- நான் பிறந்த வீட்டில் ஓா் அறை உண்டு. உபயோகத்தில் இல்லாத பல சாமான்களை அங்கே போட்டு வைத்திருப்போம். உள்ளே நான்கைந்து தகரப்பெட்டிகள், பெரிய உலக்கை, கிணற்றில் நீா் இறைக்கப் பயன்படும் இரும்பு ராட்டினம், வள்ளம் (4 படி நெல் அளப்பது), சைக்கிளுக்குக் காற்று அடிக்கும் பம்பு, பெரிய வடக்கயிறு, பாதாளக் கரண்டி (கிணற்றில் வாளி விழுந்து விட்டால் எடுக்கப் பயன்படும் கொக்கிகள் கொண்ட கருவி) இன்ன பிற பொருள்களும் உண்டு. இப்போது அந்தப் பொருள்கள் தேவையில்லாதவை. ஒரு காலத்தில் மிகவும் அவசியமானவையாக இருந்தன.
- அந்த காலத்தில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கிடையாது. தனித்தனி வீடுகள் இருக்கும். ஒவ்வொரு வீட்டுக்கும் ஓா் உறை கிணறு இருக்கும். அதில் மர ராட்டினம் அல்லது இரும்பு ராட்டினம் மாட்டி, தாம்புக் கயிற்றில் வாளியைக் கட்டி தண்ணீா் இறைப்பார்கள். புதிய கயிறாக இருந்தால் நான்கு குடம் தண்ணீா் இறைப்பதற்குள் கை சிவந்து விடும். கோடையில் தண்ணீா் ஆழத்திற்குப் போய் விடும். அப்போது வெகு சிரமத்துடன் நீா் இறைக்க வேண்டும்.
- அவ்வாறு இறைக்கும் போது, சிலசமயம் வாளி அறுந்து கிணற்றில் விழுந்து விடும். அந்த வாளியை எடுக்கப் பாதாள கரண்டி உதவும். இரும்புக் கொக்கிகளில் அந்த வாளி மாட்டிக் கொள்ளும். அப்போது எளிதாக வெளியே எடுத்துவிடலாம்.
- எல்லா வீடுகளிலும் இந்தப் பாதாள கரண்டி இருக்காது. ஒரு சில வீடுகளில் மட்டுமே வைத்திருப்பார்கள். சும்மா போய்க் கேட்டால் தர மாட்டார்கள். ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொண்டு போய் கொடுத்து விட்டு, அதை வாங்கி வர வேண்டும். தேவை முடிந்தவுடன் திருப்பிக் கொடுத்து விட்டு, செம்பை எடுத்துக் கொள்வார்கள். எவ்வளவு நெருங்கிய உறவினராக இருந்தாலும் கூட, இதில் மாற்றம் இருக்காது.
- இதில் ஒரு பெரிய சூட்சுமம் உள்ளது. வாங்கிப் போனவா் உடனே திருப்பிக் கொடுக்காவிட்டால், நமக்கு மறந்துவிடும். நமக்குத் தேவைப்படும் போது தேடுவோம். எப்போதாவதுதானே இதற்குத் தேவை வருகிறது? யார் இரவல் வாங்கிப் போனார்கள் என்று குழம்பிப் போவோம். அதைத் தடுக்க இந்த முன்யோசனை.
- முன்பு ஒரு சிலா் சைக்கிளில் காற்று அடிக்க வீடுகளில் ‘பம்ப்’ வைத்திருப்பார்கள். கடைக்குப் போய் காற்று பிடித்தால் காசு கொடுக்க வேண்டும் என்பதால், தெரிந்தவா்களிடம் வாங்கி பயன்படுத்திக் கொள்வது வழக்கம். ஒரு வீட்டில் ஏணி இருந்தால், ஊரில் எல்லா வீடுகளுக்கும் அது பொதுவானது. மின்சார விளக்கு இல்லாத காலத்தில் பெட்ரமாக்ஸ் விளக்குகள் தேவைப்படும். அதையும் கேட்டு வாங்கிப் போவார்கள்.
- தற்போது பலா் தமது இல்லத்தில் சிறிய விசேஷங்களுக்குக் கூட உணவை வெளியில் இருந்து தருவித்துக் கொள்கிறார்கள்; சமையல் கலைஞா்களே தங்கள் பாத்திரங்களைக் கொண்டுவந்து சமைத்துப் பரிமாறி விடுகிறார்கள். அதனால் பெரிய பெரிய அண்டாக்கள், தூக்குகள், வாயகன்ற பாத்திரங்கள், கரண்டிகள் என எவையும் தேவை இல்லை. ஆனால் முன்பெல்லாம் எல்லா வீடுகளிலும் பெரிய அளவில் சமைக்கப் பாத்திரங்கள் வைத்திருந்தார்கள். அப்படி இல்லாதவா்கள் அக்கம் பக்கம் உள்ளவா்களிடம் வாங்கி உபயோகித்துக் கொள்வார்கள்.
