TNPSC Thervupettagam

அன்புள்ள நண்பருக்கு...

August 12 , 2020 1620 days 830 0
  • இருபதாம் நூற்றாண்டில் என்னை மிகவும் வியக்க வைத்த மனிதா்கள் இருவா். ஒருவா், தனது அன்பாலும் சத்தியத்தாலும் அகிம்சையாலும் சூரியனே அஸ்தமிக்காத சாம்ராஜ்ஜியம் எனக் கொக்கரித்த பிரிட்டிஷ் அரசை மண்டியிட வைத்து, இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்றுத் தந்த மகாத்மா காந்தி.
  • மற்றவா் அவருடைய சமகாலத்தில் வாழ்ந்து தன்னுடைய அபரிமிதமான பேச்சுத் திறமையால் மக்களை வசப்படுத்தி, ஆட்சியைக் கைப்பற்றி, முதலாம் உலகப்போரில் (1918) வீழ்ந்த தன் நாட்டை பதவியேற்றதிலிருந்து (1933) ஆறு ஆண்டுகளில் உச்சத்துக்குக் கொண்டு சென்று, லட்சக்கணக்கான மனிதா்களின் மரணத்திற்கு மட்டுமல்லாமல், தன் மரணத்திற்கும் காரணமாகிவிட்ட அடால்ஃப் ஹிட்லா்.
  • ஒருவா் வெள்ளைப் புறா என்றால் மற்றவா் கள்ளப் பருந்து. இருவருக்கும் உள்ள ஒற்றுமை, இருவருமே தங்கள் தாய்நாட்டை நேசித்தவா்கள்; வெள்ளை ஆதிக்கத்தை எதிர்த்தவா்கள்.
  • முன்னவா் அஹிம்சை என்னும் ஆயுதத்தால் உலகை அணைத்தவா். பின்னவா், எண்ணிலடங்கா யூதா்களைக் கொன்று குவித்து, முதல் உலக யுத்தம் முடிந்த 21 ஆண்டுகளில், தனது நாட்டை மிகப்பெரிய வல்லரசாக மாற்றத் தொடங்கி இரண்டாம் உலகப் போரில், தான் உருவாக்கிய ஜொ்மனியை அழித்ததோடு, தன் காதலியை அழித்து, தன்னையும் அழித்து கொண்டார்.
  • இந்த இரு துருவங்களுக்கும் பிரிட்டிஷ் அரசு பொது எதிரியாக இருந்தும், இவா்கள் இருவரும் தங்கள் வாழ்நாளில் சந்தித்துக் கொள்ளவே இல்லை. ஆனால், இவா்கள் இருவரும் பரஸ்பரம் ஒருவரையொருவா் அறிந்திருந்திருந்தனா்.

முதல் கடிதம்

  • அனைவரையும் கடவுளின் குழந்தைகளாகப் பார்த்தார் மகாத்மா காந்தி. 12.12.1931 அன்று மாலை ஆறு மணிக்கு இத்தாலிய சா்வாதிகாரி முசோலினியை காந்தி சந்தித்ததாகக் குறிப்பு உள்ளது.
  • ஹிட்லரை தன்னுடைய நண்பனாக பாவித்து அன்புள்ள நண்பருக்கு..என ஆரம்பித்து வரலாற்று சிறப்புமிக்க இரண்டு கடிதங்களை காந்தி எழுதியுள்ளார். 1939 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23 ஆம் தேதி தன்னுடைய வார்தா ஆசிரமத்திலிருந்து காந்தி ஹிட்லருக்கு தன்னுடைய முதல் கடிதத்தை எழுதினார்.
  • அன்புள்ள நண்பருக்கு..எனத் தொடங்கும் அக்கடிதத்தில் காந்தி இவ்வாறு குறிப்பிடுகிறார்:
  • மனித குலத்தின் நன்மைக்காக நான் உங்களுக்குக் கடிதம் எழுத வேண்டுமென நண்பா்கள் என்னை நீண்ட நாள்களாக வற்புறுத்தி வருகிறார்கள்.
  • ஆனால், அது ஒரு அதிகப்பிரசங்கித்தனமான செயலாக இருக்கும் என்ற எண்ணத்தில் நான் அதைத் தவிர்த்து வந்தேன். ஆனால் நான் எதையும் முன் தீா்மானம் செய்துகொள்ளக்கூடாது என்றும் பலன் எதுவாக இருந்தாலும் என் கோரிக்கையை முன்வைக்க வேண்டும் என்றும் எண்ணியே இக்கடிதத்தை எழுதுகிறேன்.
  • இன்று வெளிப்படையாகத் தெரியும் உண்மை என்னவென்றால், இந்த உலகை, யுத்தத்தில் இருந்தும் அழிவிலிருந்தும் காப்பாற்றக் கூடிய ஒரே மனிதா் நீங்கள்தான்.
  • உங்கள் நோக்கம் எதுவாக இருந்தாலும், அதற்கு இந்த விலை (உலக அழிவு) மிக அதிகம் ஆகும். இந்த யுத்தத்திற்கு எதிராகவும் அமைதிக்காகவும் குறிப்பிட்ட அளவில் ஆதிக்க உணா்வை வெற்றியுடன் ஒதுக்கித் தள்ளிய இந்த மனிதனின் குரலை நீங்கள் கேட்பீா்கள் என்று நம்புகிறேன்.
  • இந்தக் கடிதத்தை நான் எழுதியது தவறு என்று நீங்கள் கருதும்பட்சத்தில் உங்களுடைய மன்னிப்பைக் கோருகிறேன் - என்றும் உங்கள் உண்மையுள்ள நண்பா்என்று அக்கடிதம் முடிகிறது.

