TNPSC Thervupettagam

அந்த்யோதயாவை முன்மொழிந்த சிந்தனையாளர்!

February 11 , 2021 1441 days 1017 0
  • இந்தியாவின் தலைசிறந்த சிந்தனையாளர்களுள் ஒருவர் பண்டிட் தீனதயாள்உபாத்யாயா.
  • இந்தியாவின் அரசியல் வானை மாற்றியமைத்த அரசியல் கட்சியான பாஜகவின் முன்னோடி அமைப்பான பாரதியஜனசங்கத்தின் தலைவராக அனைவராலும் அறியப்பட்டவர். அவரது நினைவுநாள் இன்று (பிப்ரவரி 11).
  • மனஉறுதி கொண்ட தேசியவாதி, சிறந்த தத்துவ அறிஞர், பொருளாதார வல்லுநர், சமூகவியல் அறிஞர், வரலாற்றாசிரியர், இதழாளர், அரசியல் அறிவியலாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் அவர்; அரசியல், சமூகம், இலக்கியம் என அனைத்துக் களங்களிலும் முத்திரை பதித்தவர்.
  • அவர், 1937-இல் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தில் (ஆர்.எஸ்.எஸ்.) இணைந்து 1942-ஆம் ஆண்டிலிருந்து தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர். இவர் பாரதிய ஜனசங்கத்தின் பொதுச் செயலாளராக, தலைவராக இருந்த காலகட்டத்தில்தான் கட்சி மாபெரும் வளர்ச்சி பெற்றது.
  • தீனதயாள், தனது வாழ்க்கை முழுவதையும் தேச நலனுக்காக அர்ப்பணம் செய்தவர். சமூகப் பணிகளில் நேரடியாக ஈடுபட்டு மக்களின் கஷ்டங்களை உணர்ந்தவர். அவர், இந்த தேசத்தின் இயற்கை அமைப்பு, கலாசாரம், தர்மம் மற்றும் ஆன்மிகத்தைத் தெளிவாகக் கற்றுணர்ந்தார். பாரதத்தின் நாகரிகம் சார்ந்த அரசியல் பயணத்திற்கு இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.
  • பாரதத்தின் இயல்பு மற்றும் பாரம்பரியத்துடன் இணக்கமான ஓர் அரசியல் தத்துவத்தை உருவாக்க தீனதயாள் விரும்பினார். இது பாரதத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றத்தையும் உறுதி செய்வதாக அமைந்தது.
  • ஓர் அமைப்பாளராக அவர் ஓர் அரசியல் கட்சியின் அடித்தளத்தை அமைத்தார், பின்னாளில் இக்கட்சியானது இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக உருவானது. உபாத்யாயாவின் வாழ்க்கை பல சவால்களும், சிரமங்களும், பிரச்னைகளும் நிறைந்தது. உத்தரப்பிரதேச மாநிலம், மதுரா மாவட்டத்திலுள்ள நாக்லா சந்திரபான் என்ற கிராமத்தில் பிறந்தார். சிறுவயதிலேயே தாய், தந்தையரை இழந்தார்; உடன்பிறந்த தம்பியையும் இழந்தார். உறவினர்களால் வளர்க்கப்பட்டார்.
  • ராஜஸ்தான் மாநிலம், கங்காபூரில் ஆரம்பக் கல்வியையும், பின்னர் ராஜ்தூரில் 8 மற்றும் 9-ஆம் வகுப்பும், சிகாரில் 10-ஆம் வகுப்பும், பின்னர், 1935-இல் பிலானியிலுள்ள பிர்லா கல்லூரியில் பள்ளி மேல்நிலைக்கல்வியும் பயின்றார்.
  • இந்த மேல்நிலைக் கல்வித் தேர்வில் மிக அதிக மதிப்பெண்கள் பெற்றதற்காக, தங்கப் பதக்கமும், மேல்படிப்பிற்கான கல்வி உதவித்தொகையும் பெற்றார். தீனதயாள் தனது பட்டப்படிப்புக்காக கான்பூரிலுள்ள சனாதன் தர்மக் கல்லூரியில் சேர்ந்தார்.
  • அப்போது, சுந்தர்சிங் பண்டாரி, பல்வந்த் மகா சாப்தே ஆகியோருடன் நட்பு கொண்டர். 1937-இல் பல்வந்த் சாப்தே மூலமாக ஆர்.எஸ்.எஸ்.ஸில் சேர்ந்தார். ஆர்.எஸ்.எஸ்.ûஸத் தோற்றுவித்த டாக்டர் ஹெட்கேவருடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார்.