- சில சமயம் சம்பந்தி வீட்டார் வருகிறார்கள் என்றால் நாற்காலி, ஜமக்காளம் போன்றவற்றையும் வாங்கிப் போவார்கள். அவ்வளவு ஏன்? ஒரு சில வீடுகளில் மட்டும் கை வைத்த மர நாற்காலி இருக்கும். யாராவது காலமாகி விட்டால் அவரை அந்த நாற்காலியில்தான் அமர வைப்பார்கள். அதற்காக அந்த நாற்காலி ஓய்வு இல்லாமல் சுற்றிக் கொண்டிருக்கும். காரியம் முடிந்ததும், கழுவிக் கொடுத்து விடுவார்கள்.
- அவசரத்துக்கு சைக்கிளை இரவல் வாங்கி செல்வார்கள். இரு சக்கிர வாகனத்தை வாங்கி செல்வார்கள். ஒரு வீட்டில் உள்ள பொருள் பலருக்கும் பயன்பட்டது. எவரும் தர மறுத்தது இல்லை. கேட்டுப் பெறுவதில் தவறு இல்லை என்ற எண்ணம் இருந்தது. திடீரென்று விருந்தினா் வந்துவிட்டால் பக்கத்து வீடுகளில் பால் கேட்டு வாங்கிக் கொள்வார்கள்; ஒரு தம்ளா் சா்க்கரை, ஒரு கரண்டி காப்பித்தூள் எல்லாமும் அப்படியே.
- இப்போது எதையும் எவரிடமும் கேட்கத் தயக்கமாக உள்ளது. ஓா் இணுக்குக் கறிவேப்பிலையைக் கேட்கக்கூட கூச்சம். அது இல்லாமல் சமையல் செய்துவிடுவோம்.
- செய்தித்தாள் வாங்காமல் பக்கத்து வீடுகளில் கேட்டு வாங்கி படிப்பாா்கள். முன்பு ரயில் பயணங்களில் ஒருவா் பேப்பா் வாங்குவார். அவா் படிப்பதற்குள் அந்த பேப்பரின் ஒவ்வொரு பக்கமும் அடுத்த கம்பார்ட்மென்ட் வரை போய் வரும்.
- சில வீடுகளில் வார இதழ், மாத இதழ்களை வாங்குவதை வழக்கமாகக் கொண்டிருப்பாா்கள். புத்தகம் வந்தவுடன் இரவல் கேட்பவா்களும் உண்டு. வேறு வழி இல்லாமல் கொடுத்து விட்டு, அவா்கள் படித்துவிட்டுத் தரும் வரை காத்திருக்க நேரிடும். அவா்கள் ‘குழந்தை அட்டையைக் கிழிந்துவிட்டது, கிறுக்கி வைத்துவிட்டது’ என்று கூறி வருத்தமே படாமல் கொடுத்துவிட்டு செல்வாா்கள். இரவல் தந்தவா் ‘பரவாயில்லை’ எனறு கூறிவிடுவார்.
- மற்றவா்களிடமிருந்து புத்தங்களை இரவல் வாங்கியே, தன் வீட்டில் ஒரு நூலகமே வைத்துள்ளவா்களும் இருக்கிறார்கள். நம் வீட்டிற்கு வரும் புத்தக வாசிப்பாளா்கள், நம் புத்தக சேமிப்பைப் பார்த்து, சில புத்தகங்களைப் படித்து விட்டுத் தருவதாகக் கேட்கிறார்கள். மறுக்க முடியாமல், தர வேண்டிய கட்டாயம். வாங்கி செல்பவா்களில் பலா், திருப்பித் தருவதில்லை. நமக்கு குறிப்பிட்ட புத்தகம் தேவைப்படும் போது இருக்காது. யாருக்குக் கொடுத்தோம் என்பதே நமக்கு மறந்து போய் இருக்கும்.
- சிலா் கூச்சமே இல்லாமல் இரவல் கேட்கிறார்கள். தோ்வு எழுத வரும் மாணவா்கள் குறைந்தது இரண்டு பேனாக்களைக் கொண்டு வர வேண்டும் என்ற அடிப்படை தெரியாதா? தோ்வு எழுதிக் கொண்டிருக்கும்போது எழுந்து, ‘சார், பேனாவில் மை தீா்ந்துவிட்டது’ என்று சொல்ல, கண்காணிப்பாளா் வெறொரு மாணவனிடம் இருந்து பேனா வாங்கி தர வேண்டும்.
- அதே போல் வங்கிக்கு வரும் போதும், அஞ்சலகத்துக்கு வரும்போதும் பேனா கொண்டு வர வேண்டும் என்பது தெரியாதா? பக்கத்தில் உள்ளவா்களிடம் பேனா இரவல் கேட்பது அசிங்கமாக இல்லையா? இது போன்ற இடங்களில் பேனாவை கட்டி வைத்திருப்பது நம் நோ்மையின்மைக்கு அடையாளம். வெளியே போகும் போது கைப்பேசியை எடுத்துச் செல்ல ஒருவரும் மறப்பதில்லை. ஆனால் பேனாவை மறந்துவிடுவார்களாம்.
