- தமிழகத்தில் ஓடும் வாடகை லாரிகளின் கட்டணங்களை 30% உயர்த்துவதாக லாரி உரிமையாளர்கள் எடுத்திருக்கும் முடிவு கடுமையான பின்விளைவுகளை நோக்கி இட்டுச் செல்லக் கூடியது.
- கடந்த சில மாதங்களில் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துவருவதைக் காரணம் காட்டி எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்துக்குக் காரணமாகிவிடக் கூடும். கரோனா பெருந்தொற்றின் காரணமாகக் காய்கறிகள், பழங்கள், மளிகைப் பொருட்கள் ஆகியவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
- பொதுமுடக்கம் படிப்படியாக விலக்கிக்கொள்ளப்பட்டாலும் எரிபொருட்களின் விலை உயர்வு காரணமாகக் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை குறையவில்லை. சாமானிய மக்களை மிகவும் நேரடியாகப் பாதிக்கக்கூடிய இந்த விஷயத்துக்கு தனிக்கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.
- லாரி வாடகையை உயர்த்துவதாக அறிவித்துள்ள லாரி உரிமையாளர்கள் டீசல் விலை உயர்வை மட்டுமின்றி காலாவதியான சுங்கச் சாவடிகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்திருக்கிறார்கள். நெடுஞ்சாலைத் திட்டங்கள் பயன்பாட்டுக்கு வரும்போதே சுங்கச்சாவடிகள் முடிவுக்கு வரும் தேதியைக் குறித்து வெளிப்படைத்தன்மையை பின்பற்ற வேண்டும்.
- சுங்கச்சாவடிகளைக் கால வரம்பின்றி தொடர்ந்து அனுமதித்துக்கொண்டே ஃபாஸ்டேக் முறையை வலியுறுத்துவது சரியானதாக இருக்க முடியாது.
- வாடகை லாரிகளின் கட்டண உயர்வானது உணவுப் பொருட்கள் மட்டுமின்றி கட்டுமானப் பொருட்களின் விலையும் உயரக் காரணமாக அமைந்துவிடும்.
- பெட்ரோல், டீசல் விலை உயர்வின் தொடர்ச்சியாக லாரிக் கட்டணங்கள் அதிகரிப்பதும் அதன் தொடர்ச்சியாக உணவுப் பொருட்கள் விலை உயர்வதும் தொடர்சங்கிலி விளைவுகளாகும்.
- அதே நேரத்தில், காய்கறிகள் பயிரிடும் விவசாயிகள் தங்களது உற்பத்திப் பொருட்களுக்குக் கூடுதல் விலையைப் பெறப் போவதில்லை. மாறாக, காய்கறிகள், மளிகைப் பொருட்களின் விலை உயர்வு என்பது வாடகைக் கட்டணத்துக்கே பெரிதும் செலவாகும். காய்கறிகள், பழங்களை வாங்குபவர்கள் அவற்றை ஏற்றிவந்த லாரிகளின் டீசல் செலவுகளுக்காகவே அதிகத் தொகையைக் கொடுக்கும் நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்கள்.
- பெட்ரோல், டீசல் விலையை உடனடியாகக் குறைக்க முடியாது என்ற நிலையில், அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிவரும் லாரிகளுக்குச் சுங்கச் சாவடிகளில் கட்டணச் சலுகை அளிப்பது குறித்தும்கூட பரிசீலிக்கலாம்.
- மத்திய அரசு தீவிரமாக முன்னெடுத்துவரும் தடுப்பூசித் திட்டத்தின் வாயிலாகப் பெருந்தொற்று அச்சம் நீங்கிவருகிறது என்றாலும்கூட வேலைவாய்ப்புகளில் பெரும் சுணக்கம் நிலவிவருகிறது என்பதும் இந்நிலை முடிவுக்கு வர மேலும் சில மாதங்கள் ஆகக் கூடும் என்பதுமே எதார்த்தம்.
- அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வானது வேலைவாய்ப்பின்மை காரணமாக கடும் சவாலை எதிர்கொண்டுள்ள அமைப்புசாராத் தொழிலாளர்களைப் பொருளாதாரச் சுமையை நோக்கி தள்ளிவிடக்கூடும்.
- விவசாயிகளே நேரடியாகத் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களைக் கொண்டுவந்து விற்பனை செய்யவும், பொதுமக்கள் அவற்றைக் குறைந்த விலையில் வாங்கவும் வாய்ப்பாக ஏற்கெனவே உருவாக்கப்பட்டுப் பெயரளவில் இயங்கிவரும் மலிவுவிலைக் காய்கறிக் கடைகளையும் வாரச் சந்தைகளையும் மேம்படுத்துவது குறித்தும் யோசிக்க வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (08-03-2021)