அன்றாடமும் கல்வியும்
- அன்றாடம் என்பதே இயற்கையின் காலப் பரிமாணம் ஆகும். மானுடம் நினைவுசேகரம், அறிவுசேகரம் போன்றவற்றால் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்று பிரித்து, வரலாற்றுத் தொடர்ச்சியை உருவாக்கிக்கொள்கிறது. அதன் விளைவுகளைத் தத்துவார்த்த மானுடவியல் நோக்கில் ஆராயும் கட்டுரைத் தொடர் இது.
- மனித உயிர் அன்றாடம் என்ற காலப் பரிமாணத்தில் தான் இயங்குவதை உணர்கிறது. அதன் உயிரியல் தேவைகளுக்கேற்ப இயங்குகிறது. அதன் உடல் இயக்கத்தினூடாக நரம்பு மண்டலத்தின் ஆற்றலால் அது நினைவுகளைச் சேகரிக்கிறது. அது இயக்கத்துக்குத் தேவையான அறிவாக மாறுகிறது.
- தன்னுடைய புலனுலகைக் குறித்த, அதாவது தனக்குப் புலனாகும் உலகைக் குறித்த அறிதலை, அந்தப் புலனுலகில் பங்கெடுக்கும் பிற மானுட உயிரிகளுடன் அது பகிர்ந்துகொள்ள முற்படும்போது ஒலிகளையும், வரிவடிவங்களையும் பயன்படுத்தி மொழியினைக் கட்டமைக்கிறது.
- புலனுலகில் தன்னிடத்தைப் பற்றிய தன்னுணர்வு கொண்ட சுயமாக இருந்த அது, மொழியில் தன்னை ‘நான்’ என்று தன்னிலையாகச் சுட்டிக்கொள்கிறது. அதனைத் தொடர்ந்து அது நிகழ்காலம், கடந்தகாலம், எதிர்காலம் என்ற காலப் பகுப்பையும் மொழியில் செய்யும்போது அது வரலாறு குறித்த தன்னுணர்வையும் பெறுவது சாத்தியமாகிறது.
- இவ்வளவுக்குப் பிறகும் மொழிவயப்பட்ட மானிட அறிதலும்கூட அன்றாட வாழ்க்கையின் இயக்கங்களுக்கு, ஓர் எளிமையான சமூக வாழ்வின் கட்டமைப்புகளுக்குத் தேவையான அளவுடன் அமைந்துவிடலாம். பழங்குடிச் சமூகங்களில், விவசாயச் சமூகங்களில் இதனைக் காணலாம். ஆனால், தனது இருத்தலியல் சார்ந்த நிறைவின்மையைத் தன்னிலை உணரும்போது, மானுடத் தன்னுணர்வின் மேம்பாடு குறித்த ஏக்கத்துக்கு இட்டுச்செல்கிறது.
- அது தொடர்ந்து மானுடச் சமூக மேம்பாட்டுக்கு முயல்கிறது. முக்கியமாக, உடலுக்கு அப்பாலானதாகத் தன்னுணர்வு வடிவம் கொள்ளும்போது தோன்றிய வன்முறையின் (தற்கொலை, தன் இனத்தையே கொல்லுதல்) சாத்தியத்தை, சகவாழ்வின் ஆற்றலாக மாற்றும் தேவை தன்னுணர்வினுடைய உள்முரணின் இயக்கமாக வெளிப்படுகிறது. இது பல்வேறு பண்பாட்டுத் தடங்களை உருவாக்குகிறது. அவற்றில் சமூக வாழ்வைப் பெருமளவு செப்பனிடும் களமாக அமைவது கல்வி என்றால் மிகையாகாது.
- திருக்குறள் ‘எண்ணென்ப, ஏனை எழுத்தென்ப, இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு’ என்று கூறுவதுபோல கல்வியே மனிதர்களுக்குச் சமூகப் பார்வையினைப் பெற்றுத்தருவதாக உணரப்பட்டது. எண் என்பதை முதலில் கூறுவது கணிதத்தைக் குறித்தாலும், பல்வேறு அளவீடுகள், கருவிகள், உற்பத்திக் கருவிகளின் பயன்பாட்டினை உள்ளடக்கியதாக இதைக் கருதலாம். அதனால், கல்வி என்பது திறன் மேம்பாடு, சமூக வாழ்வின் மேம்பாடு என்கிற சாத்தியங்களை உள்ளடக்கியதாக உணரப்பட்டதாகவே கருத வேண்டும்.
- கல்வி பெறுவது யார்?
- கல்வி என்பது அவரவர் தொழில்களுக்கு ஏற்பவே அமைவதாக இருந்துவந்துள்ளது. ஆயகலைகள் அறுபத்து நான்கு என்றெல்லாம் சொல்லப்பட்டாலும். அவை அனைத்தையும் ஒருவரே கற்க வேண்டியதில்லை. உதாரணமாக, துணி நெய்வது எப்படி என்பதை நெசவாளர்கள் கற்பார்கள்.
- பாடல் புனைவது எப்படி என்பதைப் புலவர்கள் கற்பார்கள். பாடல்களைக் கேட்டு ரசிக்கும் ஆற்றல் வேண்டுமானால் பலருக்கும் இருக்கலாம்; ஆனால் எல்லோருமே பாடல்கள் புனைய வேண்டும் என்பதல்ல. சுருங்கச் சொன்னால், மானுட வரலாற்றில் வெகுகாலம் பொதுக்கல்வி என்கிற கருத்தாக்கம் நிலவவில்லை.
