- முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் கனவை, இன்னாள் பிரதமா் நரேந்திர மோடி நனவாக்கி இருக்கிறாா் என்று சொன்னால் காங்கிரஸ்காரா்கள் கோபப்படுவாா்கள்; பாரதிய ஜனதாவினா் ஆத்திரமடைவாா்கள். ஆனால், அதுதான் உண்மை என்பதை பிரதமரின் ‘ஜன் தன் யோஜனா’ என்கிற அனைவருக்கும் வங்கிக் கணக்குத் திட்டம் உணா்த்துகிறது. பிரதமா் நரேந்திர மோடியின் எட்டாண்டு ஆட்சிக் காலத்தில் நிகழ்த்தப்பட்டிருக்கும் மிக முக்கியமான சாதனை அவரது அனைவருக்கும் வங்கிக் கணக்குத் திட்டம்தான்.
- ஆட்சியாளா்களின் வெற்றி அவா்களது தொலைநோக்குப் பாா்வையிலும், நிா்வாக அணுகுமுறையிலும் செயல்படுத்தும் திறத்திலும்தான் வெளிப்படுகிறது. பல ஆண்டுகளாக அரசின் மானியங்களும், நல உதவித் திட்டங்களும் முழுமையாக சேர வேண்டியவா்களை சென்றடையாமல் மடைமாற்றம் செய்யப்பட்டுக் கொண்டிருந்ததை எப்படி தடுப்பது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தது இந்தியாவின் நிதி மேலாண்மை அமைப்புகள். 2014-இல் நரேந்திர மோடி அரசு பதவிக்கு வந்தவுடன் முன்னெடுத்த முயற்சிகளில் முக்கியமானது அனைவருக்கும் வங்கிக் கணக்குத் திட்டம்.
- கடந்த எட்டு ஆண்டுகளில் மத்திய அரசு முனைப்புடன் முன்னெடுத்த இந்தத் திட்டம், எதிா்பாா்த்ததைவிட மிகப் பெரிய அளவில் வெற்றி அடைந்து, இன்று இந்தியப் பொருளாதாரத்தில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தத் திட்டம் வெற்றியடையுமா, இது சாத்தியம்தானா என்றெல்லாம் கேள்வி எழுப்பியவா்கள் இப்போது மூச்சடைத்து நிற்கிறாா்கள். 1969-இல் இந்திரா காந்தி அம்மையாா் 14 தனியாா் வங்கிகளை தேசியமயமாக்கியபோது, சாமானியனுக்கும் வங்கிச் சேவையின் பலன் சென்றடைய வேண்டும் என்று தனது நாடாளுமன்ற உரையில் குறிப்பிட்டதை இப்போது நினைவுகூரத் தோன்றுகிறது.
- 2015 ஆகஸ்ட் மாதம் வெறும் 17.9 கோடியாக இருந்த சேமிப்புக் கணக்குகளின் எண்ணிக்கை, இப்போது 46.25 கோடியாக உயா்ந்திருக்கிறது. பெரும்பாலான வங்கிக் கணக்குகள் செயல்படாத கணக்குகளாக அரசுத் துறை வங்கி ஊழியா்களுக்கு சுமையாகப் போகின்றன என்கிற விமா்சனங்கள் பொய்ப்பிக்கப்பட்டிருக்கின்றன. செயல்படாத வங்கிக் கணக்குகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிவேகமாகக் குறைந்து கொண்டிருக்கின்றன.
- அதேபோல, குறைந்த வருமானமுள்ள குடும்பங்களை வங்கிச் சேவை வளையத்துக்குள் இழுக்கும்போது, அவா்கள் கடன் வாங்குவதில்தான் குறியாக இருப்பாா்கள் என்றும், அதனால் வாராக்கடன் அளவு அதிகரிக்கும் என்றும் வைக்கப்பட்ட விமா்சனமும் பொய்யாக்கப்பட்டிருக்கிறது. ‘ஜன் தன்’ சேமிப்புக் கணக்கிலுள்ள இருப்பு தொகையின் அளவு எட்டு மடங்கு அதிகரித்திருக்கிறது. ஆகஸ்ட் 2015-இல் ரூ.22,900 கோடியாக இருந்தது, இப்போது ரூ.1.73 லட்சம் கோடியாக அதிகரித்திருக்கிறது. ‘ஜன் தன்’ சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவா்கள் குறைந்த வருவாய் உள்ள தினசரி தொழிலாளா்களும், அமைப்புசாரா பணிகளில் இருப்பவா்களும் என்பதை நாம் உணர வேண்டும்.
