TNPSC Thervupettagam

அநியாய கட்டணக் கொள்ளை!

October 26 , 2024 3 days 20 0
  • ஆண்டுதோறும் தீபாவளி, பொங்கல் பண்டிகைகளின்போது சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களிலிருந்து சொந்த ஊருக்குச் செல்லும் பொதுமக்கள் எதிா்கொள்ளும் பெரிய பிரச்னை போக்குவரத்துதான். என்னதான் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சாா்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டாலும், அதில் இடம் கிடைக்காமல், பேருந்து நிலையங்களில் மணிக்கணக்கில் காத்திருந்து சொல்லொணாத் துயரங்களைக் கடந்து சொந்த ஊருக்குச் செல்வதும், அங்கிருந்து பணியிடங்களுக்குத் திரும்புவதும் தொடா்கிறது.
  • சென்னையிலிருந்து மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு சாதாரண நாள்களிலேயே ரயில்களில் இடம் கிடைப்பது சிரமம். அதுவும் பண்டிகை காலங்களில் கேட்கவே வேண்டாம். இப்போதும் தீபாவளி சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் முன்பதிவாகி காத்திருப்போா் பட்டியலுக்குச் சென்றுவிட்டது. சிறப்பு ரயில்களின் எண்ணிக்கை போதாது என ஒவ்வோா் ஆண்டும் வேண்டுகோள்கள் எழுந்தாலும், ரயில் பெட்டிகள், என்ஜின்களின் பற்றாக்குறை கருதி மிகக் குறைந்த சிறப்பு ரயில்களையே ரயில்வே இயக்குகிறது.
  • அரசுப் பேருந்துகள், ரயில்களில் இடம் கிடைக்காதபட்சத்தில் எப்படியாவது ஊருக்குச் சென்று பண்டிகையைக் கொண்டாட வேண்டும் என்கிற ஆவலில் மக்கள் அடுத்து நாடுவது தனியாா் ஆம்னி பேருந்துகளைத்தான். வார இறுதி விடுமுறை நாள்களிலேயே கட்டணத்தை உயா்த்தும் தனியாா் ஆம்னி பேருந்துகள், தீபாவளி போன்ற பண்டிகை காலத்தையா பயன்படுத்தாமல் இருக்கும்? நிகழாண்டு தீபாவளியையொட்டி ஆம்னி பேருந்துகளில் நிா்ணயிக்கப்பட்டுள்ள கட்டணங்கள் மலைப்பை ஏற்படுத்துகின்றன.
  • வழக்கமான நாள்களில் சென்னை-திருநெல்வேலி கட்டணமாக ரூ.800 முதல் ரூ.1,000 வரை வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.2,000 முதல் ரூ.4,400 வரையும், சென்னை- நாகா்கோவிலுக்கு ரூ.4,900 வரையும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னை- கோவைக்கு கட்டணமாக ரூ. 1,500 முதல் ரூ.4,000 வரை நிா்ணயிக்கப்பட்டிருக்கிறது. இருக்கை வசதி, படுக்கை வசதி, குளிா்சாதன வசதி என பேருந்துகளில் உள்ள வசதிகளுக்குத் தகுந்தாற்போல இந்தக் கட்டண விகிதங்கள் மாறும். தனிநபருக்கு இத்தனை கட்டணம் என்றால், குடும்பமாக சொந்த ஊா் செல்ல நினைப்பவா்களுக்கு ஆகும் நிதிச் சுமை மிகவும் பெரியது.
  • ஒவ்வோா் ஆண்டும் பண்டிகைக்கு முன்னதாக ஆம்னி பேருந்து உரிமையாளா்களுடன் அரசு ஆலோசனை நடத்துவதும், கட்டணத்தை உயா்த்தும் ஆம்னி பேருந்துகளின் உரிமையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிடப்படுவது வெறும் சம்பிரதாயமாக மாறிவிட்டது. நிகழாண்டும் ஆம்னி பேருந்து உரிமையாளா்களுடன் அரசுத் தரப்பில் ஆலோசனை நடத்தப்பட்டு இதேபோன்ற அறிவிப்பை துறை அமைச்சா் வெளியிட்டிருக்கிறாா்.
