TNPSC Thervupettagam

அன்று சாமானியர், இன்று மத்திய அமைச்சர்!

July 2 , 2019 2020 days 1053 0
  • தெருவே வீடு; தட்டுமுட்டு சாமான்கள்; இரண்டு குழந்தைகள்; நிரந்தர வேலையில்லை. அந்தக் குடிசையையொட்டி ஒரு படிப்பகம்; ஆறாம் வகுப்பு வரை படித்த அவர், காலையிலிருந்து மாலை வரை அந்தப் படிப்பகத்திலேயே ஓர் ஓரத்தில் உட்கார்ந்து அங்கு வழக்கமாக வருகிறவர்களோடு உரையாடுவார்.
முன்பு....
  • அருகிலிருந்த டீ கடைகளில் யாராவது வாங்கிக் கொடுக்கும் டீயைக் குடிப்பது, அந்தத் தெரு, அந்தப் பகுதி வாழ் மக்களுக்கு ஏதாவது பொதுப் பிரச்னை என்றால் முதல் ஆளாக நிற்பது;  காவல் நிலையம், மாநகராட்சி, மருத்துவமனை போன்ற உதவிகளை ஏழை எளிய மக்களுக்கு கிடைக்கச் செய்வது என ஒவ்வொரு பொழுதும் கழிந்துகொண்டிருந்தன! தொண்டனுக்கு இலக்கணமும் இவைதான். அந்தத் தொண்டனின் மனைவி காலையில் டிபன், மதியம் சாப்பாடு, இரவு டிபன் அந்தத் தெருவில் உள்ள ஒரு மரத்தடிக்குக் கீழேயே தயார் செய்து விற்று, அதில் கிடைத்த சொற்ப வருமானத்தில் கணவனின் செலவு, குழந்தைகளின் படிப்பு, தன்னுடைய செலவு, உறவினர்களுக்கு நல்லது கெட்டது என குடும்ப பாரத்தை சுமந்தார். கணவன் எங்கே போகிறார்? எப்போது வருகிறார்? என்ன செய்கிறார்? எதையும் கேட்க மாட்டார் மனைவி. ஏழ்மையிலும் நேர்மை. கேட்டாலும் முறையான பதில் வராது. ஒரு முறைப்பு...அவ்வளவுதான்.
  • ஒருநாள் மாலை நாளிதழில் தன்னுடைய கணவர் படம், பெயர் பரபரப்பாக வெளிவந்தது. ஆம்...அந்தப் பகுதி எம்.எல்.ஏ. தேர்தலில் போட்டியிடுகிறார் என்பது செய்தி. அடுத்த வேளை சோற்றுக்கு உத்தரவாதம் இல்லாத அந்தப் பெண் உள்ளிட்ட குடும்பத்தினருக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. அந்தப் பகுதியில் வாழ்ந்த குடிசை வாழ் மக்களெல்லாம் பரபரப்பாக மகிழ்ச்சியாக ஓடோடி வந்து,  தெருவோரத்து பெண்மணியைக் கட்டிக்கொண்டு கூத்தாடி மகிழ்ச்சி அடைந்தனர்.
ச.மணிமுடி
  • அவர் வேறு யாரும் அல்ல; 1977-ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைக்கான பொதுத் தேர்தல்; சென்னை எழும்பூர் தனித் தொகுதியின் வேட்பாளராக ச.மணிமுடி என்ற சாதாரண, சாமானியத் தொண்டனை திமுக வேட்பாளராக தலைவர் கருணாநிதி  அறிவித்தார். அவரின் வெற்றிக்காக  எழும்பூர் தொகுதியில் கருணாநிதி பிரசாரம் செய்தார்.
  • தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ச.மணிமுடி 8,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். சென்னை மாவட்டத்தில் 10 தொகுதிகளில் திமுக வெற்றி. தமிழகத்தில் ஆட்சியை எம்.ஜி.ஆர். பிடித்தாலும் அன்றைக்கு தி.மு.க.வின் கோட்டையாக சென்னை விளங்கியது.
