TNPSC Thervupettagam

அந்த 45 நிமிடங்கள்

July 24 , 2023 544 days 331 0
  • உலகின் ஒவ்வொரு பகுதியின் சரித்திரமும் பெண்களின் உடல் மீதுதான் எழுதப்பட்டு வந்துள்ளது. எந்த ஒரு நாட்டின் ராணுவமும் இன்னொரு நாட்டுக்குள் நுழைந்தால் முதலில் பலியாவது அந்நாட்டுப் பெண்களே. பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டுப் பெண்கள் கொல்லப்படுவது வரலாற்றின் ஒவ்வொரு பக்கத்திலும் எழுதப்படுகிறது; எழுதப்பட்டு வருகிறது.
  • இரு குழுக்களிடையே ஏற்படுகின்ற அரசியல் பகை நெருப்பில் முதலில் வாட்டப்படுவதும் பெண்ணுடல்தான். அது உலகமகா யுத்தம், செர்பிய-குரோஷிய யுத்தம், இந்திய–பாகிஸ்தான் பிரிவினை என எந்த நிகழ்வானாலும் சரி; இலங்கைக்குள் இறங்கிய இந்திய அமைதிப் படையானாலும் மணிப்பூரில் அரை நூற்றாண்டு காலமாக நிலைகொண்டிருக்கும் இந்திய ராணுவமானாலும் பெண்ணுடல்மீது செலுத்தும் வன்முறையில் மாற்றமில்லை.

மெளனத்தின் மறுபக்கம்

  • இந்திய-பாகிஸ்தான் பிரிவினையின் போதும் எண்ணற்ற பாலியல் தாக்குதல்களை இருதரப்பிலும் பெண்கள் எதிர்கொண்டனர். இன்று மணிப்பூரில் நடைபெற்ற நிர்வாண ஊர்வலத்தைப் போல, 1947 பிரிவினையின்போது பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டதும் நடனமாட நிர்ப்பந்திக்கப்பட்டதும் என நடந்த கொடுமைகளையெல்லாம் அந்தப் பெண்களே சொல்ல, ஆய்வாளர் ஊர்வசி புட்டாலியா தன்னுடைய ‘The Other Side of Silence’ நூலில் விரிவாகப் பதிவுசெய்திருக்கிறார்.
  • 1995இல் நடைபெற்ற போஸ்னிய யுத்தத்தில், செர்பியப் படைகள் கொசோவா பெண்களைப் பலாத்காரமாகத் தூக்கிச் சென்று கூட்டு வல்லுறவு செய்தனர். இதற்கென்றே ‘வல்லுறவு முகாம்’களை (Rape Camps) அமைத்து, ஆண்டுக்கணக்கில் அப்பெண்களை வல்லுறவு செய்து, அவர்கள் கருவுற்ற பின்னர் வெளியே அனுப்பியுள்ளனர். கொசோவாப் பெண்களின் வயிற்றில் செர்பிய வித்தை இடுகின்ற குரூர இனவெறியின் வெளிப்பாடாக இக்கொடுமையைச் செய்தனர் என்று சமீபத்திய வரலாறு குறிப்பிடுகிறது.
  • மணிப்பூர் கொடுமை ஒரு தனித்த நிகழ்வாகப் பார்க்கப்படக் கூடாது. இந்த ஆணாதிக்க உலகத்தின் பொது விதியாகப் பன்னெடுங்காலமாகத் தொடர்கின்ற ஒன்றாகவே புரிந்து கொள்ளப் பட வேண்டும். அது மட்டுமின்றி, மணிப்பூருக்கென 'சிறப்பான துயர’ங்களை இந்திய நாடென்ற அளவில் நாம் வழங்கி வந்திருப்பதையும் இந்த நேரத்தில் மனசாட்சியுடன் நினைவு படுத்திக் கொள்ள வேண்டும்.