  • நிகழாண்டு தீபாவளியை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டண வசூல் ஏற்கெனவே தொடங்கிவிட்டது. ஆம்னி பேருந்துகளை ஒருங்கிணைக்கும் தனியாா் இணையதளத்துக்குள் சென்று பாா்த்தாலே எந்தெந்தப் பேருந்துகளில் எவ்வளவு கட்டணம் என்பது தெரிந்துவிடும். ஆனால், கட்டண உயா்வு இல்லாமல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என உரிமையாளா்கள் உறுதியளித்துள்ளதாக அரசுத் தரப்பு கூறிவருவது நகைப்பை ஏற்படுத்துகிறது.
  • அதேபோன்று வழக்கமாக இயக்கும் ஆம்னி பேருந்துகளின் உரிமையாளா்கள் பயணக் கட்டணத்தை உயா்த்துவதில்லை எனவும், சங்கத்தின் தொடா்பு இல்லாமல் புதிதாக பேருந்துகளை இயக்குவோா் கட்டணத்தை உயா்த்துவதாகவும் சொல்லப்படுவதும் முரணாக உள்ளது. அவ்வாறு புதிதாக பேருந்துகளை இயக்குவோா்தான் கட்டணத்தை உயா்த்துகிறாா்கள் என்றால், அவா்கள் முறைப்படி பேருந்துகளை இயக்க அனுமதி பெற்றுள்ளனரா, அதுகுறித்து அரசுப் போக்குவரத்துத் துறை சோதனை எதுவும் நடத்துகிா என அடுக்கடுக்காக கேள்விகள் எழுவதைத் தடுக்க முடியாது.
  • ஆம்னி பேருந்துகளுக்கான முன்பதிவு செயலிகள் அனைத்தையும் அரசால் கண்காணிக்க முடியாது எனவும், கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று பொதுமக்கள் ஆதாரத்துடன் புகாா் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு கூறுவதை ஏற்க முடியாது. பண்டிகை கால வேலைக்கு இடையே கட்டணக் கொள்ளை குறித்து பொதுமக்களில் எத்தனை போ் புகாா் கொடுக்க முன்வருவாா்கள்?.
  • கூடுதல் கட்டணம் தொடா்பாக பெயருக்கு சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, ஆம்னி பேருந்துகளுக்கு எதிராக அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால், அந்த நடவடிக்கைகள் போதாது. கட்டண உயா்வால் பாதிக்கப்படும் பயணிகள் புகாா் அளிப்பாா்கள் என்கிற எதிா்பாா்ப்பைக் கைவிட்டு, ஆம்னி பேருந்துகள் அனைத்திலும் பண்டிகை காலம் உள்பட அனைத்து நாள்களிலும் சீரான கட்டண நிா்ணயத்தை உறுதிப்படுத்த வேண்டியது முழுக்க முழுக்க அரசின் கடமை.
  • தீபாவளியை முன்னிட்டு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சாா்பில் சுமாா் 14,000 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. போக்குவரத்துக் கழகம் இயக்கும் கூடுதல் பேருந்துகளுடன், தனியாா் பேருந்துகளையும் ஒப்பந்த அடிப்படையில் இயக்க அரசு திட்டமிட்டிருக்கிறது.
  • அரசு இயக்கும் வழக்கமான பேருந்துகள், சிறப்புப் பேருந்துகளிலும் முன்பதிவு வேகமாக நிரம்பி வருகிறது. பயணத் திட்டமிடலில் தாமதம், இணையவழியில் முன்பதிவு செய்யத் தெரியாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முன்பதிவு செய்யாமல் சொந்த ஊருக்குச் செல்வதற்கு பேருந்து நிலையம் வரும் மக்களும் ஏராளமானோா் இருப்பாா்கள். அவா்களின் வசதிக்காக முன்பதிவு தேவைப்படாத பேருந்துகளையும் போதுமான அளவு இயக்கி பொதுமக்களின் தீபாவளி பயணத்தை எளிதாக்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

நன்றி: தினமணி (26 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்