- தேசத்தின் உயர்வு பெண்களைப் பொருத்திருக்கிறது. பெண்களின் உயர்வு கல்வியையும் உலக ஞானத்தையும் பொருத்திருக்கிறது என்றார் மகாகவி பாரதியார்.
சக்கரவர்த்தினி
- அவர் அப்படிச் சொன்னது 1905-ஆம் ஆண்டு. ஒரு நூற்றாண்டுக்கு மேல் கடந்துவிட்ட போதிலும் இன்றும் அந்த சொல் நிலைத்திருக்கிறது.
- 1905-ஆம் ஆண்டு "சக்கரவர்த்தினி' என்ற பெண்கள் இதழுக்கான ஆசிரியர் பொறுப்பை மகாகவி பாரதியார் ஏற்றுக்கொண்டபோது இப்படி தலையங்கம் தீட்டினார்.
- அதோடு மட்டுமல்லாது தொடர்ந்து அந்தப் பத்திரிகையில் பெண்கள் முன்னேற்றத்துக்குத் தேவையான பல கட்டுரைகள் எழுதியும் இருக்கிறார்.
- விவாத மேடை என்றொரு பகுதியை ஏற்படுத்தி ஒரு கருத்து குறித்த பல அபிப்பிராயங்களையும் வாசகர்களிடம் இருந்தே பெற்று பிரசுரிக்கவும் செய்துள்ளார்.
- இந்தக் கருத்துகளை பெண்கள் படித்து நியாயத்தை நமது பெண்களே பகுத்தறிந்து உணர்ந்து கொள்ள வேண்டியது என்று முடிவை பெண்களிடமே விட்டிருக்கிறார் மகாகவி பாரதியார்.
- இதனால் பெண்களின் பட்டறிவு வளரும் என்றும் சொல்கிறார். பால்ய விவாஹம், பெண் கல்வி, படித்த பெண்களினால் ஏற்படும் நன்மைகள், பெண்கள் முன்னேற வேண்டியதன் அவசியம் என்று பல விஷயங்கள் இந்த சக்கரவர்த்தினி பத்திரிகையில் பேசப்பட்டன.
- அதோடு மட்டுமல்லாது உள்ளுர், வெளியூர், உள்நாட்டு வெளிநாட்டுச் செய்திகளும் தகவல்களும் உலகப் பெரும் அரசியல் தலைவர்கள் குறித்த செய்திகளும் பத்திரிகையில் பேசப்பட்டன.
- கரோனா தீநுண்மி நோய்த்தொற்று பாதிப்பு பொது முடக்கத்தால் அனைத்துத் துறைகளிலும் தொய்வும் தேக்க நிலையும் ஏற்பட்டிருக்கிறது.
- இதில் இதழியல் துறையும் சங்கடங்களையும் அபாயத்தையும் எதிர்கொண்டிருக்கிறது. சமூகத்தில் எத்தகைய பிரச்னைகள் ஏற்பட்டாலும் அதைக் களைய பத்திரிகைகள் பெருமுயற்சி மேற்கொண்டிருப்பதை கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக நாம் கண்டு வந்திருக்கிறோம்.
- இப்போது பத்திரிகைகளும்கூட அபாய நிலையில் இருக்கிறதென்றால் இத்தனையையும் தாண்டி அவை தன்னை நிலைநிறுத்திக் கொண்டாக வேண்டும்.
- அதற்கு மகாகவி பாரதி சொன்னதைப் போல, ஆண்களும் பெண்களும் என இரு தரப்பினரும் முயற்சிகளை முன்னெடுக்க வேண்டிய காலமிது.
- மனம் கலங்கும் பொழுதெல்லாம் நாம் கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்ப்பது ஆறுதலும் படிப்பினையும் தரும். அப்படி திரும்பிப் பார்ப்பதற்கான தருணமிது.
