TNPSC Thervupettagam

அனைத்துச் சாதி அர்ச்சகர் நடந்ததும், நடக்க வேண்டியதும்

October 23 , 2022 657 days 518 0
  • தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை சட்டம் 1959, தமிழ்நாட்டில் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்துக் கோயில்களையும் நிர்வகிக்க ஏற்படுத்தப்பட்டது. இச்சட்டத்தின் 55ஆவது பிரிவு, அர்ச்சகர்கள் நியமனம் பற்றியது. அதன்படி வாரிசுரிமையின் அடிப்படையிலேயே அர்ச்சகர்கள் நியமிக்கப்பட வேண்டும். மு.கருணாநிதி தலைமையிலான திமுக அரசு இச்சட்டத்தின் 55(2) பிரிவை 1970இல் திருத்தியது.
  • ‘வாரிசு உரிமையின் அடிப்படையில் அர்ச்சகர்கள் நியமிக்கப்படக் கூடாது’ என்ற அந்தத் திருத்தத்தை எதிர்த்து சேஷம்மாள் என்பவர் உச்ச நீதிமன்றம் சென்றார். ‘தமிழக அரசின் சட்டத் திருத்தம் செல்லும். அதே நேரம், ஆகம விதிகளுக்கு உட்பட்டு அர்ச்சகர் நியமனம் இருக்க வேண்டும்’ என உச்ச நீதிமன்றம் 1972இல் தீர்ப்பு வழங்கியது. கருணாநிதிக்குப் பின் ஆட்சிக்கு வந்த எம்.ஜி.ஆர்., ஆகம விதியின்படி செயல்படும் கோயில்களைக் கண்டறிய நீதிபதி மகாராசன் குழுவை அமைத்தார். ஆனால், தமிழ்நாட்டுக் கோயில்களில் 2006 வரை பிராமணர் அல்லாதவர்கள் அர்ச்சகர்களாக நியமிக்கப்படவில்லை.
  • கேரளத்தில் ஈழவர் சமூகத்தைச் சேர்ந்தவர் 2002இல் அர்ச்சகராக நியமிக்கப்பட்டார். திருவாங்கூர் தேவஸ்தானம் போர்டு பிராமணர் அல்லாதவரை அர்ச்சகராக நியமித்ததை எதிர்த்து, ஆதித்யன் என்ற மலையாள நம்பூதிரி பிராமணர் தொடர்ந்த வழக்கில், அரசமைப்பின் 17ஆவது பிரிவைச் சுட்டிக்காட்டி, கேரள உயர் நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்தது.
  • அதன் பின்னர், ‘தேவையான தகுதியையும் பயிற்சியையும் பெற்றுள்ள இந்து மதத்தைச் சேர்ந்த எவரும் இந்துக் கோயில்களில் அர்ச்சகர்களாக நியமிக்கப்படலாம்’ என்ற அரசாணையை (எண்: 118) 2006இல் தமிழக அரசு வெளியிட்டது. இதைத் தொடர்ந்து, கருணாநிதி தலைமையிலான அரசு, The Tamil Nadu Act No. 15 of 2006 என்ற சட்டத்துக்கு 29.08.2006 அன்று ஆளுநரிடம் ஒப்புதல் பெற்றது.

அடுத்த நகர்வு

  • ஏ.கே.ராஜன் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், அரசால் நியமிக்கப்பட்ட அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் அதே ஆண்டில் திறக்கப்பட்டன. 207 பேர் பயிற்சியை முழுமையாக முடித்தனர். இதற்கிடையில், மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள ஆதி சிவாச்சாரியார்கள் சங்கம் நீதிமன்றத்தை அணுகி, அனைத்துச் சாதி அர்ச்சகர் பணி நியமனத்திற்கு இடைக்காலத் தடை உத்தரவைப் பெற்றது. பயிற்சி பெற்ற மாணவர்கள் 2008 ஆம் ஆண்டில் தீட்சை பெற்றுவிட்ட நிலையில், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
  • ஆனால், வழக்கின் முடிவின் அடிப்படையில்தான் பணி நியமனங்கள் இருக்குமெனத் தெரிவிக்கப்பட்டது. அந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு 2015 டிசம்பர் மாதத்தில் வழங்கப்பட்டது. அந்தத் தீர்ப்பில், தமிழக அரசின் 2006ஆம் ஆண்டு அரசாணைக்கோ அனைத்துச் சாதியினர் அர்ச்சகராவதற்கோ உச்ச நீதிமன்றம் தடை விதிக்கவில்லை. அப்படி அனைத்துச் சாதி அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் யாரேனும் இருந்தால் தனித்தனியாக நீதிமன்றத்தில் முறையிட்டுக்கொள்ளுங்கள் என்றது உச்ச நீதிமன்றம்.