நிர்வாணப் போராட்டம்

  • மணிப்பூரில் 1949இல் நுழைந்த இந்தியப் படைகள் இன்றுவரை வெளியேறவில்லை. ராணுவத்துக்குச் சிறப்பு அதிகாரம் வழங்கி, மணிப்பூர் மக்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் ஆயுதப் படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்துக்கு (AFSPA) எதிராக அம்மக்கள் நடத்திய போராட்டங்களை மறக்க முடியுமா? 16 ஆண்டு காலம் பச்சைத் தண்ணீர்கூடப் பல்லில் படாமல் உண்ணா நோன்பிருந்த ஐரோம் ஷர்மிளாவை மறக்க முடியுமா? 2004இல் மனோரமா என்கிற 32 வயதுப் பெண் ராணுவத்தினரால் பாலியல் வன்முறை செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட பின்னணியில், ‘எங்களைப் பாலுறவு செய் இந்திய ராணுவமே' என்கிற பதாகையுடன் மணிப்பூரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வயதான தாய்மார்கள் 12 பேர் ராணுவத் தலைமையகத்தின் முன்பு தங்கள் ஆடைகளைக் களைந்து நிர்வாணப் போராட்டம் நடத்தியதைத்தான் நம்மால் மறக்க முடியுமா?
  • அவர்கள் நிர்வாணமாக நின்று முழக்கம் எழுப்பிய அந்த 45 நிமிடங்கள் இந்தியாவை உலுக்கின. ஒவ்வொரு இந்தியரின் மனசாட்சியையும் உலுக்கின; உலகையே அதிரவைத்தன. ஆனாலும் மத்தியில் அடுத்தடுத்து வந்த எந்த அரசுமே இன்றுவரை அந்தக் கொலைகாரச் சட்டத்தை மணிப்பூரில் முற்றிலுமாக நீக்கவில்லை.
  • அந்த 12 பெண்களில் ஒருவர் இறந்துவிட்டார். எஞ்சியிருப்பவர்களில் ஒருவரான லைஷ்ராம் கியனேஸ்வரி அளித்த நேர்காணல் இப்போதும் நெஞ்சை அறுத்துக்கொண்டிருக்கிறது. “நான் நிர்வாணப் போராட்டத்தில் பங்கேற்க அதிகாலை 5 மணிக்கே புறப்பட்டேன்.
  • நான் பங்கேற்பது பற்றி என் கணவருக்குக்கூடத் தெரிவிக்கவில்லை. இப்போராட்டத்துக்குப் பின் நான் உயிரோடு திரும்புவேனா என்று தெரியாது. கடைசியாக ஒருமுறை என் கணவரின் (தூங்கிக்கொண்டிருந்த அவரின்) பாதங்களைத் தொட்டு வணங்கி மானசீகமாக விடைபெற்றுப் புறப்பட்டேன்”. என்ன ஒரு களங்கமற்ற அப்பாவியான குடும்பப் பெண்ணாக இருந்தும் துணிச்சலுடன் அப்போராட்டத்தில் பங்கேற்றுள்ளார். 12 பெண்களுமே அப்படிப்பட்ட பின்புலத்திலிருந்து வந்தவர்கள்தாம்.
  • எரியும் மாநிலம்: வடகிழக்கு இந்தியாவின் மாநிலங்களுக்கும் குறிப்பாக மணிப்பூருக்கும் நாம் அரை நூற்றாண்டுக்கும் மேலாகத் துரோகம் இழைத்துவருகிறோம். சாதாரண குடிமக்களாக நமக்கு ஏற்படும் இந்தக் குற்றவுணர்வு ஏன் ஆட்சியாளர்களுக்கு ஒருபோதும் ஏற்படவில்லை என்கிற கேள்வி எழுந்துகொண்டே இருக்கிறது. மன்னரோடு கையெழுத்துப்போட்டு 1949இல் மணிப்பூரை இந்தியாவுடன் இணைத்துக்கொண்ட நாளிலிருந்து மணிப்பூர் எரிந்து கொண்டே தான் இருக்கிறது.
  • எரிகிற நெருப்பில் நெய் வார்க்கும் பணியைத்தான் பிரேன் சிங் அரசு இப்போது செய்துவருகிறது. எல்லா மோதல்களிலும் நடப்பதுபோலவே இப்போது இந்த மெய்தெய்-குக்கி இன மோதலிலும் பெண்கள் மானபங்கம் செய்யப்படுவது தொடர்கிறது. மணிப்பூரில் மட்டுமல்ல... தமிழ்நாட்டில் இன்றும் தொடர்கின்ற ஆணவக்கொலைகளும் நேற்றைய காலத்தில் நடந்த உடன்கட்டை ஏறுதலும் நாம் ஆணாதிக்கச் சமூகமாகவும் சாதியச் சமூகமாகவும் தொடர்கிறோம் என்பதன் சாட்சியங்கள் அன்றி வேறென்ன?
  • பெண்ணைச் சக மனுஷியாகப் பார்க்காததும் பெண் உடல்மீது செலுத்தப்படும் வன்முறையை எதிர் இனத்தின் மீது கொடுக்கப்படும் அடியாகப் பாவிக்கும் மனநிலையும் மாறுவது எப்போது? பெண்ணுடலை ஆடை களைந்து பார்க்கத் துடிக்கும் ஆண் மனதை எந்த வெடிகுண்டை வைத்துத் தகர்க்கப்போகிறோம்? இணையத்தில் தங்குதடையின்றிப் புழக்கத்தில் உள்ள பாலியல் தளங்களின் வெற்றிப்பயணத்தின் பின்னால் உள்ள ஆண் உளவியலின் தொடர்ச்சியாகவும் மறுபக்கமாகவும்கூட இந்த நிர்வாண ஊர்வலங்களைப் பார்க்க வேண்டும்.
  • நிர்வாணத்தையே தங்கள் போராட்ட ஆயுதமாக மாற்றிக் காட்டிய மணிப்பூரின் அந்த எளிய குடும்பத்துப் பெண்களின் வீரத்தையும் தியாகத்தையும் ஏனோ இந்நேரம் மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்க்கத் தோன்றுகிறது.

நன்றி: தி இந்து (24 – 07 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்