TNPSC Thervupettagam

அனல் அடிக்கிறதே...!

May 28 , 2020 1694 days 743 0
  • அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் இன்றுடன் நிறைவடைகிறது என்று ஆறுதல் அடைய முடியாது.
  • இன்னும் ஒரு வாரத்துக்கு வெப்ப நிலை அதிகரித்தே காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது. தமிழகத்தின் சில பகுதிகள் 42 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் வரை எதிர்கொண்டன.
  • பொது முடக்கம் காரணமாக பெரும்பாலோர் வீட்டிற்குள் முடங்கியது, ஓரளவுக்கு வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தப்பிக்க உதவியது.

அலை நிலைமை தொடரும்

  • உலகிலுள்ள 15 மிக அதிக வெப்பமான இடங்களில் 10 இடங்கள் இந்தியாவில்தான் காணப்படுகின்றன. தில்லி, லக்னௌ போன்ற பகுதிகள் 45 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பத்தை வழக்கமாக எதிர்கொள்கின்றன.
  • ராஜஸ்தான் மாநிலம் ஒருபடி மேலே போய் சில ஆண்டுகளில் 49 டிகிரி, 50 டிகிரி செல்ஷியஸ் வெப்பத்தைச் சந்திக்கிறது.
  • சிம்லா, முசௌரி, உதகை போன்ற கோடை வாசஸ்தலங்களில்கூட கடுமையான கோடையில் இப்போதெல்லாம் சாதாரண வெப்ப நிலை காணப்படும் நிலைக்கு பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.
  • ஹரியாணா, சண்டீகா், தில்லி, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், கிழக்கு மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிர மாநிலத்தின் விதா்பா பகுதிகளில் இந்த மாதம் முடியும் வரைகூட அனல் அலை நிலைமை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது.
  • பஞ்சாப், சத்தீஸ்கா், ஒடிஸா மாநிலத்தின் பல மாவட்டங்கள், குஜராத், மத்திய மகாராஷ்டிரம், ஆந்திரத்தின் சில மாவட்டங்கள், தெலங்கானா, பிகார், ஜார்க்கண்ட் ஆகிய பகுதிகளில் தொடா்ந்து அனல் காற்று வீசிக்கொண்டிருக்கிறது.
  • கோடையின் கடுமை தாங்க முடியாமல் விலங்கினங்கள் உயிரிழக்கின்றன. விவசாயமும், இயல்பு வாழ்க்கையும் அனல் காற்றின் தாக்கத்தால் முற்றிலுமாக முடங்கியிருக்கும் நிலை காணப்படுகிறது.
  • அதோடு ஒப்பிடும்போது தமிழகம், கா்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் அந்த அளவு பாதிப்பை எதிர்கொள்ளவில்லை என்றுதான் கூற வேண்டும்.
  • கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவில் அனல் காற்று வீசுவது வழக்கமான பருவநிலை தாக்கமாக இருந்து வருகிறது. 2018-இல் 19 மாநிலங்கள் அனல் அலையால் பாதிக்கப்பட்டன என்றால், 2019-இல் 23 மாநிலங்கள் கடுமையான கோடையாலும் அனல் அலையாலும் பாதிப்புக்குள்ளாகின. இந்த ஆண்டு எப்படி இருந்தது என்பது இனிமேல்தான் தெரியும்.