பெரிய கோயில்களில் நியமனம்

  • 2011-2021 வரையிலான அதிமுக ஆட்சியில், மதுரையில் அழகர் கோவில் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு சிறிய ஐயப்பன் கோயிலில் மாரிமுத்து என்ற பயிற்சிபெற்ற மாணவரும் (2018) மதுரை நாகமலைப் புதுக்கோட்டையில் உள்ள பிள்ளையார் கோயில் ஒன்றில் தியாகராஜன் என்ற பயிற்சிபெற்ற மாணவரும் (2020) அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டனர். இவை சிறு கோயில்கள், பெரிய கோயில்கள் அல்ல. மேலும், 2020ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோயில்களில் அர்ச்சகர்கள் உட்பட அனைத்துப் பணியாளர்களின் நியமன விதிகள் கொண்டுவரப்பட்டன. அந்தப் புதிய விதிகளின்படி, அர்ச்சகராகச் சேருபவர்கள் 18 வயதிலிருந்து 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் என்றும் அரசு அமைத்த அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி உட்பட, ஏதேனும் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில் பயிற்சி பெற்றவராக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
  • இதன் பின்னர், 2021ஆம் ஆண்டு திமுக அரசு பதவியேற்ற 100ஆவது நாளில், ஆகஸ்ட் 14ஆம் தேதி அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் பயிற்சி முடித்த 28 பேருக்குப் பணிகள் வழங்கப்பட்டன. சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில், திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் உள்ளிட்ட பெருங்கோயில்களிலும் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டனர்.
  • இவர்களில் நான்கு பேர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள். இந்த நியமனங்களையும் 2020ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட புதிய விதிகளையும் எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்டன. அந்த வழக்கில் தமிழ்நாடு அரசின் புதிய விதிகள் செல்லும் எனத் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம், ஆகம விதிகளின்படி இயங்கும் கோயில்களைக் கண்டறிய ஐந்து பேர் கொண்ட குழுவை நியமிக்கவும் உத்தரவிட்டிருக்கிறது.

சாதக அம்சங்கள்

  • இருப்பினும், கோயில்களை ஆகம அடிப்படையில் பிரிப்பதென்பது மறுபடியும் சாதி சார்ந்த நியமனங்களுக்கு வழிவகுக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. சேஷம்மாள் வழக்கிலும் (1972), 2015ஆம் ஆண்டு சொல்லப்பட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பிலும் சொல்லப்பட்ட எந்த உத்தரவையும் தற்போதைய தீர்ப்பு மீறவில்லை.
  • மேலும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை, உயர் நீதிமன்றத்தால் மீறவும் முடியாது. இந்தத் தீர்ப்பில் சில அம்சங்கள் பாதகமாக இருந்தாலும், பல சாதகமான அம்சங்கள் உள்ளன. 28 நபர்களின் பணி நியமனங்களையோ, எடப்பாடி பழனிசாமி அரசு உருவாக்கிய கோயில் பணியாளர்கள் பணி நிபந்தனை விதிகளையோ செல்லாது என அறிவிக்கவில்லை. கருணாநிதி அரசு ஆரம்பித்த அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளையும் செல்லாது என எந்தத் தீர்ப்பும் அறிவிக்கவில்லை.
  • மதுரை ஆதி சிவாச்சாரியார்கள் சங்கம் 2006ஆம் ஆண்டு தொடுத்த வழக்கில் 2015ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து, இடைக்காலத் தடையை நீக்கிய பின்னர் கிட்டத்தட்ட அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆவதற்கான எல்லா சாத்தியக்கூறுகளும் உருவான பின்னும் அன்றைய அதிமுக அரசு பெரிதாக ஆர்வம் காட்டவில்லை.
  • இருப்பினும் 2020ஆம் ஆண்டு கோயில் பணியாளர்கள் பணி நிபந்தனை விதிகளை உருவாக்கியது. அந்த விதிகளைப் பின்பற்றியே அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில் பயிற்சிபெற்ற 28 மாணவர்கள் 2021 ஆகஸ்ட் 14ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலினிடம் பணி நியமன ஆணை பெற்றனர். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு மேல் செயல்படாமல் இருந்த ஆறு அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளை மீண்டும் தொடங்கியிருக்கிறது தமிழ்நாடு அரசு. புதிதாக மூன்று பயிற்சிப் பள்ளிகளும் தற்போது திறக்கப்பட்டுள்ளன.
  • ஆறு அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் உள்ளிட்ட ஒன்பது பயிற்சிப் பள்ளிகளும் உண்டு உறைவிடப் பள்ளியாகச் செயல்படுவதோடு, பயிற்சிபெறும் ஒவ்வொரு மாணவருக்கும் மாதம் மூன்றாயிரம் ரூபாய் அளிக்கப்படும் என்றும் திமுக அரசால் அறிவிக்கப்பட்டு, ஒன்பது பயிற்சிப்பள்ளிகளிலும் 197 மாணவர்கள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். அனைத்துச் சாதி அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிக்கும் அனைத்துச் சாதி அர்ச்சகர் பணி நியமனங்களுக்கும் சட்டபூர்வமான அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இனி செய்ய வேண்டியது என்ன

  • அனைத்துச் சாதி அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளைத் தொடர்ந்து நடத்த வேண்டும். பயிற்சிபெறும் மாணவர்களை, இடம் காலியாகும் அர்ச்சகர் பணியிடங்களில் நியமிக்க வேண்டும். அனைத்துச் சாதி அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியும், பணி நியமனமும் தொடர வேண்டும். அவ்வாறு தொடராமல், 24 அர்ச்சகர் பணி நியமனங்களோடு நின்றுவிட்டால் ‘எல்லாம் பெரியார் சொன்னதால்’ என்பதெல்லாம் பெயரளவுக்கே என்றாகிவிடும்.

நன்றி: தி இந்து (23 – 10 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்