TNPSC Thervupettagam

அனல்மேல் மெழுகாய்

May 24 , 2023 598 days 316 0
  • ஒட்டுமொத்த இந்தியாவும் கடும் கோடை வெப்பத்தின் தாக்கத்தால் திணறிக் கொண்டிருக்கிறது. எந்தவொரு பகுதியும் விதிவிலக்கல்ல. மின்வெட்டு இல்லை என்று மாநில அரசுகள் அறிவித்தாலும், அதிகரித்த மின்தேவையை எதிர்கொள்ளும் அளவில் விநியோகக் கட்டமைப்பு இல்லாததால், ஆங்காங்கே மின்மாற்றிகள் பழுதாவதும், சில இடங்களில் வெடிப்பதும்கூட நடக்கின்றன.
  • உச்சகட்ட கோடையின் தாக்கத்தில் தலைநகர் தில்லி திணறுவதை எடுத்துக்காட்டாகக் கூறலாம். பகல்நேர வெப்பம் வழக்கத்தைவிட மூன்று டிகிரி அதிகரித்து, 43.7 டிகிரி செல்ஷியஸாக உயர்ந்திருக்கிறது. சில இடங்களில் 45.8 டிகிரி வரை காணப்பட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிக்கிறது. "நஜஃப்கர்' மையத்தில் 46.2 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் திங்கள்கிழமை பதிவாகி இருக்கிறது.
  • வெப்பத்தை எதிர்கொள்ள பெரும்பாலான மக்கள் பகல் வேளையில் வீட்டையும் அலுவலகத்தையும் விட்டு வெளியேறுவதில்லை. வணிக வளாகங்களானாலும், குடியிருப்புகளானாலும் அதிகரித்த குளிர்சாதனப் பயன்பாடு காணப்பட்டதால் மின்சாரத் தேவை உச்சத்தை எட்டியிருக்கிறது. ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் மின்தேவை 85% அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது.
  • தில்லியின் மின்தேவை திங்கள்கிழமை அளவு 6,532 மெகாவாட். அது இந்த ஆண்டின் அதிகபட்ச நுகர்வு. மாத இறுதிக்குள் 7,000 மெகாவாட்டைக் கடந்து, இந்த கோடையில் பழைய உச்சத்தைப் பின்னுக்குத் தள்ளி 8,000 மெகாவாட்டாக உயரக்கூடும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
  • தில்லி அளவில் இல்லாவிட்டாலும், பெரும்பாலான இந்திய நகரங்களின் நிலைமையும் அது தான். ஏப்ரல் மாதம் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் காணப்பட்டது போன்ற வெப்ப அலை ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வரக்கூடும் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். மனிதர்களால் உருவாக்கப்பட்டிருக்கும் பருவநிலை மாற்றத்தின் விளைவால் இது அதிகரிக்குமே தவிர குறையாது.
  • "வேர்ல்ட் வெதர் ஆட்ரிபூஷன்' என்கிற சர்வதேச பருவநிலை ஆய்வாளர்களின் குழு நான்கு நாடுகளை மையப்படுத்தி ஆய்வொன்றை நடத்தியது. இந்தியா, வங்கதேசம், தாய்லாந்து, லாவோஸ் ஆகிய நான்கு நாடுகளில் கடந்த மாதம் காணப்பட்ட வெப்பநிலையையும், வெப்பஅலையால் ஏற்பட்ட உயிரிழப்புகளையும் அந்தக் குழு கணக்கெடுத்தது.
  • பசுமை வாயு வெளியேற்றம் தடுக்கப்படாவிட்டால், உலக வெப்பம் தொடர்ந்து அதிகரிக்கும் என்றும், அதன் பாதிப்பு கடுமையாக இருக்கும் என்றும் தெரிவித்த ஆய்வாளர்கள், ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பகுதிகள் வழக்கத்தைவிட 2 டிகிரி செல்ஷியஸ் அதிகரித்த வெப்பத்தை எதிர்கொள்ளும் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். அவர்களுடைய அடுத்த ஆய்வு, வளைகுடா நாடுகளையும், மத்திய ஆசியாவையும் இலக்காகக் கொண்டிருக்கிறது.