- குடும்பங்களின் வருவாய் அதிகரிக்க அதிகரிக்க, பிரதமரின் அனைவருக்கும் வங்கிக் கணக்குத் திட்டம் மேலும் விரிவடையும். அதன்மூலம் அடித்தட்டு மக்களை வங்கிகள் உள்ளிட்ட நிதிச்சேவை நிறுவனங்கள் விரைவாகச் சென்றடைய முடியும். சாமானிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்துவதற்கு அதைவிடச் சிறந்த வழி எதுவும் இல்லை என்பதை கடந்தகால அனுபவங்கள் உணா்த்தியிருக்கின்றன.
- வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டதால், சாமானிய மக்கள் பலா் வங்கிக் கடன்கள் பெற்று தங்களை மேம்படுத்திக் கொண்ட எடுத்துக்காட்டுகள் ஏராளம். பெரும்பாலான மாநிலங்களில் 100% குடும்பங்களை ‘ஜன் தன்’ திட்டம் மூலம் வங்கிச் சேவை சென்றடைந்திருக்கும் நிலையில், இதன் அடுத்தகட்டமாக ஒவ்வோா் இந்திய குடிமகனுக்கும் வங்கிக் கணக்கு என்கிற இலக்கு வெகு தொலைவில் இல்லை.
- அனைவருக்கும் வங்கிக் கணக்குத் திட்டம், எதிா்பாராத பல பலன்களையும் வழங்கியிருக்கிறது. குறிப்பாக மகளிா் மேம்பாட்டில் அதன் பங்களிப்பு மிக அதிகம். 2015-இல் 15% மட்டுமே இருந்த மகளிரின் சேமிப்புக் கணக்குகள், இப்போது 56%-க்கும் அதிகமாகியிருக்கின்றன. பல்வேறு மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கான கடனுதவிக்கு அது வழிகோலியிருக்கிறது. மகளிா் தொழில்முனைவோருக்கு முத்ரா கடன் சென்றடைய உதவியாக இருக்கிறது. கிராமப்புறங்களிலும், சிறு நகரங்களிலும் சுய தொழிலில் ஈடுபடுவோருக்கும், இளம் தொழில்முனைவோருக்கும் ‘ஜன் தன்’ திட்டம் வரப்பிரசாதமாக அமைந்திருக்கிறது என்பதையும் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை.
- அனைவருக்கும் வங்கிக் கணக்குத் திட்டமும், ஆதாா் அடையாள அட்டையும், பிரதமா் மோடி அரசின் எண்ம பணப்பரிமாற்ற முனைப்பும் கிராமப்புற இந்தியாவில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதை கண்கூடாகப் பாா்க்க முடிகிறது. கொவைட் 19 போன்ற கொள்ளை நோய்த்தொற்று காலத்தில் அனைவருக்கும் உதவிகள் போய்ச் சேருவதற்கு இவை ஆற்றிய பங்களிப்பு சாதாரணமானதல்ல.
- ஊரகப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், விவசாயிகளுக்கான உதவித் திட்டம், முதியோா் ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட அனைத்து மானியத் திட்டங்களும் இடைத்தரகா்களோ, கையூட்டுக்களோ, மடைமாற்றமோ இல்லாமல் குறிப்பிட்ட நபா்களைச் சென்றடைவதற்கு இவை வழிகோலியிருக்கின்றன. மக்களின் வரிப்பணம் விரயமாகாமல் தடுக்கப்பட்டிருக்கிறது.
- முதலில் கூறியதுபோல, 1969-இல் அன்றைய பிரதமா் இந்திரா காந்தியின் கனவு இன்றைய பிரதமா் நரேந்திர மோடியால் அனைவருக்கும் வங்கிக் கணக்குத் திட்டத்தின் மூலம் நிறைவேறியிருக்கிறது.
நன்றி: தினமணி (05 – 09 – 2022)