பத்திரிகைகள் தானே ஆயுதம்
- ஒட்டுமொத்த சமூக கட்டமைப்பை மாற்றி அமைத்ததற்கான சிந்தனைகளை, செயல்பாடுகளை பத்திரிகைகள் தொடர்ந்து மேற்கொண்டிருந்தன.
- மரபுக் கட்டுகளை மாற்றி அமைத்து புதுமைகளைக் கொண்டு சேர்த்ததில் பத்திரிகைகளின் பங்கினை மறைக்கவும் இயலாது.
- பிரிட்டிஷ் ஆட்சிக்கு தேசம் உட்பட்டிருந்த காலத்தில் பத்திரிகைகள் ஆற்றிய அரசியல் பணி, சுதந்திரப் போராட்ட செய்திகளை, செயல்பாடுகளை, தலைவர்களின் அழைப்புகளை, கருத்துகளைப் பட்டிதொட்டி எங்கும் கொண்டு சென்று சேர்த்து தேசத்தை ஒன்றிணைத்த பணியைத் திறம்படச் செய்து, பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தையே திக்குமுக்காடச் செய்து நாட்டின் விடுதலை வேள்வியில் தன்னையே அர்ப்பணித்தவை பத்திரிகைகள்.
- மகாகவி பாரதி தொடங்கி மகாத்மா காந்தி வரை அனைவருமே தேசத்தை ஒற்றை அணியாய் நிறுத்த பத்திரிகைகளைத்தானே ஆயுதமாக்கினர்.
- மகாத்மா காந்தியடிகள் தன் தண்டி யாத்திரையின்போதும்கூட அன்றாடம் இரவில் பத்திரிகைகளுக்குக் கட்டுரைகள் எழுதியதைப் பார்க்கிறோம்.
- உப்பு சத்யாகிரகம் என்பதையும் அது தேசமெங்கும் ஏற்படுத்திய பெரும் புரட்சி அலைகளையும் சரித்திரம் சொல்லிக் கொண்டிருக்கிறது.
- 1897-ஆம் ஆண்டு "சுதேசமித்திரன் தலையங்கங்களும் பிரச்னைகள் குறித்து அது எழுப்பும் வாதங்களும் அறிவுக்குப் பொருந்துவனவாகவே உள்ளன' என்று அக்காலத்தில் ஆங்கிலேய அரசுக்கு பத்திரிகைகளின் போக்கு குறித்து அறிக்கை தரும் பொறுப்பிலிருந்த பாலசுந்தர முதலியார் குறிப்பிட்டுள்ளார்.
- இது அன்றைய இதழ்கள் எவ்வளவு தூரம் அரசால் கண்காணிக்கப்பட்டு வந்தன என்பதை வெளிப்படுத்துகிறது.
- சுதந்திரப் போராட்ட வரலாற்றில் மட்டுமல்லாது வீடுகளுக்குள் முடங்கிக் கிடந்த பெண்களுக்கு விடுதலை தாகத்தை ஏற்படுத்தி அவர்களை சுதந்திர வெளியில் வாழ்வதற்கு வழி செய்த வேள்வியிலும் ஏறத்தாழ 200 ஆண்டுகள் வரலாறு கொண்ட பத்திரிகைத் துறை முனைப்புடன் கடமையாற்றியிருக்கிறது.
பெண்களுக்கான பத்திரிகைகள்
- தமிழகத்தில் பெண்களுக்கென்றே பத்திரிகைகள் தொடங்கப்பட்ட வரலாறு ஏறத்தாழ 150 ஆண்டுகள் கொண்டது. 1865-ஆம் ஆண்டு பெண்களுக்கான முதல் தமிழ் பத்திரிகை "அமிர்தவர்ஷினி' தொடங்கப்பட்டது.