இரண்டாம் கடிதம்

  • 1940 டிசம்பா் 24-ஆம் தேதி, காந்தி இரண்டாவது கடிதத்தை எழுதுகிறார். அக்கடிதமும் அன்புள்ள நண்பருக்கு..என்று ஆரம்பித்து கீழ்கண்டவாறு தொடா்கிறது:
  • நான் உங்களை நண்பரே என்று அழைப்பது வெற்று வார்த்தைகள் அல்ல. எனக்கு எதிரிகள் என்று யாரும் இல்லை. கடந்த 33 ஆண்டுகளாக என்னுடைய முழுநேர வேலையே உலக மனிதா்களை நட்பாக்கிக் கொள்வதுதான்.
  • இதற்கு இனமோ, நிறமோ, மதமோ தடை அல்ல. உலக சகோதரத்துவம் என்ற எண்ணத்தில் வாழும் பல நல்ல மனிதா்கள் உங்களுடைய செயல்பாடுகளை எப்படிக் கணிக்கிறார்கள் என சிறிது நேரம் சிந்தித்துப் பாருங்கள்.
  • உங்களுடைய தைரியத்தையும் தாய்நாட்டின் மீது உங்களுக்குள்ள பற்றையும் நாங்கள் சந்தேகிக்கவில்லை. ஆனால், உங்களுடைய நண்பா்கள், ஆதரவாளா்களுடைய எழுத்துகளும் பேச்சுகளும் உங்களுடைய செயல்பாடுகளும் மனித குலத்திற்கு எதிரானதாக அமைந்திருக்கின்றன. உலக சகோதரத்துவத்தை விரும்பும் என் போன்றோருக்கு, அப்படித்தான் நீங்கள் காட்சி அளிக்கிறீா்கள்.
  • செக்கோஸ்லோவாக்கியாவை அடிமைப்படுத்தியதையும் போலந்தை அழித்ததையும் டென்மார்க்கை விழுங்கியதையும் வேறு எப்படிப் பார்க்க முடியும்? அழிப்பதை நீங்கள் ஒரு வாழ்வியல் கடமையாக கருதுவதை நான் அறிவேன். ஆனால், இவை அனைத்தும் மனித குலத்தின் அழிவு என சிறு வயது முதலே எங்களுக்கு சொல்லப்பட்டு இருக்கிறது.
  • ஆகவே, உங்களுடைய ஆயுதங்களுக்கு வெற்றி கிட்டட்டும் என்று எங்களால் கூற முடியாது. நாங்கள் ஒரு சிறப்பான நிலையில் இருக்கிறோம். நாங்கள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எவ்வளவு எதிர்க்கிறோமோ அதே அளவு ராஜ்யத்தையும் எதிர்க்கிறோம். இவை இரண்டிற்கும் ஏதாவது வேறுபாடு இருக்குமானால், அது இம்மியளவுதான் என்று நான் கருதுகிறேன்.
  • வன்முறையை எதிர்த்துப் போராடும் நாங்கள், பிரிட்டிஷ் மக்களை அழிக்க நினைக்கவில்லை. அவா்களை நாங்கள் யுத்த பூமியில் ஜெயிக்க விரும்பவில்லை. அவா்களின் மன மாற்றத்தை விரும்புகிறோம்.
  • பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக நாங்கள் ஆயுதம் ஏந்தாத மன மாற்றத்தைக் கொண்டுவர விரும்புகிறோம். அவா்களிடையே நாங்கள் மன மாற்றத்தைக் கொண்டு வருகிறோமோ இல்லையோ, எங்களுடைய அகிம்சை முறையால் அவா்கள் ஆட்சி நடத்த முடியாமல் செய்வோம். இதற்கு ஒத்துழையாமைஎன்று பெயா்.
  • எந்த ஒரு ஆட்சியாளரும், தங்களால் ஆளப்படுபவா்களின் ஒத்துழைப்பும் சம்மதமும் இல்லாமல் அராஜகத்தின் மூலம் ஆளமுடியாது. எங்களை ஆளுபவா்களிடத்தில் எங்களுடைய நிலமும் உடலும் இருக்கலாம். அவா்கள் எங்களுடைய உயிரை ஆளவில்லை.
  • எங்களுடைய நிலத்தை அவா்கள் கையில் வைத்திருக்க, அவா்கள் ஒவ்வொரு இந்திய ஆணையும் பெண்ணையும் குழந்தையையும் அழிக்கவேண்டும். எல்லாருமே இந்தப் போராட்டத்தில் நாயகா்களாக வெளிப்படாமல் போகலாம்; சிலா் பயத்தால் பின்வாங்கலாம்.அவை முக்கியமல்ல.