- துறவிகள், மடாலயங்களில் வசிப்பவர்கள் வழிபாடு தவிர கற்பதிலும், கற்பிப்பதிலும் ஈடுபடுவார்கள். ஐரோப்பாவில் கிறிஸ்துவ மடாலயங்களே கல்விக் கேந்திரங்களாக மாறின. முனிவர்கள், துறவிகளிடம் அரச குமாரர்கள் சென்று கல்வி கற்பது என்பது ஆட்சியதிகாரத்துடன் தொடர்புடையதாக இருந்தது. இதனால் பணியாளர்கள், உழைப்பாளர்கள் போன்றவர்கள் கல்வியுடன் தொடர்பற்றவர்களாக வைக்கப்பட்டார்கள்.
- அவரவர்களுக்குத் தேவையான தொழில் திறனைப் பெறுவதே போதுமானதாகக் கருதப்பட்டது. இவ்வாறாக, கல்வி என்பதே பல்வேறு வடிவங்களில் மனிதத் தன்னிலைகளைக் கட்டமைத்துப் படிநிலைச் சமூகத்தை வடிவமைக்கும் தொழில்நுணுக்கமாக மாறியது.
- இதனால், கல்வி என்பது ஒரே நேரத்தில் தன்னுணர்வைத் தன்னிலையாகச் சிறைப்படுத்தக்கூடியதாகவும், அதிலிருந்து விடுதலையை நாடும் சுய விகசிப்பின் களமாகவும் முரண்படுவது இயல்பானது.
- அனைவருக்குமான கல்வியும் தரப்படுத்தும் முறைகளும் பதினைந்தாம் நூற்றாண்டில் அச்சு இயந்திரம் தோன்றிய பிறகு, முன்னெப்போதும் இல்லாத அளவு கல்வியைப் பரவலாக மக்களிடம் கொண்டுசெல்லும் வாய்ப்பு உருவானது. இதனைத் தொடர்ந்து உருவாகிய பெரும் சமூகப் பரப்புகளில் அனைவரும் பங்கேற்கும் பொதுக்கல்வி என்கிற மகத்தான கருத்தாக்கம் உருவானது. ஒவ்வொரு மனித உயிரும் முதல் இருபது ஆண்டுகளைக் கற்றலுக்காகச் செலவழிக்கும் லட்சியம் நடைமுறையானதில், மானுடக் கூட்டுத் தன்னுணர்வு என்பதன் வரலாற்றுப் பயணம் உருவகிக்கப்பட்டது.
- வரலாற்று உணர்வை நாடும் கல்வி என்பது அன்றாட வாழ்விலிருந்து பெருமளவு விலகியதாகவே சமூகத்தின் பல்வேறு தரப்பினராலும் உணரப்படுகிறது. ‘ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது’ என்ற பிரபலமான சொலவடை இந்த மனநிலையைப் பிரதிபலிக்கிறது. அன்றாட வாழ்வுடன் தொடர்பற்ற செய்திகளை ஏன் கற்க வேண்டும் என்று பள்ளி மாணவர்களுக்குப் புரிவதில்லை.
- கல்வி என்பது சுய விகசிப்பாக இல்லாமல், தன்னிலைக் கட்டுமானமாக மாறும்போது பொதுக்கல்வி என்பதன் மானுடவாத லட்சியம் மீண்டும் சமூகப் படிநிலை உருவாக்கமாகத் திரிபடைகிறது. பொது அறிவு என்கிற கருத்தாக்கம் வெறும் தகவல் திரட்சியாக மாறும்போது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகிறது. கல்வியைவிடத் தேர்வுகளே முக்கியமாகும்போது, தரப்படுத்துதல்கள் கல்வியை அரசியல்மயப்படுத்துகின்றன.
- மானுடத் தன்னுணர்வின் மகத்தான லட்சியங்களாகப் பொதுக்கல்வி, உயர்கல்வி, ஆய்வுக்கல்வி ஆகியவை அமைந்தாலும், அன்றாட வாழ்வின் உணர்வு நிலைகளிலிருந்து விலகிய இவற்றில் மாணவர்களை ஈடுபாடு கொள்ளவைப்பது பெரும் சவாலாகவே உள்ளது.
- முந்தைய சமூகப் பிரிவினைகளில் கல்விக்குப் பழகிய பிரிவினர் சுலபமாக உணர்வதை, கற்றலில் இருந்து விலக்கப்பட்ட பிரிவினர் சுமையாகவே உணர்வதும், அதனால் தொடர்ந்து தரப்படுத்துதல் என்கிற வன்முறை நிகழ்வதும் கல்வியினைப் பெரும் மானுட முரண்களமாகவே வைத்துள்ளது. கல்வித் திறனுடன் பொருள் ஈட்டும் வாய்ப்புகள் பிணைக்கப்பட்டுவிட்டதால், தன்னுணர்வு மேம்பாடு என்கிற லட்சியம் சுயநல வேட்கையாகச் சிறுத்துப் போவதுடன், சமூக ஏற்றத்தாழ்வுகளின் களமாக, அரசியல் முரண்களின் களமாகவும் கல்வியை மாற்றிவிடுகிறது.
நன்றி: இந்து தமிழ் திசை (03 – 03 – 2025)