  • இதே போன்று 1967-ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை, மக்களவைக்கான தேர்தல்களில் மணிமுடியைப் போன்ற மாணிக்கங்களை, ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர்களை அண்ணா உருவாக்கினார்;
  • மேலும், அமைச்சரவை, உள்ளாட்சி அமைப்புகள், மாநகராட்சி-நகராட்சி-பேரூராட்சி-கிராமப் பஞ்சாயத்துகளில் சாமானியர்களுக்குப் பதவி அளித்து மக்கள் தொண்டே மகேசன் தொண்டு எனப் பணியாற்றினார் அண்ணா. இவ்வாறு முன்னாள் முதல்வர்கள் அண்ணாவும், கருணாநிதியும் சாமானியர்களுக்கு உயர் பதவிகள் அளித்து சமூகப் புரட்சிக்கு வித்திட்டனர்.
எம்.ஜி.ஆர்
  • சாமானிய மக்களால் போற்றப்பட்ட எம்.ஜி.ஆர்., அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் 1972-ஆம் ஆண்டு  தனிக் கட்சி தொடங்கினார். சாமானியர்கள், தாய்மார்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், ஒடுக்கப்பட்டோர் உள்ளிட்டோர் எம்.ஜி.ஆருக்குப் பின்னால் அணி வகுத்தனர். அரசியலில் அனைத்துத் தரப்பினருக்கும் பதவிகள் அளித்து அழகு பார்த்தார் எம்.ஜி.ஆர். அண்ணா வழியில் தெருவோரத்து மனிதனையும் தேர்தல் களத்தில் நிறுத்தி, அமைச்சரவையில் அரியணை தந்து ஆளும் தகுதியையும் திறமையையும் வெளிக்கொண்டு வந்தார் எம்.ஜி.ஆர்.
  • எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்னர், அவருடைய மக்கள் ஆதரவின் தொடர்ச்சியால் ஆட்சிக்கு வந்தார் ஜெயலலிதா. 1991-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் சின்ன சேலம் தொகுதியில் மிகச் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவரும், வண்ணார் சமுதாயத்தைச்  சேர்ந்தவருமான கே.பி.பரமசிவத்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வேட்பாளராக நிறுத்தி, அந்தப் பகுதியில் வலிமை மிக்க வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த வேட்பாளரை தோல்வி அடையச் செய்தார்.
  • இதே போன்று, அதே சட்டப்பேரவைத் தேர்தலில் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதியில் எந்த அரசியல் பின்னணியும் இல்லாத கவிநிலவு தர்மராஜை வேட்பாளராக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நிறுத்தி வெற்றி பெறச் செய்து, தானும் திராவிட இயக்கத்தின் நீட்சிதான் என நிரூபித்துக் காட்டினார். திராவிட இயக்கத்தின் எழுச்சிமிகு வழிகாட்டிகள், இந்தியாவுக்கே வழிகாட்டிகளாக விளங்கினார்கள் என்றால், தற்போது இமாலய வெற்றி பெற்று இந்தியாவின் பிரதமராக இரண்டாவது முறையாகப் பதவியேற்றுள்ள நரேந்திர மோடி, எல்லாவற்றுக்கும் உச்சமாக பின்வரும் தன் செயல் மூலம் நிரூபித்துக் காட்டியுள்ளார்.
பிரதாப் சந்திர சாரங்கி
  • ஒடிஸா மாநிலம் பாலாசோர் தொகுதியில் சிறிய கிராமத்தில் பிறந்தவர் பிரதாப் சந்திர சாரங்கி; குடிசையில் வசித்து வருகிறார். தாய், தந்தை இறந்துவிட்டனர். திருமணம் செய்து கொள்ளவில்லை. ஒடிஸாவில் இரண்டு முறை சட்டப்பேரவை உறுப்பினராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, தொகுதி முழுவதும் சைக்கிள் மூலமாகவே பயணம் செய்து, முழுநேர மக்கள் சேவகனாக இருந்திருக்கிறார். சட்டப்பேரவை உறுப்பினர் பதவி ஊதியத்தை ஏழை மக்களுக்கு செலவிட்டு வந்தார்.
