- இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருக்கிறார் பிரேசில் அதிபர் ஜைர் பல்சானோரோ. மருத்துவத் துறை தொடர்பாக இரு நாடுகளும் செய்துகொள்ளவிருக்கும் ஒப்பந்தம் முக்கியத்துவம் வாய்ந்தது. உலகிலேயே மக்களுக்கு 100% சுகாதார வசதி செய்துதந்து முன்னிலை வகிக்கிறது பிரேசில். இந்தியாவில் ஏழைகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க ‘ஆயுஷ்மான் பாரத்' என்ற திட்டம் இப்போதுதான் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
- அனைவருக்கும் மருத்துவ வசதிகளை அளிப் பதை அடிப்படைக் கடமையாகவே பிரேசில் நாட்டின் அரசமைப்புச் சட்டத்தில் 1988-ல் சேர்த்துவிட்டார்கள். ‘ஐக்கிய சுகாதார அமைப்பு' (எஸ்யுஎஸ்) என்று இதற்குப் பெயர். கடந்த 30 ஆண்டுகளில் சுகாதாரத் துறையில் பிரேசில் அபார வளர்ச்சி கண்டுள்ளது. மக்களுடைய சராசரி ஆயுள் 64 ஆண்டுகளாக இருந்தது இப்போது 76 ஆண்டுகளாக உயர்ந்திருக்கிறது.
மருத்துவமனைகள் – பிரேசில்
- பிரசவ காலத்தில் சிசுக்களின் மரணம் ஆயிரத்துக்கு 53 ஆக இருந்தது, இப்போது 14 ஆகக் குறைந்துவிட்டது. மருத்துவமனைக்கு வருவோரில் 95% பேரால் சேவையைப் பெற முடிகிறது என்று 2015-ல் நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் 20 லட்சம் குழந்தைகள் பிரேசில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கின்றன.
- ஒரு கோடிப் பேர் உள் நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெறுகின்றனர். ஆண்டுக்கு 100 கோடி முறை நோயாளிகள் மருத்துவமனைக்கு வருவதும் சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்து வீடு திரும்புவதும் பதிவாகியிருக்கிறது.
- இன்னொரு பக்கம், பிரேசில் நாட்டிலும் பொருளா தார நெருக்கடி நிலவுகிறது. இருந்தும் நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் 3.8% அனைவருக்கும் சுகாதார வசதிக்கு செலவிடப்படுகிறது. பிரிட்டனில் ஜிடிபியில் 7.9% சுகாதாரத்துக்கு செலவிடப்படுகிறது. பிரேசிலின் மக்கள்தொகை (21 கோடி), பிரிட்டனைப் போல (6.68கோடி) மூன்று மடங்கு என்பது குறிப்பிடத்தக்கது. பிரேசிலில் ஆண்டுக்கு சராசரியாக ஒருவர் மருத்துவத்துக்காக இந்திய மதிப்பில் சுமார் ரூ.42,000 செலவிடுகிறார். பிரிட்டனில் அது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 2.44 லட்சம். பிரேசிலில் மூப்படையும் மக்கள்தொகை உயர்ந்து வருகிறது. எனவே, 2060-ல் சுகாதாரத் துறைக்கான செலவு ஜிடிபியில் மேலும் 1.6% உயரும் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது.
- பிரேசிலில் குடும்பநல சுகாதாரத் திட்டங்கள், சமூக சுகாதார வலையமைப்பைச் சார்ந்திருக்கிறது. பிரேசிலில் சுகாதார வசதி விரைந்து பரவ இது முக்கிய காரணம். சுகாதார சமூக முகமையாளர்கள் மாதந்தோறும் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று வீட்டில் உள்ளோரின் நலனை விசாரித்து மருந்து-மாத்திரைகள், மருத்துவ ஆலோசனைகள் வழங்குவர்.
சமூக முகமையாளர்கள்
- மேல் சிகிச்சை செய்யப்பட்டால் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்த்துவிடுவர். இந்த சமூக முகமையாளர்கள், மக்களுக்கும் சுகாதாரத் துறைக்குமான உறவைப் பராமரிக்கிறார்கள். இதனால் மக்கள் நோய்வாய்ப்படுதலும் மரணம் அடைதலும் குறைந்துவருகின்றன. பிரேசிலில் 2000-வது ஆண்டில் மக்கள்தொகையில் 4% பேர்தான் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். 2015-ல் 64% பேர் சுகாதார வசதிகளைப் பயன்படுத்தினர்.
- இந்திய மக்கள்தொகை 130 கோடி. சுகாதாரத் துறைக்காக 2017-18-ல் மொத்த ஜிடிபியில் 1.3% அளவே இந்தியாவில் ஒதுக்கப்பட்டது. பிரேசிலில் எப்படி அனைவருக்கும் சுகாதார வசதிகள் செய்து தந்தார்கள் என்பதிலிருந்து இந்தியாவும் பாடம் படிக்கலாம். ஆரம்ப சுகாதார நிலையங்களிலிருந்து இதைத் தொடங்கலாம். 2022-க்குள் நாடு முழுவதும் 1,50,000 நல்வாழ்வு மையங்களை அரசு உருவாக்க வேண்டும். இந்த வகையில் இரு நாடுகளுக்கும் இடையிலான மருத்துவத் துறை ஒப்பந்தம் நல்ல தொடக்கமாக அமையும்.
நன்றி: இந்து தமிழ் திசை (28-01-2020)