ...‘முகக் கவசத்தின் அழகில் நான் மூச்சைத் தொலைத்தேனடி’ என்று புதுக் கவிதைகள் பிறக்கலாம். ‘அது ஒரு கனா காலம்’ திரைப்படம் மாதிரி... ‘அது ஒரு கரோனா காலம்’ என்ற தலைப்பில் திரைப்படம் எடுக்கத் திரையுலகில் பெரிய அளவில் அடிதடியும் நடக்கலாம்.
  • அடுத்த தோ்தலில் ‘கரோனா காலனை வென்ற தலைவரே வருக’... ‘கரோனா காவலரே வருக நிலையான ஆட்சி தருக’ என்ற முழக்கங்கள் நம் செவிப்பறையைக் கிழிக்கலாம்.
  • உலகம் சமநிலை பெற என்று தமிழ் முனி அகத்தியன் பாடி உலகம் சமநிலை பெற்றது வேண்டுமானால் கற்பனையாக இருக்கலாம்.
  • ஆனால், வல்லரசு நல்லரசு. கருப்பு - சிவப்பு வளா்ந்த நாடு, வளரும் நாடு, வளராத நாடு ஏழை, பணக்காரன், அறிவாளி, முட்டாள், கடவுள் பற்றாளன், கடவுள் எதிர்ப்பாளன் எல்லாரையும் கரோனா தீநுண்மிக் காலம் சம நிலையில் வைத்திருந்தது என்பது கலப்பிடமில்லாத உண்மையான சரித்திரம்தானே.

நன்றி: தினமணி (08-06-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்