TNPSC Thervupettagam

அன்பு ஆதிக்கம் செலுத்தாது

October 8 , 2023 462 days 342 0
  • ஆதியில் கூட்டம் கூட்டமாக ஓரிடத்தில் வசித்தவர்கள், அங்கிருந்து வேறு இடங்களுக்குப் பெயர்ந்து கொண்டிருக்கையில் ஒருவரோ இல்லை சிலரோ கூட்டத்துக்குத் தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்க வேண்டும். தலைமை சொல்லும் வழி நடந்தால் அனைவரும் பாதுகாப்பாகத் தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளவும் இணைந்து வேலைகள் செய்யவும் ஏதுவாக இருக்கும் என்பதால் இப்படிப்பட்ட ஓர் ஏற்பாடு அவசியமாக இருந்திருக்கலாம். அதுதான் இன்று அரசு என்கிற பெயரில் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. இதுவும் அவசியமான ஒன்றுதான். ஏனெனில், பொதுவில் இத்தனை கோடி மனிதர்கள் சேர்ந்து வாழச் சில சட்ட திட்டங்கள், ஒழுங்கு முறைகள் அவசியமாகின்றன.
  • இந்த ஏற்பாடுதான் மனிதர் கூட்டமாக வாழாமல் குடும்பம் என்கிற அமைப்பு ஏற்பட்ட பிறகும் கூட்டுக் குடும்பங்களில் ஒருவர் தலைவராகவும் மற்றவர்கள் அவர் சொல் கேட்டு நடக்கும் குடும்ப உறுப்பினர்களாகவும் செயல்பட்டனர். எதிலுமே சில நன்மைகளும் சில தீமைகளும் இருக்கத்தான் செய்யும்தானே? அதேபோல், இந்த ஏற்பாட்டிலும் சிலருக்கு அது நன்மையாகவும் சிலருக்குத் தீமையாகவும் மாறியது.

தலைவனும் தலைவியும்

  • மனிதர்களின் பரிணாம வளர்ச்சியின் நீட்சியாகக் குடும்பங்களிலும் பரிணாம வளர்ச்சி நடந்தது. அப்படியாக இன்று கூட்டுக் குடும்ப அமைப்புகள் 90 சதவீதம் அழிந்தேவிட்டன என்றே சொல்லலாம். ஆக, இன்றைக்கான குடும்பம் என்பதில் உறுப்பினர்களின் எண்ணிக்கை மிகவும் நலிந்துவிட்டது. ஆனாலும் ஏனோ மனிதருக்குள் எப்படியோ இந்த ஆதிக்க மனப்பான்மை மலிந்தே கிடக்கிறது.
  • கூட்டங்களைவிடத் தனிமனிதரின் வாழ்வு என்பது முக்கியத்துவம் பெறத் தொடங்கிவிட்ட இக்காலத்திலும், இருவர் மட்டுமே இருக்கும் இடத்தில்கூட, நான் தலைவன்/தலைவி என்பதுபோலான இடத்தை ஆக்கிரமிப்பு செய்யவே மனிதர்கள் விரும்புகிறார்கள். இருப்பது இருவர்தானே? இருவரும் கலந்தாலோசித்து எந்த முடிவையும் எடுப்பதில் என்ன பிரச்சினை? ஆனாலும், “நான் சொல்வதுபோல்தான் நீ இருக்க வேண்டும்” என்றோ “என் விருப்பப்படிதான் நீ நடந்துகொள்ள வேண்டும்” என்றோ ஓர் ஆதிக்கம் இணையர்களுக்குள் இருந்துகொண்டேதான் இருக்கிறது. இங்குதான் உறவுகள் அதன் அழகை, அன்பை தொலைக்கத் தொடங்குகின்றன. நாம் ஒரு தனி மனிதர் என்றால் நம் இணையரும் ஒரு தனி மனிதர்தானே? அப்படியிருக்கையில் அவர்கள் நம் கைபொம்மையாக இருக்க வேண்டும் என ஏன் எதிர்பார்க்கிறோம்?