- பெண்களுக்கான பத்திரிகைகள் பெண் கல்வி, சுதந்திரமான செயல்பாடு, அடிமைத்தனத்தில் இருந்து விடுபடல், பொது வாழ்வில் பொறுப்புகளை ஏற்றல் என தன் செயல்பாட்டினை விரித்துக் கொண்டது. சுமார் 100 ஆண்டுகளுக்கும் முன்னரே அரசியல் பேசிய திறத்தையும் மகாகவி பாரதியின் சக்கரவர்த்தினி பற்றிக் குறிப்பிடும்போது பார்த்தோம்.
- பெண்களுக்கான பத்திரிகைகள் என்றான பின் பெண்களுக்கான எழுத்தும் தோன்றுதல் இயல்பே அல்லவா? பெண்களுக்கான ஐந்திணை சிந்தனைகளை, தேவைகளைப் பெண்களே எழுதவும் தலைப்பட்டனர்.
- பெண்கள் பத்திரிகைகள் அதன் பயனை வெகு விரைவிலேயே எட்டின. அதாவது, பெண்களே பத்திரிகைகளுக்கு ஆசிரியர் பொறுப்பினையும் ஏற்றுச் செயல்படத் தொடங்கினர்.
- 1906-ஆம் ஆண்டு "தமிழ்மாது' பத்திரிகையின் ஆசிரியராக ஸ்வப்பநேஸ்வரி அம்மாள் பொறுப்பு வகித்துள்ளார். "பெண் கல்வி' பத்திரிகையின் ஆசிரியர் தாயாரம்மா, 1916-இல் அதாவது ஒரு நூற்றாண்டுக்கும் முன்பே பத்திரிகை ஆசிரியராகப் பொறுப்பேற்றுள்ளார்.
- "சிந்தாமணி' இதழுக்கு பாலம்மாள், "ஜகன்மோகினி'க்கு வை.மு.கோதைநாயகி, "மறுமணம்' இதழுக்கு மரகதவள்ளி கிருஹலக்ஷ்மி, "மங்கை' இதழ்களுக்கு குகப்ரியை என்று நீளும் பெரும் வரிசை இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
- விழிப்புணர்வு இல்லாமல் எத்தகைய சமூக மாற்றமும் சாத்தியமாகாது. அதைச் சாத்தியப்படுத்தும் பணியை தொடர்ந்து பத்திரிகைகள் செய்து வந்துள்ளன. சதி போன்ற மூட வழக்கங்களை முடிவுக்குக் கொண்டுவர இலக்கியங்கள் மூலம் பத்திரிகைகள் விழிப்புணர்வை ஏற்படுத்தின.
- இது ஒரு புறம் இருக்க, "தேசபக்தன்' பத்திரிகையின் ஆசிரியராகப் பொறுப்பேற்ற திரு.வி.க. போன்றோர் மொழி வளர்ச்சி, மதுவுக்கு எதிரான போராட்டம் போன்றவற்றுக்கும் பத்திரிகைகளைப் பயன்படுத்தினர்.
நவீன இலக்கிய வளர்ச்சி
- நவீன இலக்கிய வளர்ச்சியும் பத்திரிகைகள் வழியாகவே தமிழகத்தில் வளர்ச்சிப் பாதையில் நடைபோட்டன. நவீனத்துவத்தை அர்த்தமுடையதாக்குவதே ஊடகத்தின் பிரதான பணியாகும் என்று பிரிட்டிஷ் கல்வியாளர் ஜான் ஹார்ட்லி கூறியதை இவர் போன்றவர்கள் மெய்ப்பித்துக் காட்டினார்கள்.
- இப்படியெல்லாம் தொடர் ஓட்டமும் வளர்ச்சியும் தடைகள் இன்றி நடைபெற்றனவா? இல்லை பல தடைகளை, சங்கடங்களைத் தொடர்ந்து சந்தித்தன.
- அந்நிய ஆட்சியில் எழுத்துரிமை மறுக்கப்பட்ட போதும், சிறைவாசம் வரை துன்பங்கள் நேரிட்டபோதும் இந்த தொடர் ஓட்டம் நிற்கவில்லை.
