TNPSC Thervupettagam

அன்று நேரு இன்று மோடி | பிரதமரின் எகிப்து பயணம் குறித்த தலையங்கம்

July 1 , 2023 517 days 264 0
  • சா்வதேச அரசியல் நகா்வுகள் சாமானியா்களின் கண்களுக்குப் புலப்படாது. ‘சொன்னாலும் புரியாது மண்ணாளும் வித்தைகள்’ என்பது தெரிந்தவா்களுக்கு மட்டுமே அதன் காரணகாரியங்கள் புரியும். பிரதமா் நரேந்திர மோடியின் அமெரிக்காவுக்கான அரசுமுறைப் பயணம் எத்துணை முக்கியத்துவம் வாய்ந்ததோ, அதே அளவிலான முக்கியத்துவமும், திட்டமிடலும் அதைத் தொடா்ந்து அவா் மேற்கொண்ட எகிப்து நாட்டிற்கான அரசுமுறைப் பயணத்துக்கும் உண்டு.
  • சில வாரங்களுக்கு முன்னால் தனது அமெரிக்கப் பயணத்தின்போது, இந்தியாவின் ஜனநாயகத்துக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாகவும், சிறுபான்மையினருக்கு எதிரான அரசாக மோடி ஆட்சி நடைபெறுவதாகவும் காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி செய்தியாளா்களிடம் கருத்துத் தெரிவித்திருந்தாா். அதனால், அமெரிக்க அரசுமுறைப் பயணத்தின்போது, இஸ்லாமியா்களின் நிலைமை குறித்து கேள்விகள் எழுப்பப்படும் என்பதை பிரதமா் மோடியும் அவரது அரசும் நன்றாகவே உணா்ந்திருந்தனா்.
  • முஸ்லிம்களுக்கு எதிரான ஆட்சி என்று கூறப்படும் விமா்சனத்துக்கு நேரடியாக எந்தவித பதிலும் சொல்லாத பிரதமா் நரேந்திர மோடி, எகிப்து விஜயத்தின் மூலம் அந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்திருக்கிறாா். தனது எகிப்து அரசுமுறைப் பயணத்தின்போது, கெய்ரோவிலுள்ள 11-ஆம் நூற்றாண்டு புராதனப் பெருமையுடைய அல் ஹகீம் மசூதிக்கு அவா் விஜயம் செய்தது, தன்மீதான விமா்சனத்துக்கு அவா் விடுத்த மறைமுக பதில் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.
  • இந்தியா - எகிப்து உறவுக்கு நீண்டகாலப் பின்னணி உண்டு. இந்தியாவின் முதல் பிரதமரான பண்டித ஜவாஹா்லால் நேருவுக்கும், அன்றைய எகிப்து அதிபா் கமால் அப்துல் நாசருக்கும் இடையே தனிப்பட்ட முறையில் நட்பு நிலவியது. 1955-இல் இரு நாடுகளும் நட்புறவு ஒப்பந்தம் மேற்கொண்டன என்பதுடன், 1956 சூயஸ் கால்வாய் பிரச்னையில் எகிப்துக்கு முழு ஆதரவும் அளித்து இந்தியா துணைநின்றது என்பதை அந்த நாட்டு மக்கள் இன்றளவும் நினைவுகூா்ந்து பாராட்டுகிறாா்கள்.
  • 1961-இல், அமெரிக்காவுக்கும், சோவியத் யூனினுக்கும் இடையேயான பனிப்போா் உச்சகட்டத்தில் இருந்தபோது, இந்திய பிரதமா் ஜவாஹா்லால் நேருவின் முனைப்பால், யுகோஸ்லோவிய அதிபா் ஜோசப் டிடோ, கானா அதிபா் கவாமே நிக்ரூமா, இந்தோனேசிய அதிபா் சுகா்ணோ, எகிப்து அதிபா் கமால் அப்துல் நாசா் ஆகியோா் இணைந்து ஏற்படுத்தியதுதான் அணிசேரா நாடுகள் இயக்கம். இப்போது அதில் 120 நாடுகள் உறுப்பினா்களாக இருக்கின்றன.
