TNPSC Thervupettagam

அன்றாடமும் மானுடத் தன்னுணர்வும்

September 30 , 2024 57 days 73 0

அன்றாடமும் மானுடத் தன்னுணர்வும்

  • அன்றாடம் என்பதே இயற்கையின் காலப் பரிமாணம் ஆகும். நினைவுச்சேகரம், அறிவுச்சேகரம் போன்றவற்றால் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்று பிரித்து, வரலாற்றுத் தொடர்ச்சியை மானுடம் உருவாக்கிக்கொள்கிறது. அதன் விளைவுகளைத் தத்துவார்த்த மானுடவியல் நோக்கில் ஆராயும் கட்டுரைத் தொடர் இது.
  • ப​தினெட்டு, பத்தொன்​பதாம் நூற்றாண்​டு​களில் தொழிற்​புரட்சி இங்கிலாந்​திலும் ஐரோப்​பா​விலும் ஏற்பட்டு, அமெரிக்​கா​விலும் பெரும் தொழில் நகரங்கள் உருவான பிறகு அந்த நாடுகள் எல்லாம் ‘வளர்ந்த நாடுகள்’, ‘முன்னேறிய நாடுகள்’ என்ற அடைமொழிகளைப் பெற்றன. ஐரோப்பிய நாடுகள் உலகின் பல்வேறு பகுதி​களைக் காலனிய ஆட்சி முறையின்கீழ் கொண்டு​வந்தன. நேரடி​யாகக் காலனி ஆதிக்​கத்தில் வராத நாடுகளும்கூட ஐரோப்பிய நாடுகளின் வர்த்தக வலைப்​பின்னலுக்குள் வந்ததுடன், கலாச்சாரத் தாக்கத்​துக்கும் ஆளாயின.
  • ஐரோப்​பியக் காலனி நாடுகளின் சில பகுதி​களில் மானுட இனக்குழுக்கள் இயற்கை​யுடன் இணைந்த வாழ்முறை​களையே மேற்கொண்டு​வந்தன. முற்றிலும் ஆடைகள் அணியாமலோ அல்லது மிகக் குறைந்த ஆடைகளுடனோ வாழ்ந்​துவந்த இவர்கள் பூர்வகுடிகள், ஆதிவாசி இனக்குழுக்கள் (primitive tribes) என்று அறியப்​பட்​டனர். அப்போது ‘வளர்ந்த’, ‘நவீன’ சமூகங்​களில் இருந்த பல்கலைக்​கழகங்​களில், இந்த ஆதிவாசி இனக்குழுக்​களின் வாழ்க்கை முறைகளை ஆராயும் ஆர்வம் தோன்றியது.
  • ஐரோப்​பியக் காலனிய அரசுகளுக்கும் அந்த மக்களைக் கட்டுப்​படுத்தி ஆட்சிசெய்ய அவர்களது பண்பாட்டினை அறிந்​து​கொள்ள வேண்டிய தேவை இருந்தது. இந்த இரண்டும் சேர்ந்​த​தில், பண்பாட்டு மானுட​வியல் (cultural anthropology) ஆய்வுத் துறை தோன்றியது. இந்தத் துறை அதற்கு முன்னால் உடற்கூறுகளை ஆராய்ச்சி செய்து மனித இனங்களைப் பிரித்து வரையறுக்கும் உடற்கூறு மானுட​வியலில் (physical anthropology) இருந்து வேறுபட்டது என்பதும் கவனிக்​கத்​தக்கது.
  • எவன்ஸ் பிரிச்​சர்ட் (1902-1973) ஒரு முன்னோடி பிரிட்டிஷ் மானுட​விய​லாளர். ஆக்ஸ்ஃ​போர்டு பல்கலைக்​கழகத்தில் பணியாற்றியவர். அவர் 1930ஆம் ஆண்டு வடக்கு ஆப்ரிக்​கா​வில், சூடான் நாட்டில் வசித்த நூவர் என்ற பழங்குடி இனத்தவர் குறித்து ஆய்வுசெய்து ஒரு நூலை வெளியிட்​டார். பண்பாட்டு மானுட​வியல் பாடநூல்​களில் தவிர்க்க​வியலாத ஒன்று அது.
  • ஆடைகள் அணியாமல் வாழ்ந்​துவந்த அந்த இனக்குழு​வினரின் கால்நடை வளர்ப்பு, பயிர்த்​தொழில், அவர்களுடைய அரசியல் நிர்வாகம், அவர்களுக்கும் டிங்கா என்ற பழங்குடி​யினருக்​குமான விரோதம் ஆகியவற்​றையெல்லாம் விரிவாக அவர் பதிவுசெய்​துள்ளார். அதில் நூவர் பழங்குடி​யினர் காலம் குறித்த உணர்வைப் பற்றிக் கூறியிருப்பது மிக முக்கியமான அம்சமாக அனைவராலும் மேற்கோள் காட்டப்​படு​கிறது. அந்தப் பத்தியை மட்டும் நேரடியாக மொழியாக்கம் செய்து தருகிறேன்:
  • ‘நான் காலம் பற்றி​யும், காலக்​கணக்கு பற்றியும் கூறியிருந்​தா​லும், நூவர் மத்தியில் நாம் காலம் (time) என்று கூறுவதற்கு ஒப்பான ஒரு வார்த்தை இல்லை. அதனால், அவர்களால் நம்மைப் போல காலம் என்று ஒன்று உள்ளபடியே இருப்​ப​தாக​வும், அது கடந்து செல்வ​தாக​வும், அதை விரயம் செய்யக் கூடாது, பயன்படுத்த வேண்டும் என்றெல்லாம் பேச முடியாது.
  • அவர்களுக்கு நம்மைப் போலக் காலத்​துடன் போராடும், செயல்​பாடுகளை அருவமான காலக்​கணக்கின் அடிப்​படையில் ஒருங்​கிணைக்கும் அனுபவம் அறவே கிடையாது என்று நினைக்​கிறேன். ஏனெனில், அவர்கள் காலத்​துக்குப் பதிலாகத் தங்கள் ஆசுவாசமான செயல்​பாடு​களையே நேரடி​யாகக் குறிக்​கிறார்கள். நிகழ்வுகள் தர்க்​கரீ​தியான ஒழுங்கைப் பின்பற்றினாலும், அவை அருவமான காலக்​கணக்​குடன் பிணைக்​கப்​பட்டு, துல்லிய​மாகக் கணக்கிடப்பட வேண்டிய தேவையில்லை. நூவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.’
  • நமது கிராமங்​களி​லும்கூட ஓரிரு தலைமுறை​களுக்கு முன்னால் இவ்வாறான அணுகு​முறையைப் பார்த்திருக்​கலாம். ஒரு விவசாயி காலை ஆறு மணிக்கு வருகிறேன் என்று சொல்வதைவிட, ‘வயலுக்குப் போகும்போது வருகிறேன்’, ‘வெள்ளன (விடிந்​தவுடன்) வருகிறேன்’ என்று சொல்வதுதான் இயல்பானது. கடிகாரத்தின் மணிக்​கணக்கு என்பது இயற்கையோடு இணைந்த வாழ்வில் செயல்​படு​வ​தில்லை.
  • அதேபோல வரலாற்றுக் காலம் என்பதும் புழக்​கத்தில் இருக்​காது. ஒரு கிராமத்துக் கோயிலைக் காட்டி, அது எவ்வளவு பழமையானது என்று கேட்டால், ஆயிரக்​கணக்கான ஆண்டுகள் என்று கிராமவாசி சொல்வார். ஏன் அப்படிச் சொல்கிறார் என்று கேட்டால், தன் பாட்டன் காலத்​துக்கு முன்னரே அது இருந்தது என்பார். பாட்டன் காலம் என்பது நூறாண்​டுகள் இருக்​கலாம். அதற்கும் முன்னால் சென்றால் அது எல்லையற்ற ஆதிகாலம் ஆகிவிடும். பதினாறாம் நூற்றாண்டு, பதினேழாம் நூற்றாண்டு என்றெல்லாம் பேச முடியாது.
  • மனிதத் தன்னுணர்வில் காலம் குறித்த அணுகுமுறை எப்படி வேறுபடத் தொடங்​கியது என்பது குறித்து நாம் பரிசீலிக்க வேண்டும். மனிதர்​களின் நரம்பு மண்டலம் வளர்ச்சி அடையும்போது அதன் நினைவாற்றல் அதிகரிக்​கிறது. பெர்க்சன் என்ற ஃபிரெஞ்சுத் தத்து​வவா​தியின் வார்த்​தைகளில் சொன்னால், மனித உடல் புலன் உணர்வினைச் செயலால் எதிர்​கொள்​ளும்​போது, அதனை மெய்நிகர் நிகழ்​வாகவும் (virtual image) பிரித்து​விடு​கிறது. பின்னர், புதிதாக ஒன்று புலனாகும்போது அந்த உணர்வைத் தான் சேகரித்​துள்ள மெய்நிகர் பிம்பங்​களுடன் பொருத்திப் பார்த்து, தன் செயலைத் தீர்மானிக்​கிறது. இந்த மெய்நிகர் பிம்பங்​களின் சேகரம்தான் நினைவாற்றலாக நம்மை வழிநடத்து​கிறது.
  • மானுட உடல்கள் சேகரிக்கும் இந்த நினைவாற்றல், அவை பகிர்ந்​து​கொள்ளும் புலன் உலகம் குறித்தவை என்பதால், அவற்றினிடையே நினைவு​களின் பரிமாற்​றமும் தொகுப்பும் சாத்தி​ய​மானது. இவைதான் சித்திரங்​களாக, எழுத்​துக்​களாக, மொழியாக, கதைகளாக மனிதத் தொகுதி​களுக்​கிடையே புழங்கின. அவ்வாறு கடந்த காலம் குறித்துப் பகிர்ந்​து​கொள்​ளப்​படும் கதைகள் வரலாற்றுக் காலம் என்ற காலப்​பரி​மாணத்தின் சாத்தி​யத்தை உருவாக்கின. இந்த வரி எழுதப்​படும் நாளை ‘செப். 28, 2024’ என்று பல நூறு கோடி மனிதர்கள் குறிப்​பிடுவது சாத்தியமானது.

நன்றி: இந்து தமிழ் திசை (30 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்