- பத்திரிகையும் அதன் அறிவு வேள்வியும் தங்களின் கடமை என நினைத்த பலரது தியாகத்தால் அது தொடர்ந்து கொண்டிருந்தது.
- அரசியல், சமூகப் பிரச்னைகளைத் தாண்டி பொருளாதார சிக்கல்களிலும் பத்திரிகைகளும் பத்திரிகையாளர்களும் சிக்கி பெரும் இன்னல்களுக்கு உள்ளானதை வரலாறு வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.
- அதோடு மட்டுமா? அவசர நிலை காலத்தில் பத்திரிகைகள் எதிர்கொண்ட சவால்களை எடுத்துச் சொல்ல மூத்த பத்திரிகையாளர்கள் இன்றும் நம்மிடையே உண்டு.
- கருத்துச் சுதந்திரம் பாதிக்கப்பட்டிருந்த காலத்தில் பத்திரிகைகளைக் கொண்டுவர அவர்கள் மேற்கொண்ட போராட்டங்களையும், அதனால் சொந்த வாழ்வில் அவர்கள் சந்தித்த இழப்புகள் - வறுமை ஆகியவற்றை அறிந்தால் இன்றைக்கு நாம் சந்திக்கும் பிரச்னைகள் இலகுவாய் சமாளித்து மீண்டுவிடக் கூடியவை என்பது புலப்படும்.
- இன்றைக்கு மனித வளம் - பொருளாதார பிரச்னைகளுக்குள் பத்திரிகைகள் சிக்கித் தவித்தாலும், அதன் அனுபவம் மீட்புக்கான வழிகளையும் கண்டுகொள்ளும்.
பத்திரிகைகளில் எழுதுவது ஒரு கலை
- பத்திரிகைகளில் எழுதுவது ஒரு கலை. வெகுஜனத் தொடர்பு சாதனங்களில் முதன்மையானது. அறிவு விருத்தி என்பதே அதன் தலையாய பணி. அதனால் சொல்லும் சொல் மந்திரம் போல படிப்போர் மனதில் நிற்க வேண்டும்; வரலாற்றில், அரசியலில், பொருளாதார, சமூக அசைவுகளில் பத்திரிகைகள் தங்கள் செயல்பாடுகளை நிலைப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இருப்பதால் அதனை வெறும் தொழில் அல்லது வேலை என்ற முறையில் நாம் எடுத்துக்கொள்ள முடியாது.
- அதனால், பத்திரிகைத் துறையில் இருப்போரும் சேவை என்ற அடிப்படையில்தான் சிந்திக்க வேண்டும்.
- ஏற்றத்தாழ்வுகள் வரும்போது அதை மனங்கொள்ளாமல் கடமையில் மட்டுமே மனதை நிறுத்தவும் பழகிக்கொள்ள வேண்டியது அவசியம்.
- ஒரு கலைஞனைப் போலவே நல்ல பத்திரிகையாளனும் செயல்படுகிறான். அர்ப்பணிப்பும் தன்னிலை மறந்த செயல்பாடும்தான் அவனை இயக்குகின்றன.
- பொழுதுபோக்கு அம்சங்கள் காலத்தால், தொழில்நுட்ப வளர்ச்சியால் மாற்றம் காணக் கூடியவை.
- ஆனால், அறிவு வளர்க்கும் சாதனங்களுக்கு எப்போதும் அழிவில்லை. அதன் பயன் எப்போதும் இருக்கும்.
- அறிவு விருத்திக்கான கருவியாக பத்திரிகைகள் இருக்கும் வரை அவை சிரஞ்சீவித் தன்மையுடன் எல்லாத் தடைகளையும் தாண்டி வாழ்ந்து வளரும்.
நன்றி: தினமணி (20-06-2020)