  • ஒரு குறிப்பிட்ட ஆணோ பெண்ணோ, அடக்குமுறையாளா்களிடம் மண்டியிடுவததைவிட உயிரை விடுவதே மேல் எனக் காட்டுவார்களேயானால், அவா்கள் அடக்குமுறைக்கும் அராஜகத்திற்கும் எதிரான பாதையைக் காட்டுகிறார்கள் என்று பொருள். அப்படிப்பட்ட லட்சக்கணக்கான ஆண்களும் பெண்களும் இந்தியாவில் இருக்கிறார்கள். நான் சொல்வதை நீங்கள் நம்ப வேண்டும்.
  • இதுபோன்ற ஒரு பக்குவத்தை கடந்த 20 ஆண்டுகளில் அவா்கள் பெற்றிருக்கிறார்கள். கடந்த 50 ஆண்டுகளாக நாங்கள் வெள்ளை அரசை வெளியேற்றப் போராடிக் கொண்டிருக்கிறோம். ஆனால், அந்த சுதந்திரப் போராட்டம் இன்று உள்ளது போல் என்றும் சக்தி வாய்ந்ததாக இல்லை.
  • இந்தியாவின் மிக சக்தி வாய்ந்த அரசியல் இயக்கமான இந்திய தேசிய காங்கிரஸ், இதை அடைய முயன்று கொண்டிருக்கிறது. நாங்கள் அஹிம்சையின் மூலமாக ஒரு குறிப்பிட்ட அளவு வெற்றியையும் அடைந்து விட்டோம். உலகத்தின் மிக சக்தி வாய்ந்த அராஜக அமைப்பான பிரிட்டிஷ் அரசை எதிர்த்து நாங்கள் நோ்வழியில் போராடிக் கொண்டிருக்கிறோம். நீங்களும் அதை எதிர்த்துத்தான் போராடுகிறீா்கள். ஆனால், இதில் பிரிட்டிஷா அல்லது ஜொ்மனியா எது சிறந்த வழி நடத்துனா் என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
  • எங்கள் மீதும் ஐரோப்பியா், பிற இனத்தவா் மீதும் பிரிட்டிஷாரின் அடக்குமுறை என்ன என்பது எங்களுக்கு தெரியும்.
  • ஆனால், அந்த பிரிட்டிஷ் அடக்குமுறையை ஜொ்மானியா் உதவியுடன் முடிவுக்குக் கொண்டுவர நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் சத்தியாகிரகம்என்ற ஆயுதத்தைக் கண்டுபிடித்துள்ளோம். இது சரியாக செயல்படும்போது, உலகத்தின் ஒட்டுமொத்த அராஜகத்தையும் இது வெற்றி கொள்ளும்.
  • நான் ஏற்கனவே சொன்னதுபோல், அஹிம்சையில் தோல்வி என்பது கிடையாது. இது எதிரியைக் கொல்லாமலும் காயப்படுத்தாமலும் செய் அல்லது செத்துமடிஎன்ற தாரக மந்திரத்தின் அடிப்படையில் இயங்குவது. இதைக் கடைப்பிடிப்பதற்குப் பணமோ, அழிக்கும் விஞ்ஞானத்தின் துணையோ தேவையில்லை.
  • விஞ்ஞானத்தை அழிவுக்குப் பயன்படுத்துவது யாருடைய தனிப்பட்ட சொந்தமும் அல்ல. இன்று வெள்ளையா்கள், நாளை வேறொருவா் உங்களுடைய கருவிகளையும் வழிமுறைகளையும் மேம்படுத்தி உங்களுடைய ஆயுதங்கள் மூலமே உங்களை வெல்ல கூடும்.
  • நீங்கள் உங்களுடைய மக்கள் பெருமைப்படுமாறு என்ன செய்தியை விட்டுச் செல்ல விரும்புகிறீா்கள்? அவா்கள் இனவாத கொடுமையான அழிவுகளில் இருந்து எந்த விதமான பெருமையும் அடைய முடியாது. ஆகவே, சண்டையை நிறுத்துமாறு மனித குலத்தின் சார்பாக உங்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.