  • 1920 முதல் இதுவரை இரண்டு முறைதான் இந்தியாவில் வெப்ப அலை 200 நாள்களை தாண்டியிருக்கிறது. 2022-இல் 203 வெப்ப அலை நாள்கள் காணப்பட்டன. அதற்கு முன்பு 2010-இல் 256 நாள்கள் இந்தியா வெப்பஅலையை எதிர்கொண்டது. இந்த ஆண்டு, கடந்த ஆண்டு எண்ணிக்கையைவிட அதிகரிக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கருதுகிறது.
  • இந்தியா முழுவதும் 1901 முதல் 2018 வரையிலான 117 ஆண்டுகளில் சராசரி வெப்பம் 0.7 டிகிரி சென்டிகிரேட் அதிகரித்திருக்கிறது. 1951 - 2015-க்கு இடையில் இந்து மகா கடலின் வெப்பம் 1 டிகிரி சென்டிகிரேட் அதிகரித்திருக்கிறது. இந்தியாவின் வெப்பம் மிகுந்த பகல் - இரவுகளின் ஆண்டு சராசரி அதிகரித்திருக்கிறது. அதேபோல குளிர் மிகுந்த பகல் - இரவுகளின் ஆண்டு சராசரி அளவு குறைந்து வருகிறது.
  • 1901-இல் இந்திய வானிலை ஆய்வு மையம், ஆவணப் பதிவைத் தொடங்கியது. அதன்படிப் பார்த்தால், ஐந்தாவது வெப்பம் மிகுந்த ஆண்டாக 2022 இருந்திருக்கிறது. இந்த ஆண்டில் "எல் நினோ' தாக்கமும் சேர்ந்தால், ஆறாவது அதிக வெப்பம் காணப்பட்ட ஆண்டாக 2023 இருக்கக்கூடும்.
  • வெப்பத்தை எதிர்கொள்ள செயல்திட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது என்றாலும், போதுமான முன்னேற்பாடுகள் செய்திருப்பதாகத் தெரியவில்லை. அடித்தட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவது போலவே, வீடற்ற தெருவோரவாசிகளும், இரந்து வாழ்வோரும், துறவிகளாக வாழும் தேசாந்திரிகளும், முதியோரும், குழந்தைகளும்தான் மிக அதிகமான பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.
  • அரசின் கணக்குப்படி, 1990 முதல் 2020 வரையில் வெப்பத்தின் தாக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26,000. கணக்கெடுப்பு முறையாக நடத்தப்பட்டிருந்தால், இன்னொரு பூஜ்ஜியம் சேர்க்க வேண்டி வந்திருக்கலாம். "லான்செட்' மருத்துவ இதழின் 2022 அறிக்கையின்படி, இந்தியாவின் வெப்பம் தொடர்பான மரணங்கள் கடந்த 15 ஆண்டுகளில் 55% அதிகரித்திருக்கிறது.
  • வெப்பத்தின் பாதிப்பு மக்களுக்கு மட்டுமல்ல, விவசாயத்துக்கும்தான். வெப்பஅலையால் கதிர்கள் நாசமாவதும், பாசன நீருக்கான தட்டுப்பாடும், பால், இறைச்சி போன்ற பொருள்களின் உற்பத்திக் குறைவும், காய்கனி உற்பத்தி பாதிப்பும் ஏற்படும். இந்தியாவின் ஜிடிபி 2.5 - 4.5% அளவில் பாதிக்கப்படலாம்.
  • உலக வானிலை ஆய்வு நிறுவனத்தின் சமீபத்திய கணிப்பின்படி, உலகம் ஐந்து கடுமையான கோடைகளை தொடர்ந்து எதிர்கொள்ளக் கூடும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் வெப்ப அலைகள் மட்டுமல்லாமல், வெப்ப பெருக்குகளும், வறட்சிகளும் ஏற்படலாம். 2023 - 27 ஆண்டுகளில் தொழிற்புரட்சிக்கு முற்பட்ட நிலையைவிட 1.5 டிகிரி சென்டிகிரேட் அதிகரித்த நிலையை உலகம் எதிர்கொள்ளக்கூடும். அறிவியலிடம் விடை இருக்கிறதா?

நன்றி: தினமணி (24 – 05 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்