பாதிப்பால் ஏற்பட்ட உயிரிழப்புகள்

  • 2010 முதல் கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் 6,000-க்கும் அதிகமானோர் கோடைக்கால அனல் காற்றால் தாக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறார்கள். 2015-இல் நிலவிய கடுமையான கோடை வெயிலுக்கு 2,040 போ் உயிரிழந்தார்கள்.
  • கோடை வெப்பத்தால் பாதிக்கப்பட்டவா்களின் முழுமையான கணக்காக இதை எடுத்துக்கொள்ள முடியாது. கடும் கோடையால் சிலருக்கு மாரடைப்பு ஏற்படுவதுண்டு.
  • கோடை வெப்பத்தை எதிர்கொள்ள போதுமான அளவு தண்ணீா் குடிக்காமல் இருப்பதன் விளைவாக உறுப்புகள் செயலிழந்து, அதனால் உயிரிழப்பு ஏற்படுவதும் உண்டு.
  • அவையெல்லாம் அனல் காற்று பாதிப்பால் ஏற்பட்ட உயிரிழப்புகளாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.
  • 2005-இல் தேசியப் பேரிடா் மேலாண்மைச் சட்டம் இயற்றப்பட்டது. 2009-இல் பேரிடா் மேலாண்மைக்கான தேசியக் கொள்கை வகுக்கப்பட்டது.
  • அவை இரண்டிலுமே இயற்கைப் பேரிடராக அனல் அலை பாதிப்பு இணைக்கப்படவில்லை. சொல்லப்போனால், மூன்றாவது பெரிய இயற்கையின் பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்புகள் கடும் கோடையில் காணப்படும் அனல் அலையால்தான் ஏற்படுகின்றன.
  • கோடையை எதிர்கொள்ள சில வழிமுறைகளை மாநிலங்கள் கையாளும்படி தேசியப் பேரிடா் மேலாண்மைச் சட்டம் அறிவுறுத்துகிறது.
  • அதன்படி, முன்கூட்டியே எச்சரித்தல், சுகாதார ஊழியா்களுக்கு கோடை வெப்பத் தாக்குதலை எதிர்கொள்ளப் பயிற்சி அளித்தல், ஆங்காங்கே தற்காலிகத் தங்குமிடங்களை உருவாக்குதல், அனைவருக்கும் குடிநீா் வழங்குவதற்கு வழிவகை செய்தல் என்று பட்டியலிடப்பட்டிருக்கிறது.
  • சூரத், புவனேஸ்வா் முதலான சில நகரங்கள் மட்டுமே இந்த வழிமுறைகளை முறையாகப் பின்பற்றுகின்றன.

பாதுகாத்தாக வேண்டும்

  • இந்த ஆண்டும் இந்தியாவின் பல பகுதிகளில் 45 டிகிரி செல்ஷியஸுக்கும் அதிகமான வெப்பம் காணப்படுகிறது. தென் மாநிலங்களில் அந்த அளவிலான வெப்பநிலை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
  • கொவைட் 19 தீநுண்மித் தொற்றுப் பரவிவரும் நிலையில் மருத்துவ ஆய்வாளா்கள் இந்தியாவின் வெப்பநிலையைக் கூா்ந்து கவனிக்கிறார்கள்.
  • சா்வதேச அளவில் ஒப்பிடும்போது இந்தியாவில் நோய்த்தொற்றுப் பரவலும், உயிரிழப்புகளும் குறைவாக இருக்கின்றன.
  • இந்தியாவில் மட்டுமல்ல, பாகிஸ்தான், வங்க தேசம் உள்ளிட்ட தெற்காசிய நாடுகள் முழுவதிலும் மேலை நாடுகளைப் போலல்லாமல் நோய்த்தொற்றுப் பரவலும், உயிரிழப்பும் குறைவாகவே இருக்கின்றன.
  • இதற்கும் வெப்பமான பருவநிலைக்கும் தொடா்பு இருக்கக்கூடும் என்று ஆய்வாளா்கள் கருதுகிறார்கள்.
  • கொவைட் 19 தீநுண்மி நோய்த்தொற்றுப் பரவலை 24 டிகிரி செல்ஷியஸுக்கும் அதிகமான வெப்பம் தடுக்கக்கூடும் என்று மேலை நாட்டு இதழ்களில் கட்டுரைகள் வெளிவருகின்றன.
  • இந்தியாவில் எல்லாப் பகுதிகளிலுமே 40 டிகிரி செல்ஷியஸுக்கும் அதிகமான வெப்பம் இப்போது காணப்படுகிறது.
  • அதனால், நோய்த்தொற்றுப் பரவல் கட்டுப்பாட்டில் இருக்கக் கூடும். இதுவே மழைக்காலம் தொடங்கிவிட்டால் எப்படி இருக்கும் என்பது குறித்து இப்போதே கணிக்க முடியவில்லை.
  • நோய்த்தொற்று கட்டுப்படும் என்று ஆறுதல் அடைந்துவிட முடியாது. அதேபோல, அனல் காற்றின் தாக்கத்தால் உயிரிழப்பு ஏற்படாமல் பாதுகாத்தாகவும் வேண்டும்

நன்றி: தினமணி (28-05-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்