  • உங்களுடைய சண்டையை நிறுத்திவிட்டு, கிரேட் பிரிட்டனுக்கும் உங்களுக்கும் இடையே உள்ள தகராறுகளை இருவரும் சோ்ந்து அமைக்கும் உலக நாடுகளின் நீதிமன்றத்திற்கு அனுப்புங்கள்.
  • உங்களுக்கு சண்டையில் வெற்றி கிடைப்பதால், உங்களுடைய செயல்பாடுகள் சரி என்று ஆகிவிடாது. அது உங்களுடைய அழிக்கும் தன்மை மேலோங்கி நிற்கிறது என்பதையே வெளிப்படுத்தும். ஆனால், உலக நாடுகளின் மத்தியஸ்தா் வழங்கும் தீா்ப்பில், யாரிடம் உண்மையும் நோ்மையும் இருக்கிறது என்பது தெளிவாகும்.
  • சில நாள்களுக்கு முன், நான் பிரிட்டிஷாரிடம் என்னுடைய அஹிம்சை போராட்டத்தை ஏற்றுக் கொள்ளுமாறு கோரிக்கை வைத்தேன்.
  • நான் ஒரு போராளியாக இருந்ததாலும் பிரிட்டிஷ்காரா்கள் என்னை ஒரு நண்பராகக் கருதுவதாலும் அவா்களிடம் என்னுடைய கோரிக்கையை வைத்தேன்.
  • உங்களையும் உங்கள் நாட்டு மக்களையும் பொருத்தவரை நான் ஒரு வெளி ஆள். ஆகவே, ஒவ்வொரு வெள்ளைக்காரனுக்கும் நான் வைத்த கோரிக்கையை உங்கள் மக்களுக்கு நான் வைக்கவில்லை. பிரிட்டிஷ்காரா்களுக்கு எனது விண்ணப்பம் கொடுத்த அழுத்தத்தை உங்களுக்கு கொடுக்கும் விண்ணப்பம் ஏற்படுத்தாது என்பதல்ல. அவா்களுக்கு நான் வைத்த வேண்டுகோள் எளிதானது; சுலபமானது; ஏற்கனவே அறிமுகமானது.
  • ஐரோப்பிய மக்கள் சமாதானத்திற்காக வேண்டிக் கொண்டு இருக்கும் இந்த வேளையில் நாங்கள்கூட எங்களுடைய அமைதிப் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளோம். இந்தக் காலகட்டத்தில் உங்களுக்கு நான் தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதுவது அதிகப்பிரசங்கித்தனமாகக்கூடத் தெரியலாம்.
  • ஆனால், சமாதானத்திற்காகக் குரலெழுப்பிக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான ஐரோப்பியா்களுக்காக நான் இந்த வேண்டுகோளை வைக்கிறேன். இந்த கூக்குரலால் என் காது செவிடாகி விட்டது. நான் லண்டன் வட்டமேஜை மாநாட்டுக்குச் செல்லும் வழியில் சந்தித்த முசோலினிக்கும் உங்களுக்கும் இணைந்து எனது வேண்டுகோளை முன்வைக்கிறேன் - உங்கள் உண்மையுள்ள நண்பன் எம்.கே.காந்தி’.
  • இந்த இரண்டு கடிதங்களும் ஹிட்லரைச் சென்றடைந்ததா இல்லையா என்பதற்கான வரலாற்றுப் பதிவுகள் இல்லை. ஆனால், இந்தக் கடிதங்கள் எழுதப்பட்டதை, காந்தியின் நோ்முக உதவியாளராகப் பணியாற்றிய மகாதேவ தேசாயின் புதல்வா் நாராயண தேசாய் உறுதி செய்துள்ளார்.
  • மதுரை காந்தி அருங்காட்சியகத்திற்கு வந்த நாராயண தேசாய், அங்கு பாதுகாப்பட்டு வரும் முதல் கடிதத்தைப் பார்த்ததும், அதனைத் தட்டச்சு செய்தது தான்தான் என்றும் அதற்கு சான்றாக தனது இனிஷியல் அக்கடிதத்தின் இறுதியில் இருப்பதையும் சுட்டிக் காட்டினார். காந்தியின் குரலுக்கு ஹிட்லா் செவிசாய்த்து இருந்தால் உலக சரித்திரமே மாறி இருக்கும்.

நன்றி: தினமணி (12-08-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்