அச்சத்தில் தொடங்கும் ஆதிக்கம்

  • உறவுகளுக்குள் ஆதிக்கம் எங்கே தொடங்குகிறது தெரியுமா? தன்னம்பிக்கை யின்மையில், பாதுகாப்பின்மையில், சுயமதிப்பின்மையில்! இவை மனிதருக்குள் அச்சத்தை ஏற்படுத்துகின்றன. இவர்களைச் சமமாக மதித்துவிட்டால் தன்னை அடக்க ஆரம்பித்து விடுவார்களோ என்கிற அச்சம். இவர்களுக்குச் சுதந்திரம் இருந்துவிட்டால் தன்னைவிட்டு அகன்று விடுவார்களோ என்கிற அச்சம். இவர்களை நாம் மதித்துவிட்டால், தன்மேல் அவர்களுக்கு இருக்கும் மதிப்பு போய்விடுமோ என்கிற அச்சம். நம்மைவிட்டு இவர்கள் போய் விட்டாலோ, நம் மேல் இருக்கும் மதிப்பு போய்விட்டாலோ அவர்களால் கிடைத்துக் கொண்டிருக்கும் செளகரியங்களை இழந்துவிடுவோமோ என்கிற அச்சம்! இவ்வளவு அச்சங்களும் சேர்ந்துதான், தன் இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள இப்படி ஆதிக்கம் செலுத்த வைக்கிறது. இன்னொரு மனிதர் மீது அதுவும் முக்கியமாக நாம் அன்பு வைத்திருப்பதாகச் சொல்லிக்கொண்டிருக்கும் மனிதர் மீது ஆதிக்கம் செலுத்துவது ஒருவிதமான மனச் சிக்கல்.
  • இருவரும் சேர்ந்து மகிழ்வாக வாழவும் சுகத்திலும் துக்கத்திலும் தோள்கொடுத்து நிற்கவும் இணையர்களாகிறோம். ஆனால், இந்த இருவரில் ஒருவர் ஆண்டான், ஒருவர் அடிமை என்றே ஆகிறோம். இது பொதுவாக நிகழ்வது. அனைவரும் அப்படித்தானா என்றால் இல்லை. தன்னம்பிக்கை கொண்டவர்களும் சுயமதிப்புகொண்டவர்களும் எந்த அச்சமும் கொள்வ தில்லை. அவர்கள் ஒருவரை மற்றவர் மதித்து வாழ்கிறார்கள். இந்த அடிமைப்படுத்தும் எண்ணத்தால்தான் பெருவாரியான குடும்பங்கள் வெளியில் அருமையாக வாழ்வதுபோல் தோற்றமளித்தாலும் உள்ளே நிம்மதியில்லாமல் வாடுகின்றன.
  • ஆணாதிக்கம் பிறந்ததற்கு காரணமே இந்த அச்சம்தான். இன்று குடும்பங்களில் அந்த ஆதிக்கத்தை ஆண்/பெண் என்று இருபாலரிடமும் காண முடிகிறது. ஒன்று மனைவியின் ஆதிக்கம் இல்லையெனில் கணவனின் ஆதிக்கம். அன்பென்ற போர்வையில் பல இணையருக்குள் இன்னொருவரை ஒரு பொருளாக, தன் சொல்படி நடக்கும் பாவையாகப் பார்க்கும் வேலைதான் நடந்துகொண்டிருக்கிறது. சந்தேகமும் அதை முன்வைத்த கேள்விகளும் அச்சத்தில் இருந்துதான் தொடங்குகின்றன.

ஏன் இவ்வளவு கேள்விகள்?

  • அன்பென்ற போர்வையில், “இந்த நேரத்தில் எங்கிருக்கிறாய், யாருடன் இருக்கிறாய்? நானிருக்க உனக்கு நண்பர்கள் எதற்கு? பெற்றவர்கள் எதற்கு? உடன்பிறந்தவர்கள் எதற்கு?” என்கிற கேள்விகளால் துளைத்து, தன்னுடனே இணையரைச் சதாசர்வ காலமும் இருத்தி வைத்துக் கொள்ளும் போராட்டங்கள், மற்ற மனிதர்களிடம் அவர்களை ஒட்டவிடாமல் இருக்க வைக்கும் உத்திகள் எல்லாம் அச்சத்திலிருந்துதான் தோன்றுகின்றன. தனி மனிதர்கள் பலர் இப்படிப்பட்ட உறவுகளில் மூச்சு முட்டி மனதளவில் மரத்துப்போய் காலம் கடத்துகிறார்கள். இப்படிப்பட்ட உறவுகளில் இருவருமே நிம்மதியையும் மகிழ்வையும் தொலைத்துதான் வாழ்கிறார்கள்.
  • வெளியில் ஒருவர் தன்னைத் தானே உயர்ந்தவர் என்று காட்டிக்கொள்கிறார் என்றால், உண்மையில் அவரிடம் தாழ்வு மனப்பான்மை அதிகமாக இருக்கிறதென்றே பொருள். தானே தன்னை உயர்ந்தவர் என்று பிரகடனப்படுத்திக்கொண்டால்தான் மற்றவர்கள் தன்னை உயர்ந்தவர்களாக எண்ணுவார்கள் என்கிற எண்ணம்தான் இதற்குக் காரணம். அதேபோல் ஒருவர் ஆதிக்கம் செலுத்துகிறார் என்றால் அவர் மனதளவில் தன்னைக் கீழ்மையாக நினைக்கிறார், தன்னையே அவர் மதிக்கவில்லை என்றுதான் பொருள். ஆதிக்கம் செலுத்துபவர்கள் ஒருவித அச்சத்தில் வாழ்கிறார்கள் என்றால் அடிமைத்தனத்தை ஏற்று நடப்பவர்கள் இன்னொரு விதமான அச்சத்தில் வாழ்கிறார்கள்.
  • ஆக ஒருவரின் ஆதிக்கமும் மற்றவர் மேலான சந்தேகமும் கண்டிப்பாக அன்பின் நீட்சியல்ல. தன் உணர்வுகளுக்கு வடிகாலாக, தன் செளகரியங்களுக்குக் குறை ஏற்படாமல் இருக்க மற்றவரை இருத்திவைத்துக்கொள்ளும் சூழ்ச்சியே!

நன்றி: இந்து தமிழ் திசை (08 - 10 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்