- ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்துசெய்யப்பட்டு அம்மாநிலம் இரண்டு ஒன்றியப் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு அமலுக்குக் கொண்டுவரப்பட்டிருக்கும் புதிய வசிப்புரிமை விதிகள் புதிய விவாதங்களுக்கு வித்திட்டிருக்கின்றன.
- ஒருபுறம் வெகு காலமாக அரைகுறைக் குடியுரிமையைக் கொண்டிருந்த, காஷ்மீரின் மக்கள்தொகையில் சிறு அளவிலான மக்களுக்கு ஆதரவையும் நம்பிக்கையையும் அளித்திருக்கிறது.
- பாகிஸ்தானிலிருந்து அகதியாக வந்தவர்கள், இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்து வந்து தங்கி தூய்மைப் பணியாளர்களாக இருப்பவர்கள், சுதந்திரத்துக்கு முன்பு ஆங்கிலேயப் படைகளின் வீரர்களாக இங்கு வந்துசேர்ந்த கூர்க்கா இனத்தவர்கள் என்று இரண்டு, மூன்று லட்சம் பேரை இது உள்ளடக்கும்.
- இவர்கள் நிரந்தரமாக வசிப்போராகக் கருதப்படாததுடன் அவர்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்பு, அரசியலில் வாய்ப்புகள் மறுக்கப்பட்டன. இது நியாயமற்ற சூழல் மட்டுமல்ல; அவர்களுக்கு எந்தவிதப் பாதுகாப்பும் வழங்காத சூழலும்கூட.
- இன்னொருபுறம், உள்ளூர் மக்கள்தொகை விகிதாச்சாரத்தையும் மாற்றியமைக்கும் முயற்சியாகப் பெரும்பான்மை காஷ்மீரிகளால் இது பார்க்கப்படுகிறது.
- புதியவர்களின் அதிகாரம் எதிர்கால காஷ்மீரின் முடிவுகளில் பிரதிபலிக்கும் என்ற வகையில், அவர்களுடைய அச்சமும் அர்த்தமற்றதல்ல.
மாநிலத்தில் நிரந்தரமாக வசிப்பவர்
- ஆகஸ்ட் 2019-ல் சட்டப் பிரிவு 370, 35ஏ ஆகியவற்றில் செய்யப்பட்ட மாற்றங்களைத் தொடர்ந்து, மார்ச் 2020-ல் ‘மாநிலத்தில் நிரந்தரமாக வசிப்பவர்’ என்ற கருத்தாக்கம் ஜம்மு-காஷ்மீரில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.
- புதிய வசிப்புரிமை விதிகளின்படி ஜம்மு-காஷ்மீரில் 15 ஆண்டுகள் குடியிருந்த நபர்களும் அவர்களின் பிள்ளைகளும், அல்லது அந்த ஒன்றியப் பிரதேசத்தில் ஏழு ஆண்டுகள் படித்துவிட்டுப் பத்தாம், பன்னிரண்டாம் வகுப்பு பரீட்சை எழுதியவர்களும் வசிப்புரிமை பெறத் தகுதியானவர்கள் ஆவார்கள்.
- ஒரு தரப்புக்கு வரலாற்றுரீதியாக ஏற்பட்ட இழப்புக்கு ஈடுகட்டுவதுடன், இந்த மாற்றங்கள் ஜம்மு-காஷ்மீரில் தற்போது வசிக்கும் மற்றவர்களும் வசிப்புரிமைகளும் அதனுடன் தொடர்புடைய மற்ற உரிமைகளும் பெற வழிவகுக்கும்.
- ஆனால், இந்த மாற்றங்கள் அனைத்துத் தரப்பினருக்கும் உற்சாகம் அளிக்கவில்லை. வெளிமாநிலத்தவர்கள் பலரும் ஜம்மு-காஷ்மீருக்கு வந்து குவியக்கூடும் என்ற கவலைகளும் நிலவுகின்றன.
- அந்தப் பிரதேசத்தின் மக்கள்தொகை விகிதாச்சாரத்தை மாற்றியமைக்கும் முயற்சியாகவும் இது பார்க்கப்படுகிறது.
- தேசிய மாநாட்டுக் கட்சியும், மக்கள் ஜனநாயகக் கட்சியும் இந்த மாற்றங்களைக் கடுமையாக எதிர்த்துவருகின்றனர்.
- நிலம் தங்கள் கைவிட்டுப் போய்விடுமோ, உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு குறைந்துவிடுமோ என்ற அச்சம் ஜம்முவிலும் நிலவுகிறது.
- பொருளாதார முன்னேற்றம், ஒரு சமூகத்தின் துடிப்பு ஆகியவற்றுக்கும், வெளியுலகத்தைத் திறந்த மனதுடன் எதிர்கொள்வதற்கும் நேர்மறையான தொடர்பு இருக்கிறது.
நன்றி: தி இந்து (02-07-2020)