  • அது அவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அவர் ஒரு பிரசாரகருக்கான வாழ்க்கையைத் தழுவி ஆர்.எஸ்.எஸ்.ஸில் முழுநேர ஊழியரானார்.
  • நாற்பதுகளில் அவர் ஆர்.எஸ்.எஸ்.ஸின் முழுநேர ஊழியராக ஆனபோது இந்தியாவில் சுதந்திர இயக்கத்திற்கான போராட்டம் உச்சத்தில் இருந்தது. அவர் அன்னியர் ஆட்சிக்கு எதிரானவராக இருப்பினும், மகாத்மா காந்தியின் தலைமையில் நடைபெற்ற சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்கவில்லை.
  • ஆர்.எஸ்.எஸ்.ஸின் திட்டம் மற்றும் கொள்கையின்படி இந்து சமூகத்தை ஒழுங்கமைப்பதன் நோக்கத்தை நிறைவேற்ற அவர் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார்.
  • தீனதயாள் ஹிந்தி, ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் திறம்பட எழுதக்கூடியவர். 1940-களில் லக்னெüவிலிருந்து "ராஷ்ட்ர தர்ம பிரகாஷன்' என்ற பதிப்பகத்தை நிறுவி "ராஷ்ட்ர தர்மா' என்ற மாத இதழைத் தொடங்கினார். "பாஞ்சஜன்யா' என்ற ஹிந்தி வாராந்திர இதழையும் 1940-50-இல் "சுதேசி' நாளிதழையும் வெளியிட்டார்.
  • "சந்திரகுப்த மெüரியர்' என்ற நாடகத்தை எழுதியுள்ளார். பின்னர் "சாம்ராட் சந்திரகுப்தா', "ஜகத்குரு சங்கராச்சாரியார்' ஆகிய இரண்டு புத்தகங்களை எழுதினார்.
  • ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் ஹெட்கேவாரின் மராத்திய மொழியிலான வாழ்க்கை வரலாற்றை மொழிபெயர்த்தார். "ஆர்கனைசர்' என்ற ஆங்கில வார இதழில் "அரசியல் டைரி' என்ற தலைப்பில் தொடர்ந்து எழுதி வந்தார். இவர், தனது கருத்துகளைப் பல தத்துவக் கட்டுரைகளாகவும் உரைகளாகவும் வெளிப்படுத்தினார்.
  • 1951-ஆம் ஆண்டு, ஆர்.எஸ்.எஸ். ஆதரவுடன் டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி பாரதிய ஜனசங்கத்தை நிறுவியபோது, பாரதிய ஜனசங்கத்தில் சேருமாறு தீனதயாள் உபாத்யாயா பணிக்கப்பட்டார். உடன் கட்சியின் உத்தரப்பிரதேச மாநில பொதுச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார்.
  • பின்னர் 1952-ஆம் ஆண்டில் அகில இந்திய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். டாக்டர் எஸ்.பி.முகர்ஜி பாரதிய ஜனசங்கத்தை நிறுவிய இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு காஷ்மீர் சிறையில் மர்மமான முறையில் திடீரென இறந்தார்.
  • முகர்ஜியின் இறப்பைத் தொடர்ந்து அடுத்த 15 ஆண்டுகள் கட்சிக்காக, அதன் பிரதான இலக்கான தேசிய அந்தஸ்து கிடைக்கவும் சித்தாந்தங்கள் வேரூன்றவும், தீனதயாள் அயராது உழைத்தார்.
  • அந்தக் கொந்தளிப்பான காலகட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளராக செயல்பட்டார். "இரண்டே இரண்டு தீனதயாள்கள் இருந்தால் போதும், இந்தியாவின் அரசியல் முகமே மாறிவிடும்' என்று சியாமா பிரசாத் முகர்ஜி இவரைப் பற்றிக் கூறுவார்.
  • பின்னர், 1967-ஆம் ஆண்டு டிசம்பரில் பாரதிய ஜனசங்கத்தின் தலைவரானார். ஆனால் சில மாதங்களிலேயே தீனதயாளும் மர்மமான முறையில் கொல்லப்பட்டார். 1968 ஆம் ஆண்டு பிப்ரவரி 11 அன்று, வாராணசி அருகே மொகல்சராய் ரயில் நிலையத்தின் (தற்போது தீனதயாள் ரயில் நிலையம்) நடைபாதையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.
