TNPSC Thervupettagam

அந்த மரியாதை... இருக்கட்டும்!

April 22 , 2024 261 days 277 0
  • மரியாதை என்பது ஒருவர் மீதான மதிப்பின் வெளி அடையாளம். ஒழுக்கம், நேர்மை போன்ற உயர் நெறிகளின் அடிப்படையில் முன்பு மதிப்பு உருவான அது, இப்போது வயது, அதிகாரம், பணம், பதவி என்பனவற்றாலும் உருவாகிறது. ஆங்கிலத்தில் respect, courtesy, reverence போன்ற பல சொற்கள் மரியாதையைச் சுட்டுகின்றன.
  • நேரில்: முதுகைச் சற்று முன் வளைத்து நிற்கும் உடல்மொழியே மரியாதையைக் காட்ட கீழை நாடுகளில் வழங்குகிறது. பயன்படுத்தும் சொற்களில் கண்ணியமும் பணிவும் தொனிக்குமானால் மரியாதை உணர்த்தப்பட்டுவிடும். எழுதும்போது சில விளிகளைச் சேர்ப்பதன் மூலம் மரியாதை வெளிப்படுகிறது.
  • தனி மனிதர்களுக்கு வழங்கப்பட்ட மகாத்மா, தீனபந்து, லோகமான்யர், புரட்சித் தலைவர் போன்ற பட்டங்களைப் பற்றியது அல்ல இந்தக் குறிப்பு; பொதுவாகப் பெயருக்கு முன்னாலும் பின்னாலும் பயன்படுத்தப்படும் திரு, திருமதி (Mr, Mrs, போல), அவர்கள் (Esquire) போன்றவற்றை இந்தக் குறிப்பு கவனப்படுத்துகிறது.
  • பொதுமக்கள்: முன்பு பெயருக்கு முன்னால் ஸ்ரீ என்ற ஒரு விளியைச் சேர்ப்பது வழக்கமாக இருந்தது. புனிதம், தெய்வீகம், புகழ்பெற்ற என்ற பொருள்களை அந்த ஸ்ரீ குறித்தது. ஸ்ரீயுத, ஸ்ரீமத், ஸ்ரீலஸ்ரீ என்பன அதன் வெவ்வேறு வடிவங்கள். அந்த ஸ்ரீ-க்குப் பதிலியாகத் ‘திரு.’ என்று பயன்படுத்தத் தமிழ்நாட்டில் பெரும் யுத்தமே நிகழ்ந்தது. இன்றும் சில இடங்களில் ஸ்ரீ நீடிக்கிறது எனில் அப்போர் இன்னும் முடியவில்லை என்று பொருள்.
  • இது அக்கப் போரல்ல; மொழி அரசியலின் நுண் கூறு. ‘திரு.’ என்பது திருவாளர் என்பதன் சுருக்கம். அதனால்தான் ‘திரு.’வுக்குப் பிறகு புள்ளி இடப்பெறுகிறது. திரு ஆணுக்காகித் திருமதி பெண்ணுக்கானது. வழக்கத்தில் ‘திருமதி’ மணமான பெண்ணுக்காகிவிட்டது. மணம் புரியாத பெண்ணுக்குச் செல்வி என்று மரியாதை தரப்பட்டது.
  • வெறும் செல்வியில் நிறைவு காணாத சமூகம் அதைத் திருவளர்செல்வி ஆக்கியது (போலவே திருவளர்செல்வனும் உருவானான்). ‘திருவளர்ச்செல்வி’ என்று மணவிழா அழைப்புகளில் பிழையாக எழுதி, வினைத்தொகையில் ஒற்று மிகாதே என வருந்தும் தமிழாசிரியரின் முகச்சுளிப்பைப் பெற்றனர்/ பெறுகின்றனர் சிலர்; இது வேறு, இலக்கணக் கதை.
  • சமயாசாரிகள்: இவர்கள் கையாளும் மரியாதை விளிகள் மதத்தைக் காட்டிவிடுவன. சிவ, சிவத்திரு, சிவப் பெருந்திரு என்று சிவனடியார் எழுதிக்கொண்டனர். ஸ்ரீ வைஷ்ணவர்கள் உ.வே. என்று தம்மத பெரியவர்களை மரியாதை செய்தனர்.
  • இருவகை வேதாந்தங்களிலும் ஞானம் பெற்றவர் என்பது ‘உபய வேதாந்த’ என்பதற்குப் பொருள். கிறிஸ்தவர்கள் ரெவ். (Rev.) என்று முறையான சமய ஆசான்களுக்கு மரியாதை காட்டினர். அதிலும் very rev., right rev. என இருவகைகள்.
  • இதைச் ‘சங்கை.’ என்று தமிழ்ப்படுத்தினர். சங்கை. பீட்டர் பெர்சிவல் என்பது ஒரு பழைய பயன்பாடு. சங்கைக்குரிய (அதாவது மதிப்பிற்குரிய) என்பதன் சுருக்கம் சங்கை.
  • அர்ச். என்ற சொல்லாட்சியும் இலங்கைத் தமிழில் மிகுதி. அர்ச்சனைக்குரிய என்பதன் சுருக்கமது; Saint என்பது St என்றாவது போல. பூஜ்யர் ஆண்ட்ரூஸ் என்ற பயன்பாடும் முன்பிருந்தது. ஸ்ரீ என்பது ஸ்ரீலஸ்ரீ என்றானது போல Rev. என்பது Most Rev. என்றாகியுள்ளது.