  • தெருவில் உள்ள குடிநீர்க் குழாயில் தண்ணீர் பிடித்து வந்து குடிப்பது, குளிப்பது...இதுதான் அவருடைய வாழ்க்கை முறை. 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். அண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் (2019) மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு காங்கிரஸ், பிஜு ஜனதாதளம் சார்பில் எதிர்த்து நின்ற இரண்டு கோடீஸ்வரர்களைத் தோல்வி அடையச் செய்தவர், அந்தக் குடிசைவாசி பிரதாப் சந்திர சாரங்கி! ஒடிஸா மாநிலத்தின் மோடி என்று இவரை அந்த மாநில மக்கள் கொண்டாடுகிறார்கள்.
  • ஒடிஸா மாநிலம் பாலாசோர் தொகுதி மக்களவை உறுப்பினராக சாமானியர் பிரதாப் சந்திர சாரங்கி வலம் வரப் போகிறார் என்று  அந்த மாநில மக்கள் நினைத்தனர். பதவியேற்க விழா மேடைக்கு சாரங்கி வந்தபோது பலத்த கைதட்டல் விண்ணை முட்டியது. ஆச்சரியத்தில் மூழ்கினர் கூடியிருந்தோர்; எளிமைக்கும், நேர்மைக்கும், மக்கள் சேவைக்கும், பொதுவாழ்வு அர்ப்பணிப்புக்கும் கிடைத்த வெற்றி இது.
அண்ணா
  • முன்னாள் முதல்வர் அண்ணா ஒரு விழாவில் பேசியது குறிப்பிடத்தக்கது: ஒரு தலைவர் அறிவாளியாக இருக்கலாம்; ஆனால், மற்றவர்களையும் அறிவாளியாக்குபவர்தான் மிகச் சிறந்த தலைவர். ஒரு தலைவர் உறுதி படைத்தவராக இருக்கலாம்; ஆனால் மற்றவர்களையும் தன்னைப் போலவே உறுதி படைத்தவராக ஆக்குபவர்தான் மிகச் சிறந்த தலைவர். ஒரு தலைவர் தெளிவுள்ளவராக இருக்கலாம்; ஆனால், குழப்பம் மிகுந்த வேளையில் தெளிவைக் காட்டுவதோடு பிறரையும் தெளிவுள்ளவராக்குபவர்தான் சிறந்த தலைவர். சிலர் நல்ல எழுத்தாளர் என்ற முறையில் புகழை நிலைநாட்டுவர்;
  • சிலர் நியாயத்துக்காக நல்ல முறையில் போராடுவோர் என்பதில் புகழை நிலைநாட்டுவர்; சிலர் நிர்வாகத்தில் சிறந்தவர் என்ற முறையில் புகழை நிலைநாட்டுவர்; சிலர் பிரச்னைகளை நல்ல முறையில் விளக்கி தெளிவுபடுத்துபவர் என்ற முறையில் புகழை நிலைநாட்டுவர்.
  • ஆனால், வெகு சிலருக்குத்தான் தேர்ந்தெடுத்த துறை ஒவ்வொன்றிலும் தனிச் சிறப்பை ஏற்படுத்தும் ஆற்றல் இருக்கும். அத்தகைய ஆற்றல் பெறுவதுதான் ஒரு சிறந்த தலைவனின் இலக்கணமாகும் என்று சென்னையில் 1967-இல்  மூதறிஞர் ராஜாஜிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில், பொது வாழ்வில் ஈடுபடுவோருக்கான இலக்கணத்தை வகுத்துத் தந்துவிட்டுப் போயிருக்கிறார் அண்ணா. திராவிட இயக்கத்தின் மூல நோக்கம் சுய மரியாதை, பகுத்தறிவு, சமத்துவம், சமநீதி, சமூக இணக்கம்.

நன்றி: தினமணி (02-07-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்