  • ராம் மனோகர் லோகியா, சரண்சிங் மற்றும் பிறருடன் இணைந்து, தீனதயாள் முதன் முதலாக காங்கிரசுக்கு எதிராக 1963 ஆம் ஆண்டிலும் பின்னர் 1967-ஆம் ஆண்டிலும் ஒரு கூட்டணியை உருவாக்கினார்.
  • இதன் விளைவாக, ஆறு வட மாநிலங்களின் நாடாளுமன்றத் தேர்தல்களில் காங்கிரஸூக்கு எதிரான அலை உருவானது. 1967-இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் ஆறு வட மாநிலங்களில் மாற்றுக் கட்சிகள் ஆட்சியைப் பிடித்தன.
  • இது அரசியல் பன்முகத் தன்மைக்கு இடமளித்ததோடு, வெல்ல முடியாதது காங்கிரஸ் என்ற நம்பிக்கையையும் சிதைத்தது. இது இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தின் அடையாளமாக இருந்தது.
  • 1977-ஆம் ஆண்டில், மொரார்ஜி தேசாய் தலைமையில் ஜனதா கட்சி மத்தியில் அரசாங்கத்தை அமைத்த போது, காங்கிரஸ் அல்லாத மாற்று அரசு என்கிற தீனதயாளின் கனவு நனவாகியது.
  • ஒருங்கிணைந்த மனிதநேயம் (ஏகாத்ம மானவ வாதம்) எனப்படும் கருத்துகளின் தொகுப்பை, ஏப்ரல் 1965-இல் புணேயில் ஆற்றிய நான்கு சொற்பொழிவுகளில் ஒரு தெளிவான வழிமுறையாக தீனதயாள் வழங்கினார்.
  • இக்கருத்துகள் தொடர்பான அவரது சிந்தனைக்கூறுகள், ஏற்கெனவே ஜனசங்கத்தில் விவாதிக்கப்பட்டு, 1965 ஜனவரியில் விஜயவாடாவில், கட்சியின் அடிப்படைச் சித்தாந்த அறிக்கையாக ஏற்றுக் கொள்ளப்பட்டன. இது ஒரு சுதேச பொருளாதார மாதிரியை முன்வைத்து இந்திய சமூகத்தின் பரந்த பிரிவினரை ஈர்க்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.
  • தீனதயாளைப் பொருத்த வரை, மனிதனுக்கு முதன்மையான இடத்தைத் தராத எந்தவொரு அமைப்பும் இறுதியில் சிதைந்துவிடும். இவரது அறிவு செறிந்த இச்சொற்பொழிவு, சரியான கண்ணோட்டத்தில் மனிதனுக்கான இடத்தை ஒருங்கிணைந்த மனிதநேயத்தின் வடிவத்தில் மீண்டும் நிலைநிறுத்துகிறது. மேலும் மனிதனை ஒரு முழுமையான ஆளுமையுடன் கூடியவனாக வளர்க்க முயற்சிக்கிறது.
  • தீனதயாள் உபாத்யாயாவின் ஒருங்கிணைந்த மனிதநேயக் கோட்பாடு, அதன் அடிப்படை ஆதாரத்தை, இந்திய ரிஷிகள் மனித குலத்துக்கு வழங்கிய பண்டைய ஞானத்திலிருந்து பெற்றுள்ளது; ஆதிசங்கரரின் அத்வைத கருத்துகளை தன்னுள் கொண்டுள்ளது.
  • தீனதயாள், ""முதலாளித்துவம், சோஷலிசம் போன்ற அமைப்பு முறைகளால் கடவுளின் மிக உயர்ந்த படைப்பான மனிதன் தனது சொந்த அடையாளத்தை இழக்கிறான். எனவே நாம் மனிதனை அவனுடைய சரியான நிலையில் மீண்டும் நிலைநிறுத்த வேண்டும். தனது சிறப்பை அவன் உணருமாறு செய்ய வேண்டும்.
  • அவனது திறன்களை மீண்டும் எழுப்ப வேண்டும். மேலும் அவனது உள்ளார்ந்த ஆளுமையின் மிகச் சிறப்பான இடத்தை அடைவதற்கு மனிதனை ஊக்குவிக்க வேண்டும். இதை ஒரு பரவலாக்கப்பட்ட பொருளாதாரத்தின் மூலம் மட்டுமே நிறைவேற்ற முடியும். ஆதலால் சுதேசி மற்றும் பரவலாக்கம் ஆகியன தற்போதைய சூழலுக்கு ஏற்ற பொருளாதாரக் கொள்கை'' என பரிந்துரைக்கிறார்.
