- நோய்த் தொற்றையும் தடுக்க வேண்டும், பொருளாதாரமும் சுணங்கிவிடக் கூடாது என்ற இரு நிலைகளுக்கு இடையில் நிர்வாகத்தை நடத்துவது சவால்தான். ஆனால், ஒரு நல்ல நிர்வாகத்தை மக்கள் அடையாளம் காணவும் இது ஒரு வாய்ப்பு.
- கிருமிப் பரவலைத் தடுக்கும் விதத்தில் இந்த ஊரடங்கில் மக்கள் முழுமையாக வீட்டுக்குள் இருக்க வேண்டும் என்றால், மக்களுடைய அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்திசெய்யும் பட்டியல் விஸ்தரிக்கப்பட வேண்டும். ஊரடங்கு தொடங்கி ஒரு மாதம் ஆகிவிட்டது; முடிதிருத்தகங்களுக்கான தேவை இந்த ஒரு மாதக் காலத்தில் பெருகியிருக்குமா, இருக்காதா? அத்தியாவசியத் தேவைகள் விரிவடைவதை அரசு இப்படித்தான் புரிந்துணர வேண்டும்.
- வீட்டிலிருந்து வேலை செய்ய முடிந்தவர்கள் எல்லாம் செய்யலாம் என்று கூறிவிட்டு, அதற்கு அவசியம் தேவைப்படும் மடிக்கணினி, மோடம், வைஃபை, ரவுட்டர்கள் உள்ளிட்டவற்றை விற்கும் கடைகளைத் திறக்கக் கூடாது என்று கண்டிப்புக் காட்டுவதால், ஒரு பயனும் இல்லை.
- வீட்டிலிருந்தே கணினி மூலம் வேலைசெய்ய அனுமதித்த அரசு தொலைத்தொடர்பு சம்பந்தப்பட்ட அத்தனை சேவைகளையும் செயல்பட அனுமதித்திருக்கலாம். எலெக்ட்ரீஷியன்கள், பிளம்பர்களை வேலைசெய்யலாம் என்று அனுமதித்துவிட்டு, அவர்களுக்குத் தேவைப்படும் பொருட்களை விற்கும் கடைகளைத் திறக்கக் கூடாது என்ற கட்டுப்பாட்டால் என்ன நன்மை?
- மளிகைக் கடைக்கு ஒருவர் வாரத்துக்கு ஒரு முறை செல்வார் என்றால், காலணிகள் கடைக்கு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை செல்வதே அதிகம். புத்தகக் கடைகளில் தமிழ்நாட்டில் என்றைக்கு நெரிசல் இருந்திருக்கிறது? ஏன் இவற்றையெல்லாம் அனுமதிக்க மறுக்கிறது அரசு?
- வேளாண்மை, தோட்டக்கலை, மின்உற்பத்தி, தகவல்தொடர்பு, சுகாதாரம், வங்கித் துறை, சரக்குப் போக்குவரத்து, பெட்ரோல் நிலையங்கள், சமையல் எரிவாயு விற்பனையகம், மருந்து விற்பனைக் கடைகள், மளிகைக் கடைகள், அடுமனைகள் ஆகியவை செயல்படுவதால் மக்கள் ஓரளவுக்குச் சமாளிக்க முடிகிறது.
- இந்த ஊரடங்குக் கலாச்சாரத்துக்கு முன்னோடியான சீனா தன் மக்களுக்கு மது வரை இணையச் சேவை வழியே வீட்டுக்குக் கொண்டுவந்து தர அனுமதித்தது என்பதை நம்முடைய அரசு தெரிந்துகொள்ள வேண்டும். ஒரு ஊரின் இயக்கத்துக்கு சக்கரம்போலான சிறு வணிகம் கிட்டத்தட்ட ஒன்றரை மாதமாக முடக்கப்பட்டிருப்பது சில்லறை வியாபாரிகளை முடக்கிப்போடுவதோடு, மக்களையும் மிகுந்த தொந்தரவுக்குள்ளாக்கும்.
- மக்களின் அத்தியாவசியத் தேவைகளுக்கான பட்டியலை அரசு விஸ்தரிக்கட்டும்; இயல்பான இயக்கம் நோக்கி நாடு மெல்ல நகரட்டும்.
நன்றி: தி இந்து (29-04-2020)