  • அரசியலர்: இத்துறையில் வழங்கும் மரியாதை விளிகள் பதவி வழியிலானவை. Honourable என்பதை அமைச்சர் பதவிகளுக்கு வழங்குகிறோம். அது மாண்புமிகு என்று தமிழானது. Excellency ஆளுநர், குடியரசுத் தலைவர் போன்ற பதவிகளுக்கானது. மேதகு என்று அதைத் தமிழாக்கினோம். மாண்புமிகு எனத் தமிழாகுமுன்பு ‘கனம்’ என்று அது வழங்கப்பட்டது.
  • கனம் கிருஷ்ணையர் 19ஆம் நூற்றாண்டின் இசை அறிஞர்; சாமிநாதையரின் அப்பாவுக்கு இசை கற்பித்தவர். இந்த கனம், மாண்புமிகு அல்ல. கனம், நயம், தேசியம் என இசையில் உள்ள மூன்று முறைகளில் முதலாவது இந்தக் ‘கனம்’. அம்முறையில் இசை வழங்குவதில் நிபுணர் என்பதால் ஏற்பட்ட புகழ்ப் பெயர் அது. Right Honourable என்பது மகா கனம் என்றானது.
  • மகா கனம் சீனிவாச சாஸ்திரி அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருந்தார். அப்போது மாணவராக இருந்த ஒருவரை இடைநீக்கம் செய்தார். பேச்சில் சிறந்த அம்மாணவர், VC is neither right nor honourable என்றாராம் நிதானமாக.
  • மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்பதை வலியுறுத் திய பெரியார் வழிவந்த திராவிடர் கழகத்தினர், மானமிகு என்ற மரியாதை விளியை 1980 முதல் பயன்படுத்தி வருகின்றனர்.
  • பழந்தமிழில்: அடிகள், ஆர் போன்ற பின்னொட்டுகள் மூலம் மரியாதை சேர்த்தனர். சிலப்பதிகாரத்தின் அறவோர் கவுந்தியடிகளைப் படித்த திரு.வி.க.வுக்குக் காந்தியைக் காந்தியடிகள் என்று அழைக்கத் தோன்றியதாம். இராமலிங்க அடிகள், மறைமலையடிகள் என்பன பிற அடிகளுக்குச் சான்றுகள். ஆர் என்பது மரியாதை விகுதி. மு.வரதராசனார் என்று பெயரோடு சேர்ந்தும் பண்ருட்டியார் என்று ஊரோடு சேர்ந்தும் மரியாதையை ‘ஆர்’ தந்தது.
  • ஆனால் காந்தியார் என்று சுப.வீரபாண்டியன் குறித்தால் மட்டும் சிலர் நெளிவர். வரலாற்றுக் காரணம் ஒன்று உண்டெனினும் காந்தியார் என்பதொன்றும் இழி வழக்கல்ல. கமல்ஹாசன் காந்தியார் என்றே விளிக்கிறார். வடமொழியில் ஆண்களுக்கு பாய் (Bhai) என்றும் பெண்களுக்கு பென் (Ben) என்றும் வழங்கப்படுவது வழமை. மீரா பென் புகழ்பெற்ற வெளிப்பாடு.
  • தேவரீர் என்ற மரியாதை விளி பெரியவர்களை வணங்கியது. சிரஞ்சிவீ என்ற இன்னொரு விளி தன்னிலும் வயது குறைந்தவர்களை ஆசிர்வதித்தது. பெண்களை வாழ்த்தும்போது சௌபாக்கியவதி என்று குறித்தனர். அதை ஆங்கிலத்தில் Sowbagyavathi என்று விரித்தும் Sow என்று சுருக்கியும் சிலர் எழுதுகின்றனர். Sow என்ற வார்த்தைக்குப் பொருள் தெரிந்தோர் இந்தச் சுருக்கத்தைத் தவிர்ப்பர்.
  • வடபுலத்தின் பாதிப்பில் அதிகம் புழங்கி வரும் ‘ஜி’ என்பது தமிழுக்கு முற்றிலும் அந்நியம். புதுச்சேரியில் பிரெஞ்சு மொழி வசப்பட்டு பெயருக்கு முன்னால் மிஷே (Monsieur) என்று சேர்ப்பர். Esquire என்ற பின்னொட்டு போலவே பிரம்மஸ்ரீ என்ற முன்னொட்டின் பயன்பாடும் இப்போது அருகிவிட்டது.
  • ஒருவருக்குச் செய்யப்படும் மரியாதை மற்ற அனைவருக்கும் நிகழ்த்தப்படும் அவமரியாதை என்ற உணர்வு தோன்றிவிட்டது. சரிநிகர் சமுதாயத்தில் அவ்வுணர்வு இயற்கையானதுதான்.
  • தோழர் என்ற விளியும் அது பற்றித்தான் உருவானது. ராவ்பகதூர், ராவ்சாகிப், சர் போன்றவற்றை அரசமைப்புச் சட்டம் மூலமாகவே நாம் ஒழித்துவிட்டோம். எனவே இத்தகைய மரியாதை விளிகளும் நாளடைவில் அருகும், பின் ஒழியும்.

நன்றி: இந்து தமிழ் திசை (22 – 04 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்