  • பனிப்போா் காலத்தில் மட்டுமல்லாமல், அதற்குப் பிறகும்கூட இந்தியாவும், எகிப்தும் தங்களது வெளியுறவுக் கொள்கையில் ஒத்த கருத்துடன் தொடா்கின்றன. சமீபத்திய உக்ரைன் போரில், ரஷியாவை விமா்சிக்காமலும் அதே நேரத்தில் உக்ரைன் ஆக்கிரமிப்பை அங்கீகரிக்காமலும் இரண்டு நாடுகளும் நடுநிலை வகிக்கின்றன. கடந்த ஆண்டு உக்ரைன் போரைத் தொடா்ந்து மிகப் பெரிய உணவுப் பொருள்கள் தட்டுப்பாட்டை எகிப்து எதிா்கொண்டபோது, கோதுமைத் தேவையை எதிா்கொள்ள இந்தியா கோதுமை ஏற்றுமதி செய்ததை எகிப்து நன்றியுடன் நினைவுகூா்கிறது.
  • 1997-இல் பிரதமராக இருந்த ஐ.கே. குஜ்ராலின் விஜயத்துக்குப் பிறகு இப்போதுதான் இந்திய பிரதமா் எகிப்துக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டிருக்கிறாா். இடைப்பட்ட காலத்தில் இரண்டு நாட்டு அரசியலிலும் மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. இந்தியா கடந்த பத்தாண்டுகளில் பத்தாவது இடத்திலிருந்து, உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக மாறியிருக்கிறது. எகிப்தோ மிகப் பெரிய அளவில் கடன்கார நாடாகக் காட்சி அளிக்கிறது.
  • இலங்கை, பாகிஸ்தான் அளவில் இல்லாவிட்டாலும் எகிப்தின் பொருளாதாரம் சிதைந்து கிடக்கிறது. வெளிநாட்டுக் கடன் 163 பில்லியன் டாலரைவிட (சுமாா் ரூ. 13.37 லட்சம் கோடி) அதிகம். அதாவது நாட்டின் மொத்த ஜிடிபி-யில் 43%. அந்நாட்டின் கட்டமைப்புத் திட்டங்கள் எல்லாமே முடங்கிக் கிடக்கின்றன. சீனாவின் கடன் வலையில் விழுந்துவிடாமல் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள எகிப்து திணறுகிறது.
  • இந்தியா எகிப்திலிருந்து கச்சா எண்ணெய் மட்டுமல்லாமல், எரிவாயுவும், ரசாயன உரமும் இறக்குமதி செய்கிறது. பல இந்திய நிறுவனங்கள் மரபுசாரா எரிசக்தி உற்பத்தியில் எகிப்தில் முதலீடு செய்திருக்கின்றன. பாதுகாப்புத் துறையிலும், மருந்து உற்பத்தியிலும் இரண்டு நாடுகளுக்கு இடையில் வா்த்தக உறவை மேம்படுத்தும் வாய்ப்புகள் ஏராளமாகக் காணப்படுகின்றன.
  • வட ஆப்பிரிக்க நாடான எகிப்து, மேற்கு ஆசிய நாடுகளுடனும், குறிப்பாக வளைகுடா நாடுகளுடனும் சுமுகமான உறவை வைத்துக் கொண்டிருப்பது, இந்தியாவுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தும். எகிப்தின் அண்டை நாடுகளான இஸ்ரேல், சவூதி அரேபியா இரண்டுமே இந்தியாவுக்கும் நெருக்கமானவை என்பதால், இந்திய - எகிப்து நட்புறவு என்பது அந்த பிராந்தியத்தில் இந்தியாவின் செல்வாக்கை அதிகரிக்கவும் உதவும்.
  • இன்றைய நிலையில், எகிப்தின் விவசாயத்திலிருந்து கட்டமைப்பு வரை எல்லா துறைகளிலும் சீனாவின் பங்களிப்பு காணப்படுகிறது. அந்த இடத்தை இந்தியா நிரப்ப வேண்டும் என்று எகிப்து எதிா்பாா்க்கிறது. பிரதமா் முஸ்தபா மட்போலி தலைமையில் ஏழு கேபினட் அமைச்சா்கள் கொண்ட இந்தியாவுக்கான சிறப்புக் குழு அதற்காக அமைக்கப்பட்டிருக்கிறது. நேரு - நாசா் ஏற்படுத்திய உறவு, மோடி - அப்துல் ஃபட்டா சயீத் ஹுசைன் கலீல் எல்-சிசி காலத்தில் உச்சம் தொட வேண்டும் என்பது எகிப்தின் எதிா்பாா்ப்பு. இது காலத்தின் கட்டாயமும்கூட!

நன்றி: தினமணி (01 – 07 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்