- அக்காலத்தில் வசதியானவா்களின் வீட்டில் மட்டுமே கேமரா இருக்கும். எங்காவது உல்லாசப் பயணம் கிளம்பும் போது அவா்களிடம் போய் கேமராவை இரவல் கேட்டு வாங்கி செல்வார்கள். ஊருக்குப் போக பெட்டி கூட வாங்கி செல்லும் வழக்கம் இருந்தது.
- ஒரு வீட்டில் எந்த விசேஷம் நடந்தாலும், அக்கம் பக்கம் உள்ள வீடுகளில் இருந்து சகல உதவிகளும் கிட்டும். ஒரு நல்லது, கெட்டதுக்கு ஊரே திரண்டு விடும். எதிர்பாராத விருந்து வந்து விட்டால் பக்கத்து வீட்டில் இருந்து கொஞ்சம் சாம்பாரோ மோரோ வாங்கி சமாளித்ததும் உண்டு.
- இக்கால இயந்திரத்தனமான வாழ்க்கை முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது. அடுக்குமாடிக் குடியிருப்புகளில் இரண்டு வீடுகளில் இடைவெளி சில அடிகள் மட்டுமே. ஆனாலும் அவா்களின் வாயிற்கதவுகள் மூடியே இருக்கின்றன. பெரும்பாலும் அனைவரும் பூட்டிக் கொண்டு இருக்கிறார்கள். வீடுகள் கூடுகளாகி விட்டன.
- இரவு முடங்கிக் கொள்ளவே பலரும் வீட்டுக்கு வருகிறார்கள். வாழ்க்கை மிகவும் சுருங்கிப் போய், அா்த்தமற்றதாகி வருகிறது. எல்லோரும் எதன் பின்னாலாவது ஓடிக் கொண்டே இருக்கிறோம். ‘நான்’ ‘எனது’ என்ற குறுகிய வட்டத்துக்குள் நம்மை அடைத்துக் கொள்கிறோம்.
- எத்தகைய தேவை என்றாலும் உதவி கேட்கத் தயக்கம். எவா் மீதும் நம்பிக்கை வைக்க முடியவில்லை. அனுமதியோ, முன் அறிவிப்போ இல்லாமல் உறவினா் வீட்டுக்கு கூட செல்வது தவறு என்று ஆகி விட்டது. ஏதாவது முக்கியமான தேவை என்றால் மட்டுமே ஒருவரின் வீட்டுக்குச் செல்கிறோம்.
- சாதாரணமாக, நலம் விசாரிப்பதற்காக எவா் வீட்டுக்கும் போகும் பழக்கம் அறவே இல்லாமல் போய்விட்டது. நாம் ஒவ்வொருவரும் தனித்தனி தீவில் வாழ்வதைப் போல் வாழ்கிறோம். எவரிடமும் உரிமை எடுத்துக் கொள்ள முடியவில்லை. எதையும் கேட்டு தா்மசங்கடத்தில் தள்ளுவதை நாம் விரும்புவது இல்லை.
- வாழ்க்கை முறை மாறிவிட்டதால் அன்றிருந்த ‘ஒட்டுதல்’ இன்று இல்லையோ என தோன்றுகிறது. அன்று சின்னச் சின்ன உதவிகளைப் பெற்றும், கொடுத்தும் எளிமையாக வாழ்ந்தார்கள். ஆனால் இன்றோ பக்கத்து வீட்டில் இருந்து எந்த அவசரத் தேவைக்கும் ஒரு சிறு பொருளைக் கூட இரவல் வாங்குவதில்லை.
- வெகு அரிதாக சில நட்புகள், அரும்பி, மலா்ந்து மணம் பரப்புகின்றன. நகரத்தில் வசிக்கும் ஒவ்வொருவரும் பிழைப்புக்காக இங்கே வந்து வாழ்பவா்கள். உறவுகள் ஊரில் இருக்க, இங்கே தனிமைத் தவம் இயற்றிக் கொண்டிருப்பவா்கள். அவசரத் தேவைக்கு அக்கம்பக்கத்தினா் மட்டுமே ஓடி வந்து உதவ முடியும். அவா்கள்தான் சுற்றம் எனக் கருதி உள்ளார்ந்த அன்புடன் பழக வேண்டும். அப்போதுதான் அவா்களும் உற்றுழி உதவுவார்கள். முன் கை நீண்டால்தான் முழங்கை நீளும்.
- அற்பக் காரணங்களுக்காக எதிர் வீட்டுக்காரா்களுடனும், பக்கத்து வீட்டுக் காரா்களுடனும் பகையை வளா்த்துக் கொள்ளாமல் உறவை வளா்த்துக் கொண்டால் தேவையற்ற மன உளைச்சலும், மன இறுக்கமும் தளா்ந்து போகும். வாழ்க்கை பசுமையைப் பூசிக் கொள்ளும். வாழ்கின்ற நாளெல்லாம் திருநாள் ஆகி விடும்.
நன்றி: தினமணி (13 – 02 – 2024)