  • ஒருங்கிணைந்த மனிதநேயம், மேற்கத்திய அறிவியலை வரவேற்றாலும், மேற்கத்திய முதலாளித்துவம், மார்க்சிய சோஷலிசம் ஆகிய இரண்டையும் எதிர்க்கிறது. இது முதலாளித்துவத்திற்கும் சோஷலிசத்திற்கும் இடையில் ஒரு நடுத்தர நிலையை நாடுகிறது.
  • முதலாளித்துவமும் கம்யூனிசமும் பொருளாதார பலத்தின் மீது மட்டும் தங்களது கவனத்தைச் செலுத்துவதால், தீனதயாள் இவ்விரண்டையும் புறக்கணித்தார்.
  • முதலாளித்துவத்தில் செல்வத்தின் செறிவு ஒருசிலரின் கைகளிலும், கம்யூனிசத்தைப் பொருத்தவரை அரசின் கைகளிலும் இருக்கிறது. இவை இரண்டிலும், தனிமனிதன் ஒரு பலவீனமான, முக்கியத்துவமற்ற நபராகக் கருதப்படுகிறான்.
  • உபாத்யாயாவின் கூற்றுப்படி மனிதகுலத்தின் உடல், மனம், புத்தி, ஆன்மா ஆகிய படிநிலை ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்ட பண்புகள் நான்கு உலகளாவிய நோக்கங்களான காமம் (ஆசை), அர்த்தம் (செல்வம்), தர்மம் (தார்மீகக் கடமைகள்), மோட்சம் (வீடுபேறு) ஆகியவற்றுடன் ஒத்திருக்கிறது.
  • இவை நான்கும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. எதையும் புறக்கணிக்கவியலாது என்றாலும் கூட, தர்மம் அடிப்படையானது; மோட்சம், மனிதகுலத்தின் இறுதி இலக்கு என்கிறார்.
  • "அந்த்யோதயா' என்ற கருத்தையும் பண்டிட் தீனதயாள் உபாத்யாயா முன்வைத்தார். அதாவது வரிசையின் கடைக்கோடியில் நிற்கும் மனிதனின் நலனுக்கான திட்டம் இதுவாகும். தீனதயாள் உபாத்யாயா எளிய மக்களின் முன்னேற்றத்துக்காக அதிகமாக எழுதியும் பேசியும் வந்தார்.
  • ஏழை - எளிய மக்களுக்குப் பணியாற்றுவதே அரசியலின் முழுநோக்கம் என இவர் நினைத்தார். பல நூற்றாண்டுக் காலமாக அந்நியரின் ஆதிக்கம் மற்றும் மோசமான நடவடிக்கைகளைத் தாங்கி, தேசத்தின் ஆன்மாவை உயிரோடு வைத்திருந்த ஏழ்மையான, பாரம்பரியமான குடும்பத்தைச் சார்ந்த எளிய மக்கள் தீனதயாளின் கவனத்தை ஈர்த்தவர்கள் ஆவர்.
  • தனது பெரும்பாலான அரசியல் அறிக்கைகளில், நாட்டின் எதிர்காலம் இந்த சாமானியரின் கைகளில் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
  • "நமது நாட்டின் முன்னேற்றத்தையோ, அதற்காக அரசாங்கம் என்ன செய்தது அல்லது விஞ்ஞானிகள் எதைச் சாதித்தார்கள் என்பதைப் பற்றியோ நான் மதிப்பிட மாட்டேன். ஆனால் நமது நாட்டின் முன்னேற்றத்தை, கிராமத்தில் உள்ள மனிதனின் முன்னேற்றத்தின் அடிப்படையில், தனது குழந்தைகளுக்கு எந்த அளவுக்கு சிறந்த வாழ்க்கையை அமைத்துத் தருவதற்கான திறன் அவனிடம் உள்ளது என்பதைப் பொருத்தே மதிப்பீடு செய்வேன்' என்று எழுதினார்.
  • மனித குலத்தின் கலாசார அடித்தளத்தில் நவீன இந்திய அரசியலை கட்டமைக்கத் தூண்டிய அசாதாரண மனிதர்களில் ஒருவராக பண்டிட் தீனதயாள் உபாத்யாயா திகழ்ந்தார். இந்தியாவின் அறிவுசார் மற்றும் அரசியல் வரலாற்றில் தீனதயாள் உபாத்யாயா இன்னும் தனக்குரிய சரியான இடத்தைப் பெறவில்லை.

நன்றி: தினமணி  (11-02-2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்